Tuesday, April 3, 2018

Madurai collector & madurai meenakshi

அதிசயம் ஆனால் உண்மை ! ஜே.கே. சிவன்

எல்லோரும் மதுரை மீனாட்சி ஆலய மண்டப தீ விபத்தைபற்றி பேசும் நேரம் இது.

மதுரை மீனாட்சி தூங்கா நகரத்தின் தாய். எண்ணற்ற ஹிந்து பக்தர்கள் தரிசித்து மகிழும் அன்னை பராசக்தி.
அவள் சாதாரணமானவளா? ஹிந்துக்களுக்கு மட்டும் அருள்பவளா? இல்லை என்கிறது சரித்திர நிகழ்ச்சி ஒன்று. நிஜமாக நடந்த ஒரு சம்பவம். சொல்கிறேன் கேளுங்கள்.

கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பனி, வெள்ளைக்காரன் ஆட்சியை நமது நாட்டில் நிறுவும் முன்பு மதுரைக்கு கலெக்டராக இருந்தவர் ரோஸ் பீட்டர் என்பவர். (1812 முதல் 1828 வரை). எல்லா வெள்ளைக்காரர்களை போலவே அவருக்கும் ஒரு ஆச்சர்யம். எதற்கு இந்த ஹிந்து மக்கள் கல் சிலையான மீனாட்சியை இப்படி விழுந்து விழுந்து வழிபடுகிறார்கள்!? அவளிடம் அப்படி என்ன சக்தி இருக்கிறது?

அவரால் கோவிலுக்குள் சென்று அவளை தரிசிக்கவோ காணவோ அப்போதெல்லாம் இயலாது. ஹிந்துக்கள் அல்லாதார் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. பிற மதத்தினரும் இதை மதித்தார்கள்.

கலெக்டர் மாளிகைக்கு எதிரில் தான் அம்பாள் ஆலயம். கிருத்துவராக இருந்தும் ரோஸ் பீட்டருக்கு நாளாக நாளாக மதுரை மீனாட்சி மீது ஒரு தனி மதிப்பு மரியாதை வளர்ந்தது. ஏதோ ஒரு சக்தி அவளிடம் இருப்பதால் தானே இத்தனை ஆயிரம் மக்கள் எங்கிருந்தோ வந்து அவளை வழிபடுகிறார்கள் ! அவள் உருவப்படம் வைத்திருந்தார். மதுரை மீனாட்சி ஆலயம் அவர் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. குதிரையின் மீது பிரயாணம் செய்தவாறு கோவிலைச் சுற்றி வருவார். ஆலய நிர்வாகம் ஒழுங்காக நடப்பதில் தனி ஈடுபாடு கவனம் செலுத்தினார்.

மழைக்கால சமயம் ஒருமுறை இரவில் வெகுநேரம் பெரும் மழை இடி இடித்து ஜோ என்று வானமே பிளந்தது போல் விடாமல் பொழிந்தது. மதுரை கொஞ்சம் கொஞ்சமாக நீரில் நிரம்பி வாடிய நேரம். மழையோ விடவில்லை. கலெக்டர் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென்று தூக்கம் கலைந்தது. யாரோ அவரை எழுப்பி கையைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டுபோவது போல் ஒரு கனவா, நினைவா. ரோபோ போல பீட்டர் ரோஸ் வெளியே நடந்தார். யார் அந்த பெண். மூன்று வயது இருக்கும் போல் இருக்கிறதே. எதற்கு என்னை எழுப்பி வெளியே கொண்டு செல்கிறாள். காரிருளில் கொட்டும் மழையில் பேசாமல் அவள் பின்னால் வெளியே நடந்தார் பீட்டர் ரோஸ்.

வெளியே காவலில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யம் . கவலை. எதற்கு கலெக்டர் தனியே இரவில் எழுந்து வெளியே நடக்கிறார். அரைத்தூக்கம் போல் இருக்கிறதே அவரைப்பார்த்தால்.

