Thursday, July 5, 2018

Bhaja govindam part1 in tamil

Courtesy:smt.Dr.Saroja Ramanujam

ஸ்ருதிஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

பஜகோவிந்தம் அல்லது மோஹ முத்கரம் -1

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே!
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே,
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே! 
(1)

மாதவனை நினை, மாதவனை நினை,
மாதவனை நினை, ஓ மனிதா!
சாதகம், சடங்கு, உனக்குதவாது−யம
காதகன் எதிரே வந்திடும் போது!
(Padma Gopal)

இதன் கருத்து என்னவென்றால் , 'டுக்ர்ந்ஹிகரனே,' என்ற வியாகரணசூத்ரம் வியாகரணம் மட்டுமன்றி எல்லா சாஸ்திரங்களையும் குறிக்கிறது. ஸந்நிஹிதே காலே ஸம்ப்ராப்தே காலே , கடைசிக்காலத்தில் இவை ஒன்றும் பலன் கொடுக்காது. மறுபடி சம்சாரத்தில்தான் தள்ளும்.,ஆதலால் பஜ கோவிந்தம் , கோவிந்த நாமத்தை ஸ்மரிப்பாய் என்று கூறுகிறார்.

மூட மதே , முட்டாளே என்று ஆரம்பத்திலேயே மண்டையில் அடித்தாற்போல் சொல்வதால் இது மோஹ முத்கரம் எனப்படுகிறது.

'த்ரைகுண்ய விஷயா வேதா: ,' என்று கண்ணன் கீதையில் சொல்வதைப்போல பிரம்மத்தைப்பற்றி கூறியுள்ள ஞானகாண்டம் அல்லது உத்தர மீமாம்சை என்று சொல்லப்படும் உபநிஷத்துக்களைத்தவிர கர்மகாண்டம் அல்லது பூர்வமீமாம்சை என்று சொல்லப்படும் வேதத்தின் பகுதி பலனைக்குறித்துசெய்யப்படும் யாக யக்ஞாதிகள் கொண்டது. மற்றும் வேதாங்கங்கள் எனப்படும் வியாகரணம் முதலிய சாஸ்திரங்கள் இவை எல்லாம் முக்தி சாதனம் அன்று. ஜனனமரணசுழற்சியிலே கொண்டு தள்ளுபவை ஆதலால் கோவிந்தனை ஸ்மரணம் செய் அவனை வழிபடு என்று சொல்கிறார் சங்கரர் இந்த ஸ்லோக்த்தில்.

சங்கரர் சாஸ்திரங்களையோ வேதங்களையோ அலட்சியம் செய்பவர் அல்ல. வேதாந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ள வியாகரணம் நியாயசாஸ்திரம் முதலியவைகளின் அறிவு இன்றியமையாதது. அவர் சொல்வதெல்லாம் இதிலேயே நின்றுவிடக்கூடாது .அதற்கு மேல் செல்லவேண்டும் என்பதேயாகும்.

எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களும் இறைவனை அடையும் மார்க்கமாக இருக்கவேண்டுமே தவிர அதிலேயே ஊன்றி அதன் குறிக்கோளை மறந்துவிடக்கூடாது. சாஸ்திர பாண்டித்தியம் கர்வத்தை உண்டாக்கி இறைவழியை மறந்து அழிவுபாதையில் நம்மை செலுத்தும் அபாயம் நிறைந்தது அதனால் பக்தி அவசியம். ஆனால் நாம சங்கீர்த்தனம் என்பது வேத சாஸ்திர அறிவு அற்றவர்களும் பின்பற்றக்கூடியது. அதனால் பஜ கோவிந்தம் என்று கூறுகிறார்.

கோவிந்தன் என்ற நாமத்தைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? 
கோவிந்த என்னும் சொல்லுக்கு பல பொருள்கள் சஹஸ்ரநாம வ்யாக்யானத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

"கோ என்றால் மோக்ஷம் அல்லது சுவர்க்கம். அதைக்கொடுப்பதால் கோவிந்தன்..
கோ என்றால் அஸ்த்ர சஸ்த்ரம். ராமாவதாரத்தில் விச்வாமித்ரரிடம் இருந்து பெற்றதால் கோவிந்தன். 
கோ, பசுக்கள் அவற்றை அறிந்தவன் அதாவது அவைகள் தண்டகாரண்ய ரிஷிகள் என்று அறிந்தவன். 
கோ என்றால் வேதம். வேதத்தால் அறியப்படுபவன்..
கோ என்றால் வஜ்ராயுதம் அதை இந்திரன் பெற வழிகாட்டியவன்.. 
கோ என்றால் பூமி. ஜலம், வேதம், இந்த்ரியங்கள் என்றும் பொருள். வராஹமாக பூமியை வெளிக்கொணர்ந்தான், மத்ஸ்யமாகவும் கூர்மமாகவும் நீரில் சஞ்சரித்தான்., வேதங்களின் உட்பொருள் ஆனான். இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்துபவன் , ஹ்ருஷீகேசன்,
ஆகையால் கோவிந்தன் என்பது பத்து அவதாரங்களையும் குறிப்பதாகும்.

கோவிந்தா என்று என்னை அழைப்பவர் யாராயினும் அவரை உடனே வந்து காக்கக் கடமைப்பட்டுள்ளேன், த்ரௌபதி கோவிந்தா என்று கூவியவுடன் காத்தது போல. அதனால் எனக்கும் கோவிந்தன் என்பது மிகவும் பிடித்த பெயர். என்கிறான் கண்ணன்.

பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ என்று மூன்று முறை கூறுகிறார் சங்கரர். காயேன வாசா மனஸா, செயல்கள், சொற்கள் எண்ணங்கள் இவை எல்லாமே கோவிந்தனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ப்ரமஞானம் அதாவது எது நாம் உண்மை என்று இந்த உலகில் நம்புகிறோமோ அவை எல்லாம் பிரமை அல்லது மயக்கம் என்ன்பதை அறிவுறுத்தி உண்மையான ஞானம் அதாவது பிரம்ம ஞானத்தைக் கொடுப்பதே இந்த ஸ்லோகங்களின் நோக்கம். ப்ரமம் போனால் ப்ரம்மம். அதை உணர்ந்து நாம் தெளிவுறுவோமாக.இதர ஸ்லோகங்களைப் பிறகு காண்போம்


No comments:

Post a Comment