Thursday, August 30, 2018

Pallavaneswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
_________________________________________

*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர் ஏண் (10)*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*🏜பல்லவனேஸ்வரர் கோயில், திருபல்லவனீச்சுரம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............)
__________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள இத்தலம் பத்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌙இறைவன்:*  பல்லவனேஸ்வரர்.

*🔅உற்சவர்:* சோமாஸ்கந்தர்.

*🔱இறைவி:*  சௌந்தரநாயகி.

*🌴தல விருட்சம்:* மல்லிகை, புன்னை.

*🌊தல தீர்த்தம்:* ஜானவி, சங்கம தீர்த்தம், காவேரி.

*💥ஆகமம்:* சிவாகமம்.

*🔅புராணப்பெயர்கள்:* பல்லவனைஸ்வரம், காவேரிபூம்பட்டினம்.

*🔍ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*📖பதிகம்:* திருஞானசம்பந்தர். இரண்டு பதிகங்கள்.

*🛣இருப்பிடம்:*
சீர்காழி - பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் தென்படும்  கண்ணகி அலங்கார வளைவைத் தாண்டியதும், சாலை ஓரத்திலேயே கோயில் அமைந்திருக்கிறது.

சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காவிரிப்பூம்பட்டிணத்திற்குச் செல்ல பேருந்து வசதிகளும் இருக்கின்றன.

*📮அஞ்சல் முகவரி:* அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோவில்,
பல்லவனீச்சுரம்.
காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல்.
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்.
PIN - 609 105

*🌸ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*🏜கோயில் அமைப்பு:*
ஐந்து நிலைகளைத் தாங்கி கம்பீரத்துடனான ராஜகோபுரத்தினை முதலில் காணக் கிடைக்கவும், *சிவ சிவ, சிவ சிவ*  என மொழிந்து, கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோபுர வாயிலைக் கடந்து செல்லுகையில் இதனின் இடது புறத்தில் அதிகார நந்தியானவர், சந்நிதியில் அருளிக் கொண்டிருந்தார்.

இவரிடம் நாம், ஆலயத்தொழுகை முழுவதும் சிறப்புடன் அமைய, அதிகார நந்தியிடம் விண்ணப்பித்து வேண்டி வணங்கி நகர்ந்தோம்.

வாயிலைக் கடந்து சென்ற போது, வெளிச்சுற்றில் சூரியன், மற்றும் நான்கு சிவலிங்கத் திருமேனிகள் இருக்க, ஒவ்வொரு லிங்கத் திருமேனியையும் பணிந்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து, கைகூப்பிநின்ற நிலையில் பட்டினத்தார் சந்நிதியில் இருந்தார்.

எப்படி வணங்க வேண்டும் என நினைக்க முடியவில்லை.

விழுந்தா?, குறுகப் பணிந்தா?, சிரமேற் கைகுவித்தா?, ...........தெரியவில்லை.

எனவே எல்லா நிலையிலும் வணங்கிக் கொண்டோம்.

பட்டினத்தாரை வணங்கிப் பின், அவர் திருமுகத்தைப் பார்த்ததும், எங்கள் கண்களில் கண்ணீர் அரும்பியது.

அவர் சந்தித்த துயரங்களும், அவர் துறவறத்தின் நெறியும், கண் முன் நிழலாடி, நம் விழிக்கோடியில் நீர் திரண்டு திரண்டு வந்தது. நா தழுத்தது...... விடைகேட்டு திரும்பினோம்..."சிவ சிவ!.

இதற்கடுத்து விநாயகரைக் கண்டு தோப்புக்கரணமிட்டு வணங்கி நகர்ந்தோம்.

விநாயகரையடுத்திருந்த சுப்பிரமணியர் சந்நிதிக்கும் சென்று தொழுது நகர்ந்தோம்.

முருகப் பெருமான்  பெரியதாகவுள்ள உருவத்துடன் அருளிக்கொண்டிருந்தார்.

அடுத்து, கஜலட்சுமியை இவள் சந்நியில் வணங்கிக் கொண்டோம். வழக்கமாக இங்கே ஒரு குருக்கள் இருப்பார். இன்று குருக்களைக் காணோம்.

எனவே, கஜலட்சுமி முன் படித்திட்டில் வைக்கப்பட்டிருந்த குங்குமக் கிண்ணத்திலிருந்து சிறிது எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டோம்.

அடுத்து, சனிபகவான் பைரவர், சந்திரன் ஆகிய மூவர் திருமேனிகளும் ஒரே சந்நிதிக்குள் இருந்தார்கள்.

இவர்கள் முன் நின்று மூவரையும் ஒருசேர வணங்கிக் கொண்டோம்.

அடுத்ததாக, வெளிமண்டபத்தில் இறைவன் சந்நிதி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

இவர், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளப் பெற்று  அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.

பல்லவனேஸ்வர ஈசன், பெரிய, பருத்த சிவலிங்க பாணத்துடன் அமையப்பெற்று  கம்பீரமான காட்சியை காட்டி எழுந்தருளியிருந்தார்.

கண் விலகாது கண்டு, மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை நெற்றிக்கு திரித்துத் தரித்துக் கொண்டோம்.

அதுபோலவே, அம்மை சந்நிதிக்கும் சென்று பயபவ்யத்துடன் பணிந்து தொழுது, தீபாராதனையை ஆராதித்து வணங்கி அர்ச்சகர் தந்த குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.

இந்த உள் பிரகார மண்டபத்திலேயே வலப் புறத்தில் நடராஜப் பெருமானை கண்டோம். 

சிதம்பரத்தில் இருப்பது போன்றே சபாபதி சபை இங்கும் அமைந்து இருந்தன.

ஆனந்தத்தனமாக தரிசித்து வணங்கித் திரும்பினோம்.

திரும்பி நடந்தபோது, மீண்டும் ஒருமுறை திரும்பி சபாபதி சபையை நாம் பார்த்தோம்.

நாம் திரும்பிச் செல்வதை அவர் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி மேற்கு பார்த்தபடி இருந்தன.

பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தந்தார். இவருடன் இவர் மயில்வாகனம்  உடனில்லை. வணங்கி நகர்ந்தோம்.

கோஷ்டத்தில் வலம் செய்கையில், இரண்டு துர்க்கைகள் இருக்கின்றனர். வணங்கித் தொடர்ந்தோம்.

அடுத்து, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு வந்தோம். வழக்கமாக இவரை வணங்கும் நெறிமுறையுடன் வணங்கித் திரும்பினோம்.

இத்தலத்திற்கு அருகில் பாய்ந்தோடும் காவிரி நதி வங்காள விரிகுடா கடலுடன் இணைந்து சங்கமிக்கிறதாம். 

ஆலயத் தரிசனத்திற்குப் பிறகு, நேரம் இருந்தால் மாலையில் அங்கு சென்று பார்க்கலாம் என நினைப்பு கொண்டிருக்கிறோம்.

இக்காவிரி சங்கமமே இத்தலத்தின் தீர்த்தம் என்பதால் அங்கு சென்று வர நினைப்பு கொண்டோம்.

காலவ மகரிஷி என்பவர் இத்தலத்தின் சிவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்.

பட்டினத்தார் அவதார தலம் காவிரிப்பூம்பட்டினம்.

இவரது சன்னதியின் மேல் அமைந்திருக்கும் விமானத்தில், பட்டினத்தார்,  அவர் மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் சுதைவடிவுடன் இருப்பதைக் கண்டோம்.

இங்கு சிவனுக்கு பிரம்மோற்சவம் கிடையாது.

பட்டினத்தாருக்காகே விழா எடுக்கப்படுகிறதாம்.

பட்டினத்தார் திருவிழா பன்னிரண்டு நாட்களாக நடக்கிறது.

விழாவின் பத்தாம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் விமரிசையாக நடத்துவிக்கிறார்கள் என்று அங்கிருந்தோர் கூறினார்கள்.

பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, தொண்டை நாட்டுத் தலமான திருவொற்றியூரில் முக்தி பெற்றார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர் *"பட்டினத்தார்"* என்றழைக்கப்பட்டார்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்காக இரண்டு பதிகங்கள் செய்துள்ளார்.

ஒன்றாம் திருமுறையில் ஒரு பதிகமும், மூன்றாம் திருமுறையில் ஒரு பதிகமும் இடம் பெற்றுள்ளது.

*தல அருமை:*
முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். இவர் திருவெண்காடர் என்று அழைக்கப்பட்டார்.

இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார்.

பதினாறாம் வயதில் சிவகலை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, மிகவும் வேண்டி, திருவெண்காடர் சிவனை வழிபட்டார்.

இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாகப் பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார்.

ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார்.

அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார். ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார்.

திறந்தவருக்கோ அதிர்ச்சி! அதில், தவிட்டு உமிகளையும் மாட்டுச்சாணத்தையும் கொண்டு செய்யப்பட்ட எருவராட்டி மட்டும் இருந்தது.

மகனை சம்பாதிக்க அனுப்ப அவன், தவிட்டு எருவைக்கொண்டு வந்து தந்திருக்கிறானே! என்று வருந்தி, கோபத்தில் அந்த வராட்டி உள்ள பெட்டியை வெளியில் வீசியெறிந்தார்.

வீசியெறிந்ததில், வராட்டியும் தகரப் பெட்டியும் சிதறி விழுந்தது.

அதில், *"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே''* என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த துண்டுக் குறிப்பையும் கண்டார்.

இதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. *"மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,''* என்ற உண்மையை உணரப் பெற்றார்.

உடனே இல்லற வாழ்க்கையை துறந்தார். இங்கு வந்து சிவனை வணங்கி, அவரையே குருவாக ஏற்றார்.

தனது இல்லற வாழ்க்கையை முடிவித்து, முக்தி கொடுக்கும்படி வேண்டினார்.

அவருக்கு காட்சி தந்த சிவன்,... தகுந்த காலத்தில் அதற்கான நேரத்தில் முக்தி அருளுவோம் என்றார்.

அதன்பின், பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரைப் பயணம் மேற்கொண்டு, சென்னை திருவொற்றியூரில் வைத்து முக்தி பெற்றார்.

