Thursday, July 5, 2018

Tiruchendur sthala puranam

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
____________________________________
🌸 *தல புராணத்தை நீ எழுது!*🌸
______________________________________
ஒவ்வொரு ஆலயத்திலும், சுவாமிகளுக்கு நைவேத்தியம் செய்வதற்கு மடப்பள்ளி இருக்கும்.

அதுபோல திருச்செந்தூர், செந்திலாண்டவர் கோயிலில் இருக்கும்  மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு முதியவர் ஒருவரை ஆலயத்த்தாரால் அமர்த்தியிருந்தார்கள்.

இவருக்கு, முருகன் மீது அதிதீவிரமான பக்தியைக் கொண்டிருந்தார்.

நைவேத்தியத்திற்குண்டான  நேரத்திற்கு, வயோதிகத்தின் காரணமாய் சரியான நேரத்திற்கு, இவரால் நைவேத்ய உணவு தயாரித்துக் கொடுக்க முடியவில்லை.

இதனால் ஆலய அர்ச்சகர்கள் பலமுறை அவரிடம் கோபம் கொண்டு ஏசினர்.

முதியவர் முருகனிடம் தன் நிலை குறித்து புலம்பி அழுதார்.

ஒரு நாள், அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக் கொடுக்கவே, ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத் திட்டி விட்டார்.

இதனால் மனம் வருந்திய முதியவர், தன் உயிரை மாய்த்து விடுவதே சரி என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார்.

அவர் கடலினுள் செல்ல செல்ல, நீர்மட்டம் கூடுதலாகாமல் அவரது முழங்கால் வரை மட்டுமே இருந்தது.

அவரும் ஆழத்தை எதிர்பார்த்து சற்று தொலைவிற்கு நடந்து போனார். அப்போதும் முழங்காலுக்கு மேல் கடல்நீர் உயராமல் இருந்தது.

இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று அவர் செல்லவும்......

நில்லுங்கள்!, என குரல் கேட்க சமுத்திரத்தில் நின்றவாறு திரும்பிப் பார்த்தார்.

கரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

அவன் முதியவரிடம் முதலில் கரைக்கு திரும்பி வாருங்கள் என அழைத்தான்.

அவரும் திரும்பி வந்து, அச்சிறுவன் முன்பு நின்றார்.

கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன்.

முதியவர், அவனிடம் தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி அழுதார்.

இதற்காகவா உயிர் துறப்பார்கள்!, என்று சிறுவன் சிரித்தான்.

உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள்? என்றான்.

முதியவர், எனக்கு சமையலைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது குழந்தாய் என வருத்தத்துடன் சொன்னார்.

நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே!, இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன? என்றான் சிறுவன்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டார் முதியவர்.

என்ன? திருச்செந்தூர் தல புராணத்தை நான் எழுதுவதா?.. பள்ளிக்கூடம் போகாத எனக்கு, கல்வியறிவு கொஞ்சமும் கிடையாதே!, என்னால் இது எப்படி சாத்தியமாகும்? என்றார்.

மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்தியமாகும். மேலும், நீங்கள்தான்  தலபுராணத்தை எழுத வேண்டும் என்று செந்திலாண்டவனும் விரும்புகிறான்.

இதோ, அதற்கான ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணிமுடிப்பை அவர் கையில் வைத்தான்.

சிறுவனிடம் கைநீட்டி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார் முதியவர்.

இனிமேல் நீங்கள் சமையல் பணியாளர் அல்ல!, இன்று முதல் *வென்றிமாலை கவிராசர்* என்று அழைக்கப்படுவீர்கள் என்று சொல்லிப் போய் மறைந்தான் அச்சிறுவன்.

முதியவர் ஒன்றும் புரியாமல் நின்றார்.

முதியவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ?

அழகே உருவான செந்திலாண்டவன் கோலத்துடனே அவன் தெரிந்தானே?

உயிர் மாய்ப்பதை நிறுத்தவே முருகன் வந்து மறைந்தானோ?

தெளிச்சி அடைந்த முதியவர், கிருஷ்ண சாஸ்திரி என்பவரைப் போய் பார்த்தார். அவரிடம் செந்திலாண்டவன் தல புராணத்தைச் சொல்லும்படி விவரமாகக் கேட்டார்.

பின், அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்றம் செய்ய அர்ச்சகர்களை நாடினார். 

முருகன் தனக்கு காட்சி தந்ததையும் அவர் சொல்லியபடி நூல் இயற்றியதையும் அர்ச்சர்களிடம் கூறினார்.

அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இதை நம்பவில்லை. மாறாக அவரைக் கேலி செய்து கோயிலிலிருந்து ஓட விரட்டி விட்டனர்.

கோயிலை விட்டு வெளியேறிய கவிராசர், மனம் குமுறி, தான் இயற்றிய நூலை கடலில் வீசிவிட்டார்.

கடலில் விழுந்த, கவிராசர் நூல், அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு, திருச்செந்தூரிலிருந்து, அடுத்த கிராமத்துக் கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது.

அடுத்த ஊரில் அங்கு வசித்த வந்த அறிஞர் ஒருவர் காலாற கடற்கரையில் நடந்து வந்தபோது, அவரின் கண்களில் இந்நூல் காணப்பட்டன.

அதை எடுத்துப் பிரித்துப் படித்தார் அவர். வியப்படைந்து போனார். எவ்வளவு மகோத்மன்யமான இது கடலில் கிடந்து கசங்குகிறதே!, என்று அந்நூலை செந்திலாண்டவன் கோயிலுக்குள் கொண்டு சென்று அர்ச்சகர்கள் முன்பு படித்துக் காட்டினார்.

நூலின் முடிவில் நூலை எழுதியது *வென்றிமாலை கவிராயர்* என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும் வியந்து போயினர்.

கவிராயரை தேடிக் கண்டு அழைத்து வந்தனர் அர்ச்சகர்கள்.

உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில் எங்களை பெருந்தன்மையுடன்  மன்னிக்க வேண்டும் என கேட்டு, தகுந்த மரியாதையையும் செய்தனர்.

பின்பு, செந்திலாண்டவன் முன்னிலையில் தல புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.

படிக்காதவரையும் பாவலராக்கினான் செந்திலாண்டவன் முருகன்.

முருகன் மீது அவர் கொண்டிருந்த பக்தி எங்ஙனமாயின், கற்காத ஒருவன் கவியரசனான்.

அவன் கருணையைப் பெறுவதற்கு, ஆலயம் சென்று கைதொழுதால் மட்டும் போதாது.

நாம், கைதொழுதல் செய்வது, இறைசிந்தனையை கூட்டு வைப்பதற்காகத்தான். மனம் அலைபாயாமலும், வினைகளை நாடி செல்லாமலிருப்பதற்காகத்தான்.

இதனால் நிம்மதி பெறுவது உறுதி. ஆனால், சேர்த்து வைத்த வினைப்பயனை எப்படி குறைப்பது?

எல்லாவற்றிற்கும் மாற்று செய்ய நிறைய வழிகள் இருக்கலாம். நாம் வைத்திருக்கும் இந்த வினைப்பயனை அறுப்பதற்கு, ஆலயத்திற்கு நாம் செய்யும் தொண்டால் மட்டுமே முடியும்.

ஓடி ஓடி எவ்வளவு செல்வம் பொருள் வேனுமானாலும் சேருங்கள். இந்த கலி வாழ்வில் நம் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கும் குணம் நம்மில் எல்லோரிடமும் இருப்பதுதான்.

ஆனால், இதை வெளியில் யாவரும் சொல்லிக் கொள்வதில்லை என்றாலும், அதன்படிதான் வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டி வருகிறோம்.

பொருளைப் பெருக்குவது போல, வினைப்பயனையும் அறுக்கவும் முயல வேண்டுமே!.

இருப்பது போதாதா? ஏன்? மேலும் மேலும் அவனுக்குண்டான ஆலய இருப்பிடத்தை பெருக்குகிறோம் என ஒரு சாரர் நினைவர்.

அவன் நினைவுகள் நம்மைவிட்டு நீங்காது இருக்கவும், கண்களுக்குத் தெரியுடமெல்லாம், அவன் நீக்கமற நிறைந்திருந்தால்தான், நம் மனம் ஒருநிலைப்பாடோடு இருக்கும். அதற்காகத்தான் அவனாலாயம் பெருக்குதல் செய்கிறோம்.

செய்த பாவம் நம்மகிட்டேயே இருக்கு! அதை அறுக்கிற செயல் புண்ணியத்துக்கிட்டே இருக்கு.

அந்த புண்ணியத்தை பெற்றால், வினைப்பயனை அறுக்கலாம்.

எனவே ஆலயங்களுக்குத் தொண்டு செய்யுங்கள், உபயம் செய்யுங்கள், விளக்கெரிய எண்ணெய் வாங்கிக் கொடுங்கள், ஆலயத்தைச் சுத்தம் செய்ய மெனக்கெடுங்கள். பூஜைக்கு மலர்களை வாங்கிக் கொடுங்கள், அபிஷேகத்தின்போது அர்ச்சகரிடம் கேட்டு, அபிஷேகத் திரவியங்கள் வாங்கிக் கொடுங்கள்.

இதில், முக்கியமான ஒன்றைப் பார்க்க வேண்டும். பெரிய பெரிய ஆலயங்களில், சுவாமிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பதை, நிறைய பேர்கள், நான், நீ என்று வாங்கிக் கொடுப்பார்கள்.

இது ஒரு கட்டத்தில் மிதமிஞ்சி கூட சேர்ந்து போகும்.

ஆனால், நிறைய சிவ ஆலயங்களில் ஒரு நேர பூஜைக்கோ, விளக்கெரிய எண்ணெயோ இல்லாமல் இருக்கிறது.

முக்கியமா சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலான தேவார வைப்புத் தலங்கள், இந்த நிலையில்தான் இருக்கிறது.

இந்தமாதிரி  சிவாலயங்களைத் தெரிந்து, ஒவ்வொருவரும் பூஜைக்கு உவந்தளித்தால், ஆலயமும் மேன்மைபடும், நமக்கும் புண்ணியம் தனமாகும். வினை அவிழும்.

நம் வினைகள் அவிழ்வதற்காகத்தான், அவன் அங்கு அங்கு சிதிலமாகி காட்சி தருகிறான். அவனைத் தேடி நாம்தான் ஓட வேண்டும். ஓடி, அவன் பாதத்தை விடாது பற்றுங்கள், விடாதீர்கள்.

ஆலய பூஜைக்கு வழியில்லாத சிவன் கோயிலுக்கு உதவுவது, பெரும் புண்ணியம்.

பெரும் பிரளத்தை உருவாக்கிய ஈசனால், பேரழிவின்போது அழிவிலாது காத்த ஈசனால், வறுமை வந்தபோது படிக்காசு தந்து பஞ்சம் போக்கிய ஈசனால், அவனாலயத்தை அவனாலேயே ஒளிபெறச் செய்ய முடியாதா? ஏன் நம் மூலம் செய்விக்கிறார்?

நம்மகிட்ட வினைகள் இருப்பதனால்தான், நம் வினைகளை அறுக்க நம்மைக் கொண்டு புண்ணியம் செய்தளித்தான்.

அன்று திருப்பனந்தாளிலே ஒரு பெண்மணியின் பூஜையை முன்னிட்டு ஈசன் சாய்ந்தாரே!, சாய்ந்த அவருக்குத் தெரியாதா?, நேராக நிமிர்வதற்கு!, ஏன் குங்கிலியக் கலயனாரைக் கொண்டு நிமிர்ந்து உணர்த்தியருளினார்.

குங்குலியரின் தொண்டு, தன்னலத்தைவிட ஈசனுக்கு மேலானதாக இருந்ததினால், அவரைக் கொண்டே தான்நிமிர்ந்து, அவரின் நெறியை உலகறியச் செய்தார் ஈசன்.

காடவர்கோனாகிய பல்லவ மன்னன், காஞ்சிபுரத்திலே கற்கோயில் கட்டிக் கொண்டிருக்க, பூசலார் நாயனார் மனக்கோயில் கட்டிக் கொண்டிருக்க, கும்பாபிஷேகத்தின்போது ஈசன், ஈசன் பூசலார் கட்டிய மனக்கோயிலுக்கு எழுந்தருளினாரே ஏன்?

எத்தனை விலைகள் கொடுத்தும் பல்லவ மன்னன் கட்டிய கோயிலை விட, பூசலாரின் மனபக்திதான் உயர்ந்தென நமக்கு காட்டினாரே ஈசன் அதற்காகத்தான்.

அதற்காக பல்லவ மன்னன் எழுப்பிவித்த கோயிலை ஈசன் புரமாக்கவில்லை. ஈசன், காடவர்கோனாகிய மன்னனிடம்.......

என் அன்பன் பூசலன் எழுப்பிய ஆலயத்துக்கு இன்று எழுந்தருள்கிறோம். ஆகையால் நீ கட்டிய ஆலயத்துக்கு இன்னொருநாள் பிரதிஷ்டை வைத்துக் கொள்வார்கள்! என்றார் ஈசன்.

அதுபோல  ஈசனுக்கு பிடித்த மேலான தொண்டு செய்து, புண்ணியம் பெற்று, நம் வினைப்பயனை அறுத்துக் கொள்வோமாக!, 

ஓடுங்கள், தேடுங்கள்,  அவனைக்காண......................

No comments:

Post a Comment