Friday, July 13, 2018

Bhaja govindam sloka 12 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம் ஸ்லோகம் 12/13

தினமபி ரஜனி ஸாயம் ப்ராத:
ஸிஸிர வஸந்தௌ புனராயத:
கால க்ரீடதி கச்சதி ஆயு:
ததபி ந முஞ்சதி ஆசா வாயு: 
(12)

காலை, மாலை, இரவு என்று−
காலச் சக்கரம் விரைந்தே ஓடும்;
பருவமும் மாறி, முதுமையும் படரும்−
இருந்தும் ஆசைகள், தினம் போல் தொடரும்

தினம் ரஜநீ ஸாயம் ப்ராத: - ஒவ்வொரு நாளும் பகல் ,இரவு, சாயங்காலம் , காலை ,
சிசிரவசந்தௌ- குளிர் காலம் வசந்தகாலம் முதலியவை 
புனராயாத:-திரும்ப திரும்ப வருகின்றன
கால: கிரீடதி- காலம் தன் விளையாட்டைத் தொடர்கிறது 
கச்சதி ஆயு: - ஆயள் குறைந்து கொண்டே வருகிறது. 
ததபி – அப்போதும் 
ஆசாவாயு: -ஆசை என்கிற காற்று
ந முஞ்சதி- நம்மை விடுவதில்லை 
ஆசை என்கிற காற்றில் அடித்துக்கொண்டு போகப்படுகிறோம்.
இதற்கு என்ன பரிகாரம்? இதை அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.

கா தே காந்தா, தனகத சிந்தா,
வாதுல, கிம் தவ நாஸ்தி நியந்தா?
ஷணமபி ஸஜ்ஜன ஸங்கதிரேகா
பவதி பவார்ணவ தரணே நௌகா! 
(13)

யார் உன் மனைவி? எது உன் செல்வம்?
யார் தான் உனக்கு தருவார் அபயம்?
நல்லவர் நட்பு என்னும் ஏணியே−
இல்லறக் கடலை கடந்திடும் தோணியே! 
(13)
கா தே காந்தா – யார் உன் மனைவி? – இது ஏற்கெனவே வந்த கேள்வியானாலும் இங்கு பந்த பாசத்தைக் குறிக்கும் போது அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

தனகதசிந்தா- செல்வத்தின் மேல் நாட்டம் ஏன்? 
வாதுல- பித்தனே (சங்கரர் அப்படிப்பட்ட மனிதனை பித்தன் என்கிறார்). 
தவ – உனக்கு 
நியந்தா- கட்டுப்பாடே 
கிம் நாஸ்தி- இல்லையா

க்ஷணமபி – சிறிது காலமாயினும் 
ஸஜ்ஜனஸங்கதி: நல்லவர்களின் சேர்க்கை ,
ஏகா- ஒன்றே, 
பவார்ணவதரணே – இந்த சம்சாரக்கடலைக் கடப்பதற்கு உதவும்
நௌகா பவதி- தோணியாக ஆகும்.

பந்த பாசம் பொருள் சேர்ப்பதில் ஆசை முதலிய எண்ணங்கள் திரும்ப திரும்ப சம்சாரத்தில் தள்ளி பிறப்பு இறப்பு என்னும் சுழலில் மாட்டிவிடும். உலக இன்பங்கள் எல்லாமே நிரந்தரம் அல்ல, முதலில் சுகத்தைக் கொடுத்தாலும் பின்னர் துன்பத்தில் தள்ளிவிடும். ஆகையால் மகான்களின் சேர்க்கையானது இறைவனிடத்தில் நாட்டத்தை உண்டாக்கி இந்த உலக இச்சைகளை விலக்கிவிடும்.

வாழ்க்கை என்பது ஒரு ரயில் பிரயாணம் மாதிரி. நம் கூட பயணிப்பவர்கள் நம் பந்துக்கள் மாதிரி. . அவரவர் இறங்கும் வரை நம்முடன் இருக்கிறார்கள். அவர்கள் இறங்கும் இடம் வந்தபின் நம்மை விட்டுப் போய் விடுகிறார்கள் அதற்குப்பின் நம்மை நினைப்பதில்லை. நாமும் அவர்களை நினைப்பதில்லை. அதே போலத்தான் மனைவி புதல்வர்கள் செல்வம் நண்பர்கள் எல்லாம் .

ரயிலில் நமக்கு சில ஸௌகரியங்களை ரயில் அதிகாரிகள் செய்து கொடுக்கிறார்கள். நாம் கொடுத்த பணத்திற்கு தக்கபடி, மெத்தை , போர்வை , ACசௌகர்யம் , உணவு எல்லாம் கிடைக்கின்றன. அதே மாதிரி வாழ்க்கையில் நாம் செய்த கர்மாவிற்கு தகுந்தபடி எல்லாம் கிடைக்கின்றன.

நாம் ரயிலை விட்டு இறங்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. நம் லக்கேஜ் அதாவது நம் கர்மாதான் நம்முடன் வருகிறது.ரயில் பிரயாணம் சுகமாக இருக்கிறது என்பதற்காக நாம் இறங்கும் இடம் வந்தால் இறங்காமல் இருக்க முடியாது..

ஒரே வித்தியாசம் என்னவென்றால் நாம் இறங்கும் இடம் நமக்கே தெரியாது. காலன் என்ற டிக்கெட் கலெக்டர் நம் இடம் வந்ததும் இறக்கி விட்டுவிடுவான்.
அதனால் இந்த உலகப்பற்றை விடுவது எப்படி? சங்கரர் சத்சங்கம் என்ற படகு நம்மை அக்கறை சேர்க்கும் என்கிறார்.


No comments:

Post a Comment