Thursday, May 3, 2018

Thodi - Rettai pallavi Seetharama Iyer

'தோடி மேல் கடன்'' J K SIVAN

வறுமையும் வளமையும் இரவும் பகலும் போல. வறுமையும் புலமையும் ரெட்டைப் பிறவிகள் என்றும் சொல்லலாம். ஏனெனில் சரஸ்வதி இருக்குமிடத்தில் அவ்வளவாக லட்சுமி குடியிருப்பதில்லை என்று தான் தெரிகிறது. ஏன் அவர்களே சேர்ந்து இருக்க மாட்டேன் என்கிறார்களோ?

ரெட்டைப் பல்லவி தோடி சீதாராமய்யர் குடும்பம் நடத்த முடியாத ச்ரமதசைக்கு தள்ளப்பட்டார். அவருடைய வருமானமான சன்மானங்களை விற்று சாப்பிட்டாகி விட்டதே. இனி என்ன இருக்கிறது நம்மிடம் என்றபோது தான்
அவருக்கு சிரிப்பு வந்தது. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டே அல்லவா நெய்க்கு அழுகிறேன். எது என்னை இத்தனை நாள் ராஜ போகத்தில் வைத்ததோ அந்த வித்தை இப்போதும் உதவட்டும். பூமி சொத்து இருந்தால் அதை அடமானம் வைத்து சாப்பிடுவது எல்லோரும் அறிந்தது. அத்தகைய சொத்து எதுவுமே இல்லையே?

கணம் கிருஷ்ணய்யர் சீதாராமய்யருக்கு தாய் மாமன் வகையில் உறவு. மேலும் சீதாராமய்யர் தகப்பனார் கணம் கணபதி ஸாஸ் திரிகளிடம் கனம் பயின்றவர் வேறு. அவர் உடையார்பாளையம் ஜாமீனில் ஆஸ்தான வித்வான் என்பதும் ஞாபகத்துக்கு வரவே அவர் மூலம் உடையார்பாளையம் ஜமீன்தார் யுவரங்க பூபதியை நேரில் சென்று சந்தித்தால் என்ன? கிருஷ்ணய்யர் ஜமீன்தாரை சந்திக்க ஏற்பாடு செய்தார். சீதாராமய்யர் ஜமீன்தார் சமூகத்தில் அவரை வணங்கி நின்றார்.

'' இவர் யார் ?'' ஜமீன்தார் க்ரிஷ்ணய்யரிடம் கேட்டார்.

'' தஞ்சாவூர் மகாராஜா சமூக வித்வான்''

'' உங்களுக்கு இவரை எப்படி தெரியும்?''

''என் குருவின் புத்திரன். மேலும் எனக்கு பந்துவும் ஆனவர்''

''இவர் பெயர் என்ன?''

''கன, நய, தேசிக, ஜிகி , பிகி, டால், உருகி, கமக , சம்ரதான (பிர்கா ),ரெட்டைப்பல்லவி, தோடி, சோல்ஜர் சீதாராமய்யர்.''

''பேஷ் பேஷ், இவ்வளவு பட்டப்பெயரா!!''

''அவருக்கு அவ்வளவு யோக்யதாம்சம் உண்டு''

ஜமீன்தார் சீதாரமய்யரைப் பார்த்து புன்முறுவலுடன், உமது பேர் கேட்டிருக்கிறேன். உங்களுடைய தகப்பனார் கணபதி சாஸ்திரிகள் தஞ்சாவூர் சமஸ்தான வித்வான் என்றும் அறிந்திருக்கிறேன். உமக்கு என்ன வேண்டும்?''

''எனது க்ரஹத்தில் சீமந்த கல்யாணம் வருகிறது. அதற்கு செலவுக்கு பணம் வேண்டும் ''

''ஒ, அப்படியா, நீங்கள் ராஜ சமூகத்தில் பாடுபவர். இங்கெல்லாம் பாட மாட்டீர்களே. நீங்கள் பாடினால் தருவோம். மேலும் ராஜ சமூகத்தை விட்டு எம்மிடம் வந்து சேர்ந்தால் வேண்டியது தருவோம் ''

சீதாராமய்யர் யோசித்தார். பாடுவதற்கும் மனமில்லை. தஞ்சையிலிருந்து குடி பெயர்ந்து உடையார்பாளையம் வரவும் துணிவில்லையே ! ஒரு கணம் யோசித்தவர், ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.

ஜமீன்தார் அவர்களே, என்னிடம் உள்ள ஒரே சொத்து.சங்கீத வித்தை..அதையே உங்களிடம் அடகு வைக்கிறேன். அதை ஈடாக வைத்துக்கொண்டு பொருள் கொடுப்பீர்களானால் அது ஒரு பேருபகாரமாக இருக்கும் எனக்கு.''

''அது என்ன வித்தை?''

'' பாடும் பல வித ராகங்களில் தோடி ஒரு மிகப் பிரசித்தமான ராகம். அதை தான் நாம் ராஜசபையில் பாடுவது. அதையே உங்களுக்கு இப்போது அடமானம் வைக்கிறேன்''

''வைத்தால்?''

''எந்த வருஷம், மாதம் தேதியில், சீட்டு எழுதி கொடுத்து வாங்குகிற தொகையை தங்களிடத்தில் திருப்பிக் கொடுத் து சீட்டை மீட்டுக்கொள்கிறேனோ, அதுவரை ராஜாவே பாடச்சொன்னாலும் அந்த ராகத்தை பாடுகிறதில்லை, சத்தியம்''

ஜமீன்தார் யுவரங்க பூபதி இதைக் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

''இவர் ஒரு வித்வான். பிரசித்தமானவர். இவருக்கு இந்த தருணத்தில், சீட்டை எழுதி வாங்கிக்கொண்டு தோடி ராகத்தின் மேல் பொருளை கடன் கொடுத்தால், எப்படியும் இந்த சீட்டின் மூலமாக நம்முடைய கீர்த்தி சிவாஜி மகாராஜா சமூகத்தில் ஏறும்'' என்று சந்தோஷப்பட்டு ஒப்புக்கொண்டார்.

சீதாராமய்யர் கடன் சீட்டு எழுதிகொடுக்க, ஜமீன்தார் கேட்ட பணம் கொடுத்தார். மகிழ்ச்சியோடு சீதாராமய்யர் பணத்தோடு தஞ்சாவூர் திரும்பி தனது சீமந்த முகூர்த்தத்தை நன்கு சுற்றம் சூழ செய்துகொண்டார். ஒரு
பெண் குழந்தை பிறந்தது. குலதெய்வம் பெயரில் அலமேலு என்று நாமதேயம்.வைத்து வீட்டில் எல்லோரும் அம்மணி என்று அழைத்தார்கள்.

அடுத்து பிறந்த ஆண் குழந்தை வெங்கட்ராமன் என்று பெயர் பெற்றான். 85 வயது ஜோதிடர் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது இரு குழந்தைகள் ஜாதகங்களும் காட்டப்பட்டது. ''பையன் மகா வித்வானாக இருப்பான். வயது
மட்டும் 20க்கு மேல் இல்லை என்று அவன் ஜாதகத்தை கீழே போட்டார். பெண்ணின் ஜாதகத்தை பார்த்தவர் அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டார். இவள் 81 வயது இருப்பாள். இவளால் தான் உங்கள் குடும்பம் உயரப்போகிரது.
எட்டு குழந்தைகள் உண்டு. தங்குவது 3 தான். நடுமகனே நெடு மகனாக சிறந்து இருப்பான்.

அது அப்படியே நடந்தாக கேள்விப்பட்டேன். அது சரி, தோடி ராகம் கடனிலிருந்து மீண்டதா? பார்ப்போம்




என் தாய் வழி முன்னோர்

தோடி மீண்டது.

வெள்ளைக்காரர்கள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக மலைப்பாம்பு விழுங்குவதைப் போல் நாடு முழுதும் ஆக்கிரமித்து ஆண்டு விட முயன்ற நேரம். தஞ்சாவூரிலும் கலெக்டர் என்று ஒருவன் இருந்தான். அதிகாரம் முழுக்க அவனிடம். முடிசூடா மன்னர்கள். பரம்பரை பரம்பரையாக ஆண்ட மராத்திய ராஜாக்கள் கூட வெள்ளைக்காரனுக்கு பயந்தார்கள். அவனை திருப்தி படுத்தினார்கள். வெள்ளைத்தோலுக்கு அப்படி ஒரு மரியாதை. அந்த காலத்திலேயே இருந்து இன்று மாலை வரை கூட அந்த பழக்கம் நம்மை விட்டு போகவில்லை.

வெள்ளை தோல் காரன் எல்லாமே படித்தவனோ, பண்புள்ளவனோ, யோக்கியனோ இல்லை. வெள்ளை என்பது மஞ்சள், கருப்பு காப்பிக்கொட்டை போல ஒரு நிறம். அவ்வளவு தான். மனித தன்மை எவனிடம் இருக்கிறதோ அவனே உயர்ந்தவன்.

அந்த காலத்தில் இருந்த தஞ்சாவூர் கலெக்டர் பெயர் மாண்ட்கோமரி. அவன் கொஞ்சம் நல்லவன். கெடுபிடி அதிகார தோரணை உண்டு. அது அந்த காலத்தில் எல்லா வெள்ளைக்காரனுக்கும் உண்டு. நான் சின்ன பையனாக இருந்தபோது கோடம்பாக்கத்தில் சூளைமேட்டில் சுதந்திரத்துக்கு முன்னால் நிறைய வெள்ளைக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் ப்ரெய்ச்சி என்று பெயர்கொண்ட ஒல்லி ஆள். முழுக்கை அழுக்கு சட்டையை பேண்டுக்குள் நுழைத்து முதுகு கூனி தடிமனான கண்ணாடி போட்டுக்கொண்டு நடந்து போவான். எங்கோ ஒரு அரசாங்க உத்யோகம் அவனுக்கு. பெரிய உத்யோககமாக இல்லை என்று இப்போது நினைக்கிறேன். குமாஸ்தாவாக இருக்கலாம். ஆனால் அவனைக் கண்டபோதெல்லாம் எல்லோரும் ஸலாம் அடிப்போம். அவனும் திருப்பி அடிப்பான். வழி விடுவோம். மரியாதை காட்டுவார்கள் எல்லோருமே. அவன் நிறத்துக்காக.

1945-47லேயே மெட்ராஸ் பட்டணத்தில் இப்படி என்றால் 250 வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் எவ்வளவு கொடிகட்டி பறந்திருப்பான் வெள்ளைக்காரன்.

கலெக்டருக்கு ராஜாவின் சமூகம் ஒரு பெரிய விருந்து வைத்தது. முதல் முறையில் நடந்த அந்த பெரிய விருந்துபசாரத்தின் போது தான் பல சங்கீத பிரபல வித்வான்கள் கூடியிருக்க அன்று தானே ரெட்டைப்பல்லவி தோடி சீதாராம அய்யர் பாடி கலெக்டர் அவரை ''சோல்ஜர்'' என்று பாராட்டினார்.

என்னமோ தெரியவில்லை. கலெக்டருக்கு சீதாராமய்யரின் குரல் பிடித்துவிட்டது போலிருக்கிறது, எனவேு ரெண்டாம் முறையாக ராஜா விருந்துக்கு அழைத்தபோது அந்த ''சோல்ஜர்'' வந்து பாடுவாரா என்று தன்னை அழைக்க வந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். ராஜாவின் ஆட்கள் உடனே சீதாராமய்யர் வீட்டுக்கு ஓடினார்கள். அவரை பாட்டுக்கச்சேரிக்கு கூப்பிட்டார்கள்.

''சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு வேறு ஏதோ ராகத்தை தனக்கு தானே அனுபவித்துக் கொண்டிருந்த தோடி சீதாராமய்யர்

'' ஆஹா ராஜா அழைத்தால் வராமல் இருப்பேனா. அவசியம் நான் வருகிறேன் ஆனால் ராஜாவிடம் சொல்லிவிடுங்கள் '' தோடி'' ராகத்தைத் தவிர்த்து மற்ற ராகங்கள் வேண்டுமானால் பாடுகிறேன் . தோடியை அடகு வைத்துவிட்டதால் மீட்கும் வரை அது எனக்கு சொந்தமில்லை'' .என்றார்.

தஞ்சாவூரை அப்போது சிவாஜி என்கிற மராத்திய ராஜா ஆண்டுவந்தான். அவனிடம் விஷயம் போனது. ராஜா அவரை அழைத்தார்

''அய்யர் வாள் ' உமக்கு தோடி சீதாராமய்யர் என்று தானே பிரசித்தியான பேர் .. அது இல்லாமல் கச்சேரி சோபிக்காதே. அதை தான் அந்த கலெக்டர் துரை ரொம்ப ரசித்து கைதட்டினான். நீர் அதை அவசியம் பாடவேண்டும். என் உத்தரவு '' என்றார் ராஜா.

''மகாராஜா, .மன்னிக்க வேண்டும். அதை நான் பண முடைக்காக அடகு வைத்திருக்கிறேன். இன்னும் மீட்க முடியவில்லையே. என் செய்வது.''

''என்ன பேத்தல் இது. ராகத்தையாவது அடகு வைப்பதாவது? பைத்தியக்காரத் தனமாக இருக்கிறதே இது. என்னை நம்பச் சொல்கிறீரா. ஏமாற்ற பார்க்கிறீரா?'' ராஜாவின் கண் சிவந்தது.

''இல்லை மஹாராஜா நான் சொல்வது சத்தியமான வார்த்தை.''

உடையார் பாளையம் யுவ ரங்க பூபதி ஜமீன்தார் ராகத்தின் மேல் கடன் கொடுத்த விஷயத்தை சீதாராமய்யர் ராஜாவிடம் சொன்னார்.

சிவாஜி உடனே தனது மந்திரி சோம்நாத்தை பார்த்து ''அரே பாப் ரே பாப். க்யா சோம்னாத்ஜி , உடனே நீங்க போய் இந்த அய்யர் சொல்வது நிஜமா என்று விசாரிங்க ''

''அய்யர், நீங்க இங்கே இருங்க. அவங்க வந்து விஷயம் சொல்ற வரை இங்கே இருக்கணும்.''

குதிரை மீது ரெண்டு ஆட்கள் உடனே பறந்தார்கள். உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் விவரம் அறிந்தார்கள். அவரிடம் இருந்த கடன் சீட்டை மீட்க ராஜா கொடுத்த பணத்தில் தேவையான அசலையும் , வட்டியையும் கட்டினார்கள் மீட்பு சீட்டு வாங்கிக்கொண்டு ராஜாவிடம் வந்தார்கள்.

ஹா ஹா என்று சிவாஜி ராஜா சந்தோஷத்தோடு சிரித்தார். ''அய்யர் உங்க தோடி ராகம் இந்தாங்க என்று அந்த மீட்பு சீட்டை அவரிடம் நீட்டினார். ''இப்போ பாடுவீங்களா '' இனிமே இந்த ராகத்துக்கு ஏதாவது ஆபத்து வந்தா என்கிட்டே முதல்லே சொல்லணும். தெரியுமா?''

கலெக்டர் விருந்து அன்று வெகு விமரிசையாக நடந்தது. பொங்கி வரும் வெள்ளமாக சீதாராமய்யர் தோடி ராகத்தை நிறைய புதுப் புது கல்பனா ஸ்வரங்களோடு நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரே ரசித்து பாடினார். பிரிந்த குழந்தையை மீட்ட அம்மா ஆசையாக கொஞ்சமாட்டாளா?. அடேடே இந்த ராகத்தையா நமது உடையார்பாளையம் யுவரங்கன் அடகில் வைத்து பணம் கொடுத்தான். பேஷ் பேஷ் என்று ராஜா சந்தோஷம் அடைந்தார்.

தோடி சீதாராமய்யர் பாடும் இடங்கள் வழக்கமாக மூன்று .

1. தஞ்சை மேலவீதி காமாக்ஷி அம்மன் சந்நிதி. - ஒவ்வொரு சுக்ரவாரமும்.

2. மகாராஜா சமூகம் -- சபையில் ராஜா குறிப்பிடும் காலங்களில்.

3. திருவையாறு - சப்தஸ்தான உற்சவம் அன்று இரவு தில்லைத்தானம் ஆற்றங்கரை மணலில் பிரதி வருஷமும்.

மற்ற போதெல்லாம் தனது வீட்டுத் திண்ணையில் - சந்தோஷமாக இருக்கும் நேரங்களில்

இதைத்தவிர அவர் எந்த ஊருக்கும் சென்றதில்லை, வேறு எவர் முன்னிலையிலும் பாடினதில்லை.

தஞ்சாவூரில் இருந்த தோடி சீதாராமய்யர் ஒரு தெலுங்கு சங்கீத விதவானை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அந்தக்காலத்தில் வித்துவான்கள் ஒருவரை ஒருவர் கண்டால் ரொம்ப சந்தோஷமாக உடன் பிறந்தவர்களை போல் மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

அந்த தெலுங்கு வித்துவான் திருவையாறில் இருந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாத ப்ரம்மம் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தான். என் முப்பாட்டனார் தோடி சீதாராமய்யர் ஸ்வாமிகளை அடிக்கடி சந்தித்து பேசுவார். ஒருநாள் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வோம்.

Image may contain: 2 people

No comments:

Post a Comment