Monday, June 11, 2018

Chandramouleeswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
-----------------------------------------------------------
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தொடர்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பதற்காக)
---------------------------------------------------------
*தேவாரம் பாடலுக்குள் அமைந்த வைப்புத் தல தொடர் எண்:10*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*சந்திரமெளலீஸ்வரர் திருக்கோயில், அரிச்சந்திரம்:*
-----------------------------------------------------------
*🌙இறைவன்:* சந்திரமெளலீஸ்வரர்.

*💥இறைவி:* செளந்தரவல்லி.

*🌸ஆலயப் பூஜை காலம்:* தினமும் ஒரு கால பூஜை மட்டும்.

*☎தொடர்புக்கு:*
தகவல் தெரிவித்து செல்ல வேண்டும்.
பட்டீஸ்வரம் கோயில், செயல் அலுவலர்:
0435- 2416976

தனியார் கோயில், பிச்சை ஐயர்: 98424 07780

*✉அஞ்சல் முகவரி:*
சந்திரமெளலீஸ்வரர் திருக்கோயில்,
அரிச்சந்திரபுரம்,
சோழன் மாளிகை அஞ்சல்,
வழி- தாராசுரம்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்.
612 703

*📔தேவாரம் உரைத்தவர்:*
அப்பர்.
ஆறாம் திருமுறையில், ஐம்பத்து ஒன்றாம் பதிகத்தில், பத்தாவது பாடல்.

அரிச்சந்திரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும்  பதிகம்

இந்தப் பதிகம் திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகத்திற்குள் அடங்கியுள்ளது.

🔔அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரிபிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார் புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு அரையன் மகளோடு விருப்பர் ஆகி எரிச்சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாடத் தேனிசையார் கீதர் விரிச்சங்கை எரிக்கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே.

🙏திருமால் பிரமன் , இந்திரன் என்பவர்களுக்குக் காண்பதற்கு அரியவர், உலகவர் நுகரும் எல்லா இன்பங்களிலும் கலந்திருப்பவர், இமவான் மகளாகிய பார்வதியிடத்து விருப்பமுடையவர், மூன்று சந்திகளிலும் தீயை ஓம்பும் வேள்விச் சாலைகளில் உகந்திருப்பவர், தாம் சூடிய மாலைகளில் வண்டுகள் பாட ஏழிசையும் பொருந்திய பண்களைப் பாடுபவர், உள்ளங் கையை விரித்து அதன்கண் அனலைஏந்தி ஆடும் வேடம் உடையவர் ஆகிய சிவபெருமான், அரிச்சந்திரம், அம்பர்மாகாளம், புரிச்சந்திரம், ஏமகூடம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் . 

*கோவில் அமைப்பு:*
இன்று இந்த ஆலயத்தின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

ஆலயத்திற்கான மதிற்சுவர் அடியோடு பெயர்ந்து தூர்ந்து போய்விட்டது.

ஆலயம் இன்றைய நாளில் கவனிப்பாரின்றி காட்சி அளிக்கிறது.

மூலவர் கருவறையில் இறைவன் சந்திரமெளலீஸ்வரர் அழகு அருட்பிராவகமாக காட்சி தருகிறார்.

அம்பாள் சந்நிதியும் அழகுற அமைந்திருக்கிறது.

கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, மாகாளியம்மன் சந்நிதி ஆகியவற்றில் உள்ளே மூல மூர்த்தங்கள் இல்லை.

ஆலயம் கவனிப்பாரின்றி இருப்பதால் இவை எல்லாம் காணாது போயிருக்கிறது.

ஆலயத்தில் பூஜைகள் நின்று போய் பல வருடங்கள் ஆகிவிட்டதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

தேவாரப் பாடலில் வைப்புத் தலமாக குறிப்பிடப்பட்டு சிறப்பு பெற்ற இவ்வாலயம் இன்று களை இழந்து கேட்பாரின்றி உள்ளது.

அரிச்சந்திரம் திருக்கோயிலுக்கு எதிர் புறத்தில் சற்று தொலைவில் சாலைக்கு மறுபுறத்தில் ஒரு குளம் இருக்கிறது.

இது "பாற்குளம்" என்று விளங்குகிறது. இங்கும் ஒரு கோயில் இருந்திருக்கிறது.

தேவாரத்தில் வைப்புத் தலமாக குறிப்பிடப்பட்டும் இருக்கிறது. ஆனால் இன்று அங்கு கோயில் ஏதுமில்லை.

பாற்குளம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறையில் பதின்மூன்றாவது பதிகத்தில், முதலாவது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்தப் பதிகம் திருபுறம்பியம் தலத்திற்குரிய பதிகமாகும்.

🔔கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண்வளவி கண்டியூரும் நடமாடு நன்மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஓற்றி ஆகப் படுமாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இந்நாள் பொடி ஏறு மேனியராய்ப் பூதம் சூழப் புறம்பயம் நம் ஊரென்று போயினாரே.

🙏கொடிகள் கட்டப்பட்ட மாட வீடுகளைக் கொண்ட நீண்ட தெருக்களை உடைய கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், வளவி, கண்டியூர், கூத்து நிகழ்த்தும் சிறந்த மருகல் இவற்றில் நாளும் தங்கி அழகிய ஒற்றியூர் ஒற்றி வைக்கப்பட்டது என்னும் பொருளைத் தருதலில் அதனை நீங்கிச் சூரியன் மறையும் மாலையிலே வண்டுகள் ஒலிக்கும் பழனம், பாசூர், பழையாறு, பாற்குளம் என்னும் இவற்றை நீங்கி இன்று திருநீறு அணிந்த மேனியராய்ப் பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவர எங்களுடைய ஊர் புறம்பயம் என்று கூறி எம்பெருமானார் சென்று விட்டார்.

'பொன்னியின் செல்வன்' புதினத்தில், அரிச்சந்திரம் இடம் பெற்ற தலம் இத்தலம்.

அப்போதைய காலத்தில், ஊரைச் சுற்றி படைவீடுகள் இருந்திருக்கிறது.

நடுவே சோழன் மாளிகை இருந்திருக்க, இப்பகுதியை சோழன் மாளிகை என்ற பெயரையும் கொண்டிருந்தது.

அருகிலிருந்த குளங்கள், கரிக்குளம், பாற்குளம் எனவாக இருந்தது.

பாற்குளத்தில் வைத்து, சக்திமுற்றத்துச் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் திருவிழா நடைபெறும்.

பழையாறை ஒட்டியுள்ள தலமாகவும் பாடல் குறிப்பிடப்படுகிறது.

எனவேதான், வடதளி, பழையாறை, திருமேற்றளி, முழையூர் இவையனைத்தும் ஒரு சேர தரிசிக்கக் கூடிய தலங்களாக அமைந்துள்ளன.

திருச்சக்திமுற்றம் தலத்திலிருந்து ஒரு கி.மீ.மூலவர் சுயம்பு.

           திருச்சிற்றம்பலம்.