*சம்பந்தர் தேவாரம்:*
1.🔔அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த
விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேயவிடம்
கடையார் மாடம் நீடியெங்கும் கங்குல் புறந்தடவப்
படையார் புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சுரமே.

🙏🏾பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப் பூம்பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.

2.🔔எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தை பிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம் 
மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலும் தேன் அருந்திப்
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

🙏🏾பகைவராய அசுரர்களின் கோட்டைகளாய திரி புரங்களைச் சினந்தழித்த எந்தையாகிய பெருமானும், தேவர்களின் கண்களாய் விளங்குவோனும், இவ்வுலகைக் காக்கின்ற கண்ணுதலும் ஆகிய சிவபிரான் மேவிய இடம், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

3.🔔மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவார் சடைமேல்
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கயஞ்சேர் புணரி ஓதம் மீதுயர் பொய்கையின் மேல்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

🙏🏾உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு ஒளி பொருந்திய பிறை தங்கிய சடையின்மேல் கங்கை நங்கையையும் வாழ வைத்துள்ள கள்வனாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மிக்க ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

4.🔔தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பகலம்
நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னுமிடம்
போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கிசை பாடலினால்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

🙏🏾மாலையாகக் கட்டிய கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில், நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப் போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம், போர்செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

5.🔔மைசேர் கண்டர் அண்டவாணர் வானவரும் துதிப்ப
மெய்சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
கைசேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே
பைசேர் அரவார் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே.

🙏🏾கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய வரும், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் துதிக்க மேனிமிசைத் திருநீறுபூசியவனும் ஆகிய நிமலன், அடியவர் புகழ மேவியிருந்தருளும் இடம், கைகளில் மிகுதியான வளையல்களை அணிந்தபாம்பின் படம் போன்ற அல்குலை உடைய இளமகளிர் விழைவோடும் காதலோடும் திருவடிகளை வழிபடச் சேர்கின்ற திருப்பல்லவனீச்சரமாகும்.

6.🔔குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவதிரக்
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம் 
சுழியிலாரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

🙏🏾குழலோசைக்கு ஏற்ப வீணை, மொந்தை ஆகியன முழங்கவும், முழவு ஒலிக்கவும், காலில் அணிந்துள்ள வீரக்கழல் நடனத்துக்கு ஏற்பச் சதங்கை போல இசைக்கவும் ஆடும் கடவுளாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், சுழிகள் பொருந்திய கடலில் காவிரி வெள்ளநீர் தெளிந்த நீரை முகந்து எறியுமாறு விளங்குவதும், பழியற்ற நன்மக்கள் வாழ்வதுமான புகார் நகரிலுள்ள பல்லவனீச்சரமாகும்.

7.🔔வெந்தலாய வேந்தன் வேள்வி வேரறச் சாடி விண்ணோர்
வந்தெலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தலாய மல்லிகையும், புன்னைவளர் குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

🙏🏾தகுதி இல்லாத மிக்க கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த வேள்வியை அடியோடு அழித்துத் தேவர்கள் எல்லோரும் வந்து தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய சிவபிரானது இடம், மென்மையான மல்லிகை, வளர்ந்து பரவியுள்ள புன்னை குரா மரம் ஆகியவற்றில் படர்ந்துள்ள, காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

8.🔔தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க அவன்
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரனூர்
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலமெலாம் உணர
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

🙏🏾சிறந்த தேரை உடைய இராவணன் பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப்பின்னி அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச் சேர்ந்த பல்லவனீச்சரமாகும்.

9.🔔அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடுமால்
தம் கணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம்
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார்கடல் ஊடு அலைப்ப
பங்கமில்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

🙏🏾ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும், முறையே ஓதும் பிரமனும், திருமாலும் தம் கண்களால் தேருமாறு உயர்ந்து நின்ற சங்கரன் தங்கும் இடம், மரக்கலங்களை உடைய கடல் முத்துக்களையும் சங்கங்களையும் அலைக்கரங்களால் அலைத்துத் தருவதும், குற்றமற்றோர் வாழ்வதுமாய புகாரில் அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும்.

10.🔔உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டறியாத இடம்
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.

🙏🏾அளவுக்கு மீறி உண்டு ஆடையின்றி ஊரார் சிரிக்கத் திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை மெய்யில் போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு அறியாத இடம், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவை பொருந்த நடனம் புரிபவராய், அடியவர் இடுக்கண்களைப் பண்டு முதல் தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய பல்லவனீச்சரமாகும்.

11.🔔பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம்
அத்தன் தன்னை அணிகொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தஞ்சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோயிலராய்
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.

🙏🏾பக்தர்கள் போற்றும் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீவினையும் நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வீர்.

           திருச்சிற்றம்பலம்.

*🎡திருவிழாக்கள்:*
வைகாசி விசாகம், ஆடியில் பட்டினத்தார் விழா.

*📞தொடர்புக்கு:*
 91- 94437 19193

No comments:

Post a Comment