அவர் தனது அறையை விட்டு மாளிகையிலிருந்து வெளியே வந்த சமயம் பார்த்து காரிருளில் பளீர் பளீர் என்று கண்ணைப் பறிக்கும் மின்னல் கீற்றுகளை தொடர்ந்து எதிர்பாராதபடி காதைப் பொடிபட வைக்கும் இடி சப்தம். அவர் வசித்த ;பழைய மாளிகை, அதுவும் அவர் படுத்திருந்த அறை மீது பெரும் இடி விழுந்து நொறுங்கி விழுந்தது. அப்போதுதான் கலெக்டருக்கு சுய நினைவு வந்தது. உடல் நடுங்கியது. அந்த குளிர் இரவிலும் உடல் வியர்த்தது. பேச்சு வரவில்லை.திரும்பிப் பார்த்தார். தனது மாளிகை இடிந்து விழுந்திருந்தது. எங்கே அந்த பெண்? அழகிய அந்த பெண் யார்? அவர் பார்த்தபொழுது அவள் காலிலே ஒன்றும் அணியவில்லை. நேராக கோவிலை நோக்கி உள்ளே ஓடினாள். மூடியிருந்த கோவில் கதவுக்குள் எப்படி நுழைந்தாள்? எங்குமே தேடியும் அவளைக் காணோம். நிசப்த நள்ளிரவில் எங்கே ஒரு சிறு பெண் ஓடி கண்ணெதிரே மறையமுடியும்? ஹிந்துக்கள் கோவிலில் காலணி அணிந்துகொண்டு உள்ளே செல்ல மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியுமே''

ஏதோ பிரமையில் இருந்த கலெக்டர் இன்னும் சுதாரித்துக் கொள்ளவில்லை. அதிசயமாக தானாகவே இருளில் அறையில் இருந்து வெளியே வந்து உயிர் தப்பிய அவரை எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள். என்ன நடந்தது?

''அழகான ஒரு சிறு பெண். மூன்று நான்கு வயது ஆனவள் போல் இருந்தால். சிரித்த முகம். ஆஹா என்ன அழகு. கண்ணைப்பறிக்கும் ஆபரணங்கள் பளிச்சென்று அணிந்தவள். பாசமாக என்னை பார்த்தவள் ''பீட்டர் எழுந்திரு உடனே. என்று என்னை தூக்கத்திலிருந்து உலுக்கி எழுப்பி வா என் பின்னே'' என்று என் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள் . பலமுறை யோசித்தேன். அவள் வேறு யாராகவும் இருக்க முடியாது. நிச்சயம் மதுரை அம்பிகை மீனாட்சி தான்.

நான் படத்தில் பார்த்தது போலவே இருந்தது அவள் முகம். ஒன்றும் தோன்றாமல் ஏதோ ஒரு சக்தி என்னை ஈர்க்க நானும் அந்த பெண் உருவத்தின் பின் தூக்கம் கலைந்து சென்றேன்'' என்றார். அவர் மீனாட்சி அம்மன் படத்தை பல முறை பார்த்து வியந்தவர் அல்லவா. ஆம் அந்த பெண் என் மனதில் எப்போதும் இருந்த மதுரை கடவுள் மீனாட்சிதான் என்று கூறினார். இந்த அதிசய சம்பவம் உண்மை. மதுரை ஆலய சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது.

மழை நின்றது. மறுபடியும் மதுரை பழைய நிலைக்கு தயாரானது. பீட்டர் ரோஸ் மனதில் ஒரு எண்ணம். தன்னைக் கைபிடித்து வெளியே இழுத்து, நொறுங்கிய பழைய மாளிகை சிதிலத்தில் இருந்து உயிர் காப்பாற்றிய அம்பிகைக்கு ஏதாவது ஒரு காணிக்கை செய்ய வேண்டும்.

கோவில் நிர்வாகத்தினரை அழைத்தார். ''உங்கள் மீனாட்சி அம்பாளுக்கு எந்த நகை ஆபணம் இல்லையோ, தேவையோ, அதை என்னிடம் சொல்லுங்கள். நான் உடைந்த அதை செய்து என் காணிக்கையாக அளிக்க விரும்புகிறேன்';'

''அம்பாள் மீனாக்ஷி சர்வாலங்கார சர்வாபரண பூஷிதை. எல்லாமே இருக்கிறது, எதுவும் வேண்டாம்''

''இல்லை ஏதாவது ஒன்று நான் செய்து தந்தே ஆக வேண்டும். நீங்களும் அதை அவளுக்காக பெற்றுக்கொள்ள வேண்டும் . அது எது என்ன என்று நீங்கள் கலந்து ஆலோசித்து உடனே சொல்லுங்கள். இது என் அன்புக்கட்டளை.''

யோசித்த ஆலய நிர்வாகிகள் ''கலெக்டர் அவர்களே, எங்கள் மீனாக்ஷி அம்பிகைக்கு ஒரு காலணி ஜோடி செய்து தாருங்கள்''
என்றனர்.

''மிக்க மகிழ்ச்சி, ஆஹா நானும் அதையே தான் நினைத்தேன். அந்த பெண் அன்றிறவு காலில் எதுவும் அணியாமல் ஓடினாள். உடனே ஏற்பாடு செயகிறேன் என்ற கலெக்டர் பீட்டர் ரோஸ், தங்கத்தால் இரண்டு கொலுசு காலணி செய்தார். அதில் 412 பவளங்களும், 72 மரகதக் கற்கள் – 80 வைரக்கற்கள் பொருத்தி – அதில் ""பீட்டர்"" என்று பெயர் பதித்து காணிக்கையாக கொடுத்தார். இந்த கொலுசு காலணி இன்றும் ""சித்திரைத்திருவிழா"" காலத்தில் அம்பாள் மீனாக்ஷிக்கு அணிவிக்கிறார்கள். பீட்டர் ரோஸ் வெள்ளைக்காரர் என்றாலும் மதுரை மக்கள், பக்தர்கள் அவரை பீட்டர் பாண்டியன் என்று தான் அன்போடு அழைத்தார்கள்.

சித்திரை திருவிழாவில் ஐந்தாம் நாள் அம்பாள் குதிரை வாகனத்தில் மதுரை பிரதான வீதி ஊர்வலத்தில் வரும்போது இதை அணிவாள்.

பீட்டர் ரோஸ் மீனாட்சி பக்தர் என்பதில் சந்தேகமே இல்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் வேட்டையாட செல்லும்போது ஒரு காட்டு ய;ஆணை அவரை தாக்கி அவர் தனியே அதனிடம் அகப்பட்டுக்கொண்ட போது ''அம்மா மீனாட்சி என்னை காப்பாற்று'' என்று வேண்ட அவரிடம் இருந்த துப்பாக்கியில் இருந்த ஒரே குண்டால் யானையை படுகாயம் அடையச்செய்து ஓடச் செய்தார்.
உயிர் தப்பினார்.

வேலை காலம் முடிந்து பீட்டர் ரோஸ் மற்றவர்களை போல் இங்கிலாந்து திரும்பவில்லை. ''என்னை இங்கே மதுரையில் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் புதைத்து விடுங்கள். இந்த சர்ச் மெயின் கார்டு சதுக்கத்தில் இன்றும் உள்ளது. அவரது கல்லறை மதுரை மீனாட்சி ஆலயத்தை பார்த்தவாறு தான் இருக்கிறது என்கிறார்கள். உண்மையான பக்திக்கு மதம் என்றும் தடையாக இருந்ததில்லை.

Image may contain: outdoor
No automatic alt text available.
No automatic alt text available.

No comments:

Post a Comment