"கமலாஅம்பிகே ஆச்ரிதகல்பலதிகே சண்டிகே!!" தோடி உருகி ப்ரவஹித்துக் கொண்டிருந்தது முத்துஸ்வாமி தீக்ஷிதர் இல்லத்தில். தோடியின் லாவகத்தில் மெய்மறந்து லயித்திருந்தனர் தீக்ஷிதரின் சிஷ்யர்கள்.
"கமலாலய தீர்த்த வைபவே சிவே கருணார்ணவே!!" அனுபல்லவியின் வார்த்தைகளில் தீக்ஷிதர் சொக்கிப் போய் லயித்திருந்தார்.
தீக்ஷிதர் அனுபல்லவியின் அர்த்தத்தை விளக்கினார்.""கருணார்ணவே" அப்படீன்னா "கருணைக்கடலானவள்"ன்னு அர்த்தம். ஸஹஸ்ரநாமமும் த்ரிசதியும் கருணாம்ருதமே வடிவானவள்ங்கறது" என தேவியின் மஹிமையை கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருக விவரித்துக் கொண்டிருந்தார்.
பாடமும் முடிந்தாயிற்று. சிஷ்யர்கள் கிளம்பியாயிற்று. தீக்ஷிதரின் மனைவி தீக்ஷிதரை அழைத்தாள்
"ஏந்நா!! நேக்கு ஒரு ஸந்தேகம்!!"
"சொல்லும்மா!!!" தீக்ஷிதர் குரலில் ஒரு தீக்ஷண்யம்
"அம்பாள் காருண்யமே வடிவானவள்ங்கறேளே!! நீங்க உருகிப் பாடறதுக்கு, அவோ அஷ்ட ஐச்வர்யத்தையும் பொழியலாமே!! நம்மளை ஏன் இப்படி வறுமைலயே இருக்கும்படி செய்திருக்கா!!" தன்னை அறியாது கேட்டுவிட்டாள்.
"அடி!! அசடே!! அத்தனை செல்வத்துக்கும் மேலா, அவளை நினைச்சு உருகற பாக்யத்தை கொடுத்துருக்காளே!! வேறென்ன வேணும்!! அன்னத்துக்கு குறைவில்லாத அனுக்ரஹம் பண்ணிருக்காளே!! அது போறும்!! குழப்பிக்காத இரு!!" மந்தஹாஸத்துடன் தீக்ஷிதர் சொல்லி முடித்தார்!!
சற்றே சமாதானமடைந்தவள்,பின் "ஏந்நா!! கமலாம்பாளை பார்த்துட்டு வந்துடறேன்!!" என்று விருட்டென கிளம்பினாள்.
உச்சிஷ்ட கணபதி ஸந்நிதி அடைந்தவள், கணநாதனை தொழுது கொண்டிருக்கும் ஸமயம், "மாமி!! நீங்க முத்துஸ்வாமி தீக்ஷிதர் பார்யை தானே!!" ஸ்வபாவமாகவே மதுரமாய் உள்ள ஒரு குரல் கேட்டது.
சட்டென திரும்பிய தீக்ஷிதர் மனைவி யார் அழைத்தது என தெரியாமல் விழித்தாள்.
ஒன்பது கெஜம் சிகப்புப் பட்டு ப்ரகாசிக்க, நவயௌவனமுள்ள ஒரு ஸ்த்ரீ நின்று கொண்டிருந்தாள்!! ஸர்வாபரண பூஷிதையாய் ப்ரகாசிக்கும் அந்தப் பெண் கூறுவாள்
"மாமி!! நான் கமலா!! த்யாகராஜ தீக்ஷிதர் ஸம்ஸாரம்!! நான் நிறைய முறை உங்களை பாத்துருக்கேனே!! ஞாபகம் இல்லையா!!" கமலையின் வாக்கிற்கு பதில் கூறாது அவளையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள் தீக்ஷிதர் பார்யை.
"இல்லையே!! ஞாபகம் இல்லை!! நீங்க இந்த ஊரா!!"
"ஆமா!! இந்த கமலாலய குளத்தங்கரைல தான் பொறந்தேன்!! வளர்ந்தது வாக்கப்பட்டதெல்லாம் இங்க தான்!! ஆத்துக்காரர் இப்போ தான் அவசரமா வெளில போனார்!! அந்த ஸமயம் உங்களை பார்த்தேன்!! ரொம்ப ஸந்தோஷம்!! தீக்ஷிதரை விஜாரிச்சேன்னு சொல்லுங்கோ!!" அடுக்கிக் கொண்டே போனாள் கமலா.
"அவச்யம் மாமி!! நிஸ்சயம்!!" தீக்ஷிதரின் மனைவி பதிலுரைத்தாள்.
"நேக்கு ஒரு ஸந்தேஹம்!! உங்களை பார்த்ததும் சட்ன்னு தோணித்து!! கேக்கலாமா!!" தீக்ஷிதரின் மனைவி செப்பினாள்.
"ஆஹா!! தாராளமாக" இது கமலா.
"அம்பாளை ஆராதிக்கறவா வினைகளை அவள் அழிப்போன்னு சொல்றாளே!! அப்போ ஏன் கஷ்டங்களை அவள் போக்கறதில்லை!!பவானீ!!சிவா!!கௌரீ!!லலிதா!!ன்னு நாம ஜபமே பாபங்களை அழிக்கும்னு சொல்றா!!ஆனால் ஏன் அவோ சோதனைகளையே கொடுக்கறா!!" தன்னை அறியாது கண்களில் ஜலம் கட்டிக்கொண்டு விட்டது தீக்ஷிதர் மனைவிக்கு.
"ஸர்வமும் அறிந்த தீக்ஷிதர் பார்யையா இப்படி பேசறது!!மஹாமாயா விச்வம் ப்ரமயஸிங்கறது சரியாத் தான் இருக்கு!! மாமி!! கவலைப்படாதேள்!! வினைகள் அத்தனையும் அம்பாள் ஒழிச்சுடுவோ!!ஆனாலும் பல ஜன்மாக்கள் சேர்ந்த கர்ம மூட்டைகளை அழிக்கணுமோல்லியோ!! அதுக்கு தாமதமாறது!! வேறொன்னுமில்லே!! அந்த கர்மாவும் அம்பாளை நம்பிண்ட்ருந்தா பாதிக்காது!! தன் கொழந்தேள் கஷ்டப்படறத அவோ பார்த்துண்ட்ருப்பாளோ!!" கமலையும் தீக்ஷிதர் மனைவியும் பேசிக்கொண்டே கமலாம்பாளின் ஸந்நிதியை அடைந்தனர்.
"மாமி!! மனசுக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு!!!" தீக்ஷிதரின் மனைவி கமலையின் கையை பிடித்துக்கொண்டாள்.
சட்டென்று கோடி மின்னல் தேகத்தில் பாய்ந்தது போன்று தீக்ஷிதர் மனைவிக்கு இருந்தது.
கோடி சந்த்ரன் உதித்தது போல் மந்தஹாஸமாய் சிரித்தாள் கமலை.
"குழந்தே!! நான் யார்ன்னு இன்னுந் தெரியலையா!!"
பஞ்சப்ரேத மஹாமஞ்சத்தில், ஶ்ரீராஜராஜேச்வரியாக மஹாத்ரிபுரஸுந்தரியாக, லலிதா பரமேச்வரியாக ஶ்ரீகமலாம்பிகை காக்ஷியளித்தாள்.
"அம்மா!! நீயா வந்தே!! தாயே நீயா பேசினே!!! உன் அபயஹஸ்தத்தையா நான் தொட்டேன்!! கமலாம்பா! தாயே!! பராசக்தி!!" தீக்ஷிதர் பார்யை ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தாள் அம்பிகையை.
ஒரு க்ஷணம் தான் தேவி தரிசனம். மேலும் ஸஞ்சலம் உண்டோ மனதில்.
கமலையையே தர்சித்த ஆனந்தத்தில் மெய்மறந்து ஜகதம்பிகையின் கடாக்ஷத்தால் ஞானமடைந்தாள்.
அம்பாளை ஸ்மரித்து நாமும் அவள் அனுக்ரஹத்திற்கு பாத்ரமாவோம்.
ஶ்ரீ காமாக்ஷீ சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
No comments:
Post a Comment