Monday, June 25, 2018

Arapaleeswar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு. கருப்பசாமி.*
_____________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தொடர்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக............‌)
_____________________________________
*தேவார பாடலுக்குள் அமைந்த வைப்புத் தல தொடர் எண்:12*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*🏜அறப்பளீஸ்வரர் திருக்கோயில், அறப்பள்ளி:*
____________________________________
*🌙இறைவன்:* அறப்பளீஸ்வரர்.

*💥இறைவி:* தாயம்மை, அறம்வளர்த்தநாயகி.

*🌳தல விருட்சம்:* வில்வம்.

*🌊தல தீர்த்தம்:* பஞ்சநதி.

*📖தேவார பதிகம் உரைத்தவர்:* சம்பந்தர், அப்பர்.

சம்பந்தர்:.
இரண்டாம் திருமுறையில், முப்பத்தொன்பதாவது பதிகத்தில், நான்காவது பாடலிலும்,

அப்பர்:
ஆறாம் திருமுறையில், எழுபதாவது பதிகத்தில், முதலாம் பாடலிலும், மேலும்,

ஆறாம் திருமுறையில், எழுபத்தொன்றாவது பதிகத்தில், முதலாவது பாடலிலும் பாடியிருக்கிறார்கள். ஆக மொத்தம் இத்தலத்திற்கு மூன்று பாடல்கள் குறிப்புகள் உள்ளன.

*🛣இருப்பிடம்:* நாமக்கல்லிலிருந்து சுமார் ஐம்பத்திரண்டு கி.மீ. தொலைவில் கொல்லிமலை இருக்கிறது.

கொல்லிமலையின் ஒரு பகுதியான அறப்பள்ளிக்குச் செல்ல மலைப்பாதை வசதி அமைந்திருக்கிறது.

*📮ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில்,
கொல்லிமலை,
பெரிய கோவிலூர் அஞ்சல்,
வளப்பூர் நாடு, கொல்லிமலை,
நாமக்கல் மாவட்டம்,
PIN - 637 411

*🍁ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், பகல் 2.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

திருவிழா நாட்களில் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலுமீ கோயில் திறந்திருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வைப்புத் தலப் பாடல்களில் கூறப்பட்டுள்ள பழையாறை, முழையூர், பொருப்பள்ளி, சிவப்பள்ளி, தவப்பள்ளி, பரப்பள்ளி ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்.

*☎தொடர்புக்கு:*
என். சிவராமர். அர்ச்சகர்.
97876 70262
94436 64402

*கோயில் அமைப்பு:*
கிழக்கு நோக்கிய சந்நிதி. ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கோயிலும் சுற்றுப்புறமும் அமைந்துள்ளது.

ஒரே பிரகாரம். நுழைவாயில் உயர்ந்து கோபுரமின்றி உள்ளது.

கொடிமரம், பலிபீடம், நந்தி அடுத்து மகா மண்டபம். பின் அர்த்தமண்டபம், அந்தராளம் பின் கருவறை. கருவறை சோழர் காலக் கட்டடக்கலை.

அர்த்த மண்டபத்தின் இடப் பக்கம் அம்மன் கருவறை தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

அண்மைகாலத் திருப்பணியால் அம்மன் கருவறை சற்றுப் பின்னோக்கி அமைக்கப்பட்டு அர்த்த மண்டபம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏறக்குறைய முப்பத்திரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளதாக அரசுக் குறிப்பு கூறுகின்றது.

கோயில் பிரகாரத்தின் தென் பகுதியில் ஆறுமுகப் பெருமான் கோயில் அமைந்துள்ளது.

கருவறையின் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் இலிங்கோத்பவரும், வடக்கில் பிரம்மாவும் தேவ கோட்டங்களில் வீற்றிருக்கின்றனர்.

கருவறையின் பின்புறம் விநாயகர், காசிவிசுவநாதர், விசாலாட்சிக்குத் தனித்தனியாகக் கோயில்கள் உள்ளன.

கருவறை விமானம் மூன்று நிலைகளைக் கொண்ட வட்ட வடிவில் உள்ளது. கருவறை வடக்கில் சண்டேச்வரர் கோயில் உள்ளது.

மகாமண்டபத்தில் நவக்கிரகங்களுக்கான மேடை உள்ளது.

சமயக்குரவர் நால்வருக்கும் சிலைகள் உள்ளன. மூன்று காலமும் வழிபாடு நடைபெறுகிறது.

கருவறையைச் சுற்றிலும், கருவறை நிலைக்காலிலும் கல்வெட்டுகள் உள்ளன.

கோயிலை ஒட்டி வளமான ஆறு ஒன்று உள்ளது. தெள்ளிய நீர்ப் பாறைகளில் பட்டுத் தெறித்து விழுந்து சலசலவென ஓடும் இந்த ஆற்றிற்குக் "கோயிலாறு" என்று பெயர். மலையின் மேற்கு, தெற்குப் பகுதிகளில் ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தொலைவுகளுக்கப்பால் மலைமுகடுகளில் இருந்து வரும் நீர்ப் பெருக்கே இவ்வாற்றின் நீர்வரத்தாகும்.

கோயிலைச் சுற்றி மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று அருவியாகப் பாய்கின்றது.

இவ்வருவிக்கு *ஆகாச கங்கை* இந்த ஆறு மலையின் கிழக்குப் பகுதியில் புளியஞ்சோலையில் *ஐயாறு* என்ற பெயருடன் சமவெளியில் இறங்கிப் பின் *சுவேதநதி* என்னும் வெள்ளாறாகவும் துணை ஆறுகளுடன் திட்டக்குடி, புவனகிரி வழியாகச் சென்று பரங்கிப் பேட்டை அருகில் கடலில் கலந்திணைந்து விடுகின்றது.

*ஆகாச கங்கை:*
கோயிலை ஒட்டி ஆற்றுப் படித்துறையில் ஏராளமான மீன்கள் உள்ளன.

கோயிலில் இறைவனுக்குப் பூசை நடைபெறும் முன் இம்மீன்களிருக்கும் துறையில் மணியடித்துப் பூசை நடைபெறும். நைவேத்தியங்களை ஆற்றிலிடும் போது மீன்கள் திரளாக வந்து அவற்றை உண்ணும் காட்சி காண்பதற்கரியதாகும்.

உணவை நீரருகே கொண்டு செல்லும்போதே மீன்கள் துள்ளி வந்து உண்ணும்.

தினமும் மணியடித்து மீன்களுக்கு உணவிட்ட பிறகே இறைவனுக்குப் பூசை நடைபெறுகிறது.

இம்மீன்களைப் பற்றிய சுவையான கதையொன்றும் கூறுவர். 

முன்பு ஒரு காலத்தில் சில கொள்ளையர்கள் கோயிலைக் கொள்ளையிட வந்தனர். ஆற்றில் உள்ள மீன்களைக் கண்டதும், அவற்றைப் பிடித்துச் சமைத்துண்ண விரும்பினர்.

மீன்களைப் பிடித்து அறுத்துப் பாத்திரத்தில் வைத்துச் சமைக்கத் தொடங்கினர்.

அச்சமயத்தில் அறப்பள்ளி நாதரின் பாகமாகிய அறச்சாலைவல்லி என்னும் தாயம்மை தம் கயல்போன்ற கண்களால் அம்மீன்களின் மீது அருள் பாவித்து நோக்கினாள்.

அவ்வளவில் பாத்திரத்தில் அரிந்து வைக்கப்பட்டிருந்த மீன் துண்டுகள் முழுவடிவம் பெற்று துள்ளி ஆற்றில் குதித்து மறைந்தன.

இவ்வரிய காட்சியைக் கண்ட கொள்ளையர்கள் ஓடிவிட்டனர் என்பதைக் கொங்கு மண்டல சதகமும் குறிப்பிடுகின்றது.

*அச்சுதன் கொங்கி லறப்பள்ளி நாதர் ஆற்றிலுறை
பச்சைநன் மீனைப் பிடித்தறுத் தாக்கப் பசுந்துருக்கர் 
கச்சணி கொங்கை அறச்சாலை வல்லிகயல் குதிக்க
மச்சமும் துள்ளி விளையாடு மேகொங்கு மண்டலமே!
-என்கிறார் வாலசுந்தரக்கவிராயர்.

அறுபட்ட மீன்கள் மீண்டும் பொருந்தியதன் அடையாளமாக மீன்களின் முதுகில் கரிய கோடு ஒன்று இருப்பதை இன்றும் காணலாம்.

மலைவாழ் மக்களின் குல தெய்வமாக விளங்கும் அறப்பள்ளி நாதரின் பெயரை மக்கள் வைத்துக் கொண்டுள்ளனர்.

மலைமக்கள் மட்டுமல்லாமல் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களிலிருந்து எல்லாம் திரளான மக்கள் நாடோறும் வந்து வணங்குகின்றனர்.

மெய்யாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள், வேண்டிய வரம் கொடுக்கும் மெய்கண்ட தெய்வமாக அறப்பள்ளி நாதரை ஒரு முறை தரிசித்து பேரிண்ப பேறு அடையுங்கள்.

*வழிபட்டோர்கள்:*
காலாங்கி முனிவர், பதினெண் சித்தர்கள்.

*தல அருமை:*
இன்று மக்கள் வழக்கில் *கொல்லிமலை* என்று வழங்கும் இத்தலம் ஒரு இயற்கை வளம் மிக்க மலை.

*வல்வில்ஓரி* என்னும் மன்னன் ஆண்ட பகுதி இது.

காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்திருக்கிறார்கள்.

 சிறிய மலை மேல் உள்ள அறைப்பள்ளி என்பதால்
அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் எனவாயிற்று.

இக்கோயிலுக்குப் பக்கத்தில் *மீன்பள்ளி* என்ற ஆறு ஓடுகிறது.

இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம்.

எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வருகிறது.

இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.

இக்கோயிலுக்கு மேற்கில் *கொல்லிப்பாவை* என்னும் தெய்வீகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிய முடியும்.

*இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி:*
இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம்.

காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.

இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர்.

கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் *எட்டுக்கை அம்மன்* என்று கூறுகின்றனர்.

கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.

*சிறப்புக்கள்:*
பலா, அன்னாசி, கொய்யா, ஆரஞ்சு, எழுமிச்சை மரங்கள் அடர்ந்து, பசுமையாகக் காட்சியளிக்கும் இம்மலையின் மீது *அறப்பளீசுவரர்* ஆலயம் அமைந்துள்ளது.

இம்மலைமீது பல ஊர்கள் இருக்கின்றன; இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் *சதுரகிரி* என்ற
பெயருமுண்டு.

ஊர் - பெரிய கோயிலூர் என்றும், கோயில் பகுதியை - அறப்பளீசுரர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது.

*அம்பாள் சந்நிதி* 
நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேலே பார்த்துத் தரிசிக்க வேண்டும்.

கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக எழுநூற்று அறுபது படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சிக்குச் சென்று நீராடலாம்.

அறுநூறு அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது.

மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.

செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்.

வல்வில் ஓரி மன்னனின் சிலை குதிரை மீது பத்து அடி உயரத்தில் அமைக்கப்பட்டு  வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும், வனத்துறையினரின் மூலிகைப் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன.

மலை வாழ் மக்கள் ஆடிப் பெருக்கு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமானின் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் *அறப்பளீசுர சதகம்* என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார்.

அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் *சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே*' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பு.

*அறப்பள்ளி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்:*

🔔அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப் பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான் விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால் உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே.

🙏நெஞ்சமே! கோயில் எனப்பொருள் தரும் பள்ளி என முடியும் கொல்லி அறைப்பள்ளி, அகத்தியான்பள்ளி, காட்டுப்பள்ளி, சிறப்பள்ளி, சிராப்பள்ளி செம்பொன்பள்ளி, திருநனிபள்ளி முதலான தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன் பல விளையும்.

-----------------------------------------------
🔔தில்லைச் சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர் கொல்லிக் குளிர் அறைப்பள்ளி கோவல் வீரட்டம் கோகரணம் கோடிகாவும் முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றம் கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணலாமே.

🙏தில்லைச்சிற்றம்பலம், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர், கொல்லி அறைப்பள்ளி,, கோவல் வீரட்டம், கோகரணம், கோடிகா, முல்லைக் கொடிகளை உடைய காடுகளை உடைய முருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்தி முற்றம், குறிஞ்சி நிலத்தில் திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம். ----------------------------------------------- 🔔பொருப்பள்ளி வரைவில்லாப் புரம் மூன்று எய்து புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக் கரப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி கள்ளார் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவஞ் சாரற் சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீரார் பரப்பள்ளி யென்றென்று பகர்வோர் எல்லாம் பரலோகத் தினிதாகப் பாலிப்பாரே.

🙏மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி, வருந்தி அழியுமாறு சலந்தரனைச் சக்கரத்தால் பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, மது நிறைந்து மலர்கள் மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி, மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழிப்புமிக்க நனிபள்ளி, தவப்பள்ளி, புகழ்பொருந்திய பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமை மிகக் காப்பாராவார். 
     
          திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment