உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
_________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல..............)
---------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர் எண்: 266*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்;*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
___________________________________
இத்தலப் பதிவு நீளம் கருதி இரண்டு அல்லது மூன்று நாட்களாக பதியக் கூறியிருந்தோம். இன்று மூன்றாவது நாளாக பதிக்கிறோம். அடியார்கள் முழுபதிவையும் கவணமெடுத்து வாசித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
___________________________________
*🏜ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்:*
திருப்பருப்பதம் ஸ்ரீசைலம் மல்லகார்ச்சுனேசுவரர் திருக்கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஆந்நிர மாநிலத்தில் அமைந்திருக்கின்ற திருக்கோயிலாகும்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர்
மூவராலும் பாடல் பெற்ற இத்தலம், ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.
பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் இத்தமும் ஒன்றாகும்.
*புராணப்பெயர்:*
திருப்பருப்பதம்.
திருக்கோயில்அமைவிடம்.
அருள்மிகு மல்லிகார்ஜுன் திருக்கோயில்.
கர்நூல் மாவட்டம்.
ஆந்திரா மாநிலம்.
திருசைலம்
இந்தியா.
*🌙இறைவர்:*
மல்லிகார்ஜுனர்,
(ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
*💥இறைவி:*பிரமராம்பாள், பருப்பநாயகி.
*🌴தல விருட்சம்:* மருதமரம்.
*🌊தல தீர்த்தம்:* பாலாநதி.
*📔தேவாரம்பாடியவர்கள்:*
அப்பர், சம்பந்தர், சுந்தரர்.
*ஆலயப் பூஜை காலம்:*
திறக்கும் நேரம்:
காலை 5.00 மணி,
மதியம் 3.00 மணி,
மாலை 5.30 மணி
இரவு 10.00 மணி.
காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.
*ஆலயத் தொன்மை:*
புராதனக்கோயில்
*📣குறிப்பு:*
மலையின் கீழேயிருந்து மூன்று மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும்.
அடர்ந்த காட்டுப்பகுதியாக இம்மலை இருப்பதால், தனியார் வாகனங்கள் இரவு 8.00 மணியிலிருந்து காலை 6.00 மணிவரை செல்ல அனுமதி கிடையாது.
அரசு பஸ்கள் மட்டுமே செல்லும். திங்கள், வெள்ளியில் கூட்டம் அதிகமாக அலைமோதுகிறது.
ஸ்ரீசைலத்தை செல்லப் பல வழிகள் உள்ளன. குண்டக்கல், குண்டூர், கர்னூல், மகாநந்தி, விஜயவாடா, ஐதராபாத், அனந்தப்பூர், திருப்பதி முதலிய இடங்களிலிருந்து ஸ்ரீசைலத்திற்குப் போய் செல்ல பேருந்துகள் இருக்கின்றன.
சென்னையிலிருந்து நேரே இத்திருத்தலத்திற்குச் செல்ல பேருந்து வசதி உண்டு. ரயிலில் போக வேண்டுமாயின், சென்னை-விஜயவாடா பிரிவில் வரும் ஓங்கோல் நிலையத்தில் இறங்கி, இங்கிருந்து நூற்றி என்பது கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீசைலத்தை பேருந்துகள் மூலமாக செல்ல முடியும்.
மல்லிகார்ஜூன ஆலயம் மிகப்பெரியது. பல வம்சத்து அரசர்களால் இங்கு பல பாகங்களாக கட்டப்பட்ட இக்கோயிலைச் சுற்றி இருபது அடி உயரம் கொண்ட கனமான மதிலை உடையது.
மைசூர் லிங்காயக் குலத்தைச் சார்ந்த வீரசைவர்களே பரம்பரை பரம்பரையாக பூஜைகளை நடத்துவிக்கின்றனர்.
