Tuesday, June 12, 2018

Dakshinamurthy ashtakam sloka 2 in tamil

     2
                                                             ஸ்ரீ ராம ஜயம்

                                                     தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்--2

இப்பொழுது இந்த அஷ்டகத்தின் இரண்டாவது ஸ்லோகத்தைப்பார்ப்போம். அது
இவ்வாறிருக்கிறது.

பீஜஸ்யாந்தரிவான்குரோ  ஜகதிதம் ப்ராங்நிர்விகல்பம் புன:
மாயாகல்பித தேசகாலகலனா வைசித்ரிய சித்ரீ க்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ ய: ஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே

ஒரு ஆலமரத்தையோ, அரசமரத்தையோ,அல்லது அத்தி மரத்தையோ எடுத்துக்கொள்வோம்.
இம்மரங்களின் ஒவ்வொன்றிலும் அநேக எண்ணற்ற பழங்கள் உருவாகின்றன. ஒவ்வொரு
பழத்திலும் ஆயிரக்கணக்கான விதைகள் இருப்பதைக்காணலாம். ஒவ்வொரு விதையிலும்
அந்தந்த மரத்தின் முழு உருவமும் கடுகினும்  மிகச்சிறியதான விதையில்
முளையின் ரூபமாக அடங்கியிருப்பதையும் நாம் காணலாம்.அவை முளைத்து
வரும்பொழுது அந்தந்த மரமாகவே வளருவதையும் காணலாம். இவையெல்லாவற்றையும்
ஏற்படுத்தினது யார் ? நிச்சயமாக பரம்பொருளாகத்தான் இருக்கமுடியும்.
இப்பொழுது நாம் ஸ்லோகத்தின் அர்த்தத்துக்கு வருவோம்.
(ஒவ்வொரு) விதையினுள்ளினும் அதனதன் முளையினுள்ளில் ஒரு பிரபஞ்சமே
அடங்கியுள்ளது.  முதலில் விதையாயிருந்தது  (வளரும்பொழுது)விசித்திரமான
தும் பலவிதமானதுமானவை  ( சிருஷ்டிகள் )
ஒரு மாயாவியினாலோ,சிறந்த யோகியினாலோ , தனது  இச்சைப்படி
உருவாகிவருவதைக்காணலாம். இந்த ஸ்ருஷ்டியானது, எப்படி ஒரு குயவன்
(குலாலன்) ஒரேதரமான மண்ணைப்பிசைந்து, பல விதமான மண் பாண்டங்களை
உருவாக்கிக்கொண்டேயிருக்கிறானோ, அவ்விதமே பரம்பொருள் ஒரேவஸ்துவை
வைத்துக்கொண்டு பலவிதமான ஸ்ருஷ்டிகளை செய்து கொண்டேயிருக்கிறார். அவருடைய
சிருஷ்டியில் உபயோகப்படும் பொருள் (உபாதான காரணம் என்று வேதாந்திகள்
இதைச்சொல்லுவர் ) அவரே தான். இதையே வேதம் சொல்லுகிறது," தத் ஸ்ருஷ்ட் வா
, ததேவஅனுப் ராவிசத்," என்றவாறு. அதாவது, "அவர் (பரம்பொருள் ) அதை
(பிரபஞ்சத்தை ) சிருஷ்டித்து அதனுள்ளேயே (ஸ்ருஷ்டியினுள்ளேயே )புகுந்தார்
".  விதையையும் அவரே சிருஷ்டித்தார், அதனுள்ளிலிருக்கும் மரத்தையும்
சிருஷ்டித்தார் என்றாகிறது. அதாவது, பிரபஞ்சத்தையும் அவரே
சிருஷ்டித்தார், தானே அப்பிரபஞ்சமும் ஆனார் என்றாகிறது.
இந்தப்பிரபஞ்சமேதான், மாயையினாலும் காலத்தினாலும், வெவ்வேறு ரூபங்களாக
நமக்குக்காட்சியளிக்கின்றது.

ச. சிதம்பரேச ஐயர். 7-5-2018(சைத்ரக்ருஷ்ண சப்தமி - விளம்பி )

No comments:

Post a Comment