Wednesday, April 4, 2018

Pazhampatinathar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
-------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல........................)
--------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 250*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*பழம்பதிநாதர் கோயில், திருப்புனவாயில்:*
--------------------------------------------------------
*📣குறிப்பு:*
இத்துடன் பாடல் பெற்ற
தலங்களின் தொடர்ச்சி 250-வது ஆகும். இன்னும் 24- தலங்கள் பதிய வேண்டியுள்ளது.

பாடல் பெற்ற தலங்களின் முன்ன பதிந்த பதிவுகள் அழிந்து விட்டது என்றும், சேமிக்கத் தவறி விட்டேன் என்றும், இடையிலுள்ள பல பதிவுகள் காணவில்லை என்றும் திரும்ப திரும்ப அனுப்பச் சொல்லி தினமும் நிறைய பேர்கள் கேட்கிறார்கள்.

அடியேன் கட்டிட பெயின்டிங் வேலைக்குச் செல்பவன். அன்றன்றைய பதிவை அன்றன்றே இரவில் பதிவை டைப் செய்து அனுப்பி வருகிறேன். ஒருநாள்  பதிவின் டைப்புக்கு மூன்று மணி நேரம் ஆகிறது.

திரும்பத் திரும்ப அனுப்ப எனக்கு சிரமமாக உள்ளது. தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். ஆகையால், அடியேனுடைய முகநூல்-க்குச் சென்று தேவையான பதிவுகளை பதவிறக்கம் செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

*அடியேன் முகநூல்கள்:*
1) karuppa Samy
2) painted polish Gmail.com
3) அவனே எல்லா அசைவும்
இதில் ஏதேனும் ஒரு முகநூலில் சென்று தருவித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
---------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பதினான்கு தலங்களில் இத்தலம் ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* பழம்பதிநாதர், விருத்தபுரீஸ்வரர்.

*💥இறைவி:*
கருணைநாயகி.

*🌴தல விருட்சம்:* புன்னை மரம்.

*🌊தல தீர்த்தம்:* இலட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வருண தீர்த்தம், மற்றும் பாம்பாறு.

*🔥ஆகமம்:* சிவாகமம்.

*📔தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்- ஒரு பதிகமும்,
சுந்தரர்- ஒரு பதிகமும், ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.

*🛣இருப்பிடம்:*
ஆவுடையார்கோவிலில் இருந்து தெற்கே இருபத்தைந்து கி.மி. தொலைவில் இருக்கிறது.

திருவாடானை தலத்தில் இருந்தும் திருப்புனவாயில் செல்லலாம். இத்தலம் வங்கக் கடற்கரையோரம் அமைந்திருக்கிறது.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் வழியாகவும், மதுரையிலிருந்து சிவகங்கை, காளையார்கோவில், திருவாடானை வழியாகவும் இத்தலத்தை சென்று அடையலாம்.

*✉அஞ்சல் முகவரி:*
அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருப்புனவாயில் அஞ்சல்,
ஆவுடையார்கோவில் வட்டம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
PIN - 614 629

*🌸ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00  மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு:*
பல முறை இத்தலம் செல்ல நினைத்து, செல்லப் போகும் நேரத்தில் ஏதொரு தடங்கல் இருந்து வர, நீண்ட இடைவெளி கழித்து இத்தலம் வர இறைவன் அருளினான்.

சுமார் அறுபத்தைந்து அடி உயரம் இருக்கும் கிழக்கு நோக்கியபடி இருந்த ராஜகோபுரத்தை முதலில் காணப் பெற்றோம். *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோயிலின் வெளிப்பக்கத்தில் பிரம்ம தீர்த்தமும் இருந்தது. இங்கு சென்று தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு கோயிலை நோக்கி நகர்ந்தோம்.