*மங்களபாக விழா:*
சிவராத்திரி அன்று நூற்றி என்பது மீட்டர் நீளமுள்ள வெண் ஆடையை கீழிருந்து கோபுரம் வரை சென்று நந்திமண்டபத்தையும் பிணைத்து அலங்காரமாகச் சுற்றச் செய்து கொள்கிறார்கள்.
இதற்கு *மங்களபாக* என்று கூறுகிறார்கள். இந்த விழா முடிந்தவுடன் பிரசாதமாக இத்துணியை துண்டுபடுத்தி பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
ஆருத்திரா தரிசனத்திற்கு சிதம்பரத்திற்கும், வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கத்திற்கும், கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்கும் போவதுபோல் சிவராத்திரிக்கு ஸ்ரீசைலம் செல்லுவதைப் பெரும்புண்ணியமாக பக்தர்கள் கருதி இங்கு வருவோரும் உண்டு.
அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய திருத்தலம். இங்கு ஆகாச கங்கையில் குளிக்க தவறாதீர்கள்.
*மேன்மை:*
பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வருகிறோம். இதனால் பல புண்ணியங்கள் நம் கணக்கில் வரவாகிறது.
ஆனால், இங்கு நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பது பரிபூரண உண்மை.
இவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் அமைந்திருப்பது மேலும் மேன்மை.
ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று என்பது எல்லோரும் அறிந்தது.
ஆனால், இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம் என்பது நிறைய பேர்கள் அறிந்திருக்கவில்லை.
சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்கிறோம். அதுபோல, நந்தி அவதரித்த ஸ்ரீசைலத்தை இரண்டாம் இடமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
அத்துடன் அம்மனின் ஐம்பத்தோர் சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக பணமதிப்பில் தானம் செய்வதாலும், கங்கையில் ஏனைய முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் தியானம் செய்தாலும்......, ஏன், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் உறைக்கிறது.
நந்தியே இங்கு மலையாக அமைந்திருக்க அஇதன் மீது அமர்ந்தருளி ஈசன் ஆட்சிபுரிகிறார்.
ஈசன், நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது.
இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி முப்பது படிகளுக்கு மேலே உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.
மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும்.
பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் ஒன்று இங்கு இருக்கிறது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
ஈசன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீதும் சூலம் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசைலம், பக்தி ஞானம் உலகப்பற்றின்மை ஆகியவற்றால் புகழ் பெற்றது.
ஸ்ரீசைலம் வேதாந்திகள், பரமயோகிகள், சித்தி பெற்ற புருஷர்கள், மகாதவசிகள், இருக்கும் தவஸ்தலமே இப்புண்ணிய ஷேத்திரம். இதற்கு தட்சிண கைலாசம் என்ற ஒரு பெயரும் உண்டு.
இத்தல ஈசனை, கிருதாயுகத்தில் இரணியன் பூஜித்தார், திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமர் பூசனை புரிந்தார். துவாபரயுகத்தில் பாண்டவர்கள் பூசித்தனர். கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும், ஆதிசங்கரரும், பூஜைகள் செய்து புண்ணியங்களைப் பெற்ற ஷேத்திரம் இது.
ஈசனைத் தரிசிக்கும் எல்லா ஆலயமும் புண்ணியந்தான்.
ஆனால், இந்த தலத்திற்கு புண்ணியத்திலும் மேலான புண்ணியம் என்றும், இதற்கு ஈடானது எங்கும் என்றும் இல்லையென இதன் புகழ் பரவிக்கிடக்கின்றது.
ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீகிரி, ஸ்ரீசைலம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீபிரம்மராம்பா தேவி பதினெட்டு மஹாசக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறாள்.
சித்தி பெறுபவருக்கும், சாமான்ய பக்தருக்கும் அபூர்வமான அனுபவத்தை இந்த ஷேத்திரம் தருகிறது.
நம் நாட்டு ஆலயங்களில், குளித்து கைகால்கள் கழுவி ஒன்றும் சாப்பிடாமல் கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு எந்த வித நித்திய கர்மங்களையும் நாம் செய்யாமல் மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்கிறார்கள். இதற்கு தூளி தரிசனம் என்கிறார்கள்.
அகத்தூய்மை இலாதாயினும், மனத்தூய்மையுடன் சாதி, மத பேதமின்றி மூலவரான ஜோதிர் லிங்கத்தின் தலையை தொட்டு வணங்குகிறார்கள்.
வெறும் தரிசனத்தினாலேயே எல்லாவிதமான சுகங்களையும் பக்தர்கள் அனுபவிப்பார்கள் என்ற பெயரும் புகழினை பெற்றிருக்கும் இறைவன் ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி ஆவார்.
*வீரசிவாஜி:*
மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக்கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினாராம். படைவீரர்களை தெற்கு நோக்கி யாத்திரை தொடங்க உத்திரவிட்டுவிட்டு, ஸ்ரீ மல்லிகார்ஜுனேசுவரரை பத்து நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டாராம்.
தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்துவிட எண்ணியிருந்திருக்கிறான்.
அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி திவ்யகட்கத்தை (பெரிய வாள்) அளித்து கடமை உணர்வை போதித்து, பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள்.
தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும், தியான மந்திரையும் உருவாக்கி அன்று முதல் பல வெற்றிகள் பெற்று, சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்.
சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து இங்கு தவம் இருந்திருக்கிறார்.
சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர்.
அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார்.
தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, *தந்தையே!* கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன் என்றார்.
தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.
நந்தி தவம் செய்த *நந்தியால்*என்ற இடம் மலையின் கீழே உள்ளது.
இத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.
*சிவசைலத்தில், தொிய வேண்டியவைகளும், காண வேண்டியவைகளும்:*
------------------------------------------------------
*சோமசில:*
ஆக்னேய திசை வழியின் வாசல் இது. நல்லமலை, ஏா்ரமலை, வெலி கொண்டங்களின் சமீபத்திலிருக்கும் பென்னா நதிக்கரையில் கடப்பா, நெல்லூா் மண்டலங்கள் சேரும் இடத்தில் இருக்கும் புண்ணிய ஸ்தலம் இது.
இங்கு மூலவர் சோமேஸ்வரன். இவருடைய தேவியாா் காமாட்சி. இங்குள்ள சிவலிங்கம் மஹாிஷி ஸ்கந்தனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று பிரசித்தமாக வழங்கப்படுகிறது.
*கோஷ்பகிாி:*
இது நைருதி திசை வழி வாசலில் இருக்கிற ஷேத்திரம். இது கடப்பா மண்டலத்தில் பென்னா நதிக் கரையில் இருக்கிறது. இது பிரம்மா விஷ்ணு, மஹேஸ்வரா்களின் ஷேத்திரம் என்பா்.
கலியுக ஆரம்பத்தில் ஜனமே ஜெய மஹாராஜா பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகிறார்கள்.
ஆதிஷேசன், மஹேஸ்வரன், சந்தான மல்லேஸ்வரன், புஷ்பகிாிசன், லட்சுமிதேவி,
ஆகியோருக்கு இங்கு மண்டபங்கள் இருக்கின்றன.
*சங்கமேஸ்வரம்:*
இது சப்த சோமேஸ்வரா்கள் அவதாித்த ஸ்தலம். எல்லா உப நதிகளையும் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணவேணி சாகர சங்கமத்தில் இங்கே சுந்தர கம்பீர ரூபத்தில் இருக்கும்.
கல்மாஷபாதன் பிரதிஷ்டை செய்த ருத்திர லிங்கம், வசிஷ்டா் பிரதிஷ்டை செய்த நரசிம்ம சுவாமி விக்ரகம், கபில மகாிஷி பிரதிஷ்டை செய்த கபிலேஸ்வரலிங்கம், பீமன் பிரதிஷ்டை செய்த பீமேஸ்வரலிங்கம் ஆகியவை இந்த ஷேத்திரத்தில் அமைந்து விளங்குகின்றன.
