Tuesday, May 1, 2018

Kedarnath temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
___________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
இன்னும் ஒரே ஒரு தலம் மட்டுமே பதிய வேண்டியுள்ளது.
__________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல தரிசன எண்: 273*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜திருக்கேதாரேசுவரர் திருக்கோயில், திருக்கேதாரம்:*
___________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் அமைந்துள்ள வடநாட்டுத் தலங்களில் இத்தலமும் ஒன்று.

*🌙இறைவன்:* கேதார்நாத்.

*💥இறைவி:* கேதார கெளரியம்மை.

*📔தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்.
சுந்தரர்.

*🛣இருப்பிடம்:*

காசியிலிருந்து தொடர் வண்டி மூலம் ஹரித்துவார் செல்ல வேண்டும்.

பிறகு இங்கிருந்து பேருந்தில் கெளரி குண்டம் செல்ல வேண்டும்.

கெளரி குண்டத்திலிருந்து குதிரைகள் மூலமோ, கால்நடையாகவோ, டோலிவாலாக்கள் மூலமாகவோ கேதாரமலை செல்ல வேண்டும்.

காலை மணி ஏழு மணிக்கெல்லாம்  திருக்கேதாரம் செல்லு வதற்கான டோலி ஸ்டேண்டுக்கு வந்த வண்ணமிருந்தனர். 

*கோயில் (செல்லும்) அமைப்பு:*
டோலியில் செல்வதற்கும் குதிரையில் செல்வதற்கும் மக்கள் வந்து சேர்ந்தவண்ணம் இருந்தார்கள்.

திருக்கோயில் நிர்வாகம் நல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பொதுவாக ஒரு ஆளுக்கு  ஒவ்வொருவரின் எடையும் கருவிமூலம் பார்க்கப்படுகிறது.

அறுபது கிலோவுக்குக்கு மேல் போனால் கட்டணத்தை நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள்.

அதேபோல் எடை அதிகமாக அதிகமாக கட்டணமும் அதிகமாயிக்கிக் கொள்கின்றனர்.

டோலியில் அமர்ந்து கொண்டால், மேலே செல்ல சுமார் நான்கு மணிநேரம் வரை ஆகிறது.

டோலியின் மூலம் மேலே செல்வதற்கு, நம் திருவண்ணாமலை கிரிவலப் பாதை தூரமான பதினான்கு கி.மி பயணப்பட வேண்டும்.

பயணத் தூரத்திற்கிடையிடையே டோலிவாலாக்கர்கள், டோலியை கீழே இறக்கி வைத்து டீ பாணம் அருந்திக் கொள்கின்றனர். 

டோலியின் மீதமர்ந்து பயணிப்பது, டோலிவாலாக்கர்க்களின் சிரமம் நமக்குத் தெரிகிறது. நமக்கு வேறுவழியில்லை. வாலாக்கர்களுக்கும் வேறு தொழில் இல்லை. 

இவர்களுக்கு இதுதான் பிரதானம். அதுவும் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே. மீதி மாதங்களில்  வருமாணம் கிடையாது. 

மழை பொழிந்து கொண்டே தானிருக்கும்.

டோலியின்மீது அமர்ந்து செல்கையில், இருபுறத்தின் இயற்கை காட்சிகள் நம் மனதிற்கு ரம்மியத்தை தருகிறது. அருமையான மலைவழி.

மலைவழி நடைபாதைதான், என்றாலும் ஆங்காங்கே டிராபிக் ஜாம் ஆகிவிடுகிறது. பயணிக்கும் வழியில், ஏழு கி.மி. தொலைவு வந்தவுடன்  ராம்போடா என்ற இடம் வருகிறது.

குதிரைகளுக்காகவும், டோலிவாலாக்கர்களும் இங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்.

சுற்றும் முற்றும் பார்க்கையில், நீர்வீழ்ச்சி அருவிகள், பல இடங்களில் வெள்ளீயமாய் ஒழுகுவது தெரிந்தன.