உள்ளே நேராக, கொடிமரமிருக்க இதன்முன்பு  நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்து, பலிபீடத்தருகாக வந்து நின்று, நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு மேலும் மனதில் ஆணவமலம் துளியாதிருக்கும் மனத்தையும் தருமாறு வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்திருந்த நந்தியாரை வணங்கிக் கொண்டு, மேலும் ஆலயப்பிரவேசம் செய்ய அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

கோபுரத்திற்கு வெளியில் தென்புறம் வல்லப கணேசர் சந்நிதியுடன் இருந்தார். விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

இதனின் வடபுறத்தில் தண்டபாணி சந்நிதியும் அமைந்து  இருந்தன. இவரையும் முன் வந்து நின்று வணங்கிக் கொண்டோம்.

கோபுர வாயிலைக் கடந்து உள் புகுந்தோம். வலப்பக்கத்தில் சூரிய, பைரவர் சந்நிதிகள் இருந்தன. இருவரையும் பவ்யபயத்துடன் வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

இடபக்கம் சந்திரன் சந்நிதியும் மேற்குப்பார்த்தபடி இருந்தார். வணங்கித் தொடர்ந்தோம்.

அடுத்து, சபாமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் என கருங்கல்லாலான இம்மூன்று மண்டபமும் ஒரே வரிசையில் இருக்க கடந்து சென்றோம்.

மகாமண்டபத்தில் தெற்கு மூலையில் சோமாஸ்கந்தர் வீற்றிருந்து அருள்புரிந்தார். இவர்களை வணங்கி இவரருளைப் பெற்று நகர்ந்தோம்.

வடக்குப் புறத்தில், நடராஜரும் சிவகாமி  அம்மையும், இவர்களுடன் ஏனைய உற்சவர் சிலா விக்ரகங்களாகவும் இருந்தார்கள்.

நடராஜனின் ஆடலழகையையும், சிவகாமி அம்மையின் அழகுடனான அருளையும் சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டு, உற்சவ விக்கிரங்களையும் தொழுதபடியே நகர்ந்தோம்.

இதனையடுத்து நால்வர் பெருமானார்களுடன் சேக்கிழார் சுவாமிகளும் கற்சிற்பத்துக்குள்ளிருந்து அருளியவாறு காட்சி தர, நெஞ்சுக்கு நேராக கூப்பியிருந்த கைகளை, சிரசிற்கு மேல் உயரத் துவங்கியது. 

இவர்களின் பக்தியை நினைத்து கண்ணீர் தளும்ப வணங்கித் திரும்பினோம்.

அடுத்து, மூலவர் சந்நிதி காணக் கிடைத்தது. ஈசனின் பிரமாண்டத் திருமேனி பிரமிக்க வைத்தது.

அளவில் பெரியதாகவும், அழகில் அரியதான கோலத்துடனும், அருள்புரியும் வள்ளலீசனைக் கண்டு உள்ளம் குளிர்ந்து ஆனந்தமானோம்.

கருவறையில் இறைவன் கிழக்கு நோக்கி சந்நிதியில் காட்சி அருளிக் கொண்டிருந்தார்.

இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக இருந்தது.

தஞ்சை பிரஹதீஸ்வரருக்கு அடுத்தபடியாக பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவென கூறினார்கள்.

சுவாமிக்கு அணிவிப்பதற்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு அணிவிப்பதற்கு முப்பது முழம் துணியும் ஆகிறதாம். 

மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று என்ற ஒரு வாசகத்தை பழங்காலந்தொட்டு கூறிவருவார்களே!அது இத்தலத்து இறைவனுக்கு அணிவிக்கும் உடைத்துணியைப் பற்றியதாகும்.

முப்பத்து மூன்று அடி ஆவுடையாருடன் ஒன்பது அடி பாணத்துடன், எட்டரை அடி சுற்றும் கொண்டு இருந்தார். இக்காட்சி மருதம் நமக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.

இந்த ஈசனுக்கு அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறங்களிலும் மரப்படிகள் இருக்கின்றன.

இந்த ஈசனை, தேவாதி தேவர்கள் சாபவிமோசனம் நீங்கவும், அரிய வரங்களைப் பெறவும் பூசனை புரிந்ததை நினைந்தபோது, உடல் சிலிர்க்க ஆனந்தம் பெருகியது.

ஈசனை கண்கள்குளிரத் தரிசித்து, மணங்குளிர ஆனந்தித்து, அவனருளைப் பெற்று, அவனை  இதயஸ்தானத்துள் இருத்திக் கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

தென்கிழக்கு திசையில் மதிற்சுவரையொட்டி இத்தலத்தின் தலவிருட்சமான புன்னை மரம் இருந்தது. தீண்டப் பெறாமல் கண்டு வணங்கிக் கொண்டோம்.

இதனின் சற்று தள்ளி கொட்டகையின் கீழ் கபில புத்திரர்களான ஒன்பது பேரும், இவர்களுடன் ஆதிசைவ சிவனடியார்கள் இருவரும் சேர்ந்து காட்சி தந்தனர்.

பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற பதினான்கு சிவ தலங்களும் இங்கு அருளுவதாக ஐதீகம்.

அதனால்தான் கோவிலுக்குள் பதினான்கு சிவலிங்கங்கள் அருளியவாறு இருக்கின்றன.

திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது மற்றொரு ஐதீகம்.

திருப்புனவாசல் சுற்றுவட்டாரத்திலிருந்து சுமார் ஏழு மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் இத்தலத்தற்குள் உள்ளே வரமுடியாது என்பதும் மேலும் ஒரு ஐதீகம்.

மஹாவிஷ்னு, பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன், எமதர்மன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோர் இத்தல இறைவனை வணங்கி வழிபட்டிருக்கின்றனர்.

சுவாமி சந்நிதியின் சுற்றுப் பிரகாரத்தில் செல்லும்போது, பஞ்ச விநாயகர் இருந்தார். மேலே மகிழமரமிருக்க இதனின் நிழலிலும் இம்மர நறுமண வாசனையிலும் விநாயகர் அருள்சொரிந்து காட்சி தந்தார்.

இவர் முன் நின்று தலையில் குட்டிக் கொண்டு கைதொழுது வணங்கி நகர்ந்தோம்.

பின்னர் கருவறையையொட்டி கிழக்கு பார்த்து சந்நிதி கொண்டு ஆகண்டல் கணபதியைக் கண்டோம். இவருக்கும் நம் தலையில் சில குட்டுக்கள் வைத்து வணங்கிக் கொண்டோம். இந்த விநாயகரை இந்திரன் வணங்கி இருக்கிறார்.

அடுத்து, தட்சிணாமூர்த்தி, வித்தியாச கோலத்தில் அமர்ந்திருந்தார். வலது மேல்கரத்தில் அட்ச மாலையும், இடது மேல் கரத்தில் நாகத்தையும் கொண்டும், கீழ் வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரத்தை தொடை மீது இன்றியும் காணக்கிடைத்தார். கைதூக்கி தொழுது நகர்ந்தோம்.

மேற்கு பிரகாரத்தில் குருந்த மரத்தினடியில் பெரியாண்டவர் சந்நிதி கொண்டிருந்தார்.

இவரை குலதேய்வமாகக் கொண்டோர்கள் நிறையோர்கள் வந்து வழிபாடுகள் செய்து விட்டு சென்றதைக் கண்டோம்.

திங்கட்கிழமைகளில் மட்டும் பூஜையும் நிவேதனமும் நடத்தப்படுகிறது என்று, வழிபாடு செய்வித்துச் சென்றோர் கூறினர்.

தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், பிரம்மா, ஆகியோர்களைக் கண்டு ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு தொடர்ந்தோம்.

அடுத்து, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு வந்தோம். இவரை வணங்கும் நெறிமுறையுடன் வணங்கிக் கொண்டு வாழ்வில், இருப்பன இல்லாதவன் எதையும் மறையாது இவரிடம் மெளனியாக கூறி, உள்ளத்திலிருந்து ஒலித்து வணங்கித் திரும்பினோம்.

திரும்பவும், மற்றொரு பக்தர் சண்டிகேஸ்வரரைப் பார்த்து கைகளைத் தட்டினார். நாம் அவரை கைசாடையால் கைகளைத் தட்ட வேண்டாம் எனக் கூறி பக்கத்தில் அழைத்து,.......

இவர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். இவர் தியாணம் கலைய நாம் ஒலியெழுப்புவதோ, ஆடை நூலை பிய்த்து போடுவதோ கூடாது. இவரை இப்படித்தான் வணங்க வேண்டும் என வணங்குதல் நெறிமுறைகளை எடுத்துக் கூறினோம்.

அவரும் நாம் சொல்வதை நன்றாகப் புரிந்தும் தெரிந்து, திரும்ப சண்டிகேஸ்வரரை வணங்கினார்.

அதுவரை நாம், அவர் வணங்குவதை காணுமாறு நின்றிருந்தோம். சரியாக சண்டிகேஸ்வரரை வணங்கினார்.

அவருக்குக் கைகொடுத்து நன்றி நவின்று அகன்றோம்.  நமக்கும், ஒருவருக்கு நெறிமுறை வணக்கத்தை கூறச் செய்து வந்தது நமக்கு ஆத்மதிருப்தியாக இருந்தது சிவ சிவ.

அடுத்திருந்த கஜலட்சுமி சன்னதிக்குச் சென்று வணங்கித் திரும்பினோம்.

கருவறை வெளிப்புறச் சுவற்றின் மேற்கு மாடத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் வழக்கமாக இடம்பெறும் லிங்கோத்பவருக்கு பதிலாக பெருமாளும், அனுமனும் இருந்தனர்.

அடுத்து, அம்மை சந்நிதிக்கு விரைந்தோம். சுவாமி சந்நிதிக்கு இடதுபுறமாக கிழக்கு நோக்கிப் பார்த்தவாறு அமைந்திருந்தது. நந்தியாரே அம்மையின் முன் இருந்தார்.

நந்தியை வணங்கிக் கொண்டு அம்மையைத் தரிசிக்க அனுமதி வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.

கருவறையில் அம்மை கருணாகாட்சியாய் அருட்கருணை வழங்கியபடி காட்சி தந்தாள்.

புன்னகை சிந்தியபடி பொலிவுறத் திகழ்ந்த இந்த அம்மையை, பெரியநாயகி என்றும், பிரஹன்நாயகி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.

கல்வெட்டில் அம்மையின் திருநாமத்தை, *கச்சனிமுலையம்மை* என பொறிக்கப் பட்டுள்ளது.

இங்கேயும் ஈசனிடம் வேண்டிக் கொண்டதுபோல மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

அம்மன் சந்நிதிக்கு எதிரில் குடவறை காளி சன்னதி இருக்கிறது. திரிசூல வடிவில் காட்சி தருகிறாள்.

கடும் உக்கிரத்துடன் வீற்றிருக்கும் குடைவரைக் காளிதேவியின் முழு தரிசனத்தையும் காண எதிரே வைக்கப்பட்டிருக்கின்ற கண்ணாடியில் பிம்பமாக வடிவருளைத்தான் தரிசிக்க முடிந்தது.

இக்கண்ணாடியில் தெரியும் பிம்ப வடிவ அருளைத்தான் அணைவரும் தரிசித்துச் செல்ல ஆலயம் வழிவகை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

அதுபோலவே கண்ணாடி வழியாகத் தெரியும் பிம்ப வடிவத்துடனான காளியை பவ்யபயத்துடன் தரிசித்தோம்.

பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் இந்த அன்னை மிகுந்த வரப்பிரசாதியானவள் என அங்கிருந்தோர் கூறினார்கள்.

தொடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறியதும் இங்கு வந்து திரிசூலம் நாட்டின் காணிக்கையை செலுத்திச் செல்வதை காணமுடிந்தது.

இத்தலம் நான்கு யுகத்திலும் நான்கு பெயர்களுடன் இருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, நான்கு தலவிருட்சங்கள் இருந்துள்ளன.

எல்லோராலும் ஒதுக்கப்பட்ட கள்ளியும் இங்கு தல விருட்சமாக இருக்கிறது.

இறைவன் வெறுக்கக்கூடியவற்றையும் ஆட்கொள்பவர் என்பது இதன் வெளிப்பாடு இது.

கிருதயுகத்தில் வஜ்ரவனம், இந்திரபுரம் எனும் பெயருடன் சதுர கள்ளியையும்,.....

திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்தமரத்தையும்,......

துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும்,........

கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தல விருட்சமாக கொண்டுள்ளது.

இவை நான்கும் நான்கு வேதங்களாக போற்றி வணங்கப்படுகின்றன.

இந்த நான்கு வேதங்களும் இத்தல இறைவனை பூசித்த பெருமை உடையது இத்தலம்.

கொன்றை மற்றும் ஊமத்தம் மலர்களால் இத்தல பெருமானைப் பூஜித்து பெரும் பலன்களைப் பெறலாம் என்பது திருஞானசமபந்தர் திருவாக்காகும்.

*தல அருமை:*
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த  சுசீலன் என்ற சிவபக்தன் ஒரு சமயம் தனது மனைவியோடு இப்பதிக்கு வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடினான்.

பழம்பதிநாதரை வணங்கி, சில தினங்கள் இங்கேயே தங்கி இருந்தான். அப்போது பாம்பு கடித்து இருவரும் இறந்து போயினர்.

யம தூதர்கள் அங்கே வந்தபோது நந்தியம் பெருமான் அவர்களுடன் போரிட்டு பிடித்துக் கொண்டு போய், இவர்களை சிவனார்முன் நிறுத்தினார்.

இவர்களுக்கு மோட்சம் அளித்தார் பரமன். யமதூதர்கள் யமனிடம் சென்று நடந்ததை தெரிவிக்க, பிழை செய்தோம் என யமன் தன் தந்தை சூரியனிடம் சென்று விமோசனம் கேட்டார்.

அதற்கு அவர், நீ விருத்தபுரி அடைந்து, வழிபடுமாறு கூறினார். அதன்படி யமன் இங்கு வந்து தீர்த்தங்களில் நீராடி, ஈசனை பூஜித்தான்.

பரமேஸ்வரன் ரிஷபாரூடராய் காட்சி தந்து, 'இத்தலத்திலுள்ளோர் உயிர் உடலைவிட்டு நீங்கும்போது, பத்து நாழிகைக்கு நீ அவ்வுயிரை அணுகக் கூடாது! என இறைவன் ஆணையிட்டார். 

அதுபடியே நடப்பேன் எனப் பணிந்து யமலோகம் திரும்பினான் யமதர்மன்.

யமனைத் தொடர்ந்து, சூரியனும் இந்தத் தலம் அடைந்து, தீர்த்தம் உண்டாக்கி அதில் மூழ்கி, மகாதேவனை பூஜித்து, தான் உருவாக்கிய தீர்த்தத்தில் நீராடுவோர், இகபர சௌபாக்யம் பெற வேண்டும் என வேண்டிப் பெற்றான்.

தென்கோடியை சமன் செய்ய வந்த அகத்தியர் கிழக்கு கடற்கரையோரம் தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, லிங்கம் பிடித்து, ஈசனை பூஜித்து, திருமணக் காட்சியைக் காட்டியருள வேண்டினார். அதன்படியே பழம்பதிநாதர் அங்கே திருக்கல்யாண காட்சியை அகத்தியருக்குக் காட்டியருளினார். 

இதனால் அவ்விடம் திருக்கல்யாணபுரமென்றும், தீர்த்தம் கல்யாண தீர்த்தமென்றும் ஆயின.

பின், அகத்தியர் பழம்பதி வந்தடைந்து, சர்வேஸ்வரனின் திருநடனக் காட்சியை வேண்டினார். பெருமானும் உகந்து, நடனம் புரிந்தருளினார்.

இதனால் இவ்விடம் *''சிவஞானசபை''* என்று போற்றப் பெறுகிறது

*பிரார்த்தனை:*
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு தொட்டில் கட்டும் வழக்கமும், செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால், உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

*நேர்த்திக்கடன்:*
சீமந்தம் செய்யும் போது முதல் வளையலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கம் இவ்வூரில் இருக்கிறது.

இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வரை பிரசவ ஆஸ்பத்திரியே கிடையாது. காளியின் அருளால் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகி விடுவதாக கூறுகிறார்கள்.

*காணிக்கை:*
கேட்டதை கொடுக்கும் சிவபெருமானுக்கு வேஷ்டியும் துண்டும் சிவனுக்கென தனியாக நெய்து காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

*தல மேன்மை:*
தஞ்சையை விட பெரிய ஆவுடையார், எந்த ஊர் லிங்கம் பெரியது எனக்கேட்டால், பெரும்பாலானவர்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) லிங்கம் என்று தான் சொல்வார்கள்.

உண்மையில், தஞ்சாவூர் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனை விட, அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரத்தின் லிங்கமே உயரத்தில் பெரியது.

தஞ்சை கோயில் லிங்கம் பன்னிரண்டரை அடி உயரமும், ஐம்பத்தைந்து அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டவர்.

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் பதின்மூன்றரை அடி உயரமும், அறுபதடி  சுற்றளவும் கொண்டது.

திருப்புனவாசல் கோயிலில் லிங்கம் ஒன்பது அடி உயரமே உடையதென்றாலும், ஆவுடையார் என்பத்திரண்டு அடி சுற்றளவு கொண்டதாக இருக்கிறது.

இது தஞ்சை மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தை விட பெரியது.

இதனால், ஆவுடையாருக்கு வஸ்திரம் அணிவிக்கும் போது, ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஆவுடையாரை சுற்றி வந்து கட்டி விடுவார்.

*காளியைக் கண்டு நடுக்கம்:*
சதுரகள்ளி வனமாக இருந்த இப்பகுதியில் கார்கவ முனிவர் தவம் செய்து வந்தார். அசுரன் ஒருவன் புலிரூபம் எடுத்து இவரைக் கொல்ல முயன்றான். கோபமடைந்த முனிவர் அவனை எப்போதும் புலியாகவே இருக்கும்படி சபித்தார்.

ஒருமுறை பார்வதி மானிட வடிவில் இப்பகுதிக்கு வரும்போது, புலிவடிவில் இருந்த அரக்கன் பார்வதி மீது பாய்ந்தான்.

கோபமடைந்த அம்பாள், காளியாக மாறி புலியை எட்டி உதைத்தாள். தாயின் திருவடி பட்டதோ இல்லையோ அவன் சுயரூபம் பெற்றான். அவனது அசுரகுணங்களும் ஒழிந்து போயின.

அசுரனும், அன்னையே! நான் எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் வரம் தர வேண்டும், என்றான்.

அதன்படி அசுரன் இத்தலத்தில் பெரியநாயகி அம்மனின் எதிரே நந்தி வடிவில் அமர்ந்து விட்டான். எனவே இத்தலத்து நந்தி *வியாக்ர நந்தி* எனப்படுகிறது.

*வியாக்ரம் என்றால் புலி:*
அம்மன் காளியாக மாறியவுடன், பெரியநாயகி சன்னதி எதிரே உள்ள மொட்டைக்கோபுர நுழைவு வாயிலில் ஊர் காவல் தெய்வமாக அமர்ந்து விட்டாள்.

அவள் மிகவும் உக்கிரமாக இருந்ததால், அவள் இருக்கும் நடையை பூட்டி விட்டனர்.

இவளுக்கு உருவம் கிடையாது. ஒரு கண்ணாடியில் காளிக்குரிய சூலத்தை மட்டும் தரிசிக்கலாம்.

*செவ்வாய் தோஷம் போக்கும் தலம்:*
முனிவர் ஒருவரின் சாபத்தினால் அங்காரனாகிய செவ்வாய் பகவான், தனது சக்தியை இழந்தான்.

நாரதரின் அறிவுரைப்படி இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு சக்தி பெற்றான்.

சிவன் வழிபாட்டுக்குரிய முக்கிய மலர்கள் கொன்றை, பிச்சி, பிடவம், முல்லை, புன்னை ஆகியன. இதில் புன்னைமரமே இங்கு தல விருட்சமாக உள்ளது.

காஞ்சிப்பெரியவர் சந்திசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடிக்கடி இக்கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.

*தல பெருமை:*
"ஓம்' என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று.

பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார்.

லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் "பிரம்ம தீர்த்தம்' என்ற பெயர் ஏற்பட்டது.

நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது.

சதுர் என்றால் நான்கு.  இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது. பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டு பாணியையும், பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ஒரு கோயிலை எழுப்பினான்.

சோழர் கோயில்களில், ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் உயரமாகவும் இருக்கும்.

பாண்டியர் கோயில்களில் இதற்கு நேர்மாறாக இருக்கும்.

ஆனால், இங்கு இது கலப்படக் கோயில் என்பதால், ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்டது.
 
*சம்பந்தர் தேவாரம்:* 
பண்: காந்தாரபஞ்சமம்.

1.🔔மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி 
நூலினன் 
பன்னிய நான்மறை பாடியா டிப்பல 
வூர்கள்போய் 
அன்னமன் னந்நடை யாளொ டும்மம 
ரும்மிடம் 
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன 
வாயிலே.

🙏மின்னல் போன்று ஒளிரும் சிவந்த சடைமுடியும், வெண்மையான பிறைச்சந்திரனும், விரிந்த மார்பினில் முப்புரிநூலும் கொண்டு, அடிக்கடி ஓதப்படும் நான்கு வேதங்களையும் பாடியாடிப் பல திருத்தலங்கட்கும் சென்று, அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமானது, புன்னை மலர்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்கும் திருப்புனவாயில் ஆகும். 

2.🔔விண்டவர் தம்புர மூன்றெரித் துவிடை
யேறிப்போய்
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந்
தானிடம் 
கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற்
கானல்வாய்ப்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன
வாயிலே.

🙏பகையசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, இடபவாகனத்தில் ஏறி, வண்டமர்ந்துள்ள கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்து, இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமாவது, தாழையும், புலிநகக் கொன்றையும் தழைத்த கடற்கரைச் சோலையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்த திருப்புனவாயில் ஆகும். 

3.🔔விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற்
பாரிடம்
புடைபட வாடிய வேடத்தா னும்புன
வாயிலில்
தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர்
வெண்மழுப்
படைவல னேந்திய பால்நெய்யா டும்பர
மனன்றே.

🙏இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவனும், வீரமிக்க பூதகணங்கள் சூழ நடனம் செய்யும் கோலத்தை உடையவனுமான சிவபெருமான் திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி, கொன்றை மாலை அணிந்து, ஒளியுடைய மழுப்படையை வலக்கையிலே ஏந்தி, பாலாலும், நெய்யாலும் திருமுழுக்காட்டப்பட்டு அடியவர்கட்கு அருள்புரியும் பரம்பொருள் ஆவான். 

4.🔔சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை
தாழவே
அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ
காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன
வாயிலில்
பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர
மேட்டியே.

🙏திருப்புனவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வெண்சங்கினாலாகிய தோடணிந்த காதுடையவன். தாழ்ந்த நீண்ட சடையுடையவன். உள்ளங்கையில் நெருப்பு ஏந்தியவன். சீறிப் படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்த மார்புடையவன். திருப்புனவாயில் என்னும் திருத்தலத்திலே பசிய கண்களையுடைய வெண்ணிற இடபவாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மேலான பரம்பொருள் ஆவான். 

5.🔔கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக்
கண்டனும்
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன
வாயிலில்
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத
மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை
யூர்தியே.

🙏ஒலிக்கின்ற குளிர்ச்சியான பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் கறுத்த கண்டத்தை உடையவன் சிவபெருமான். புலித்தோலை ஆடையாகவும், பாம்பை அரையில் கச்சாகவும் கட்டியவன். அவன் திருப்புனவாயில் என்னும் தலத்தில், ஒலிக்கின்ற குளிர்ந்த கங்கையோடு, எருக்கு, ஊமத்தம் ஆகிய மலர்களையும், மெலிந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் சடையில் சூடி இடப வாகனத்தில் வீற்றிருந்தருளுகின்றான். 

6.🔔வாருறு மென்முலை மங்கைபா டநட
மாடிப்போய்க்
காருறு கொன்றைவெண் டிங்களா னுங்கனல்
வாயதோர்
போருறு வெண்மழு வேந்தினா னும்புன
வாயிலில்
சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ
லோகனே.

🙏கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவி பாட, அதற்கேற்ப நடனம் ஆடி, கார்காலத்தில் மலர்கின்ற கொன்றைமலரையும், வெண்ணிறத் திங்களையும் சடையிலே சூடி, நெருப்புப் போன்று ஒளிர்கின்ற போர் செய்யப் பயன்படும் வெண்மழுப்படையைக் கையில் ஏந்தித் திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவலோகநாதனாகிய சிவபெருமான் தன் அடியார்கட்குச் சீருறு செல்வம் அருள்வான். 

7.🔔பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங்
காட்டிடைத்
திருத்திள மென்முலைத் தேவிபா டந்நட
மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்புர மூன்றுமெய் துபுன
வாயிலில்
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிடர்
இல்லையே.

🙏சிவபெருமான், பெரிய பாற்கடலைக் கடைந்த போது ஏற்பட்ட நஞ்சை உண்டு மகிழ்ந்தவன். சுடுகாட்டில் இளமென் முலையுடைய உமாதேவி பாட நடனமாடியவன். பகையசுரர்களின் புரம் மூன்றையும் அம்பு எய்து அழித்தவன். திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் தொழுபவர்கட்கு எவ்விதத் துன்பமும் இல்லை. 

8.🔔மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி
ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட
மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின்
மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன
வாயிலே.

🙏செருக்குடைய மனம் உடையவனும், வேல், வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு, அழகும், பெருமையுமுடைய கயிலை மலையால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, அவனுடைய பழம்புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும், ஆடல்களும் நிறைந்து அழகுற விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமான திருப்புனவாயில் ஆகும். 

9.🔔திருவளர் தாமரை மேவினா னும்திகழ்
பாற்கடற்
கருநிற வண்ணனும் காண்பரி யகட
வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல
மல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன
வாயிலே.

🙏அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனும், விளங்கும் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள கருநிறத் திருமாலும் காண்பதற்கரியவன் சிவபெருமான். அவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட ஒலிக்கின்ற சுரிசங்குகளும், சிப்பிகளும் நிறைந்து செல்வம் கொழிக்கும் திருப்புனவாயில் ஆகும். 

10.🔔போதியெ னப்பெய ராயினா ரும்பொறி
யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர்
வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன
வாயிலில்
வேதனை நாடொறு மேத்துவார் மேல்வினை
வீடுமே.

🙏புத்தர்களும், சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற சொற்களைக் கேட்டு உணர்வழிந்து தளர்ச்சி அடைய வேண்டா. பூக்கள் மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த அழகிய குளிர்ந்த திருப்புனவாயிலில் வீற்றிருந்தருளும் வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானை நாள்தோறும் போற்றி வழிபடுபவர்களின் வினையாவும் நீங்கும். 

11.🔔பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன
வாயிலைக்
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற்
காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ்
நன்மையால்
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லார்அருள்
சேர்வரே.

            திருச்சிற்றம்பலம்.

🙏பொன் வளையலணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்புனவாயில் என்னும் தலத்தை வேதாகமங்களைக் கற்றவர்கள் தொழுது போற்றுமாறு கடல் வளமிக்க சீகாழியில் அவதரித்த நற்றமிழ் ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் இறையருளைப் பெறுவர். 

        திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
வைகாசி விசாகம் பதினோரு நாட்களாக திருவிழா நடைபெறுகிறது.

*தொடர்புக்கு:*
91 4371- 239 212
99652 11768

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *ராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்.*

--------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment