பஜகோவிந்தம் - ஸ்லோகம் 3௦/31
ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம்−
நித்யாநித்ய விவேக விசாரம்;
ஜாப்ய ஸமேத ஸமாதி விதானம்
குர்வவதானம் மஹதவதானம்! (30)
மூச்சடக்கி, ஐம்புலனடக்கி,
மெய்யும், பொய்யும் அறிவாய் நன்றே!
நாமத்தை நினைந்து, மோனத்தில் நிலைத்து−
ஞானத்தை அடைய, நீயும் முயல்வாய்! (30)
(Padma Gopal)
பிராணாயாமம் –மூச்சுப்பயிற்சி, ப்ரத்யாஹாரம்- இந்த்ரியநிக்ரஹம். நித்ய அநித்திய விவேக விசாரம்-எது நித்தியம் எது அநித்தியம் என்று அறிவதன் மூலம் விவேகம் அடைவது. ஜாப்யஸமேத – நாமஜபத்துடன் கூடிய ஸமாதிவிதானம் – ஸமாதி நிலை. இவைகளை மஹத் அவதானம் – மிகுந்த கவனத்துடன் குரு அவதானம் – முயற்சிசெய்.
பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் இவை பதஞ்சலியின் யோகசூத்ரத்தில் கூரியுள்ள அஷ்டாங்க யோகத்தின் பகுதிகள். இவை உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்தும் பயிற்சிகள்.
அஷ்டாங்கம் அல்லது எட்டு அங்கங்களாவன, ப்ராணாயாமம், மூச்சுப்பயிற்சி (உடல் சம்பந்தமானது ) ப்ரத்யாஹாரம், மனதை இந்த்ரியசுகங்களில் இருந்து இழுத்துக் கட்டுப்படுத்தல், ஆசனம்- யோகாசனங்கள், தாரணை –மனதை நிலை நிறுத்துவது, தியானம் – இடையறாத சிந்தனை ,ஸமாதி- தன்னை மறந்த நிலை.
கீதையின் ஆறாவது அத்தியாயத்தில் யோகத்தின் மூலம் முக்தி அடைவதைப்பற்றி விளக்கம் காண்கிறோம்.
சங்கரர் கூறிய முக்தியடையும் வழி ஸாதனா சதுஷ்டயம் எனப்படும். இஹாமுத்ரபலபோகவிராகம் – இவ்வுலகிலும் மேலுலகிலும் அடையக்கூடிய சுகங்களைப் பற்றி ஆசையின்மை ( அதாவது கர்மபலத்யாகம்)
நித்ய அநித்திய வஸ்து விவேகம்- எது நிலையானது எது அழியக்கூடியது என்பதைப்பற்றிய அறிவு,
சமதமாதிசம்பத் - இது ஆறுவகைப்படும். – சம என்பது மனக்கட்டுப்பாடு, தம என்பது இந்த்ரியங்களை அடக்குதல்(உடல் கட்டுப்பாடு) , உபரதி- காம்யகர்மங்களை விடுதல், திதிக்ஷா- பொறுமை, ச்ரத்தா- குருவினிடமும் , வேதத்திலும் நம்பிக்கை , சமாதான- பிரம்மனிடம் மனம் லயித்தல்.
முன்னிருந்த ஸ்லோகங்களில் இவ்வுலகத்தின் நிலையற்ற சுகங்களையும் வாழ்வின் நிலையற்ற தன்மையையும் அறிவுறுத்திப் பின்னர் இந்த ஸ்லோகத்தில் யோகம் ஞானம் பக்தி இவைகளை முக்திமார்கமாக கூறிகிறார். பிராணாயாமம் முதலியவை யோக மார்கத்தையும், நித்யாநித்ய விவேகம் ஞானம் கர்மயோகம் இவைகளையும், ஜாப்யம் என்பது பக்தி மார்கத்தையும் குறிக்கின்றன.
குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத் அசிராத் பவ முக்த:
ஸேந்த்ரிய மானஸ நியமாதேவம்
த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்! (31)
தலைவனின் தாளிணை பற்றியே கொண்டால்−
தொலையுமே வாழ்வின் துயரங்கள் தாமே!
மனம், மொழி, மெய்யால், நெறிபட நடந்தால்−
தினம் உன்னில் இறைவனை, நீயும் காண்பாய்
(padmaGopal)
குருசரணாம்புஜ நிர்பர பக்த: -குருவின் திருவடிகளில் நீங்காத பக்தியுடன், அசிராத் – விரைவில், ஸம்ஸாராத்-சம்சாரத்தில் இருந்து , முக்த: பவ – விடுபடுவாயாக. ஏவம்- இவ்வாறு , ஸேந்த்ரியமானஸநியமாத் இந்த்ரியங்கள் மனம் இவைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஹ்ருதயஸ்தம்– உன் உள்ளிருக்கும், தேவம்- இறைவனை, த்ரக்ஷ்யஸி- காண்பாய்.
பஜகோவிந்தம் ஸ்லோகங்கள் கீதாசாரம் என்று கூறலாம். அதனால் இது மோஹமுத்கரம், அஞ்ஞானத்தினால் ஏற்படும் மயக்கத்தை உடைக்கும் சுத்தி என்று குறிப்பிடப்படுகிறது. உலக வாழ்க்கையில் ஈடுபட்டு ஆசைகளால் இழுபட்டு அல்லலுறும் மானிடரை உய்விக்க ஒரு அதிரடி சிகிச்சையாகக் கருதப்படுகிறது. பஜகோவிந்தம் என்று ஆரம்பம் இருந்தாலும் இது முழுவதும் வேதாந்த உண்மைகளைக் கொண்டது. அதனால்தான் இதை கீதையின் சாராம்சமாகக் கருதப்படுகிறது.
.
No comments:
Post a Comment