Friday, June 1, 2018

Ashtapadi 8 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam


அஷ்டபதி 8

அஷ்டபதி 8
கிருஷ்ணனை அழைத்து வர ராதையால் அனுப்பப்பட்ட சகி அவனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள். 
ஸ்லோகம்
யமுனாதீரவாநீர நிகுஞ்சே மந்தம் ஆஸ்திதம்
ப்ராஹ ப்ரேமபரோத்ப்ராந்தம் மாதவம் ராதிகாஸகீ

யமுனாதீரவாநீர நிகுஞ்சே-யமுனைக்கரையில் அடர்ந்த தோப்பில் ராதைஇடம் ப்ரேமையால் குழம்பி உட்கார்ந்திருக்கும் கண்ணனிடம் ராதையின் தோழி சொல்லுகிறாள்.

அஷ்டபதி
1.நிந்ததி சந்தனம் இந்துகிரணம் அனு விந்ததி கேதம் அதீரம் 
வ்யாலநிலயமிலன கராலம் இவ கலயதி மலய ஸமீரம் 
சந்தனம் – சந்தனப்பூச்சை 
நிந்ததி- வெறுக்கிறாள்.
குளிர்ச்சியான சந்தனம் பிரிவாற்றாமையால் உஷ்ணத்தைத் தருகிறது
இந்துகிரணம் – சந்திரனின் கிரணங்கள் 
அதீரம் கேதம் – அதிகமான துக்கத்தை கொடுப்பதாக 
அனு விந்ததி- உணர்கிறாள் நிலவு எரிப்பதாக உணர்கிறாள். 
மலய ஸமீரம்- தென்றல் காற்றை 
வ்யாலநிலயமிலன - பாம்புகளின் இருப்பிடத்தில் இருந்து வருவதால்
கராலம் இவ கலயதி-விஷமென உணர்கிறாள்.

சந்தன மரங்களைத்தழுவி வரும் மலையமாருதம் பரிமளம் உடையதாக இருக்கும். ஆனால் அது சந்தன மரங்களின் அடியில் உள்ள பாம்புகளின் சேர்க்கையால் விஷக்காற்று போல் இருக்கிறது என்று நினைக்கிறாள்.

எதெது காதலர்களுக்கு இன்பத்தைக் கொடுக்குமோ அதெல்லாமே பிரிந்து உள்ளமையால் எதிர் பலனைக் கொடுக்கிறது என்பது கவி கற்பனை.

ஸா விரஹே தவ தீனா 
மாதவ மனசிஜவிசிகபயாதிவ பாவனா தவ லீனா( த்ருவ பதம்)

மாதவ – மாதவா
தவ விரஹே- உன் பிரிவினால் 
ஸா – அவள் 
தீனா- வாடி
மனசிஜவிசிகபயாத் இவ- காமனின் அம்புக்கு பயந்தவளாக 
தவ பாவனா- உன் நினைவில் 
லீனா- ஆழ்ந்திருக்கிறாள்.

2. அவிரலநிபதித மதனசராதிவ பவதவனாய விசாலம் 
ஸ்வஹ்ருதய மர்மணி வர்மகரோதி ஸஜலநளிநீதள ஜாலம் (ஸா விரஹே)

அவிரல நிபதித – தொடர்ந்து விழும் 
மதனசராத் – மன்மதனின் அம்புகளில் இருந்து 
ஸ்வஹ்ருதயமர்மணி பவத் – தன் ஹ்ருதயத்தில் உள்ள உன்னை 
அவனாய – காப்பாற்றுவதற்காக 
விசாலம் – அகன்ற 
ஸஜலநளிநீதள ஜாலம்- ஈரமான தாமரை இலைகளாள் ஆன வலையினால்
வர்மகரோதி- அதை மூடிக்கொள்கிறாள்.

பிரிவுத்தீயால் வருந்தும் நாயகி தாமரை இலைகளை தன் உடல்மீது வைத்துக்கொண்டு உஷ்ணத்தை தணிப்பது என்பது காவியங்களில் கூறப்பட்டிருக்கிறது. உதாரணமாக காளிதாசனின் சாகுந்தலத்தில் துஷ்யந்தனைப் பிரிந்து வருந்தும் சகுந்தலையை தாமரை இலைப்படுக்கையில் அமர்த்தி தோழிகள் தாமரை இலைகளை வைக்கிறார்கள். இங்கு ராதை அவள் உள்ளத்தில் உள்ள கண்ணனை மனம்தான் அன்பிலிருந்து காப்பாற்றவே அங்ஙனம் செய்தால் என்பது. கவியின் அழகான கற்பனை.

3.குஸுமவிசிக சரதல்பம் அனல்ப விலாசகலாகமநீயம் 
வ்ரதமிவ தவ பரிரம்ப ஸுகாய கரோதி குஸும சயநீயம் (ஸா விரஹே)

அனல்ப விலாசகலா கமநீயம் – சிறந்த அழகிய பூக்குவியல்களால் ஆன
குஸுமசயநீயம் - மலர்படுக்கையில் படுத்த அவள்
தவ- உன்னுடைய 
பரிரம்ப ஸுகாய – தழுவல் என்னும் சுகத்தை அடையும் பொருட்டு
குஸுமவிசிக சரதல்பம் –மலராகிய அம்புப்படுக்கையில் சயனித்து
வ்ரதமிவ கரோதி- வ்ரதம் இருப்பவள் போல் தோன்றுகிறாள்.

மலர்கள் மன்மதனின் சரங்கள் ஆதலால் மலர்படுக்கை அம்புப் படுக்கையைப்போல இருக்கிறதாம். அதனால் அவள் கிருஷ்ணனை அடையும் பொருட்டு தவம் செய்வது போல் தோன்றுகிறது என்கிறாள்.

4. வஹதி ச வலித விலோசன ஜலபரம் ஆனனகமலம் 
விதுமிவ விகடவிதுந்துத தந்த தலன கலிதாம்ருத தாரம்(ஸா விரஹே)

ஆனனகமலம் – அவளுடைய முகத்தாமரை 
வலிதவிலோசன ஜலபரம்- துயருற்ற கண்களில் இருந்து கண்ணீர் பெருகுவதாக 
வஹதி- உள்ளது. ( அது எப்படி இருந்தது என்றால்)
விகட – கொடிய
விதுந்துத – ராகுவால் ( வவிது என்றால் சந்திரன் துத அவனை துன்புறுத்துபவன் அதாவது ராகு)
தந்த தலன-கடிக்கப்பட்ட
கலித அம்ருத தாரம்- ஒழுகும் அம்ருததாரையைக் கொண்ட
விதும் இவ – சந்திரனைப்போல் இருந்தது.

5. விலிகதி ரஹஸி குரங்கமதேன பவந்தம் அஸமசரபூதம்
ப்ரணமதி ,மகரம் அதோ விநிதாய கரே ச சரம் நவசூதம் (ஸா விரஹே)

ரஹஸி- தனிமையாக இருக்கையில் 
பவந்தம் – உன்னை
அஸமசர பூதம் – மன்மதனின் உருவமாக 
குரங்கமதேன-கஸ்தூரியால்
லிகதி- வரைகிறாள்.
அதை: அடியில்
மகரம்- மீனை 
விநிதாய – வரைந்து ( மன்மதனின் கொடி)
கரே ச – கரத்தில் 
நவசூதம் – மாம்பூக்களை 
சரம்- அம்புகளாக்கி 
ப்ரணமதி- வணங்குகிறாள்

கண்ணனையே மனம்தான் உருவத்தில் கண்டு என்னை துன்புறுத்தாதே அருள் செய் என்று வணங்குகிறாள்.

மன்மதன் ஐந்து புஷ்ப சரங்கள் கொண்டவன் ஆதலால் அஸமசரன் எனப்படுகிறான். அஸம என்றால் ஒற்றைப்படை, இங்கு ஐந்து.
அரவிந்தம் அசோகம் ச சூதம் ச நவமல்லிகா 
நீலோத்பலம் ச பஞ்சைதே பஞ்சபாணஸ்ய ஸாயகா:
தாமரை, அசோகா புஷ்பம், மாம்பூ, மல்லிகை, நீலோத்பலம் இவை மன்மதனின் ஐந்து பாணங்களாகக் கூறப்படுகின்றன.

6. பிரதிபதம் இதம் அபி நிகததி மாதவ தவ சரணே பதிதா அஹம்
த்வயி விமுகே மயி ஸுதாநிதிரபி தனுதே தனுதாஹம் (ஸா விரஹே)

பிரதிபதம் – ஒவ்வொரு அடிவைக்கும்போதும் 
இதம் அபி நிகததி- இவ்வாறு சொல்கிறாள்.
மாதவ – மாதவா
தவ சரணே- உன் பாதத்தில்
பதிதா அஹம் – வீழ்கிறேன் 
த்வயி விமுகே- நீ பராமுகமாக இருப்பின்
சஸுதாநிதி: அபி- சந்திரன் கூட
தனுதாஹம் தனுதே – உடலை எரிக்கிறான்.

7.த்யான லயேன புர: பரிகல்ப்ய பவந்தம்.அதீவதுராபம்
விலபதி ஹஸதி விஷீததி ரோதிதி சந்ச்சதி முஞ்சதி தாபம் (ஸாவிரஹே)

அதீவ துராபம்- அடைய முடியாத 
பவந்தம்-உன்னை 
த்யானலயேன- த்யானிப்பதன் மூலம்
புர: பரிகல்ப்ய – தன் முன் இருப்பதாக பாவித்து
விலபதி – புலம்புகிறாள்.
ஹஸதி – சிரிக்கிறாள் 
விஷீததி –சோகிக்கிறாள் 
ரோதிதி –அழுகிறாள்
சந்ச்சதி –அலைகிறாள் . பின்னர் உன் சேர்க்கை கிடைக்கும் என்ற நினைவில்
முஞ்சதி தாபம்- தாபத்தை விடுகிறாள்.

8.ஸ்ரீஜயதேவபணிதம் இதம் அதிகம் யதி மனஸா நடநீயம் 
ஹரிவிரஹாகுல வல்லவ யுவதி சகீவசனம் படநீயம் (ஸா விரஹே)

ஸ்ரீஜயதேவபணிதம்- ஸ்ரீஜயதேவரால் சொல்லப்பட்ட 
இதம் -இந்த வர்ணனை 
மனசா- மனதினால் 
அதிகம் – மிகவும் 
நடநீயம் – கற்பனை நாடகமாகக் காணப்படவேண்டும்.
ஹரி விரஹாகுல – ஹரியின் விரகத்தினால் வருந்தும்
வல்லவயுவதி – கோபியான ராதையின்
சகிவசனம் – சகி சொன்ன வார்த்தைகள் 
படநீயம். படிக்கப்பட வேண்டும்'

. 
குருவானவர் பகவானிடத்தில் பக்தனுக்காக பரயுந்துரைக்கும் பாவனையில் இந்த அஷ்டபதி அமைந்துள்ளது. பின்வரும் இரண்டு அஷ்டபதியும் இந்தக் கருத்தைக் கொனடவையே ஆகும்.


No comments:

Post a Comment