எங்கும் பனிப்பகுதிகளாக உருவாகி அழகான காட்சியாய் கண்களுக்கு விருந்து தந்தது.

ஓய்விலிருந்து விடுபட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். செல்லும்
வழியில் பனிக்கட்டிகள் வளர்ந்து, இருபுறமும் கைக்கெட்டும் தூரத்தில் காணப்பட்டன.

சில இடங்களில் பனிக்கட்டி உருகி வழிவதையும் காண முடிந்தது. சில இடங்களில் பல அடிகள் உயரத்திற்கு பனி உருவாகியிருந்தது. 

பார்ப்பானும், விறுவிறுப்பாக இடம் பெயரவும் டோலிக்காரர்களின் வேகமெடுப்பு, நம் உடம்பு குலுக்கும், அலம்பலுமாகவே இருந்தது.

பாட்டா என்ற ஊர் இங்கு இருக்கிறது. ஹெலிகாப்டர் வசதி உள்ளது. சீதாப்பூரில் இருந்து பத்து கி.மீ தூரத்தில் 
இந்த ஹெலிபேட் அமைந்துள்ளது.

இதன் அருகிலேயே நல்ல உயர்தர தங்கும் விடுதிகளும், ஹோட்டலுக்கு இருக்கிறது.

ஒரே நாளில் திருக்கேதாரம் சென்று வருவது போல் நெருக்கடியான பயணத்திட்டம் வகுத்து வைத்திருப்பவர்கள் ஹெலிகாப்டரில் செல்லுவது இயலாத காரியம்.

வானிலை நன்றாக இருந்தால் மட்டுமே ஹெலிகாப்டரை இயக்குவார்கள். வானிலை சரியில்லாத நேரத்தில் இரண்டு மூன்று நாட்கள் வரைகூட காத்திருக்க வேண்டியது வரும்.

கால அவகாசம் கணக்கில் கொள்ளாது இங்குவந்தால் மட்டுமே இது சாத்தியபடும்.

ஹெலிகாப்டரில் செல்பவர்கள் மலைமேலே சென்றவுடனேயே திருக்கோயிலுக்குள் காத்திராமல் சென்று தரிசித்துக் கொள்ள முடிகிறது.

தரிசனம் முடித்து வெளியே வந்தவுடனேயே அழைத்து வந்த  ஹெலிகாப்டர் திரும்ப ஏற்றித் திரும்புகிறது.

பணபலம் இருப்பவர்கள் இவ்வழியை உபயோகிப்பது அவர்களுக்கு ஆனந்தம்.

ஆனால், சந்நிதியில் இருக்கும் இறைவன் எல்லோரையும் ஒருமையிலே அருளுகிறான்.

மற்ற வழித்த பயணத்தில் செல்பவர்வர் எல்லாம் ஆலயத்துக்குள்  செல்லும் கஷ்டத்தை நாம் கூறக்கூடாது.

இங்கு பயனப்படுவோர் அணைவருக்கும்  இது தெரியும்.


மேலும், இரவில் சிறப்பு பூசைக்கட்டளை செய்யும் அன்பர்கள் தரிசிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்குப் பலஆயிரம் ரூபாய் கட்டணம் செலவிட வேண்டும்.

இந்த வாய்ப்பும் ஒரு சில குழுவினருக்கு மட்டுமே தரப்படுகிறது. அவனருள் இருப்போர்க்கே இவ்வைப்பும் கூடும். இல்லையென்றால் இல்லை.

முக்கியமாக திருக்கேதாரத்தில் இரவு தங்குபவர்களுக்கு மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கேதார்நாத்தில் தங்குமிட வசதிகள், மருத்துவ வசதிகள் மிகக் குறைவு. மேலும் இவ்வுயரத்திற்கு குளிர் மிக மிக அதிகமாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, திருக்கோயில் திறந்த முதல்நாள் தரிசனத்திற்கு சென்றிருந்த அன்று ஐந்து  பக்தர்கள் கேதார்நாத் கோயிலிடத்தில் வைத்து, குளிரால் இறந்து போனார்கள் என்று செய்தியை கேட்டிருந்தோம்.

எனது நன்பரின்
குடும்பத்தினர் இங்கு வந்திருந்தபோது, இரவு அன்று கேதார்நாத்திலேயே தங்கியிருந்திருக்கிறார்கள்.

இவர்கள் அதிகாலையில் ஒரு அலங்காரத் தரிசனத்தையும், மாலையில் வேறு ஒரு அலங்காரத் தரிசனத்தையும் தரிசித்து வந்திருக்கிறார்கள்.


வழிகாட்டியோடு வருபவர்க்களுக்கு மேலும் ஒரு சிக்கல். தரிசனம் முடித்து சீக்கிரம் வந்து விடுங்கள் என்பது.

பலவித உடற்கூறு அமைப்பை கொண்டவர்களுக்கே இவ்வாலய தரிசனத்திற்கு அனுமதி அளிக்கிறது. இருப்பினும் இந்த ஈசனைக் காணும் ஆவலில் ஒரு சிலர் உடலை பொறுப்படுத்தாது வந்து விடுகின்றனர்.

அப்படி வந்து விட்டவர்களை ஆங்காங்கு இடையிடையே ஏதொரு உடல்உபாதையில் அழுந்துவதைக் கண்டோம் மனசு கஷ்டமாக இருந்தது.

ஒரு குழுவோடு கூட வந்திருந்த ஒரு பெண்மணிக்கு கங்கோத்திரியில் வைத்து மூச்சுத் திணறல்  ஏற்பட்டு விட்டது. இதனால் அவர்களோடு வந்திருந்த அனைவரும் நிற்க வேண்டியதாயிற்று போனது.

கேதாரத்திற்கு டோலிக்காரர்களின் கட்டணம் முதலியவை வரைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது.

இருப்பினும் அவர்களுக்கு அவ்வப்போது தேவையற்றவைகளுக்கு நம்மிடம் பணம் கேட்பர். நாமும் கொடுக்கத்தான் வேண்டியதாய் சூழ்நிலை.

ஏற்கனவே காலை உணவின்போது, நாமும் உணவை வாங்கிக் கொடுத்தோம்.

கேட்பவற்றை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருககவேண்டும். எப்போது டோலியைக் கீழே வைப்பார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி டோலியை கீழே இறக்கி வைத்தார்கள் என்றால் எதையோ ஒன்றை வாங்குவது உறுதி.

இதற்குத் தகுந்தாற்போல, வழி நெடுகிலும் கடைகள் இருக்கிறது. ஆனால் டோலி தூக்குபவர்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பது தெரிகிறது. அதனால் அவர்களுக்கு செலவு செய்வது நமக்கு செலவு அல்ல!.

இதே போல்தான் குதிரைக்காரர்களின் பாடும் இருக்கிறது. சிரமம் தான்.

நாம் வரும் ஆன்மிகச் சுற்றுலாவை நம்பித்தான் இவர்கள் இருக்கிறார்கள்.

ஆஒவ்வொரு ஆண்டும் மூன்று அல்லது நான்கு மாதங்கள்தான் இந்தத் தொழில் செய்ய முடியும். இதன்பிறகு குளிர்காலமாகிவிடும்.

இதனால் கோயில்களும் மூடப்படும். அந்த நாட்களில் இவர்களின் பாடு எண்ணும்போது கஷ்டமாக இருக்கிறது.

இப்போது திருக்கேதாரதது ஆலயத்தை நெருங்கிக் கொண்டிருந்தோம். 

திருக்கேதார நகரியத்தின் மூலமாக, சாலையின் இருபுறத்திலும் உருவாகியிருந்த பனிக்கட்டிகளை அகற்றினார்கள்.

திருக்கோயிலில் மிகுந்த கூட்டம் இருப்பது தெரிந்தது. எங்கள் டோலிவாலா எங்களை சீக்கிரம் தரிசனம் செய்ய இங்குள்ள பூசாரியிடம் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியிருந்தார்.

பூசாரி தரிசனம் செய்து வைக்க ஆளுக்கு ஆயிரம் ரூபாய் என்று சொல்லி விட்டு அங்கேயும் இங்கேயும் பார்த்தார். நேரமும் ஆகி கொண்டே இருந்தது. தரிசன கூட்டம் குறையவேயில்லை.

போலீஸ்காரர்களின் ஒழுங்குபடுத்துதல் கறாராக இருந்தது. ஆதலால் இவர்களை மீறி டோலிவாலாவால் எதுவும் செய்யமுடியவில்லை.

போலீஸ்காரர்களும் பக்தர்களிடம், கடவுளுக்காக கொஞ்சநேரம் வரிசையில் பொறுமையாக நிற்க முடியாதா? இருங்க! இருங்க!, போய் வரிசையில் நின்று தரிசனம் செய்யுங்கள்! என்றார். 

சிறப்பு தரிசனத்திற்கும் இங்கு வழியில்லை. பின்னால் திரும்பிப் பார்த்தோம்.

பக்தர்கள் ஒரு கி.மீ தூரத்திற்கும் மேலான நீளத்தில் வரிசையில் நிற்பது தெரிந்தது.

வரிசை ஆமை நடையாக நகர்ந்தது. மேற்கூரை நீளமாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த கூரையமைப்பையும் தாண்டி, வெளியே வரிசையின் கடைப்பகுதி இருந்தது.

வரிசையில் நிற்கும்போது,
குளிர் காற்று வீசியது. கை கால் எல்லாம் விரைத்தது. குளிரில் எடுத்து வந்திருந்த சாப்பிட முடியவில்லை. உச்சி வேளை இது. அப்போதும் குளிர்காற்று வீசிக்கொண்டே இருந்தது.

அன்னதானக் கூடத்தில் பக்தர்கள் உண்டனர். இக்கூடத்தின் முன்பும் தானியம் விதைக்கப்பட்டிருந்தது. 

சிறு சிறு பட்சிகள் வந்து, தானியத்தை கொத்தித் தின்றன. அப்போதுதான் புரிந்து கொண்டோம். நமக்கு அன்னதானம் கொடுத்தவர்கள், இந்த பட்சிகளுக்கும் தானிய தானம் விதைத்திருந்தது.

ஆங்காங்கே  தரிசன வரிசையில் நிற்போர், இடையில் நுழைவதற்குப் பலர் முயற்சி செய்தனர். நம் ஊரில் முண்டுச் செல்வதும், இடித்துப் பிடித்து நீட்டி விபூதி பெறுவார்களே, அதுபோலவே இங்கும் அந்த முண்டுவதும் தள்ளுவதும் இருந்தது.

இப்படியானவர்களை நோக்கி வரிசையின் பின்னே இருப்பவர்கள் கூக்குரலிட்டு கத்துவதைக் கேட்டபோது, பழையபடி நம் ஊர் சாபமே வந்தது.

வரிசையில் நிற்பவர்களிடம் தரிசனம் செய்து வைக்கிறோம் வாங்க வாங்க, என அழைப்பவர்கள் வசனமும் உண்டு.

இவ்வாறு கூறுபவர்களை உள்ளே போலீஸ்காரர்கள் அனுமதிப்பது இல்லை. ஆனாலும் பக்தர்களை ஏமாற்றும் நோக்கமாகவே அவர்கள் செயல்பட்டார்கள்.

வரிசையின் முன்பகுதியில் கோயிலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் போலீஸ்காரர்கள் நிறையவர்கள் நின்று ஒழுங்குபடுத்துகிறார்கள்.

பக்தர்களிடத்திலும் ஒழுங்கு என்ற கட்டுப்பாடு சுத்தமாக இல்லவே இல்லை. சந்நிதிக்குள் நுழையும் போது *(போலீசாரின் எல்லை முடிந்ததும்)* வரிசை குலைந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.

கோயில் நுழைவாயில் பகுதிக்கு படிகள் ஏறப் போனோம். *சிவ சிவ, சிவ சிவ** என மொழிந்து கொண்டே உள் புகுந்தோம்.

ஆலயத்துள் கூட்டம் நம்மை படி ஏறவிடாமல் நெருக்கித் தள்ளியது. நுழைவாயிலில் உள் புகுந்த பின்னும் நெருக்கடி மேலும் அதிகமாக இருந்தது.

கருவறை அருகே செல்வதற்குள் பக்தர்கள் கூட்டம் ஒழுங்கின்றி அலைமோதியது.

மனதில் ஒரு அச்சம் ஒன்று ஏற்பட்டது. தரிசனம்  நல்லபடியாகி வெளியே வரவேண்டுமே? என்ற எண்ணம் தோன்றியது.

இந்த நேரத்தில் இறைவனின் திருநாமமான *நமசிவாய* என சொல்லியபடியே இருந்தோம். பக்தர்களின் முண்டுதலோடவே, ஈசனை மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டே நகர்ந்தோம்.

கருவறைக்கருகாக ஒரு வழியாக வந்து சேர்ந்ந்தோம்.(இல்லை, இல்லை தூக்கிக் கொண்டு வந்து தள்ளப்பட்டோம்.)

சுவாமி முன் வந்து நின்றபோது,  திருமேனியின் மேலே கை தீண்டி வணங்கும் நிலை தானாகவே தூண்டுதல் உண்டானது.

இது தெய்வீக அனுபவம்! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இவ்விடம் வருவதற்கு பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்து போய்விட்டதுபோல ஒரு உணர்வு உண்டானது.

மூலஸ்தானத்திலுள்ள திருக்கேதாரநாதரைத் தொட்டு வணங்கினோம். சாமிமேல்  வெண்ணெயும் குங்குமமும்  தோய்ந்து இருப்பதால், தொட்டு வணங்கிய கைகள் சிவப்பாய் ஆனது இது ஈசன் நம்மை ஆசீர்வதித்த அடையாளம்.

இங்கு சுவாமி பக்கத்திலிருந்து கூட்டத்தை ஒழுக்கு படுத்திக் கொண்டிருந்தனர் ஆலய அன்பர்கள்.

கருவறைக்குள்ளேயே சுவாமியைச் சுற்றி வலம் செய்யும் அமைப்பு இருந்தது.  சுற்றி வந்தோம். 

இங்கு வேலைப்பாடு மிகுந்த தூண்கள் இருப்பதைக் கண்டோம். முழுமையான மன திருப்தியோடு வெளியேறிக் கொண்டிருந்தோம். 

உள்ளேயே பைரவர் சந்நிதியும் இருந்தது. இவரையும் பவ்யபயத்துடன் கூனக்குறுக குனிந்து பணிந்து வணங்கியெழுந்தோம்.

கோவிலுக்கு வெளியேயும் ஐஸ் குவியல் குவியலாக இருந்தது. இதை எல்லோரும் கையால் சிவலிங்கம் மாதிரி பிடித்து பிடித்து வைத்து குங்கும், பூ எல்லாம் வைத்து வணங்கினார்கள். நாமும் வணங்கிக் கொண்டோம்.

கோயிலுக்குப் பின்புறம் ஆதிசங்கரர் மண்டபமும் அவரது திருவுருவச் சிலையும் இருந்தது. வணங்கி நகர்ந்தோம்.

கோவிலின் வடகிழக்கு பகுதியில் திருஞானசம்பந்தர் பாடிய தேவார கல்வெட்டு பதிக்கப்பட்டு இருந்தது.

தேவாரக் கல்வெட்டு பதிகத்தை வாசிக்கும்போது,
வெளிப்புறம் சந்நிதிவாசல் அடைக்கப்பட்டதை அறிந்தோம்.

அடுத்து மாலை ஐந்து மணிக்குத்தான் நடை திறப்பார்களாம். நல்லவேளையாக நமக்கு தரிசனம் காலையிலேயை அருளைக் கிடைத்தது.

எங்களுக்குப் பின்னால் வந்த பக்தர்கள் மேலும், மறுபடியும் மாலை நேரம் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று போனது.

மாலை ஐந்து மணி தரிசனத்தில், சுவாமிக்கு நகைகள் அணிவிக்கச் செய்து, அலங்கார தங்க குடை எல்லாம் வைத்திருப்பார்களாம்.

ஒவ்வொரு நாளும் கவசத்தோடு சுவாமியைத் தரிசிக்கும் நேரமும் கவசம் இல்லாது பார்க்கும் நேரமும் உண்டாம்.

நாம் போகிற நேரத்தைப் பொறுத்து இந்த் தரிசன வாய்ப்புக்கள் அமையும். மேலேயிருந்து டோலிவாலா மூலம் கீழ் வந்து சேர்ந்தோம்.

எங்களை நல்லபடியாக தூக்கிச் சென்று கூடவே வந்து எங்களை வழி நடத்திய டோலி வாலாக்களுக்கு  நாங்கள் நன்றி கூறி புறப்பட்டோம்.

திரும்பி வரும் போது இன்னும் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.
இறங்கி வருபவர்கள், மேலே இறைவனை தரிசிக்க போகிறவர்கள், நடப்பவர்கள், குதிரையில் போகிறவர்கள் என்று நெரிசல் உரசல் நிறைய இருந்தது.

இங்கு எந்த நேரமும் மழை பெய்யும். அதனால் மழைக்கோட்டு  அணிந்தே எடுத்தே போக வேண்டும்.  குளிருக்கு ரெயின் கோட் நமக்கு பாதுகாப்பாக இருக்கும். மாலை நான்கு மணிக்குக் கீழே வந்து சேர்ந்தோம். 

இதன் பின்னர் சீதாப்பூர் சென்றோம். மறுநாள் பத்ரிநாத் செல்லும் உத்தேசம்.

இது தேவார பாடல்பெற்ற தொடர் பதிவு என்பதால், இத்தலத்தோடு இணைந்து தரிசித்த மற்ற தல பதிவை இங்கு குறிப்பிடவில்லை.

பொதுவாக இங்கு வருவோர், கூடவே பத்ரிநாத் உள்பட நான்கு நலத்தையும் தரிசித்தே செல்வர். சிவ சிவ.

கேதார்-க்கு நீங்கள் பயணம் செய்தால், இதுவரை அனுபவித்திராத ஒரு இனிய அனுபவத்தை அது உங்களுக்கு கொடுக்கும்.

இவ்விடம் பயணப்படுவது கடினம் என்றாலும், இங்கு நாம் அபிஷேகம்  செய்யும்போதும், தரிசனம் செய்யும் போதும் நமக்கு கிடைக்கும் உணர்வுக்காக நிச்சயம் செல்ல வேண்டிய இடம் இது. *சிவ சிவ, சிவ சிவ*

*தல அருமை:*
பிருங்கி முனிவரின் பொருட்டு இறைவியார் இறைவரைப் பூசித்து இடப்பாகம் பெற்ற தலமாகும் இது.

இத்தலத்தில் ஆறுமாதம் தேவர்களாலும், ஆறு மாதம் மனிதராலும் பூசைகள் செய்யப்படுகின்றன.

இத்தலத்தில் தேவ பூசை ஐப்பசி பௌர்ணமியில் தொடங்குகிறது.

அப்பொழுது பனிக் கால மாதலால் அங்கு மனிதர்களே இருக்கமுடியாது.

அர்ச்சகர் முதலானோர் மலையைவிட்டு கீழே வந்து விடுவர். 

பனிக்காலமாகிய ஆறுமாதம் கழித்தே மீண்டும் மேலே  பூசைக்குச் செல்வர்.

*சிறப்பு:*
திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், திருக்காளத்தி தலத்திலிருந்தவாறே இத்தலத்தை உணரப்பெற்று  பாடியுள்ளார்கள்.

இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

*சம்பந்தர் தேவாரம்:*
பண்: செவ்வழி.

1.🔔தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.

🙏அடியவர் ஐம்புலக்களிறுகளையும் அடக்கி ஆண்டு, நாண்மலர்களைக் கொண்டு இண்டைகட்டிச் சார்த்தி வழிபாடு செய்யுமிடம், வண்டுகள் பாடவும், மயில்கள் ஆர்ப்பரிக்கவும், மான் கன்றுகள் துள்ளவும், சுனைகளில் கெண்டைகள் பாய்வதால் நீலமலர் மொட்டுக்கள் அலரவும் விளங்கும் திருக்கேதாரமாகும்.

2.🔔பாதம்விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே 
வேதநான்கும் பதினெட்டொ டாறும் விரித்தார்க்கிடம் 
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.

🙏விண்ணோர் பலரும்பாதம் பரவித் தொழ நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பதினெண் புராணங்களையும் விரித்துரைத்த சிவபிரானுக்கு இடம், மலரின் மது உண்ட வண்டுகள் கீதம்பாட மந்திகள் கேட்டு மகிழும் திருக்கேதாரமாகும்.

3.🔔முந்திவந்து புரோதாய மூழ்கி முனிகள்பலர்
எந்தைபெம்மா னெனநின்றி றைஞ்சும் மிடமென்பரால்
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே.

🙏முனிவர்கள் உதயத்துக்கு முன் எழுந்து நீராடி எந்தைபெருமான் என இறைஞ்சச் சடாதாரியான சிவபிரானுக்குரிய இடம், மந்திகள் பாய்தலால் சரேலெனத் தேனைச் சொரிந்து முரிந்து வீழ்ந்த மலர்களின் மணங்கமழும் திருக்கேதாரமாகும்.

4.🔔உள்ளமிக்கார் குதிரைம் முகத்தார் ஒருகாலர்கள்
எள்கலில்லா இமையோர்கள் சேரும் மிடமென்பரால்
பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வ கேட்டுப் பிரியாதுபோய்க்
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.

🙏தியான பலம் உடையோரும், குதிரை முகமுடைய கின்னரரும், ஒற்றைக் காலுடைய பிரமதகணத்தவரும் இமையவரும் சிவபிரானை வழிபடக் கூடுமிடம், தம்குஞ்சுகள் பசியோடு தம்மை அழைப்பதைக் கேட்டுக் கிளிகள் ஏனற் கதிர்களைக் கொய்து வந்து அவற்றின் வாயிற் பெய்யும் திருக்கேதாரமாகும்.

5.🔔ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும் இடமென்பரால்
மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.

🙏பல்லூழிக்காலம் வேதப் பொருள்களை உணரும் அடியவர் சிவபெருமானை வாழ்த்தி இறைஞ்சிச் சேரும் இடம், உணவு பெற விரும்பிக் கலப்பையால் உழுவார்க்கு அந்நிலத்தில் மாணிக்க மணிகள் கிடைக்கும் திருக்கேதாரமாகும்.

6.🔔நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரைதன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள் சேரும் இடமென்பரால்
ஏறிமாவின் கனியும்பலா வின்இருஞ் சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே.

🙏நீரில் மூழ்கித் திருநீற்றை அணிந்து, நிலத்திடை உண்டு, நீண்ட மலையின்மேல் தெளிந்த சிந்தை உடைவர்களான தாபதர்கள் வாழும் இடம், குரங்குகள் மா, பலா மரங்களில் ஏறி அவற்றின் கனிகளைக் கீறி உண்டு மகிழ்ந்து வாழும் திருக்கேதாரமாகும்.

7.🔔மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத்
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க் கிடமென்பரால்
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக்கல் லறைகண்மேல்
கிடந்தவேங்கை சினமாமுகஞ் செய்யுங் கேதாரமே.

🙏சிவபிரான் வானோர் தொழுமாறு மறை ஓதியும், மங்கை பங்கராகியும், வேதாகமங்களை அருளியும், அடியவர் வினை களைத் தீர்த்தற்கு எழுந்தருளி விளங்கும் இடம், காற்றடிக்கப் பூத்த வேங்கை மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்து புலியென மற்ற புலிகளை மருள்விக்கும் திருக்கேதாரமாகும்.

8.🔔அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.

🙏கடல்சூழ்ந்த இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது அம்மலைக்கீழ் அகப்படுத்திக் கால்விரலை ஊன்றி அடர்த்த இறைவனுக்கு இடம், குரவம், கோங்கு, அசோகு, ஞாழல், சுரபுன்னை ஆகிய மரங்களில் பூத்த மலர்களில் முறையாக வண்டு பண்செய்து தேனுண்ணும் கேதாரமாகும்.

9.🔔ஆழ்ந்துகாணா ருயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர் 
தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க் கிடமென்பரால்
வீழ்ந்துசெற்றுந் நிழற்கிரங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக்
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே.

🙏பன்றியுருக் கொண்டு மண் இடந்தும் காணாத திருமாலும், அன்னப்புள்ளாய் விண் பறந்தும் காணாத பிரமனும் தாழ்ந்து தம் முடிசாய்த்து வணங்க நின்றவனாகிய சிவபிரானுக்கு உரிய இடம், சிங்கம் யானைமேல் வீழ்ந்து அழித்து அதன்மருப்பைப் பிளந்து குருத்தை உண்ணும்போது முத்துக்கள் மருப்பிலிருந்து உதிரும் கேதாரமாகும்.

10.🔔கடுக்கள்தின்று கழிமீன் கவர்வார்கண் மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணா விடமென்பரால்
அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங் கவர்வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.

🙏துவர்க்காய்களைத் தின்று கழிமீன்களை யாரும் அறியாமல் கவர்ந்து உண்பவரும் , மாசு பொருந்திய உடலினரும் மக்களைத் துன்பநெறியில் செலுத்துவோருமாகிய சமணர்கள் சாராத இடம் , அருகில் இருந்து அறநெறியான வார்த்தைகளைக் கேட்டு அடிய வர் வினைகளைக் கெடுக்கும் பெருமான் உறையும் கேதாரமாகும் .

11.🔔வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்
வேந்தராகி யுலகாண்டு வீடுகதி பெறுவரே.

            திருச்சிற்றம்பலம்.

🙏வயல்வளம் உடைய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன் , நீர் அருவிகளை உடையதும் , இமையோர்கள் உறைவதுமாகிய கேதாரத்து இறைவர்மீது ஆய்ந்து சொன்ன அருந்தமிழ் பத்தையும் இசையோடு பாடி வழிபட வல்லவர் . வேந்தராய் உலகை ஆண்டு முடிவில் வீடுகதி பெறுவார்கள் .

         திருச்சிற்றம்பலம்.

*தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நாளைய தலம் திருக்கயிலாயம்.*

நாளைய தலத்துடன் 276 பாடல் பெற்ற சிவ தலங்களின் அருமைகள் பெருமைகள் தொடர் மகிழ்ந்து நிறைவாகும்.
_________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment