ராமானுஜர், ஒரு மஹா வைஷ்ணவர் - J.K. SIVAN
உங்கள் பெயர் சிவன் தானே?
ஆமாம்''
''நீங்கள் வைணவ ஆசார்யர்கள், மஹான்கள் ஆழ்வார்கள் பற்றியெல்லாம் புத்தகம் எழுதியிருக்கி றீர்களாமே ?''
''ஒன்றல்ல பல. இதில் என்ன ஆச்சர்யம்?''
''அப்படி இல்லை, சிவன் என்பதால் நீங்கள் சைவ ஈடுபாடு கொண்டவராக இருக்கலாமோ என்று தோன்றியது''
''ஏன் சைவ வைணவ, மாத்வ, ஆச்சார்யர்கள், மகான்கள், நாயன்மார்கள், பக்தர்கள் மேலும் நிறைய எழுதுகிறேனே. முக்கியமாக ராமானுஜர் மீது நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத முயன்றதற்கு ஒரு தனி காரணம் சொல்லட்டுமா. கேளுங்கள்''
ராமானுஜர் ஒரு அதிசயம். இதற்கு முன்பும் இனியும் இப்படி ஒருவரை காணமுடியுமா என்பது சந்தேகம். ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு இருந்த ஒருவரை இன்றும் படித்து, கேட்டு வியக்கிறோம் என்றால் அது சாதாரண விஷயமா? ஏன் எதற்கு எதனால் அவர் உயர்ந்தவர்? கேள்வி எழுகிறது அல்லவா.
ராமானுஜர் வைணவ ஸம்ப்ரதாயத்தையோ, வைணவமதத்தை உருவாக்கியவரோ அல்ல. அவர் ஒரு ஞானி. ஆசார்யன். குரு. நல்வழி காட்டியவர். சரியான பாதையில் போக செய்பவன் தான் ஆசார்யன். உதாரண புருஷனாக இருக்க முற்றிலும் தகுதியான குரு அவர். சாஸ்த்ர வேத ஆகம புராண வேதாந்த ஞானி.
குரு பக்திக்கு அவர் ஒரு உதாரணம். சிஷ்யர்களுக்கு ஆச்சார்யனாக இருப்பதிலும் அவரே முன்னுதாரணம். தர்க்க வாதங்களில் சீராக நேர்மையாக கருத்துகளை எதிர்ப்பட்டோரை மனம் கோணாமல் மரியாதை குறையாமல் அவர்களே மெச்ச வென்ற ஒரு தர்க்க வாதி.
ஒரு சிறந்தவிஷ்ணு பக்தன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் அவரே உதாரணம். வரதராஜன் ரங்கநாதன் இருவரும் இரு கண்களாக அவருக்கு விளங்கி அவர்களோடு நேரடியாக சம்பாஷிக்கும் அளவுக்கு நெருக்கமான பக்தி.
மக்கள் சேவை மகேசன் சேவை, ஜனசேவையே ஜனார்த்தனன் சேவை என்று தன்னை அர்ப்பணித்துக் கொள்ள முன்வந்த ஒரு தயாள மனம் கண்ட மஹான் ராமானுஜர்.
ஜாதி மத பேதம் உச்சியில் இருந்த காலத்தில் புரட்சிகரமாக தைரியமாக அனைவரையும் இணைக்க துணிந்த மாபெரும் செயல் வீரர் ராமானுஜர்.
கண்ணாலே பார்க்காத ஒரு மானசீக குருவின் மனதில் இருந்த எண்ணங்களை உணர்ந்து அவருக்கு கொடுத்த வாக்கைத் தன் வாழ்நாளில் நிறைவேற்றி பெருமை அளித்த ஒரே ஆசார்யன் ராமானுஜர். அதற்கு தடையாக இருந்த எண்ணற்ற இன்னல்களை விடாப்பிடியாக வெற்றிகரமாக எதிர்கொண்டவர்.
தான் வழிபட்ட விஷ்ணுவின் பக்தர்களை ஒருமைப் படுத்தி ஒற்றுமை படுத்தி, அவர்களுக்கு தக்க போதனை அளிக்க ஆச்சார்ய பீடங்களை நிறுவி, எங்கும் வைணவ சம்ப்ரதாயம் அனைவராலும் ஏற்கும் அளவிற்கு ஒரு சீரமைத்தவர் ராமானுஜர்.
நூற்று இருவது வயது வரை வாழ்ந்தும், ஒரு நாளும் தொய்வின்றி, நோயின்றி, இந்திய கண்டம் முழுதும் நடந்து வைணவ சித்தாந்தங்களை, விசிஷ்டாத்வைத கோட்பாட்டினை வலியுறுத்தி விளக்கி ஏற்க செய்தவர் ராமானுஜர்.
தனது குருவிற்கும் வைணவ பக்தர்களுக்கும் செய்யும் சேவையில் குறை இருந்ததால் மனைவியை வெறுத்து குரு சேவைக்கும், சமூக நல சேவைக்கும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள இளம் வயதிலேயே துறவியானவர் ராமானுஜர்.
என்றோ எங்கோ ஒருபாசுரத்தில் ஆண்டாள் தனது மனக் கிடக்கையை உணர்த்த, அதை அவள் நிறைவேற்ற வில்லையோ, என கவலையுற்று தானே அவள் எண்ணத்தை பூர்த்தி செய்த, நூறு தடா வெண்ணை, நூறு தடா அக்காராடிசல் ஸ்ரீ சுந்தரராஜருக்கு ஆண்டாள் சார்பில் தான் அளித்த திருஆராதனம் செய்த ஒரு சகோதர பாசம் கொண்ட முனிவர் ராமானுஜர். ஆழ்வார்கள் அருளிய பக்தி பாசுரங்களில் மிக்க ஈடுபாடு கொண்டு தீர்க்க தரிசனத்தோடு வைணவ பக்தி வழிபாட்டு முறைகளை நிர்ணயப்படுத்தி வழக்கத்தில் கொண்டுவர பெரும் பாடு பட்டவர் ராமானுஜர்.
தயை, கருணை அன்பு இவற்றையே தனது சக்தியாக கொண்டு அனைவரையும் ஒன்றுபட செயல்பட்ட ஆன்மீகவாதி ராமானுஜர். ஸ்ரீ ரங்கம் மற்றும் எத்தனையோ வைணவ ஆலய நிர்வாக ஆலய வழிபாட்டு முறைகள் சாஸ்திர பிரமாணங்களுக்குட்பட்டு சிறப்புடன் இன்றும் செயல்பட விதிமுறைகளை நிறுவியவர் ராமானுஜர்.
ஆன்மீக சமூக சேவையில் விவேகானந்தர், பாரதியார், காந்தி, ஆகியோர் போற்றி தமது முன்னோடியாக கொண்ட ஒரே மஹா புருஷர் வேதாந்தி ஸ்ரீ ராமானுஜர். மஹாத்மா தாழ்த்தப்பட்டோரை ஹரி ஜன் என்று நாமகரணமிட காரணம் ஸ்ரீ ராமானுஜரின் திருக்குலத்தோரே என்ற ஆயிரம் வருஷங்கள் முந்தைய அறைகூவல் தான்.
ராமனுக்கு கைங்கர்யம் செய்வதொன்றே வாழ்வின் லட்சியமாக கொண்டவன் லக்ஷ்மணன். இளைய பெருமாள். அதே பெயரோடு வைணவ சம்பிரதாயத்துக்கு, வைணவ ஆலயங்களுக்கு பக்தி கைங்கர்யம் செய்ய தன்னை அர்பணித்துக்கொண்டவர் அதே லக்ஷ்மணன் நாமமான இளைய பெருமாள் எனும் பெயர் கொண்ட , ராமனுக்கு அனுஜன் ராமானுஜன். இருவருமே பரமனின் பைந்நாகப்பாயான ஆதிசேஷனின் அம்சம்.

No comments:
Post a Comment