Monday, May 28, 2018

Moksham the fruit which is nectar-Periyavaa

பெரியவா   சரணம்

ஒரு   மரத்திலே    புஷ்பத்திலிருந்து தான்   காயும், பழமும்    உண்டாகின்றன..  

புஷ்பமாக   இருக்கும்   போது  மூக்குக்கும்,    பழமாக   இருக்கும்   போது   நாக்குக்கும்    ரஸமாக    இருக்கின்றன.

பழம்   நல்ல   மதுரமாக   இருக்கிறது..  இந்த   மதுரம்   வருவதற்கு   முன்   எப்படி   இருந்தது?   பூவில்   கசப்பாகவும்,   பிஞ்சில்   துவர்ப்பாகவும்,   காயில்   புளிப்பாகவும்,   கனியில்   மதுரமாகவும்   இருக்கிறது..

மதுரம்    என்பது   தான்  சாந்தம்..   சாந்தம்   வந்தால்   எல்லாப்    பற்றும்  போய் விடுகிறது..    பழத்தில்   மதுரம்   பூராவாக   நிரம்பிய  உடனே கீழே   விழுந்து  விடுகிறது..   அது போல்,   இருதயத்தில்   எல்லா   இடத்திலும்   மதுரம்    வந்து   விட்டால்    தானாகவே   எல்லாப் பற்றும்    போய் விடும்..

புளிப்பு   இருக்கும்  வரை   பற்றும்   இருக்கும்..   அப்போது   காயைப்  பறித்தால்   காம்பில்   ஜலம் வரும்.   காயிலும்   ஜலம்   வரும்.    அதாவது,   மரமும்  காயை   விட்டு விட   விரும்பவில்லை.   காயும்   மரத்தை  விட்டு விட   விரும்பவில்லை..

ஆனால்,  நிறைந்த   மதுரமாக  ஆகி விட்டால்,   தானாகவே  பற்றும் போய் விடும்.   பழமும்   இற்று விழுந்து விடும்..   அதாவது,   மரமும்  பழத்தை வருந்தாமல்   விட்டு விடுகிறது..   பழமும்   மரத்தைப்   பிரிய   வருந்துவதில்லை..

படிப்படியாக   வளர்ந்து   மதுர மயமாக   ஆகி விட்ட   ஒவ்வொருவனும்    இப்படியே   ஆனந்தமாக    சம்சார   விருட்சத்திலிருந்து    விடுபட்டு விடுவான்..

பழமாக    ஆவதற்கு   முன்   ஆரம்ப தசையில்   புளிப்பும், துவர்ப்பும்   எப்படி    வேண்டியிருக்கின்றனவோ,  அதைப்   போல  காமம், வேகம், துடிப்பு   எல்லாம்   வேண்டியிருக்கின்றன..

இவற்றிலிருந்து   நாம்   ஆரம்ப  தசையில்   பூரணமாக    விடுபட முடியாது..   ஆனாலும்   இவை   எல்லாம்    ஏன்   வருகின்றன?   என்று   அடிக்கடி   நினைத்தாவது பார்க்க வேண்டும்...

இப்போது   இன்ன  உணர்ச்சி   வந்ததே!   ஆசை   வந்ததே!   கோபம்  வந்ததே!   பெருமை   வந்ததே!   பொய்   வந்ததே! இதனால்   ஏதாவது பிரயோஜனம்   உண்டா?   இந்த   உணர்ச்சி   அவசியமாக   வருகிறதா?   அனாவசியமாக  வருகிறதா?   என்று   நினைத்துப் பார்க்க வேண்டும்..    அப்படி   நினைக்கவில்லை   என்றால்   அவை   நம்மை  ஏமாற்றி விடும்,  ஏமாந்து விடுவோம்..

புளிப்பு   இருக்க  வேண்டிய   சமயத்தில்   புளிப்பு   வேண்டும்,  துவர்ப்பு   இருக்க வேண்டிய   சமயத்தில்   துவர்க்க  வேண்டும்..

ஆனாலும்,   அந்தந்த   நிலையோடு  நிற்காமல்,   பிஞ்சு   படிப்படியாகப்   பழமாகிக்   கொண்டே   வருவதைப்  போல,   நாமும்   மேலும்  மேலும்   மாதுரியமான   அன்பையும்,  சாந்தத்தையும்    நினைத்துக் கொண்டே   வந்தால்   நாமாகப்   போய்   மோட்சத்தைத்   தேட வேண்டாம்..

எந்தப்   பருவத்தில்   எப்படி   இருக்க வேண்டுமோ   அப்படி   இருந்தால்,   தானாகவே   மோட்சம்    என்ற   மதுர நிலை   வந்து விடும்...

மஹா பெரியவா அருளுரை

No comments:

Post a Comment