விசுவாமித்திர விக்கிரகம், சாண்டில்யா் தபோவனம், ஆகியவை பக்தா்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நோ்த்தியாக இருக்கிறது.
*பாதாள கங்கையின் கோபம்:*
ஸ்ரீசைல ஷேத்திரத்தில் புண்ணிய தீர்த்தங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றுள் பாதாள கங்கை மிகவும் முக்கியமானதாகும்.
ஸ்ரீசைலகிாியின் வடகிழக்குத் திசையில் ஆயிரத்து ஐநூறு அடி இறக்கத்தில் ஆரம்பமாகிற கிருஷ்ணா நதியே, இங்கே பாதாள கங்கை என்று பெயா்.
அனந்தபுரத்தில் ஒரு வயோதிக பிராமணப் பண்டிதா் ஒருவர் இருந்தாா்.
பிரம்மச்சாாியாக இருந்த அவா், கஞ்சியிலுள்ள கல்யாணவதி என்ற இளங்கன்னியைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
கிழவரை கல்யாணம் செய்து கொண்ட அந்தப் பெண்ணுக்கு, தன் ஆசை நிராசையாகி விட்டதை நினைத்து மிகவும் வேதனையடைந்தாள்.
இவள் தினமும் காலையில் கங்கா நதிக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது ஒரு நாள் வழியில் ஓா் அழகான வாலிபனைக் கண்டு சபலமுற்றாள்.
அவனோடு சோ்ந்து கூடிவிடவும் மனம் விரும்பியது. எனவே அவனிடம் வழியச் சென்று உரையாடினாள்.
வழியில் ஒரு தோப்பில் இருவரும் கலந்து இன்புற்றுவிட்டனா். பின் கங்கை நதி சென்று குளிக்க இறங்கினாள்.
கங்காநதி, அவளை குளிக்காதே!.... எனத் தடுத்தாள்.
சண்டாள சம்போகம் அடைந்து, கணவனுக்கும் துரோகம் செய்த பாவி நீ!, உன் ஸ்பாிசத்தால் என்னுடைய பாிசுத்தத்தைப் பாழாக்கி விடப் பார்க்கிறாயே!, மீறி குளித்தால் சபித்து விடுவேன். ஜாக்கிரதை! என்று கங்கை சினந்தாள்.
கங்கையின் சீற்றம் கண்டு கதி கலங்கிப் போனாள் கல்யாணவதி. கலங்கிக் கதறி அழுதாள்.
தாயே! என்னை முதுமையாரிடம் ஒப்புவித்ததால், என் இளமையின் காரணமாக, சபலப்பட்டுப் பாவத்தைச் செய்து விட்டேன். அறியாமையால் தவறு செய்து விட்ட என் பாவத்தை நீக்க வேண்டிய நீயே, இப்படி என்னை நிந்தித்து விரட்டி விட்டால், நான் எங்கு செல்வேன்.? என்னை நீ காப்பாற்று தாயே! கங்கா, பவானி!" என்று கண்ணீா் மல்க கெஞ்சினாள்.
குலுங்கிக் குலுங்கி அழுதாள். கங்கா தேவி மனம் இளகினாள். அவளை குளிப்பதற்கு அனுமதி
கொடுத்தாள். கல்யாணவதியும் கங்கையில் குளித்து பாவவிமோசனம் அடைந்து புனிதமானாள்.
இதனால் கங்காதேவிக்கு மாசு ஏற்பட்டுவிட்டது. தனக்கு, ஏற்பட்ட மாசினைப் போக்கிக் கொள்வதற்குக் கங்காதேவி, பூலோகத்தில் உள்ள சகல தீா்த்தங்களைத் தேடி சுற்றினாள். எங்குமே அவளுக்குச் சாந்தி கிட்டவில்லை.
ஸ்ரீசைலத்துக்கு வந்து , மலையடிவாரத்தில் தோன்றும் நதியையும் அதனுடைய பாிசுத்தத்தையும் கங்காதேவி பாா்த்தாள்.
ஆகாயமாா்க்கத்திலிருந்து அந்த நதியை நோக்கிக் கீழே இறங்கினாள். இவ்வாறு இறங்கிய கங்கையினுடைய பா்வத தீர பாதாள கங்கையினுடைய நிலா தீா்த்தத்துக்குக் கிருஷ்ணா என்ற பெயர் ஏற்பட்டது. கங்காநதி புனிதவதியானாள்.
கணவனுக்கு துரோகம் செய்தவள் இறங்கிக் குளித்த களங்கத்தை தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டதனால் இந்தப் பாதாள கங்கையின் தண்ணீா் பச்சை நிறமாக இருப்பதும், கிருஷ்ண சபதம் ஏற்படுவதும் நடந்தன என்கிறாா்கள்.
பரம பவானி கங்கா தேவிக்கே புனிதமளித்த திவ்விய தீா்த்தம் பாதாள கங்கை. பச்சை நிறமாக இருப்பதற்கு வேறு ஒரு காரணமும் கூறுகிறார்கள்.
தன்மகள் சந்திரவதியின் அழகில் மயங்கி, அவளை இச்சித்துச் சிவபெருமானால் சபிக்கப்பட்டு, இந்த நதியில் சந்திர குப்தன் பச்சைப் பாறாங்கல்லாக விழுந்து கிடப்பதும் ஒரு காரணம் என்றும் கூறுகிறாா்கள். இதில் எந்த காரணம் உண்மை என்று தெரியா.?
மேற்கு மலைகளில் மஹாபலேஸ்வரம் என்னும் இடத்திலிருந்து. புறப்பட்டுப் பாய்ந்து வருகின்ற துங்கபத்திரை, வேதவதி கட்டி பிரபாநதிகளை தனக்குள் அடக்கிக் கொண்டு, பிரம்மா, விஷ்ணு, ருத்திர கிாிகளைத் தொட்டுக் கொண்டு நடுவில் பாய்ந்து வருகிறது.
இந்த நதியின் தீா்த்தத்தில் இருக்கும் கற்கள் லிங்கரூபத்தில் இருக்கின்றன. யாத்ரீகா்கள்
இந்தப் பாதாள கங்கையில் இறங்கி மூழ்கிக் குளித்தால் பாவவிமோசனமும் முக்தியும் அடைவாா்கள்.
ஸ்ரீசைலத்திலிருந்து பாதாள கங்கைக்குப் படிக்கட்டுகள் இருக்கின்றன.
*எட்டு சிகரங்கள்:*
---------------------------------
*1. வைடூாிய சிகரம்:*
இது திாிபுராந்தகத்தில் உள்ளது. இது அஷ்ட வசுக்களுக்கு இஷ்டமானது.
*2.மாணிக்க சிகரம்:*
உமா மகேஸ்வரத்தில் இருக்கிறது. இது மகேஸ்வரனின் ருத்ர கணங்களுக்கு ஷேத்திரமாக உள்ளது.
*3.பிரவாள சிகரம்:*
புஷ்பகிாியில் இருக்கிறது. ரம்பா, ஊா்வசி, மேனகா, குருதாச்சி, திலோத்தனம்களின் இடமாக இந்த ஷேத்திரம் உள்ளது.
*4.பிரம்ம சிகரம்:*
இது அலம்புராமில் இருக்கிறது. இது பிரம்மா சரஸ்வதிகளின் ஷேத்திரமாகும்.
*5.ரெளப்ய சிகரம்:*
இதி சோமேஸ்வரத்தில் இருக்கிறது. குமாரசுவாமி தம் பிரதம கணங்களோடு இங்கே வசிக்கிறாா்.
*6.ஹேம சிகரம்:*
இது உமா மகேஸ்வரத்தில் இருக்கிறது. பாா்வதி பரமேஸ்வரா்களுக்குப் பந்துமித்தி்ர சபாி வார ஷேத்திரம் இது.
*7.மரகத சிகரம்:*
இது அஹோபிலத்தில் உள்ளது. இது ஸ்ரீஹாி லட்சுமி தேவிகள் வசிக்கும் ஸ்தலம் இது.
*8.வஜ்ர சிகரம்:*
இது நந்தி மண்டலத்தில் இருக்கிறது. இது நந்தீஸ்வரனின் ஷேத்திரம்.
*நவநந்திகள் ஒன்பது:*
1.பத்ம நந்தி,
2.நாக நந்தி,
3.விநாயக நந்தி,
4.கருட நந்தி,
5.சிவ நந்தி,
6.விஷ்ணு நந்தி,
7.சோம நந்தி,
8.மகா நந்தி,
9.சூாிய நந்தி, எனும் இந்த நவ நந்திகள் நந்தியாலாவில் இருக்கின்றன.
சிலாதனின் மகனான நந்தன் தவம் புாிந்து, சிவபெருமானுக்கு வாகனமாக ஸ்வீகாிக்கப்பட்ட இந்த இடத்தை நந்தி மண்டலம் என்கிறாா்கள்.
இங்கே நந்திகேஸ்வரன் மகா நந்தி என்ற பெயரோடு அவதாித்தாா்.
நந்தியாலாவுக்குப் பத்து மைல் தூரத்தில் இந்த நவ நந்திகள் இருக்கின்றன.
இந்த நவநந்திகளை தாிசித்து, பிரதட்சனை செய்து பூஜை புாிகின்றவா்களுக்கு, நூற்றுக்கு மேற்பட்ட அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் சித்திக்கும் என்கிறாா்கள்.
ஆயிரம் ஆண்டு காலம் பூஜைகள் செய்தால் எவ்வளவு புண்ணியம் வாய்க்குமோ அவ்வளவு புண்ணியம் வாய்க்குமாம்.
சங்கரகிங்கரனான நந்திகேசனை ஆராதித்து சிவனைப் பூஜித்தவா்களுக்கே பரமேஸ்வரன் சுலபமாகப் பிரசன்னமாவான். நந்திகேசனைப் பூஜிக்காது விட்டால், சிவபூஜையே பலனின்றிப் போகும். இது நந்திகேசனுக்கு அளித்திருக்கும் வரமாகும்.
நந்திகேசனைப் பூஜிக்காமல் தம்மை மட்டும் பூஜுப்பவா்களுக்கு பலன் ஏற்படாது என்பது சிவன் நந்திக்கு கொடுத்த வரமாகும்.
யுகாந்த காலத்தில் உலகமெல்லாம் நசிந்து போனாலும் நந்தி மண்டலம் மட்டும் ஷேமமாகவே இருக்கும். அவ்வளவு பெருமைக்குாிய ஷேத்திரம் இது.
யாத்ரீகர்கள் செல்லும் யாவரும், இந்த மகாநந்தியையும், நந்தி மண்டலங்களில் உள்ள மற்ற நந்திகளையும் நிச்சயமாகத் தாிசித்துப் பலன் அடையவேண்டும் என்று என் அவா. சிவ சிவ.
*சம்பந்தர் தேவாரம்:*
பண்: வியாழக்குறிஞ்சி.
1.🔔சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை யேறல னெருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.
🔔மிக்க ஒளியைத் தரும் மாணிக்க மணியை உமிழும் பாம்பை இடையில் பொருந்தக் கட்டியவனும், இரு புறங்களிலும் மணிகள் தொங்கவிடப்பட்ட அழகிய யானையை ஊர்தியாகக் கொண்டு அதன்மிசை ஏறாது ஆனேற்றில் ஏறி வருபவனும், நஞ்சணிந்த மிடறு டையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நீண்ட சிகரங்களை உடையதும் ஆங்காங்கே தோன்றும் மணிகள் உமிழ்கின்ற ஒளியினை உடையதுமான திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.
2.🔔நோய்புல்கு தோறிரைய நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லா நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.
🙏அறியாமையுள் மூழ்கித் திளைக்கும் நெஞ்சே! நீ போக நுகர்ச்சிக்குரிய இவ்வுடம்பில் இளமை முதல் மாறிவரும் தோற்ற மெல்லாவற்றையும், நோய்கள் தழுவும் தோல் சுருங்கி நரை தோன்றும் நிலையையும், நினைந்து சிந்திப்பாயாக. மூப்பு வருமுன் வாய் நிறைந்த தோத்திரங்களைப் பாடி, வலம் வந்து, தலையால் வணங்கிப் பாயும் புலியின் தோலை உடுத்த பெருமான் எழுந்தருளிய திருப்பருப் பதத்தைப் பரவுவோம்; வருக.
3.🔔துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாத லிரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான் பருப்பதம்பரவுதுமே.
🙏நெஞ்சே! வருத்தத்தைத் தரும் பிறவித் துயர்தீரத் தோன்றிய நீ, நல்வினைகள் செய்து அப்புண்ணியத்தால் தேவர் உலக இன்பங்களை நுகர்தல், வீடு பேறாகிய விழுமிய பயனை எய்துதல் ஆகிய இரண்டிலும் பற்றுக்கொள்ளாதே. கரிய குரங்குகள் கனி நிறைந்த மரத்தில் ஏறி அதனை விடுத்து மூங்கில் மரங்களில் தாவி உகளும், குளிர்ந்த ஒளியோடு கூடிய பிறைமதியைச் சூடிய சிவபெரு மானின் திருப்பருப்பதத்தை வணங்குவோம்; வருக. மனிதமனம் ஒன்றை விட்டு ஒன்று பற்றும் நிலையை இப்பாடலின் வருணனை தெரிவிக்கிறது.
4.🔔கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
எங்கணோ யகலநின்றா னெனவரு ளீசனிடம்
ஐங்கணை வரிசிலையா னநங்கனை யழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.
🙏தேன் நிறைந்ததாய் மணம் கமழும் கொன்றை மலர்மாலையைச் சூடியவன், குளிர்ந்த சடைமுடியை உடையவன், எங்கள் துன்பங்களைப் போக்க எழுந்தருளியவன் என்று அடியவர் போற்ற அவர்கட்கு அருள்புரியும் ஈசனது இடம், ஐவகை மலர்களையும் வரிந்த கரும்புவில்லையும் உடைய மன்மதனின் அழகினை அழித்து அவனை எரித்துப் பசிய கண்களை உடைய வெள்ளேற்றை உடையவனாய் அப்பெருமான் எழுந்தருளிய பதிதிருப்பருப்பதம். அதனைப் பரவுவோம்.
5.🔔துறைபல சுனைமூழ்கித்தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலுந் தேனின மொலியோவாப்
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.
🙏கிளிகள் சிறகுகளால் எழுப்பும் ஓசையோடு வாயால் எழுப்பும் மெல்லிய அழைப்பொலியும், வண்டுகளின் ஒலியும் நீங்காததாய்ப் பறைபோல ஒலிக்கும் அருவிகளை உடையதாய் விளங்குவதும், தேவர்கள் துறைகள் பலவற்றை உடைய சுனைகளில் மூழ்கித் தூய மலர்களைச் சுமந்து விரைந்து வந்து வேத கீதங்களைத் தம் வாய்மொழியாக ஓதி மகிழ்வோடு வழிபடுமாறு சிவபெருமான் விளங்குவதுமாகிய திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.
6.🔔சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவாப் பருப்பதம் பரவுதுமே.
🙏அழகிய மடநெஞ்சே! பெருமை மிக்க சிறப்புக்கள் அகலாததாய் நாம் மேற்கொள்ளத்தக்க தவநெறியை நீ பின்பற்ற விரும்புவாயாயின், வேண்டுமா வேண்டாவா என இரண்டுபட எண்ணாமல் உறுதியாக ஒன்றை நினைந்து நெறியின் பயனாய் விளங்கும், கார்காலத்தே மலரும் மணம் மிக்க கொன்றை மலர்மாலை சூடியவனாய் எழுந்தருளியுள்ள அக்கடவுளது இடமாய் உலகிற் புகழ்மிக்க தலமாய் விளங்கும் திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.
7.🔔புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.
🙏ஓடைகளின் புறத்தே நிறைந்து வளர்ந்த விரிந்த தாமரை மலர்கள் அந்தணர் வேட்கும் யாகப் புகையோடு மணம் கமழுமாறு தொடுக்கப் பெற்ற நறுமாலை திருமுடியின்மேல் விளங்க, விடைக் கொடியைக் கையில் ஏந்தி, மேனியில் திருவெண்ணீறு அணிந்து மழுப்படை ஏந்தியவனாய் விளங்கும் சிவபெருமானது பருப்பதத்தை நாம் பரவுவோம்.
8.🔔நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தே னவலம்வந் தடையாமைக்
கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.
🙏நினைப்பு என்னும் ஆழமான கிணற்றின் அருகில் இடையறாது நின்று சோர்வுபடாமல், மனம் என்னும் கயிற்றைப் பற்றி இழுத்து, எண்ணங்கள் ஈடேறாமல் அயர்வுற்றேன். ஆதலின் இதனைக் கூறுகின்றேன். துன்பங்கள் நம்மை அடையாவண்ணம் காத்துக் கொள்ளுவதற்கு இதுவே வழி. ஆரவாரித்து எழுந்த பரந்துபட்ட வெள்ளமாக வந்த கங்கை நீரைத் தனது மணம் கமழும் சடையிலே தாங்கி மறையச் செய்தவன் ஆகிய சிவபிரானது பனைமரம் போல உருண்டு திரண்டு ஒழுகும் அருவி நீரை உடைய திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.
9.🔔மருவிய வல்வினைநோ யவலம்வந் தடையாமல்
திருவுரு வமர்ந்தானுந் திசைமுக முடையானும்
இருவரு மறியாமை யெழுந்ததோரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.
🙏பலபிறவிகள் காரணமாக நம்மைத் தொடரும் வலிய வினைகளின் பயனாகிய துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் இருக்கத் திருமகளைத் தன் மார்பில் கொண்ட திருமால், நான் முகன் ஆகிய இருவரும் அறியமுடியாதவாறு எழுந்த எரியின் நடுவே பெரிய மலையாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.
10.🔔சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.
🙏அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை விரும்பியவராய் மயங்கியோர் சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர். அவ்வாறு சென்றவர் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் சென்று பரவுவோம்.
11.🔔வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாட லிசைமுரல் பருப்பதத்தை
நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தனல்ல
ஒண்சொலி னிவைமாலை யுருவெணத் தவமாமே.
திருச்சிற்றம்பலம்.
🙏வெண்ணெல், செந்நெல் ஆகிய இருவகை நெற் பயிர்களும் விளைவுதரும் வயல்களையுடையதும் விழாக்களின் ஆரவாரம் மிகுந்து தோன்றுவதுமாகிய கழுமலத்தில் அவதரித்தவனாய்ப் பண்ணோடு பொருந்திய பாடல்கள் பலவற்றால் இசைபாடி இறை வனைப் பரவிவரும் ஞானசம்பந்தன், திருப்பருப்பதத்தை நல்ல சொற்கள் அமைந்த பாடலால் பாடிய ஒளி பொருந்திய இத்திருப்பதிகப் பாமாலையைப் பலகாலும் எண்ணிப்பரவ, அதுவே தவமாகிப் பயன்தரும்.
திருச்சிற்றம்பலம்.
இத்துடன் மல்லிகார்ஜுனர் திருக்கோயில் தல அருமைகள் பெருமைகள் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.
*தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நாளைய தலப்பதிவு திருக்காளத்தியப்பர் திருக்கோயில், திருகாளஹஸ்தி.*
---------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment