Thursday, August 16, 2018

Appars last temple

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
"""""""""""""""'''''''''""""""""'""''''""""""''"'''''''''''''''''''''"""""''''''
இத்தலப்பதிவு நேற்றைய பதிவின் தொடர்ச்சியான மீதிப்பதிவு இது.
"""""""""""""""""""""""""""""""""""''""""""""""""""""""""""""
*தேவார பாடல் பெற்ற தல எண்: 05*
(இரண்டாம் நாள்.)

*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*🏜சிவலோக தியாகேசர் கோவில், திருநல்லூர் பெருமணம்*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள இத்தலம் ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.

திருநல்லூர் பெருமணம் (தற்போது *ஆச்சாள்புரம்* என்று வழங்கப்படுகிறது)

*🌙இறைவன்:* சிவலோக தியாகேசர், பெருமண முடையமகாதேவர்.

*🔱இறைவி:* திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி, விபூதி கல்யாணி.

*🔅உற்சவர்:* பாலதிருஞானசம்பந்தர், கல்யாண திருஞானசம்பந்தர்.

*🌴தல விருட்சம்:* மாமரம்.

*🌊தீர்த்தம்:* பஞ்சாக்கர தீர்த்தம், பிருகு தீர்த்தம், அசுவ தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், அத்திரி தீர்த்தம், சமத்கனி தீர்த்தம், வியாச தீர்த்தம், மிருகண்டு தீர்த்தம்.

*🔍ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*🎡திருவிழாக்கள்:* மகாசிவராத்திரி.

*தொடர்புக்கு:*
91 4364 278 272
91 4364 277 800

*புராணப்பெயர்கள்:* நல்லூர், திருமணவை, முக்திபுரம், சிவலோகபுரம், ஆச்சாள்புரம்.

*📖தேவார பதிகம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்.

*🛣இருப்பிடம்:*
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலத்தைக் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும்.

இங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் ஐந்து கி. மி. சென்று இந்தத் தலத்தை அடையலாம்.

இதே சாலையில் மேலும் ஆறு கி.மீ. செல்ல சென்றால்
*மயேந்திரப்பள்ளி* என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்தை வணங்கப் பெறலாம்.

சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகள் ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.

*📮அஞ்சல் முகவரி:* அருள்மிகு சிவலோக தியாகேசர் திருக்கோவில்
ஆச்சாள்புரம்,
ஆச்சாள்புரம் அஞ்சல்,
சீர்காழி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
PIN - 609 101

*🍃ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். 

*தல அருமை:*
வசிட்டர் முதலாகிய முனிவர்களுக்குச் சிவலோகக் காட்சியளித்த தலம் இது.

இத்தலத்தை முருகப்பெருமானும் பூசித்து வழிபட்டிருக்கிறார்.

மாந்தாதா என்னும் அரசனால் திருப்பனி செய்யப்பட்டுத் திருவிழாவும் நடத்தப்பட்டன இத்திருக்கோயிலை.

திருஞானசம்பந்தரின் திருமணத்தில் யாவருக்கும் ஒருசேர முத்தியளித்த தலம் இதுமட்டுமேயாகும்.

மேலும், அருட்சோதிக்கு ஒளியும் தன்மையும் உண்டென அறியாது அக்னியாம் என்று அஞ்சி பயந்தோடியவர்களை, நந்தியம் பெருமானால் உணர்த்தியருளி வரச்செய்து சோதியுட் புகுவித்து அருள் புரிந்த பெருமைகளைக் கொண்ட தலம் இது.

*சிவலோகம்:* 
வசிட்டர் முதலிய முனிவர்கட்கு சிவலோகம் காட்டியருளியதால் *சிவலோகம்* என இப்பெயர் வந்தது.

*நல்லூர்:* 
ஆதியில் பிரமதேவன் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு சீகாழிக்குப் போகும்போது, இத்தலத்தில் உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் முதலியவற்றின் சிறப்புக்களையும் செழிப்பான பலவளங்களையும் கண்டு *'இது ஓர் நல்லூர் ஆகும்'* என்றமையால் இப்பெயர் ஏற்பட்டது.

*மணவை-முத்திபுரம்:*
சைவ சமய முதற்குரவராகிய திருஞானசம்பந்தப் பெருமான், தமது திருமணத்தில் தம் மனைவியாரோடும் அடியார்களோடும் பரிசனங்கள் புடைசூழ எழுந்தருளி, இறைவனருளால் தோன்றிய சோதியிற் கலந்து முத்தி எய்தினமையின் *மணவை, முத்திபுரம்* என்னும் பெயர்கள் வழங்கலாயின.

*ஆச்சாள்புரம்:* ஆயாள்புரம், என்பதே ஆச்சாள்புரம் என்று மருவி அழைக்கும்படியானது.

திருஞானசம்பந்த சுவாமிகளது திருமணக்காலத்தில் அம்மையார் பேதமின்றி யாவர்க்கும் திருவெண்ணீறு அளித்து சோதியுட் புகுவித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது.

அருள்மிகு திருவெண்ணீற்று உமையம்மை உடனுறை சிவலோகத்தியாகேசர் சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி  இராஜ கோபுரத்துடன் ஊருக்கு நடுவில் இரண்டு பிரகாங்களுடன் அமைந்து இருக்கிறது.

உயர்ந்த மதில்களால் சூழப்பெற்றது இத்தலம்.

உட்திருச்சுற்றுச் சுற்றி வரும்போது, தெற்குத் திருமாளிகைப் பத்தியில், அறுபத்துமூன்று நாயன்மார்கள் காட்சியளித்து வணங்கச் செய்கிறார்கள்.

வடக்குத் திருமாளிகைப்பத்தியில் பூகைலாசநாதர், நாகநாதர், சுந்தரேசுவரர், விசுவநாதர், மாதுருபூதேஸ்வரர் ஆகியோர் பிரதிட்டை செய்யப் பட்டிருக்கின்றனர்.

துர்க்கையும் இப்பிராகாரத்திலேயே அருள்கின்றாள்.

பஞ்சாக்கர தீர்த்தம் நீங்கலாக மற்ற ஏனைய தீர்த்தங்களும் கீழ்த்திசை முதலாக முறையே எண்திக்குகளிலும் அமைந்து இருக்கின்றன.  

ஆங்காங்கு அமைக்கப்பட்ட முனிவர்களின் பெயரால் எட்டுத் தீர்த்தங்களுக்கும் அவர்கள் பெயர்கள் வழங்கப் பெற்றிருக்கின்ற்ன.

*பஞ்சாக்கர தீர்த்தம்:* இறைவன் பேரருளால் தனது கரத்திலுள்ள சூலப்படையினைப் பூமியில் நாட்டி எடுத்து அப்பள்ளத்தில், தலைமீதுள்ள கங்காநீரினைப் பாயப்பெய்து நிறைத்து ஆன்மாக்கள் மூழ்கி உய்யும் பொருட்டு *"வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதும், காதலாகி ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பதுமான"* பஞ்சாக்கரத்தைத் தாபித்தான். அதனால் இப்பெயர் உண்டானது.

*தல பெருமை:*
வேதாந்தனென்னும் அந்தணன் காமனுடன் போர்செய்ய ஆற்றாதவனாகி அவன் வயப்பட்டு மடவாரின்பத்தில் ஈடுபட்டும் வழிப்போர்வார்களை வதைத்துப் பொருளை அபகரித்தும் வாழ்ந்து வந்தான்.

குல ஒழுக்கத்தை விட்டான்.

தாய் தந்தையர்கள் கூறும் சொற்களையும் கேட்டோனில்லை.

தன்னைத் துன்புறுத்திய சுற்றத்தார்களுக்குப் பயந்து தன் ஊரை விட்டகன்றான்.

ஊர் ஊராய்த்திரிந்தான்.

ஆங்காங்கு அவனைப்போன்ற குணமுடைய நண்பர்கள் பலர் இவனுடன் கூட்டுசேர்வாயினர்.

இக்கூட்டுறவு அவனது குணத்தைப் பெருகச் செய்தது. இவ்வாறு இவன் திரித்தலைந்து இறுதியாக நல்வினைப் பயனால் இத்தலத்திற்கு வந்து சேர்ந்தான்.

அப்போது கோடைக்கால மாதலின் இத்தீர்த்தத்தில் நீராடினான், எழுந்தான், சிவலோகத் தியாகருவம் அவன்  கண்ணுக்குப் புலப்பட்டது.

அன்றிரவு இத்தலத்தில் தங்கினான். மறுநாள் புறப்பட்டுப் பல இடங்களுக்குஞ் சென்றான்.

குறித்த வயது முடிந்தவுடன் இறந்தனால் இயமதூதுவர்களால் இவனை நரகலோகத்திற்குக் கொண்டு போயினர்.

அப்போது வழியில் சிவகணங்கள் தோன்றித் தடுத்து,.....

 *"தூதுவர்களே! இவன் நல்லூரில் பஞ்சாக்கர தீர்த்தத்தில் நீராடினான். அப்போதே இவன் பாவங்கள் தீர்ந்து விட்டன"* என்று கூறித் தூதுவர்களிடத்திலிருந்து விடுவித்தனர்.

பின்பு தேவ விமானத்தின் மீதிருத்தி வானமகளிர் சூழக் கயிலைக்கு அழைத்துச்சென்று இறைவன் திருமுன் கொண்டு வந்து விட்டனர்.

உடனே வேதாந்தன் வீழ்ந்து வணங்கி அப்பெருமான் ஆணைப்படி கணாதிபனாகி நித்திய வாழ்வு பெற்றான்.

*சிவலோகக் காட்சி அளித்தது:*
முன்னொரு நாள் வசிட்டர், பராசரர், பிருகு, சமதக்னி, விசுவாமித்திரர், அத்திரி, துருவாசர் முதலிய மாபெரும் இருடிகள் யாவரும் ஒன்றுகூடி நீறுபூசி அக்கணிக் கலங்கள் அணிந்து, ஐம்புலனடக்கி, அஞ்செழுத்தோதி, பதினாயிர வருடங்கள் கடும்தவம் புரிந்து வந்தார்கள்.

தவத்தின் உறுதியினைக் கண்ட இறைவன் கருணையோடு உமா சமேதராய் இடபாரூடராய்க் காட்சி அளித்து *"உங்கள் விருப்பம் யாது? கூறும்"* என்று திருவாய் மலர்ந்தருளினார்.

ரிஷபாரூடரானான காட்சியினைக்கண்ட முனிவர்கள் ஆனந்த பரவசராய் வீழ்ந்து வணங்கி *"கடல் விட முண்ட கருணா மூர்த்தியே! புண்ணிய முதலே! சிவலோகத்தை காணவேண்டும் என்னும் ஆவலுக்குடையோம். அதனைக்காட்டி அருள்பாலித்தல் வேண்டும்"* என்று கூற........

*"அவ்வாறாயின் நீங்கள் நல்லூருக்கு வாருங்கள் அங்கு அதனைக் காட்டுவோம்"* என அருள் செய்தான் ஈசன்.

உடனே முனிவர்கள் அங்கிருந்து புறப்பட்டுப் பலதலங்களையும் வணங்கிக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தார்கள்.

பஞ்சாக்கர தீர்த்தத்தில் நீராடினார்கள். சிவலோகங்காணும் பெரும் பேறடைந்தோம் என்ற உணர்வு மேலிட ஆலயத்துள் சென்று இறைவனை வணங்கினார்கள்.

அவர்கள் முன்னே சிவலோகம் தோன்றியது.

விம்மிதமுற்றார்கள்.

சொல்லொண்ணா பேரிண்பப் பேறு கொண்டார்கள்.

இங்கு, பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்புத் தொழிலை கைவரப்பெற்றார்.

இங்கு, விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார்.

இங்கு, இந்திரன் போகம் பெற்றான்.

இங்கு, சந்திரன் அபயம் பெற்றான்.

இங்கு, கங்கா தேவி தவம் செய்து, இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள்.

நாமும் இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும்.

சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்கச் செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.

இங்கு, காகமுனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார்.

*திருநீறு பிரசாதம்:*
இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதைப் பூசினால் நோய் விலகும்.

முன்ஜென்ம பாவம் விலகும்.

தரித்திரம் ஒழியும்.

சரித்திரம் படைக்க மேன்மை கூடும்.

பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது உண்மை.

*கல்வெட்டுக்கள்:*
பெரிய பிராகாரத்தில் உள்ள திருமதிலில் மூன்று பக்கங்களிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

இவை, உட்பிரகாரத்திலும், வடக்குப் பிரகாரத்தின் உட்சுவரிலும் காணப்படுகின்றன.

இதில் ஆங்கிலேயருக்கும் தஞ்சைமன்னன் படைகளுக்கும், 1749-ல்  பெரும் கடும்போர் நிகழ்ந்ததாகவும் அதில் லாரென்ஸ் என்பவர் இக்கோயிலைக் கைப்பற்றுவதென்ற தீர்மானத்தில் இருந்ததாகவும், கோயிலைக் காப்பாற்றும் கருத்துடன் அங்கிருந்த பிராமணர்கள் கோயிலின் உள்ளே இருக்கும் புனிதமான இடங்களை அழித்துவிடாமல் இருக்கும் படி வேண்டிக் கொண்டு திறந்து விட்டதாகவும், குறிக்கின்றன.

இங்கிருக்கும் கல்வெட்டுக்களில் இறைவர், ஸ்ரீகைலாசமுடாயார் என்றும், திருப்பெருமணமுடைய மகா தேவர் என்றும், திருப்பெருமணமுடைய நாயனார் என்றும் குறிப்பு இருக்கிறது.

*அம்மன்கோயிலைக் கட்டியவர்:* இக்கோயிலைக்கட்டி, இதில் திருக்காமக்கோட்டமுடைய நாச்சியாரை எழுந்தருளுவித்தவர் சயங்கொண்ட சோழமண்டலத்துப் புலியூர்க்கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டு நெற்குன்றத்தில் இருந்த சந்திரசேகரன் பஞ்சநதிவாணன் என்பவன் ஆவான்.

*திருஞானசம்பந்தரைப் பற்றிய செய்திகள்:* கல்வெட்டுக்களில், திருஞானசம்பந்தப் பெருந்தகையார், ஆளுடைய பிள்ளையார், பரசமயகோளரியார், என்னும் திருப்பெயர்களால் வழங்கியதைக் கூறுகிறது.

இவருடைய நாச்சியாரின் திருப்பெயர் சொக்கியார் என்பதாகும்.

இச்செய்தி *இந்நாயனார் கோயில் ஆளுடைய பிள்ளையாரும் சொக்கியாரும் காவேரிக்குத் தெற்குவடக்கூர்களில் திருவெண்காட்டிலும், திருநனிபள்ளியிலும், திருவாக்கூரிலும் எழுந்தருளிப் பின்பு பெரும்பற்றப் புலியூரிலே எழுந்தருளுகிற இடத்து* என்று திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ  வெட்டப்பட்ட கல்வெட்டால் அறியக் கிடைக்கின்றது.

*சம்பந்தப் பெருந்தகையார்க்கு இவ்வூரில் திருமணம் நிகழ்ந்ததைப்பற்றி:* இக்கோயில் உடைய பிள்ளையார் திருக்கல்யாணம் பண்ணிய திருமாளிகையும், திருவீதியும்,.. திருநந்தவனமும், திருமடை விளாகமும் நிலம் ஆறு மாவும்" என்னும் கல்வெட்டு உரைக்கிறது.

*பிறசெய்தி:* இவ்வூர்க்கோயிலில் உள்ள நடராசப்பெருமான் பண்பதைக்க ஆடு நாயனார் என்னும் பெயராலும் அழைக்கப் பெற்றிருந்தார.

*சம்பந்தர் தேவாரம்:*
01🔔கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் ஆய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே.

🙏🏾அடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா? என இறைவனிடம் வினவுகின்றார்.

02☘தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம்
பரு மணலாக் கொண்டு பாவை நல்லார்கள்
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர்ப்
பெருமணத் தான் பெண்ணோர் பாகம் கொண்டானே.

🙏🏾கடலலைகள் அழித்து விடாமல் வைத்துள்ள இயற்கைக் கரையிலுள்ள மணலோடு, பதுமை போன்ற சிறுமியர் அலைகள் வீசிக் குவித்த, குளிர்ச்சி பொருந்திய கடலில் விளைந்த முத்துக்களையே, பருத்த மணலாகக் கொண்டு சிற்றில் இழைத்து, சிறுசோறிட்டு, நறுமணம் கமழும் மலர்களை வைத்துக் கொண்டு, பாவைகட்கு மணம் செய்து விளையாடுகின்ற சிறப்பினையுடையது நல்லூர்ப் பெருமணம். அப்பெருமணத் திருக்கோயிலின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமான் தன்னிற் பிரிவில்லா உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டருளினன்.

03.☘அன்புறு சிந்தையராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவி நின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே.

🙏🏾மெய்யடியார்கள் சிவபெருமானிடம் கொண்ட பத்தி காரணமாக, அனைத்துயிர்களிடத்தும் நீங்காத அன்பு நிறைந்த சிந்தையராவர். அவர்கள் சிவத்தை வழிபடுகின்ற நற்றவத்தைச் செய்வர். அவர்கள் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அனைத்துயிர்கட்கும் இன்பம் தருகின்ற எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவார்கள். அத்தகைய வழிபாடு செய்பவர்கட்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் நாளும் நல்லின்பத்தை மிகுவிக்கும் சிவத்தொண்டு செய்வர்.

04.☘வல்லியந்தோள் உடை ஆர்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத்து உரி விரி கோவணம்
நல்லியலார் தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே. 

🙏🏾சிவபெருமான் வலிமையான புலியின் தோலை ஆடையாக உடுத்துள்ளவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவர். விரிந்த கோவணத்தை அணிந்தவர். அப்பெருமான் சிவநெறி ஒழுகும் நற்பண்பாளர்களால் தொழப்படும் வண்ணம் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் வாழ்க்கையையுடையவர். இதுவே புண்ணியரான சிவபெருமானின் இயல்பாகும்.

05.☘ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண்
நீறு உகந்தீர் நிரையார் விரி தேன் கொன்றை
நாறு உகந்தீர் திருநல்லூர்ப் பெருமணம்
வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே.

🙏🏾இறைவனே! நீவிர் இடபத்தை விரும்பி வாகனமாகக் கொண்டுள்ளீர். நெருப்பேந்திச் சுடுகாட்டில் ஆடுகின்றீர். திருவெண்ணீற்றினை விரும்பிப் பூசியுள்ளீர். வரிசையாக அழகுடன் விளங்கும் தேன் துளித்து நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளீர். செல்வம் பெருகும் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு உகந்துள்ளதே.

06.☘சிட்டப்பட்டார்க்கு எளியான் செங்கண் வேட்டுவப்
பட்டம் கட்டும் சென்னியான் பதியாவது
நட்டக்கொட்டு ஆட்டறா நல்லூர்ப் பெருமணத்து
இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானீரே.

🙏🏾சிவபெருமான் நியமம் தவறாது வழிபடுபவர்கட்கு எளியர். வேடுவக் கோலத்தில் நெற்றிப் பட்டம் கட்டிய தலையினை உடையவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது நாட்டியங்களின் கொட்டு வாத்திய ஓசையும், திருவிழா முதலிய கொண்டாட்டங்களின் ஓசையும் ஒழியாத, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலாகும். எம் தலைவராகிய நீர் ஏனைய தலங்களிலும் விரும்பி வீற்றிருக்கின்றீர்.

07.☘மேகத்த கண்டன் எண்தோளன் வெண்ணீற்றுமை
பாகத்தன் பாய் புலித்தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தையே புரிந்தானே.

🙏🏾இறைவன் மழை மேகம் போன்ற இருண்ட திருநீலகண்டத்தன். எட்டுத் திருத்தோள்களை உடையவன். வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டவன். பதுங்கியிருந்து பாயும் தன்மையுடைய புலியினை உரித்து அதன் தோலினை ஆடையாக உடுத்தவன். அதன் மேல் பாம்பைக் கச்சாக இறுகக் கட்டியவன். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத் தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில், உயிர்கள் போகம் துய்க்கும் பொருட்டுப் போகவடிவில் விளங்குகின்றான். மேலும் மன்னுயிர்கள் நற்றவம் புரிந்து திருவடிப் பேறெய்தும் பொருட்டு யோகத்தையே புரிந்தருள்வன்.

08.☘தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை
உக்கு இருந்து ஒல்க உயர்வரைக்கீழ் இட்டு
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப் பெருமணம்
புக்கு இருந்தீர் எமைப் போக்கு அருளீரே.

🙏🏾இறைவனே! யாண்டும் உம்முடைய சிறந்த முழுமுதல் தன்மைக்கேற்ப வீற்றிருந்தருளுகின்றீர். முன்னாளில் இலங்கையை ஆண்ட அசுரனான இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற போது, உயர்ந்த அம்மலையின் கீழ் அவன் உடல் குழைந்து நொறுங்கும் படி சிரித்துக் கொண்டிருந்தீர். இந்நாளில் திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகின்றீர். அடியார்களாகிய நாங்கள் உம் திருவடிகளைச் சேர்வதற்கு அருள்புரிவீராக!.

09.☘ஏலுந்தண் தாமரையானும் இயல்புடை
மாலுந்தம் மாண்பு அறிகின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப்பெருமணம்
போலும் தம்கோயில் புரிசடையார்க்கே. 

🙏🏾குளிர்ச்சி பொருந்திய செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய மாண்பை ஒரு சிறிதும் அறிந்திலர். இறைவனின் அடிமுடியைத் தேட முயன்றும் காண்கிலர். நால்வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானே அவ்வேதங்களின் உட்பொருளாய் விளங்குகின்றார் என நல்லோர் நுவல்வர். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் நிலையாக வீற்றிருந் தருளுகின்றார்.

10.☘ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர் வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ வீடு எளிது ஆமே. 

🙏🏾இறைவனை உணரும் அறிவில்லாத சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோர்கள் கூறும் புன்னெறியைக் கேட்டு, நன்னெறியாம் சித்தாந்தச் சிவநெறிக்கண் இணங்காது பிணங்கி நிற்கும் பெற்றியீர்! வாருங்கள். அனைத்துயிர்க்கும்  தலைவன் சிவபெருமான். திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வேதங்களின் பொருளான சிவபெருமானின் திருவடிகளை வழிபடுங்கள். அவ்வாறு வழிபட்டால் வீடுபேறு எளிதில் கிட்டும்.

11.☘நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத்தானை
உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும் பழி பாவம் அவலம் இலரே. 

🙏🏾நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்திப்பேற்றை அருளும், திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, அவர் திருவடியில் இரண்டறக் கலக்கும் கருத்தோடு பாடிய சிறந்த பயனைத் தரவல்ல இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பழியும், பாவமும் அற்றொழியும். பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் நீங்கப் பேரின்பம் வாய்க்கும்.

          திருச்சிற்றம்பலம்.

திருஞானசம்பந்தர் ஜோதிக்குள் உள்ளாகுமுன்,  பாடிய பதிகம். இவருக்கு கடைசியாக நிறைவான பதிகம் இது.

1.💦காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

🙏🏾உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும் , நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும் , அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் .

2.💦நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.

🙏🏾சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால் , நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது , எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தே ஆகும் .

3.💦நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.

🙏🏾உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து , தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .

4.💦இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.

🙏🏾தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும் , நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் . இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால் , அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான் .

5.💦கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.

🙏🏾கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும் , நற்குணமும் , பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர் . அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .

6.💦மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.

🙏🏾மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும் , திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும் . அவர்கட்குச் செல்வமும் பெருகும் . அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்பதாகும் .

7.💦நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.

🙏🏾ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால் , உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர் . அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமும் திருவைந்தெழுத்தே ஆகும் .

8.💦இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.

🙏🏾இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல , சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும் , கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி , நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் .

9.💦போதன் போதன கண்ணனு மண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.

🙏🏾தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது `நமச்சிவாய` என்ற திருவைந்தெழுத்தேயாகும்.

10.💦கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.

🙏🏾தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை , மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும் , கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர் .

11.💦நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.

🙏🏾நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப் பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர் .

              திருச்சிற்றம்பலம்.

அப்போது சம்பந்தர் ஜோதியில் கலப்பதாக ஐதீகம். இக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

இதைக்கண் பார்த்தவர்களுக்கு மறுபிறப்பே இல்லாதிருந்தர் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இதைவாசித்தோர் நிலையும், மறுபிறப்பில்லா நிலை ஏதுவாக அடியேனின் உளமார எண்ணம்.

பிறப்பில்லா நிலை எய்ய, சிலவானவைகளை நாம் கடையொழுக வேண்டும்.

அதற்குமுன்னதாக இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுர திருப்பணியின் மூன்றாவது நிலை தள பணி பூர்த்தியாகும் நிலையில் உள்ளது.

விரைவில் நான்காவது நிலை தள பணி ஈசன் திருவருளாலும், உங்களின் உபயத்தாலும் துவங்க உள்ளது.

இதுவரைக்கும் உபயம் அனுப்பிய திருக்கோபுர வளர்ச்சிக்கு உபய உதவி செய்த அனைவருக்கும் இராஜபதி கைலாசநாதரின் திருவருள் உங்களுக்கு கிடைக்க, நீண்டபெரு விண்ணப்பம் செய்து வேண்டிக் கொண்டோம்.

இதுவரையிலும் அனுப்பாதோர் உங்களின் உபயத்தை அனுப்பி, ஈசனின் அருளைப் பெற்று, பிறப்பில்லா நிலை எய்ய, இராஜபதி திருக்கோபுர நிலைக்கு உபயம் செய்யுங்கள்.

           திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment