Friday, July 13, 2018

Bhaja govindam sloka 10,11 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம் 1௦-11

வயஸிகதே க: காமவிகார:?
ஸுஷ்கே நீரே க: காஸார:?
க்ஷீணே வித்தே க: பரிவார:?
ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார:? (10)

வாலிபம் போன பின் இன்பம் ஏது?
வற்றிய குளத்தில் பறவைகள் ஏது?
எளியவன் வாழ்வில் சுற்றம் ஏது?
தெளிந்தவன் வாழ்வில், துக்கமும் ஏது? (10)

வயஸி கதே , வயதானபின்பு, க: காமவிசார: சிற்றின்பம் எங்கே ? சுஷ்கே நீரே - நீர் வற்றிய பின்பு, க: காஸார:, ஏரி எங்கே இருக்கிறது? க்ஷீணே வித்தே – செல்வம் போனபின்பு, க: பரிவார: , யார் பின்தொடர்வார்?ஞாதே தத்வே- ஆத்மாவை உணர்ந்தவனுக்கு, க: சம்சார: , சம்சாரம் ஏது?

உடலில் இளமை உள்ளவரைதான் காம இன்பத்தில் நாட்டம் இருக்கும். முதுமையில் அது இருக்காது. அதாவது எல்லாம் நிரந்தரமான இன்பங்கள் அல்ல. ஆனால் உண்மையில் ஆசை என்பது வயதானால் விடுகிறதா? இதைப்பற்றி பின் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்.

ஒரு ஏரியில் நீர் வற்றினால் அது ஏரி என்ற பெயரையே இழந்து விடுகிறது. அதில் இருந்த ஜீவராசிகள் வேறு இடம் தேடி அதை விட்டுப் போய் விடுகின்றன. அதே போல செல்வம் உள்ளவரைதான் எல்லோரும் உடன் இருப்பார். அது போனபின் எல்லோரும் அவனை விட்டு நீங்குவர். இது பதவி என்பதற்கும் பொருந்தும். அதை அடுத்த ஸ்லோகத்தில் பார்க்கலாம்.

அதனால் இந்த உண்மையை அறிந்து நிலையான செல்வம் அல்லது இன்பம் எது என்று தெரிந்து கொண்டுவிட்டால் பிறகு சம்சாரம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது.

மா குரு தன ஜன யௌவன கர்வம்;
ஹரதி நிமேஷாத் காலஸ்ஸர்வம்;
மாயாமயமிதம் அகிலம் ஹித்வா,
ப்ரம்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா! (11)

இளமை, வளமை, சுற்றம் யாவும்−
கடமையாய் காலம், கடத்தியே செல்லும்;
மாயமாம் உலகம் மனதில் வெறுத்து,
மாயோன் மலரடி சென்று நீ அடைவாய்! (11)

தனஜநயௌவந கர்வம் மா குரு , செல்வம் உள்ளதாலோ அநேக பரிவாரங்கள் உள்ளதாலோ அழகு யௌவனம் இவை உள்ளதாலோ கர்வம் அடைய வேண்டாம். ஏனென்றால் ஸர்வம் எல்லாவற்றையும், கால: காலம், நிமேஷாத் – ஒரு நிமிடத்தில், ஹரதி, கொண்டு சென்றுவிடும். இதம் அகிலம், இந்த உலகம் , மாயாமயம், மாயத்தோற்றம் . ஹித்வா , அதை விட்டு , தவம் , நீ விதித்வா – இதை அறிந்து, பிரம்மபதம், பிரம்மஞானத்தை உணரும் வழியில் ப்ரவிச, பிரவேசிப்பாயாக.

காலம் எல்லாவற்றையும் போக்கிவிடும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். உலக மகா அழகிகள் வயதானால் எப்படி இருக்கிறார்கள் என்பதை காண்கிறோம். ஆனால் இங்கு ஒன்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.,உள்ளம் அழகியதானால் அவர்களின் வெளி அழகு வயதானால் கூட அழிவதில்லை. மேலும் மெருகுடன் ஜ்வலிக்கிறது. இதற்கு எம் எஸ் அம்மா போன்ற சிலர் உதாரணம்.

ஆனால் செல்வம் பதவி இவை காலக்ரமத்தில் போவதையும் பார்க்கிறோம். குஜராத்தில் பூகம்பம் வந்த போது பல செல்வந்தர்கள் எல்லாம் இழந்து தெருவுக்கு வந்ததே இதற்குச்சான்று. பதவி இழப்பது என்பது அரசியல் வாதிகளுக்கு மட்டும் பொருந்தும் என்பது இல்லை பெரிய உத்தியோகம் வகித்தவர்கள் கூட பதவியிலிருந்து விலகிய பின்னர் இதை உணர்கிறார்கள். அதனால் எதன் பொருட்டும் கர்வம் கூடாது. அடக்கமாக் இருப்பவர்கள் எந்த நிலையிலும் திருப்தியுடன் இருப்பார்கள்.

எது நிரந்தரம் என்று சொல்கிறார் சங்கரர். பிரம்மபதம் , இறைவனுடன் சேரும் பதவிதான் நிரந்தரம். அதுதான் நிலையான செல்வம் . இளமை, முதுமை, மற்ற மாற்றங்கள் எல்லாம் உடலுக்குத்தான் ஆத்மாவுக்கு அல்லவே.

திருக்குறள் கூறுகிறது,
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் 
வாளதுணர்வார் பெறின்
உண்மை அறிந்தோர் ஒரு தினம் என்பதுj கால அளவு போல் தோன்றினாலும் அது வாழ்நாளை அறுக்கும் வாள் என்று உணர்வர். 
ஆனால் இதை அறிவது அவ்வளவு சுலபமா ? அல்ல என்கிறார் அடுத்த ஸ்லோகத்தில்.


No comments:

Post a Comment