Tuesday, July 10, 2018

Bhaja govindam sloka 7 in tamil

Courtesy:smt.Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம் -7

பாலஸ்தாவத் க்ரீடா ஸக்த:
தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தா ஸக்த:
பரமேப்ரஹ்மணீ கோபி ந ஸக்த: (7)

அறியாப் பருவத்தில், ஆட்டம் பாட்டம்;
இளமையில், பெண்ணைத் தேடியே ஓட்டம்;
முதுமைப் போதில் கவலையில் வாட்டம்;
இறைவா! இல்லையே, உன் மேல் நாட்டம்! (7)
(பத்மாகோபால் )

பால:தாவத், சிறு வயதில் உள்ளவரை , க்ரீடாஸக்த: , விளையாட்டில் மனம் செல்கிறது. தருண: தாவத் –வாலிப வயதில் , தருணீஸக்த: பெண்களின் மேல் கவனம் செல்கிறது. வ்ருத்த: தாவத், வயோதிகம் வந்தபோதோ சிந்தாசக்த: -தான் அனுபவிக்க முடியாததைப் பற்றி கவலை கொள்கிறான். பரமே பிரம்மணி – பரபிரும்மத்தைக் குறித்து கோ அபி- யாரும், ந ஸக்த:நினைப்பதில்லை.

பலர் வாழ்க்கையை அனுபவிக்கும் வரை அனுபவிப்போம். வயதானபோது ஆன்மீகத்தைப் பற்றி சிந்திப்போம் என்று நினைக்கிறார்கள்.. இளமையிலேயே இறைவனிடம் நாட்டம் வரவில்லையானால் கடைசி காலத்தில் வராது. 
இதைத்தான் இந்த ச்லோகத்தில் சங்கரர் அறிவுறுத்துகிறார். பின்னர் ஒரு ச்லோகத்திலும் இன்னும் வலுவாக சொல்லப் போகிறார்.

கீதையில் பகவான் 'அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரன் முக்த்வா களேபரம் , ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி,'என்று கூறுகிறார்.

அதாவது எவன் ஒருவன் அந்திமகாலத்திலும் என்னையே நினைத்துக் கொண்டு உடலை விடுகிறானோ அவன் என்னை அடைகிறான் என்பது இதன் பொருள்.இதில் முக்கி/யமாக கவனிக்க வேண்டியது அந்தகாலே 'ச 'கடைசிகாலத்திலும் என்பது. வாழ்நாள் பூராவும் மாம் 'ஏவ' என்னையே நினைந்து கடைசி காலத்திலும் என்னையே நினைப்பவன் என்பது பொருள்.

ஒருவன் சொன்னான். "நான் எப்படியும் ஒரு அரை மணி நேரம் தியானம் செய்துவிடுவேன். ஆனால் மற்ற நேர்த்தை என் இஷ்டப்படி செலவிடுவேன் என்று. " இருபத்துநான்கு மணி நேரத்தில் இருபத்து மூன்றரை மணி நேரம் போக வாழ்வில் ஈடுபட்டு அரை மணி நேரம் தியானம் செய்வேன் என்றால் அந்த அரை மணி நேரம் மனம் மற்ற நேரங்களில் செய்ததைத்த்தான் தியானித்துக் கொண்டிருக்கும்.,

அதே போல அந்திமஸ்மரணம் பகவானைப் பற்றி வரவேண்டும் என்றால் வாழ்நாள் பூராவும் அவனை மறக்காமல் இருந்தால்தான் முடியும்.

சிலர் சொல்லலாம் அஜாமிளன் கடைசிகாலத்தில் நாராயணன் என்ற அவன் பிள்ளையை கூப்பிட்டவுடன் விஷ்ணு தூதர்கள் வந்தார்களே என்று. நாமஸ்மரணத்தின் மகிமையை சொல்ல இது பயன்பட்டாலும்.கதையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அஜாமிளன் தவறான வழியில் போவதற்கு முன் நல்லொழுக்கம் உடையவனாகவே இருந்தான் என்று பாகவதம் கூறுகிறது. மேலுமவன் அப்போது இறக்கவில்லை. அவனுக்கு நல்ல புத்தி வருவதற்காக ஏற்பட்ட அனுபவம் அது., அவன் தன் குற்றத்தை உணர்ந்தபோது விஷ்ணு தூதர்கள் மறைந்தனர் . பிறகு அவன் தவ வாழ்க்கையில் ஈடுபட்டு நல்ல கதி அடைகிறான்.

வராகப்பெருமான் என் பக்தன் கடைசிகாலத்தில் என்னை நினைகக முடியாமல் உணர்வற்று இருந்தானேயாகில் நான் அவனை நினைத்து அவனுக்கு நல்ல கதி கொடுப்பேன் என்கிறார். இந்த ச்லோகத்தில் ஒன்று கவனிக்க வேண்டும்.

'ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபம் ச மாம் அஜம்,'

எவன் உடலும் மனமும் நன்றாக இருக்கும் சமயத்தில் என்னை நினைந்திருக்கிறானோ அவனை நான் கடைசி காலத்தில் அவன் செயலற்று இருக்கும்போது நினைந்து நல்ல கதி அளிப்பேன் . என்பதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள்.

இதைத்தான் பெரியாழ்வார்
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 
என்று சொல்கிறார்.


No comments:

Post a Comment