Wednesday, April 18, 2018

Vikirtanadeswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
___________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல........................)
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர் எண்: 264*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜விகிர்த நாதேஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாக்கூடல்:*
___________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.

இவ்வூரை வெஞ்சமாங்கூடலூர் என்று மக்கள் அழைக்கிறார்கள்

*🌙இறைவன்:* விகிர்த நாதேஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர்.

*💥இறைவி:* விகிர்தேஸ்வரி, விகிர்தநாயகி, மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை.

*🌴தல விருட்சம்:* வில்வம்.

*🌊தல தீர்த்தம்:* விகிர்த தீர்த்தம்.

*🔥ஆகமம்:*

*📔தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர் - 1.

*🛣 இருப்பிடம்:*
கரூரில் இருந்து அரவங்குறிச்சி செல்லும் சாலையில் சுமார் பதினான்கு கி.மி. தென்மேற்கே பயணம் செய்தால் ஆறு ரோடு பிரிவு என்ற இடம் வரும்.

இங்கிருந்து பிரியும் ஒரு கிளைச் சாலயில் சுமார் எட்டு கி.மி. சென்றால் இந்த தலத்தை அடையலாம்.

கரூர் - ஆற்றுமேடு நகரப் பேருந்து  வெஞ்சமாங்கூடல் வழியாகச் செல்கிறது.

*✉அஞ்சல் முகவரி:*
அருள்மிகு விகிர்த நாதேஸ்வரர் திருக்கோயில்,
வெஞ்சமாங்கூடலூர் அஞ்சல்,
வழி மூலப்பாடி.
அரவக்குறிச்சி வட்டம்.
கரூர் மாவட்டம்.
PIN - 639 109

*☎தொடர்புக்கு:*
04320 - 238 442

*🌸ஆலயப் பூஜை காலம்:*
காலை 6.00 மணி முதல் பகல் 12.00  மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

ஒரு சமயம் வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து போனது.

குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஊரும் பல நூற்றாண்டுகளான பழமையான இக்கோவிலும் அழிந்து போயின.

இக்கோயிலின் கட்டுமானத்திலிருந்த கருங்கற்கள் வெள்ளத்தில்  இரணடு கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டன.

ஆக, வெள்ளப் பெருக்கின் நிலைமை எவ்வளவு உணரலாம்.

பின்பு, 1982-ம் ஆண்டு ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தாரால் இக்கோயில் திருப்பணியைத் தொடங்கி, பெருமுயற்சி செய்து, திருக்கோயிலைப் புதியதாக எடுப்பித்தார்கள்.

நான்கு ஆண்டுகளாக பணிகள் நிறைவடைந்து,
மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளார்கள்.

*கோவில் விபரங்கள்:*
குடகனாறு மற்றும் சிற்றாறு என அழைக்கப்படும் இவ்வாறுகளை, தற்போது இது குழகனாறு என்று அழைத்து வந்தாலும், சுந்தரர் தனது பதிகத்தில் சிற்றாறு என்று தான் குறிப்பிட்டிருக்கிறார்) 

இரண்டும் கூடும் இடத்தில் இருப்பதாலும், வெஞ்சன் என்ற வேடுவ அரசன் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும் இத்தலம் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.

சிற்றாற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்த தலக் கோயில் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

கொங்கு நாட்டு திருத்தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸதம்பம்) இராஜகோபுரத்திற்கு எதிரே காணப்படுகிறது.

*🏜கோயில் அமைப்பு:*
இராஜகோபுரத்துக்கு முன் ஒரு புறத்தில், விநாயகர் இருந்தார். காதுகளைப் பிடித்துத் திருகி, தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக் கரணம் செய்து வணங்கிக் கொண்டோம்.

மறுபுறத்தில் முருகப் பெருமான் இருக்க கைகூப்பி வணங்கித் துதித்தோம்.

ஐந்து நிலைகளைத் தாங்கியபடி இருந்த கோபுரத்தைக் காணப் பெற்றதும், *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோபுரத்தில் சிலைகள் எதுவும் அமையப் படவில்லை. இருந்தாலும் கோபுரம் பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தது.

இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தோம்.

பதினேழு படிகள் கீழிறங்கி வந்து பிரகாரத்தை அடைந்தோம். பிரகாரத்தில் ஆங்காங்கு புற்கள் செடிகள் வளர்ந்து இருந்தன.

ஆற்றங்கரையோரமாகவும், தாழ்வான நிலப் பகுதியாகவும் கோயில் அமைந்திருந்தன.

இதனாலேயே கோயிலை வெள்ளம் அடித்துச் சென்றிருக்க வேண்டும் என்பது தெரிந்தது.

படிக்கட்டுகள் இறங்கியதும் நேராக முன்னால் உள்ள நீண்ட முகப்பு மண்டபம் இருக்கக் கண்டோம்.

மண்டபத்தின் முன்பாக, கொடி மரத்தைக் காணவும், நெடுஞ்சான்கிடையாக விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்திருந்த பலிபீடத்தருகாக வந்து நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு மேலும் மனதில் ஆணவமலம் துளியாதிருக்கும் மனத்தையும் தருமாறு வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.

இதையடுத்திருந்த நந்தியாரைக் கண்டு வணங்கிக் கொண்டோம். மேலும் ஆலயத்துள் சென்று இறைவனை தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

இந்த பரந்த வெளிப் பிரகாரத்திலேயே  சுவாமி சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் உள்ளடக்கி இருந்தது.

உட்பிரகாரத்தின் தெற்குச் சுற்று வலத்தில், முதலில் சைவ நால்வர் பெருமக்கள் இருந்தனர். முன்வந்து நின்று பணிந்து வணங்கிக் கொண்டோம்.

இவர்களைத் தொடர்ந்து அறுபத்துமூவர் திருமேனிகள் இருக்கக் கண்டோம்.

ஒவ்வொரு நாயன்மார்கள் மூர்த்தங்களின் கீழ் அவரவர் நாடு, மரபு, காலம், நட்சத்திரம் ஆகிய முழு விவரங்களையும் எழுதி வைத்திருக்கிறார்கள். 

தெரியாதோர்களுக்கு இவ்விபரங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர் இருந்தார். 

விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

விநாயகரைத் தொடர்ந்து பஞ்ச லிங்கங்களைக் கண்டு வரிசையாக வணங்கியபடியே நகர்ந்தோம்.

இதையடுத்து வடமேற்குப் பகுதியில் வள்ளி, தெய்வானை உடனாய முருகப்பெருமான் சந்நிதி அமைந்திருந்தது.

வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் மயிலின் மீது கால் வைத்து காட்சி தந்தார்.

முருகன் பன்னிரண்டு கரங்களுடன் இடப்பார்வையுடன் மயில் இருக்கிறது.

அருணகிரியார் இம்முருகனை திருப்புகழில், .......

வண்டுபோல் சாரத்து அருள் தேடிமந்திபோல் காலப் பிணிசாடிச்செண்டுபோல் பாசத்துடன் ஆடிச்சிந்தைமாயத் தேசித்தருள்வாயே தொண்டரால் காணப் பெறுவோனேதுங்கவேல் கானத்து உறைவோனேமிண்டரால் காணக் கிடையானேவெஞ்சமாக் கூறினார் பெருமாளே! என பாடியிருக்கிறார்.

இவர் முன் நின்று, நலம் பயக்கும் வாழ்வை அருளித் தருமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு, வணங்கிப் பின் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம் 

அடுத்து மூலவர் சந்நிதிக்கு விரைந்தோம். மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்க பெருமான் ஆள் உயரத்திற்கு அமைந்து அருளாட்சி செய்து கொண்டிருந்தார்.

இறைவன் விகிர்த நாதேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தர, மனமுருகி பிரார்த்தித்து வணங்கி விட்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

இக்கோவிலின் வெளிச்சுற்றுச் சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் சொரிவது போன்ற சின்னங்கள் நிறைய காணப்பட்டன. ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே நடந்தோம்.

நடராஜசபை காணக் கிடைத்தது. ஆடல்வல்லானின் தூக்கிய திருவடியையும், திருமுகத்தை மும் கண்டு ஆனந்தித்து வணங்கினோம்.

தூக்கிய திருவடி அருளாகக் கிடைத்தது. திருமுகம் ஆனந்த உணர்ச்சிகளைத் தந்தது. பரவசம் மேலிட விழுந்தெழுந்து வணங்கிக் கொண்டோம்.

மூலவர் சந்நிதி வாயிற் கதவுகளில் கொங்கு நாட்டுத் தலங்களான ஏழு தலத்தின் மூர்த்தங்களைச் செதுக்கியிருந்தார்கள்.

இது, மிக மிகச் சிறப்பாக இருந்தது.

கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் ஒவ்வொருவரையும் நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் வணங்கியபடியே நகர்ந்தோம்.

அடுத்து, அம்பாள் சந்திக்கு வந்தோம்.

அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி இருந்தது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தந்தாள்.

அம்பாளின் அருட்பார்வைகளை அள்ளி அள்ளி நெஞ்சு நிறைய நிறைத்து வணங்கிக் கொண்டு, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

பண்ணோர் மொழியாளை ஓர் பங்குடையாய் படுகாட்டகத்தென்றும் ஓர் பற்றொழியாய்! -என சுந்தரர் பாடுகிறார்.

அம்மையை, வடமொழியில் மதுரபாஷிணி என்று வழங்குகிறார்கள். விகிரதநாயகி என்றும், விகிர்தேஸ்வரி என்றும் திருநாமங்கள் உண்டு.

கல்வெட்டுக்களில், *பனிமொழியார்* எனும் பெயரே காணப் பெறுகிறது.

தேவர்களின் அரசனாகிய இந்திரன் இங்கு வந்து, தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம்.

சுந்தரருக்குச் சிவனார் பொன் கொடுத்த தலங்களில், வெஞ்சமாக்கூடலான இத்தலமும் ஒன்று.

சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் (இவ்வுருவில் வந்தது பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது.

*திருப்புகழ் முருகன்:*
இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

அருணகிரிநாதரின் திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்கு இருக்கிறது.

*சுந்தரர் தேவாரம்:*
பண்: கொல்லிக் கௌவாணம்

1.🔔எறிக்குங்கதிர் வேயுதிர் முத்தம்மோ
டேலம்மில வங்கந்தக் கோலம்இஞ்சி
செறிக்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக் குந்தழை மாமுடப் புன்னைஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங்கலை மாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

🙏மூங்கிலினின்றும் உதிர்ந்த, ஒளிவீசும், முத்துக்களோடு, ஏலம், இலவங்கம், தக்கோலம், இஞ்சி என்பவைகளை, எவ்விடங்களையும் நிரப்புகின்ற நீருள் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, தளிர்த்த தழைகளையுடைய மாமரம், வளைந்த புன்னை மரம், குங்கும மரம், குருக்கத்திப்பந்தர் என்னும் இவைகளின்மேல் குயில்கள் இருந்து கூவுதல் ஒழியாத, அஞ்சுகின்ற கலைமானையுடைய திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

2.🔔குளங்கள்பல வுங்குழி யுந்நிறையக்
குடமாமணி சந்தன மும்மகிலும்
துளங்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும்
மணிமண்டப மும்மிவை மஞ்சுதன்னுள்
விளங்கும்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

🙏பல குளங்களும், பல குழிகளும் நிறையும்படி, மேற்குத் திசையில் உள்ள சிறந்த மணிகளையும், சந்தனமரம், அகில் மரம் என்னும் இவற்றையும், அசைகின்ற நீருள் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரை மேல் உள்ள, வளத்தைக்கொண்ட மதிலும், மாளிகையும் கோபுரமும், மணிமண்டபமும் ஆகிய இவை. மேகத்தில் விளங்குகின்ற சந்திரனை அளாவுகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

3.🔔வரைமான்அனை யார்மயிற் சாயல்நல்லார்
வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார்கமு குந்நெடுந் தாட்டெங்குங்
குறுந்தாட்பல வும்விர விக்குளிரும்
விரையார்பொழில் சூழ்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

🙏மலையில் உள்ள மான்போல்பவரும், மயில் போலும் சாயலை யுடையவரும், கூரிய வேல்போலும் கண்களை யுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வழிபட, அவர்கள் தனக்கு அளித்த பொருளை, அலை நிறைந்த நீரில் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, வரிசையாகப் பொருந்திய கமுக மரங்களும், நீண்ட அடியினையுடைய தென்னை மரங்களும், குறிய அடியினையுடைய பலா மரங்களும் ஒன்றாய்ப் பொருந்துதலால் குளிர்ச்சியை அடைகின்ற, மணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறு பட்ட இயல்பினையுடையவனே,ண அடியேனையும் உன் சீரடி யாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

4.🔔பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

🙏பண்போலும் மொழியினையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, யாவரும் ஒடுங்குங் காட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, இன்பத்தைத் தரும் அரிய அகிலையும், நல்ல கவரியையும் அலைத்துக்கொண்டு வந்து கரையை மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, மண்பொருந்திய மத்தளமும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் பொருந்திய சந்திரன் தவழ்கின்ற திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

5.🔔துளைவெண்குழை யுஞ்சுருள் வெண்டோடுந்
தூங்குங்கா திற்றுளங் கும்படியாய்
களையேகம ழும்மலர்க் கொன்றையினாய்
கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
பிளைவெண்பிறை யாய்பிறங் குஞ்சடையாய்
பிறவாதவ னேபெறு தற்கரியாய்
வெளைமால்விடை யாய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

🙏துளைக்கப்பட்ட வெள்ளிய குழையும், சுருண்ட வெள்ளிய தோடும் நீண்ட காதினிடத்தில் அசைகின்ற வடிவத்தை யுடையவனே, தேனினது மணத்தை வீசுகின்ற கொன்றை மலரைச் சூடியவனே, அடைந்தவர்க்கு அருள்செய்கின்ற கற்பகம் போல்பவனே, இளைய வெள்ளிய பிறையைச் சூடியவனே, விளங்குகின்ற சடைமுடியை உடையவனே, பிறத்தலைச் செய்யாதவனே, கிடைத் தற்கு அரியவனே வெண்மையான பெரிய விடையை உடையவனே, திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

6.🔔தொழுவார்க்கெளி யாய்துயர் தீரநின்றாய்
சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய்
உழுவார்க்கரி யவ்விடை யேறிஒன்னார்
புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார்
முழவாரொலி பாடலொ டாடலறா
முதுகாடரங் காநட மாடவல்லாய்
விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

உன்னைத் தொழுகின்றவர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாய் உள்ளவனே, அவர்களது துன்பந்தீர அவர்கட்கு என்றும் துணையாய், நின்றவனே, வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவனே, உழுவார்க்கு உதவாத விடையை ஏறுபவனே, பகைவரது திரிபுரத்தில் நெருப்பை மூளுமாறு ஏவியவனே, பேய்களின் ஓசையாகிய அழகுநிறைந்த மத்தளஒலியும், பாட்டும், குதிப்பும் நீங்காத புறங்காடே அரங்காக நடனமாட வல்லவனே, விழாக்கள் நிறைந்த தெருக்களையுடைய திருவெஞ்ச மாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

7.🔔கடமாகளி யானை யுரித்தவனே
கரிகாடிட மாஅனல் வீசிநின்று
நடமாடவல் லாய்நரை யேறுகந்தாய்
நல்லாய்நறுங் கொன்றை நயந்தவனே
படமாயிர மாம்பருத் துத்திப்பைங்கண்
பகுவாய்எயிற் றோடழ லேயுமிழும்
விடவார்அர வாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

🙏மதநீரையுடைய பெரிய மயக்கங்கொண்ட யானையை உரித்தவனே, கரிந்த காடே இடமாக நெருப்பை வீசிநின்று நடனமாட வல்லவனே, வெள்ளிய இடபத்தை விரும்பியவனே, நல்லோனே , கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே, புள்ளிகளை யுடைய ஆயிரம் படங்கள் பொருந்திய, பருத்த,  பசிய கண்களை யுடைய, பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்ற, நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே, திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

8.🔔காடும்மலை யுந்நாஅ டும்மிடறிக்
கதிர்மாமணி சந்தன மும்மகிலும்
சேடன்னுறை யும்மிடந் தான்விரும்பித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
பாடல்முழ வுங்குழ லும்மியம்பப்
பணைத்தோளியர் பாடலொ டாடலறா
வேடர்விரும் பும்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

🙏ஒளியையுடைய சிறந்த மணிகளையும், சந்தனத்தையும், அகிலையும், முல்லை, குறிஞ்சி, மருதம் என்னும் நிலங்களில் சிதறி, சேடன் என்னும் அரவரசன் வாழ்கின்ற பாதலத்தை அடைய விரும்பி நிலத்தை அகழ்ந்து, கரையைப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, தம் பாடலுக்கு இயைந்த மத்தளமும், குழலும் ஒலிக்க, பருத்த தோள்களையுடைய மாதர்கள் பாடுதலோடு, ஆடுதலைச் செய்தல் ஒழியாத கூத்தர் விரும்பும் திருவெஞ்ச மாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

9.🔔கொங்கார்மலர்க் கொன்றையந் தாரவனே
கொடுகொட்டியொர் வீணை யுடையவனே
பொங்காடர வும்புன லுஞ்சடைமேற்
பொதியும்புனி தாபுனஞ் சூழ்ந்தழகார்
துங்கார்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வெங்கார்வயல் சூழ்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

🙏தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்தவனே, கொடுகொட்டியையும் வீணையொன்றையும் உடையவனே, சீற்றம் மிக்க, ஆடுகின்ற பாம்பும் தண்ணீரும் சடையில் நிறைந்துள்ள தூயவனே, காடுகளைச் சூழ்ந்து அழகுமிகுகின்ற, உயர்வு பொருந்திய நீருள், காடுபடு பொருள்கள் பலவற்றை இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, விரும்பத்தக்க நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

10.🔔வஞ்சிநுண்ணிடை யார்மயிற் சாயலன்னார்
வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக்கூஉ டல்விகிர் தாஅடியே
னையும்வேண்டுதி யேஎன்று தான்விரும்பி
வஞ்சியாதளிக் கும்வயல் நாவலர்கோன்
வனப்பகை யப்பன்வன்ன் றொண்டன்சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும்வல்லார்
சிவலோகத்தி ருப்பது திண்ணமன்றே.

          திருச்சிற்றம்பலம்.

🙏வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையை யுடையவரும், மயில்போலும் சாயலை யுடையவரும், கூர்மை பொருந்திய வேல்போலும் கண்களையுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வணங்குகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளி யிருக்கின்ற, வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் என்று, விளைவுகளை வஞ்சியாதளிக்கின்ற வயல்களையுடைய திருநாவ லூரில் உள்ளார்க்குத் தலைவனும், வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டன் விரும்பிப் பாடிய செவ்விய சொற்களாலாகிய இத் தமிழ்மாலைகள் பத்தினையும் பாட வல்லவர் சிவலோகத்தில் வீற்றிருத்தல் திண்ணம் .

           திருச்சிற்றம்பலம்.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நாளைய தலப்பதிவு **

__________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment