Friday, June 8, 2018

Nandi of agnisvarar temple-spiritual story

From Shri JNS

கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்.. தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று, சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.

பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து 'சிவ.. சிவா' என்று கத்தினான்.

குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர், தேவசர்மா பற்றியும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர், 'நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது' என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார்.

ஆனாலும் கூட ஊர்மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரைவிட்டு விலக்கியே வைத்திருந்தார்கள்.

ஒரு நாள் ஹரதத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர்.

அப்போது ஹரதத்தர், தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, 'நீ சிவ.. சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கிவிட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்' என்றார்.

அதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். 'கல் நந்தி எப்படி புல் சாப்பிடும்' என்பதால் வந்த நகைப்பு அது.

ஆனால் ஹரதத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில், 'இறைவா! உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால், கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும்' என்று மனமுருக வேண்டினார்.

என்ன ஆச்சரியம்.. தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது. அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும், பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழிபட்டனர்.

இந்த கல் நந்தி, கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் இன்றும்  சிவ லயத்தில் இருக்கிறது.

No comments:

Post a Comment