Monday, July 2, 2018

Naaladiyaar

நாலடியார்

சமணர்கள் தந்த பரிசு -- J.K. SIVAN

தமிழ் இலக்கியம் படிப்பவர்கள் ரொம்ப குறைவான நம்பர். அதிலும், எங்காவது கணக்கு சம்பந்தப் பட்டால் அங்கிருந்து ஓடுவது சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடியது தான். ஆனால் சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்க் கணக்கு என்ற பெயரில் சில அபூர்வ நூல்கள் உள்ளன. பேரைப் பார்த்து பயந்து ஓடாமல் உள்ளே போனால் அதில் முதல் நூலாக நாலடியார் என்ற அதிசயத்தை பார்க்கலாம். இந்த பதினெண் கீழ் கணக்கு எதை யெல்லாம் தன்னுள் கொண்டிருக்கிறதாம் தெரியுமா:

நாலடி நான்மணி நாநாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியொடு ஏலாதி என்பவே
கைநிலைய வாம்கீழ்க் கணக்கு.

1.நாலடியார் 2. நான்மணிக்கடிகை 3. இனியவை நாற்பது 4. இன்னா நாற்பது 5. முப்பால்(திருக்குறள்) 6. திரிகடுகம் 7. ஆசாரக்கோவை 8. பழமொழி நானூறு 9. சிறுபஞ்சமூலம் 10. முதுமொழிக் காஞ்சி 11. ஏலாதி 12. களவழி நாற்பது 
13. கார் நாற்பது 14. ஐந்திணை ஐம்பது 15. ஐந்திணை எழுபது 16. திணைமொழி ஐம்பது 17. திணைமாலை நூற்றைம்பது 18. கைந்நிலை

சத்தியமாக இதெல்லாம் படிக்க எனக்கு இந்த ஜென்மத்தில் நேரம் கொடுக்கப் படவில்லை என்று நன்றாக தெரியும். ஆகவே பக்கத்தை புரட்டி நாலடியாரை மட்டும் கொஞ்சூண்டு படிக்க கிருஷ்ணனை வேண்டுகிறேன்.

சமண முனிவர்கள் 400 பேர் சேர்ந்து காலத்தை வென்ற 4 அடி பாடல்கள் சிலவற்றை இயற்றினார்கள். சமணர்கள் மறைந்தாலும் அவர்கள் சமைத்த இந்த நாலடியார் என்றும் நிலையாக நிற்கும். பல் உறுதியாக இருப்பதற்கு அந்த காலத்தில் ஆலங் குச்சி, வேப்பங் குச்சி உபயோகித்து பல் துலக்கினார்கள். பல்லை விடுங்கள், நமது சொல்லுக்கு உறுதியாக எதை நாம் கற்க வேண்டும் என்று ரெண்டு காவியங்களை விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள் நமது முன்னோர். அவையே நாலடியும் ஈரடியும். அதாவது நாலடியாரும் திருக்குறளும்.

இதில் நாலடியாரை கொஞ்சம் பார்க்கும்போது அதை 1873க்கு முன்பே லீபேர் என்கிற தரங்கம்பாடி வெள்ளைக்கார பாதிரியார் ஒரு நல்லவேலை செய்திருக்கிறார். அது தான் அவர் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. வெள்ளைக் காரர்கள் சிலர் நம்மைவிட தமிழை நன்றாக அறிந்திருந்தார்கள். நாம் தான் ஏனோ அவர்கள் மொழியான ஆங்கிலத்தை அரைகுறையாக பிடித்துக்கொண்டு நமது தாய் மொழியை இரக்கமின்றி தயக்கமின்றி வெளியேற்றிவிட்டோம். தாய்க்கு கொடுக்கும் மதிப்புதானே தாய் மொழிக்கும் தருவோம்.

நாலடியார் 40 அத்தியாயம் கொண்டு ஒவ்வொன்றிலும் 10 பாடல்கள். ஒவ்வொரு பாடலும் 4 அடி கொண்டது.

ஒரு ராஜாவின் அரண்மனையில் 8000 புலவர்கள் கூடியிருந்தனர். அவனது அரண்மனையில் ஏற்கனவே சில புலவர்கள் இருந்தனர். ராஜாவுக்கு மோகம் புதிதாக வந்த புலவர்கள் மேல் வந்து விட்டது. இனி நாம் எதற்கு என்று சமணப் புலவர்கள் அரண்மனையை விட்டு ராவோடு ராவாக சொல்லாமல் கிளம்பிவிட்டனர். போவதற்கு முன்பு ஆளுக்கு ஒரு பாடல் ஓலைச்சுவடியில் எழுதி தங்கள் தலையணைக்கு கீழே வைத்து விட்டு சென்றனர். மறுநாள் ராஜா விஷயம் அறிந்து அத்தனை ஓலைச்சுவடிகளையும் நதியில் எறியச்சொன்னான். ஆற்று வெள்ளத்தையும் எதிர்த்து 400 ஓலைச்சுவடிகள் மிதந்து வந்தன. ஆச்சர்யப்பட்ட ராஜா அவற்றை பாதுகாத்து இப்போது உங்களுக்கு நாலடியாராக புத்தகமாகவோ, கம்ப்யூட்டரில் pdf ஸ்வரூபத்தில் மின் புத்தகமாகவோ வீட்டுக்குள்ளேயே. வந்து விட்டதால் என்ன பலன். படிக்கவேண்டாமா? அதைத்தான் உங்களுக்கும் சேர்த்து நான் செய்ய உத்தேசம்.

நாலடியாரைச் சமண முனிவர் பலர் எழுதினர். பதுமனார் இதனைத் தொகுத்தார் என்று கூறுவர். திருக்குறளில் இருப்பது போலவே அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவு இதிலும் உண்டு. நாற்பது அதிகாரங்கள்; தலா பத்துப் பாடல்கள். கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 400+1.

பாடல்: கடவுள் வாழ்த்து

''வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. ''

சுத்தமாக புரியவில்லை அல்லவா? உங்களுக்கு மட்டும் இல்லை, எனக்கும் தான். எனவே தான் ஸ்ரீ ஹரி குமார் (ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி தமிழ் பண்டிதர்) ''ஆதிமூலமே'' என்று கத்திய கஜேந்திரனுக்கு விஷ்ணு ஓடிவந்து உதவியது போல் எனக்கு உதவினார். அர்த்தம் சொன்னார்.

சமணர்கள் அருக்கனை வேண்டியது ''வானத்தில் தோன்றும் வானவில்லின் வரவையும் மறைவையும்
அறியமுடியாது - அதுபோல் மண்ணில் தோன்றும் உயிர்களின் பிறப்பையும் இறப்பையும் அறியமுடியாது!
எனவே, பாதங்களைப் புவியில் பதிக்காத அருகதேவனை, நாம் தரையில் தலை பட மனத்தில் நினைத்தவை
நல்லபடி நிறைவேற வணங்குவோம்.''


No comments:

Post a Comment