Friday, July 20, 2018

Suttharatneswar temple-thevara Vaippu sthalam

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
______________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக.......‌..........)
____________________________________
*தேவார வைப்புத் தல தொடர் எண்: 25*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*🏜சுத்தரத்னேஸ்வரர் திருக்கோயில், ஊற்றத்தூர்:*
______________________________________
ஊற்றத்தூர் எனும் இத்தலத்தை, இன்றைய நாளில் ஊட்டத்தூர் என்று அழைத்து வருகிறார்கள்.

*🌙இறைவன்:* சுத்தரத்தினேஸ்வரர்.

*💥இறைவி:* அகிலாண்டேஸ்வரி.

*📖வைப்புத் தல பதிகம் உரைதாதவர்:*
அப்பர்.

ஆறாம் திருமுறையில்,!எழுபதாவது பதிகத்தில், பத்தாவது பாடலிலும்,

ஆறாம் திருமுறையில், எழுபத்தொன்றாவது பதிகத்தில், நானகாவது பாடலிலும் இத்தலக் குறிப்பு உள்ளது.

*🛣இருப்பிடம்:*
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் தாண்டி பாடாலூர் சென்று, அங்கிருந்து பிரியும் புள்ளம்பாடி சாலையில் ஐந்து கி.மீ. சென்ற பிறகு சாலை இரண்டாகப் பிரியும்.

சாலை பிரியும் இந்த இடத்தில் வலதுபுறம் செல்லும் சாலையில் சென்று ஊட்டத்தூர் தலத்தை அடையலாம்.

ஊட்டத்தூர் செல்ல திருச்சியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.

*📮ஆலய அஞ்சல் முகவரி:* அருள்மிகு சுத்தரத்னேஸ்வரர் திருக்கோயில்,
ஊட்டத்தூர்,
ஊட்டத்தூர் அஞ்சல்,
வழி பாடாலூர்,
லால்குடி வட்டம்,
திருச்சி மாவட்டம்.
PIN - 621 109

*🍃ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*☎ஆலய தொடர்புக்கு:* ராமநாத குருக்கள்,
நடராஜ குருக்கள் - தொலைபேசி:
04328 - 267126,
கைபேசி: 97880 62416

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலிலுள்ள தலங்கள்,
சூலமங்கை, சோமேச்சரம், கறையூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், துவையூர், துடையூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்

ஊற்றத்தூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம் இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.

🔔நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர்
நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாயநாதனையே காணலாமே.

🙏நறையூரிலுள்ள சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சரம், நல்லூர், துறையூர், 
சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமேச்சரம், உறையூர், 
கடலை அடுத்த ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஏடகம், கறையூர், 
கருப்பறியல், கன்றாப்பூர் ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

🔔பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர்
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானும்
துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே.

🙏பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், 
நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், 
ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், 
துடையூர் என்னும் இவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.

*🏜கோவில் அமைப்பு:*
நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் வைப்புத் தலக் கோயில்களில் ஊற்றத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்து, கோபுரத் தரிசனம் செய்து உள் புக நிலையுடன் ஆலயம் அமைந்துள்ளது.

அடுத்துள்ள இரண்டாவது நுழைவாயில் மேற்புறத்தில், ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி இருக்கும் தரிசனம் கிடைக்கிறது.

இதனருகாக  நால்வர் பெருமக்கள் காட்சி கிடைக்க வணங்கிக் கொள்ள நேர்ந்தது.

வாயிலின் இருபுறத்தில், ஒரு புறத்தில் விநாயகர் இருக்க, விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது முதல் வணக்கம் செய்து கொண்டோம்.

ஆலய வாயிலின் மறுபுறத்தில், முருகப் பெருமான் காட்சி தர, இவருக்கு மறுவணக்கத்தை  அளித்து வணங்கி நகர்ந்தோம்.

இரண்டாவது நுழைவாயிலைக கடந்து உள் புகுந்தால், உருவத்தில் சற்றே பெரியதாக உள்ள நந்தியெம்பெருமானைக் காண நேர்ந்தது.

நந்தியாரை வணங்கிக் கொண்டு, மேலும் ஆலயத் தரிசனத்திற்கு உள் அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

கருவறை சுற்றுப் பிராகாரம் வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து கொண்டோம்.

இவர் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, காலடியில் முயலகன் கிடக்க அழகிய சிற்ப வடிவில் காட்சி அளித்தார்.

மேலும் வலம் செய்கையில், இக்கோயிலுக்குரிய விசேஷ மூர்த்தியான நடராசப் பெருமான் சிலா உருவில் தனி சந்நிதியில் அற்புதமாகக் காட்சி தந்தார்.

ஆடல் நய கோலத்தைக் கண்டு மகிழ்ந்து பேராவலுடன் வணங்கித் திரும்பினோம்.

இந்த சிலையைத் லேசாக தட்டினால் *ஓம்* என்ற ஓசை எழும்பும் என அர்ச்சகர் கூறினார்.

இவரின் பக்கத்தில் சற்றுப் பார்வையைச் சாய்த்து சுவாமியைப் பார்ப்பது போன்ற அமைப்புடன் சிவகாம சுந்தரி எழுந்தருளியுள்ளதைக் கண்டு மெய் மறந்து வணங்கி நின்றோம்.

இதை அடுத்துள்ள மற்றொரு சந்நிதியில் தனிச் சபையில் நடராசரும், சிவகாமியும் எழுந்தருளியுள்ளனர்.

மேலும், கருவறை சுற்றுப் பிராகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதிக்குச் சென்று வனங்களில் திரும்பினோம்.

ஆலயத்தின் தீர்த்தமான பிரம தீர்த்தம் கிணறு வடிவில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது.

ஆலயத்திலுள்ள காலபைவர் சிலா உருவத்து முன் வந்து நின்று, பவ்ய பயத்துடன் வணங்கி நிமிர்ந்தோம். இச்சிலா உருவம் மிக மிக அற்புதம்.

காலபைரவருக்கு பதினோறு வாரம் தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு மனபயம் நீங்குகிறது, மாடுகளுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

இவருக்கு, விடியற்காலையில், குரு ஹோரையில் பூஜை செய்தால் காரியசித்தி கிடைக்கிறது.

*சிறப்பு:*
சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் ,ஊட்டத்தூர். திருச்சி சிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும் திருத்தலம் இது.

தொன்மையான சிவபெருமான் திருக்கோயில் இது.

ராஜராஜசோழ மன்னரால் கட்டப்பட்ட பழைமையான தேவார வைப்புத் தலம்.

சோழ மன்னர்கள், விஜய நகர, பாண்டிய மன்னர்களாலும் பல திருப்பணிகள் செய்யப்பட்ட திருக்கோயில்.
இத்திருக்கோயிலைப் பற்றி அப்பர் திருப்பாடல்கள், க்ஷேத்திரக்கோவை-திருத்தாண்டகம் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

*தல பெருமை:*
ஊட்டத்தூரின் மேற்கே உள்ள சோளேஸ்வரம் எனும் கோயிலை அமைத்த ராஜராஜ சோழன் அடிக்கடி இப்பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்தான்.

ஒரு சமயம், ஒருமுறை மன்னர் வருகைக்காகப் பாதையைச் சரிசெய்யும் பணியில் மண்வெட்டியால் புல் செதுக்கும் பொழுது ஓரிடத்தில் இரத்தம் வரவே, இச்செய்தி மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது.

மன்னர் வந்து சோதித்து சிவலிங்கம் இருப்பதைக் கண்டு, அதையெடுத்து அவருக்கு திருக்கோயில் எழுப்பினார்.

மூலவர் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டி பட்ட வடு இருக்கிறது.

பஞ்சநதனக்கல்
பஞ்சநதனக்கல் எனும் அரிய வகையான ஒரு கல்லில் செய்யப்பட்ட எட்டு அடி உயர நடராஜப்பெருமான் சிலை வழிபாட்டில் இருந்து வருகிறது.

*கட்டடக்கலை சிறப்பு:*
வருடந்தோறும் தமிழ் மாசி மாதம் 12,13,14 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவபெருமான் மீது படருமாறு அமைந்திருக்கிறது.

நோய்தீர்க்கும் தீர்த்தம்
பஞ்சநதனக்கல்லுக்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பஞ்சநதனக்கல்லான நடராஜருக்கு வெட்டிவேர் மாலையிட்டுப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் போட்டு அந்த தீர்த்தத்தைப் பருக சிறுநீரகக்கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக தொடர்கிறது.

*முள் படுகளம்:*
வருடந்தோறும் முள் படுகளம் எனும் இருபதுக்கும் மேலான கிராம மக்கள் பங்கு பெறும் திருவிழா இந்தத் திருத்தலத்தில் நடைபெறுகின்றது.

         திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment