தெய்வத்தின் குரல்
உடம்புக்கு மட்டும் தான் ' மூச்சு ' முக்கியம்
என்றில்லை. மனஸுக்கும் மனஸின்
ஆரோக்யத்திற்கும் அதுவே முக்யமாயிருக்கிறது. எண்ணங்களுக்கு மூலமான மனஸும், மூச்சுக்கு மூலமான பிராணசக்தியும் ஒன்றாகவே இருப்பதால்தான் இப்படியிருக்கிறது. நாடி சலனத்தாலேயே ஆரோக்யமான (நல்ல) அல்லது ஆரோக்யக் குறைவான (கெட்ட) எண்ணங்களும் உண்டாகின்றன. நீங்களே கவனித்துப் பார்த்தால் தெரியும். ஒரு தெய்வ ஸந்நிதானத்தில் அல்லது மஹானின் அருகில் மனஸ் சாந்தமாக இருக்கிறபோது மூச்சு எப்படி சஞ்சரிக்கிறது; காமத்தினால், கோபத்தினால் வேகம் உண்டாகிறபோது ' ச்வாஸகதி ' எப்படியிருக்கிறது என்று பார்த்தால், ஒன்றுக்கொன்று நிரம்ப வித்யாஸமாயிருக்கும். ஸந்தோஷம் என்பதிலேயேகூட தெய்வ விஷயமாக ஒரு பஜனையில் அல்லது உத்ஸவத்தில் உண்டாகிறதற்கும், இந்திரிய சுகத்தை தருகிற விஷயங்களில் உண்டாவதற்கும் நாடி சலனத்தில் வித்யாஸம் தெரியும். பொதுவாக உத்தமமான ஸந்தோஷத்தில் மூச்சு வலது நாசித்துவாரத்தில் வரும்; வெறும் இந்திரிய ஸந்தோஷம் (புலனின்பம்) என்றால் இடது நாசித் துவாரத்தில் வரும். இத்தனை உணர்ச்சிகளிலும் ஆதாரமான சாந்தமான ஸத்வஸ்துவில் தியானம் வலுவாகிற போது, ஒரே சீராக, மிக மெதுவாக, இரு நாசிகளிலும் ஸமமாக மூச்சு வரும். தியான லக்ஷ்யத்தில் ஒன்றுபட்டுவிடுகிறபோது மூச்சே நின்றுவிடும். மனஸும் நின்றுவிடும். ஆனால் உயிர் இருக்கும். ஞானம் என்ற பேருணர்வு பூரித்து இருக்கும்.
No comments:
Post a Comment