Tuesday, July 10, 2018

Bhaja govindam sloka 8 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம்-8

கா தே காந்தா, கஸ் தே புத்ர:
ஸம்ஸோரோயம் அதீவ விசித்ர:
கஸ்ய த்வம் வா, குத ஆயாத:
தத்வம் சிந்த்ய ததிஹம் ப்ராத: (8)

யார் உன் மனைவி, யார் உன் மைந்தர்?
யார் தான் நீயோ? எங்கு வந்தாயோ?
அவனியின் அதிசயம் இவை தானென்று−
கவனம் கொள்வது நல்லது நண்பா!

கா தே கந்தா க: தே புத்திர: - நீ யாரை மனைவி என்றும் மகன் என்றும் நினைத்துக் கொண்டு இருக்கிறாயோ அந்த நினைவு நிலையானதல்ல. ஏனென்றால் உறவுகள் ஒரு ஜன்மத்திற்குத்தான். இதுதான் போன ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டது. இங்கு வலியுறுத்தப்படுகிறது. 
சம்சார: அயம் அதிவிசித்ர; இந்த சம்சாரம் என்பது ஒரு விந்தையான சமாசாரம். ஏன் என்றால் நான் யார் என்பதே தெரியாத நிலயில் என் மனைவி என் மக்கள் என்னும் எண்ணமெல்லாம் விசித்திரம்தானே . 
முதலில் கஸ்ய தவம் –நீ யாரைச்சேர்ந்தவன்? குத ஆயாத: -எங்கிருந்து வந்தாய்? என்பதை ஆராய்ந்து கொள் என்கிறார் ஆசார்யர்.
ஒருவன் குருவை நாடி வந்தான். அவர் நீயார் ?என்றார் . அவன் அதன் பெயரைச்சொன்னான். அவர் அது உன் பெயர் . நீ யார் என்றார். அவன் தன் உத்தியோகம் , முதலியவைகளை ஒவ்வொன்றாகக் கூற அதை அவர் இவ்வாறே மறுத்து நீ யார் என்றார்.

கடைசியில் அவன் நான் மனிதன் என்றான். அது உன் உடல் . நீ நல்லவன் என்றால் அது உன் மனம் , அறிவாளி என்றால் அது உன் புத்தி என்று கூறியவர் உண்மையில் நீ யார் என்று கூற அவன் தெரியவில்லையே சுவாமி என்றான். பிறகு அவர் ஆன்மஞானத்தை போதித்தார் .

இதன்படி பார்த்தால் நீ யாரைச் சேர்ந்தவன் என்பதற்கு பதில் நாம் எல்லோரும் இறைவனை சேர்ந்தவர்கள். அவன் ஒருவனே நம் நிரந்தர உறவு. மீதி எல்லாம் ரயில் சிநேகம் போலத்தான். இதை பாகவதம் தெளிவாக கூறுகிறது.

சித்ரகேது என்று ஒரு அரசன் அவனுக்கு இரு மனைவிகள். அவனுக்கு குழந்தை இல்லை. அப்போது அங்கிரச முனிவர் அனுக்ரஹத்தால் அவனுடைய மூத்த மனைவிக்கு புத்திரன் பிறந்தான். ஆனால் இரண்டாவது மனைவி அந்த சிசுவை பொறாமையால் கொன்றுவிட்டாள். அதை நினைத்து வருந்திகொண்டிருந்த அவன் முன் நாரதரும் அங்கிரஸ் முனிவரும் தோன்றினர்.

அவனிடம் பரிதாபப்பட்டு நாரதர் அவனுடைய இறந்த புத்திரனின் ஜீவனை வரவழைத்தார். அதனிடம் பெற்றோர் துக்கத்தில் தவிப்பதால மீண்டும் வந்துவிடுமாறு கூற அதற்கு அந்த ஜீவன் எவ்வளவோ ஜன்மங்கள் எவ்வளவோ பெற்றோர் . எந்த பெற்றோரை நான் திருப்திப் படுத்துவது என்று கூறியது. அதைக்கேட்ட சித்ர கேது உண்மை அறிந்து சோகத்திலிருந்து விடுபட்டான்.

எல்லோரும் எல்லாருக்கும் மாறி மாறி பந்துக்களாகவும் விரோதிகள் ஆகவும் நண்பர்கள் ஆகவும் பல பிறவி எடுக்கின்றனர். இப்படி பிறவியடைந்த ஜீவன் நித்தியமானவன் நான் என்னும் உணர்வு இல்லாதவன். கர்ம வசத்தால் பல பிறவி எடுக்கிறான். எங்கு எதுவரை காணப்படுகிறானோ அதுவரைதான் அவர்களுக்கு இவன் நம்முடையவன் என்ற உணர்வு ஏற்படுகிறது இதுதான் பாகவதம் சொல்லும் உண்மை.

இதைத்தான் சங்கரர் இங்கு சொல்கிறார் . அதனால் பற்றை ஒழித்து பகவான் நாமத்தைச் சொல் என்கிறார். 
பற்றை ஒழிப்பது எங்ஙனம். இது அடுத்த ஸ்லோகத்தில் சொல்லப்படுகிறது.


No comments:

Post a Comment