Monday, April 9, 2018

Kaaleeswar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
---------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல........................ ........)
---------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 253*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*காளீஸ்வரர் திருக்கோயில், திருக்காணப்பேர். (காளையார்கோயில்):*
---------------------------------------------------------
*📣குறிப்பு:*
*இத்தலத்தின் பதிவு நீளம் கருதி இன்றும், மீதிப்பதிவை நாளையும் பதியப்படும். அடியார்கள் இரண்டு நாள் பதிவுகளையும் கவணத்தில் கொள்ளுங்கள்.*
----------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பதினான்கு தலங்களில் இத்தலம் பத்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* சுவர்ணகாளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர்.

*💥இறைவி:* சுவர்ணவல்லி, சௌந்தர நாயகி, மீனாட்சி.

*🌴தல விருட்சம்:* கொக்கு மந்தாரை.

*🌊தல தீர்த்தம்:* கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கை காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கெளரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்.

*📔தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர் -1
சுந்தரர் -1

*🛣இருப்பிடம்:*
திருக்காணப்பேர் எனும் தலத்தை தற்போது காளையார்கோவில் என்று அழைத்து வருகிறார்கள்.

இத்தலம் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் இருபது கி.மி. தொலைவில் இருக்கிறது.

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

*✉அஞ்சல் முகவரி:*
அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோவில்,
காளையார்கோவில்,
சிவகங்கை மாவட்டம்.
PIN - 623 351

*🌸ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்

*🏜கோயில் அமைப்பு:*
இவ்வாலயம் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. இராஜகோபுரம் ஒன்பது நிலைகளைத் தாங்கிக் கொண்டும், மேலும் மற்றொரு கோபுரம் ஐந்து நிலைகளைத் தாங்கியபடியும், ஆக இரண்டு கோபுரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

இவைகளில் சிறிய கோபுரத்தை முதலாம் சுந்தர பாண்டியனாலும், பெரிய இராஜகோபுரத்தை மருது சகோதரர்களாலும் கட்டப்படவை.

இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவில் மூன்று இறைவன் சந்நிதிகளைக் கொண்டு தனித்தனியே அமைந்திருக்கிறது.

மூன்று சந்நிதிகளில் நடுவே இருப்பவர் சுவர்ணகாளீசுவரர். இவரே இத்தலத்தின் தேவாரப் பாடல் பெற்ற மூர்த்தியாவார்.

வலது பக்கத்தில் இருப்பவர் சோமேசுவரர். இடது பக்கத்தில் இருப்பவர் சுந்தரேசர்.

கோவில் செத்துக்கள் யாவும் சுவர்ணகாளீசுவரர் பெயரில் தான் இருக்கின்றன.

விழாக்காலங்களில் சோமேசுவரர் கோவில் மூர்த்திகள் தான் வீதியுலா வருவார்.

படையல் நிவேதனம் முதலியவைகள் சுந்தரேசுவரருக்கு மட்டுமே நடைபெறுகிறது.

சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இறைவன் சந்நிதிகள் மூன்றும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இறைவி சுவர்ணவல்லி சந்நிதி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. மற்ற இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கி அமைந்திருக்கின்றன.

நாம், இவ்வாலய ராஜகோபுரத்துக்கு முன்பாக வந்ததும் *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

இவ்வாயில் வழியாக உள் புகுந்த போது, முதலில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார் ஶ்ரீசோமேஸ்வரர். 

முன் வந்து நின்று ஆனந்தித்து வணங்கி, சோமேஸ்வரரின் திருமேனியழகை கண்டு மகிழ்ந்து, அருளைப் பெற்றுக் கொண்டு நகர்ந்தோம்.

சோமேஸ்வரர் சன்னதிக்குள் நுழைந்த இடத்தின் இடது பக்கத்தில் இந்திரனால் பூஜிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சகஸ்ரலிங்கம் இருப்பதைக் கண்டோம்.

இங்கும் சென்று சிரமேற் கைகளைக் குவித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்திருந்த நந்திகேஸ்வரரைக் கண்டு, வணங்கிக் கொண்டு, ஈசனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

இதனையடுத்து இருந்த கொடிமரத்தைக் கண்டு, இதன் முன்பு நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

இதன் பின்பு, உள்ளே தொடர்ந்து செல்ல, பிரகாத்தில் சூரியன், தட்சிணாமூர்த்தி, சோமாஸ் கந்தர், ஆகியோர்களைக் கண்டு, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து, விநாயகரைப் பார்த்து விட்டோம். விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு திரும்பினோம்.

சுகந்தவனப்பெருமாள்,
விசுவநாதர், லிங்கோத்பவர்,
வீரபத்திரர், சப்தமாதர், கெஜலட்சுமி, ஆகியோர் இருக்க, இவர்கள் ஒவ்வொருவரையும், நெஞ்சுக்கு நேராக குவித்த கரங்களுடன் வணங்கியபடியே நகர்ந்தோம்.

இதற்கடுத்ததாக, சுப்பிரமணியர் சந்நிதிக்கு வந்து நின்று, மனநிம்மதியைத் எப்போதும் தந்தருள்வாய் என வேண்டி வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

வெளியில் வந்ததும், தனி சன்னதியுடன் பிரம்மா இருந்தார். இவரையும் கண்டு கைதொழுது கொண்டோம்.

நடராஜர் சபைக்கு வந்தோம். இவரின் ஆடல் நளினழகு கோலத்தைப் பார்த்ததும் மனதுக்கு இனிமையாக இருந்தது. கண்டு வணங்கி ரசித்தபடியே நின்றிருந்தோம்.

இதற்குமுன் முருகப்பெருமான் சந்நிதியில் வேண்டிக் கொண்ட மனநிம்மதி, இப்போது இங்கேயே கிடைத்து விட்டிருந்தது. 

ஆம்... வீட்டிலிருந்து ஆலயத்துக்குப் புறப்படும் சமயம், வேலையின்மையின் காரணமாய் சற்று மனநிம்மதி இலாது இருந்தோம். அதனால்தான் முருகப்பெருமான் சந்நிதியில் மனநிம்மதிக்காக வேண்டிக் கொண்டிருந்தோம்.

நடராஜப் பெருமானை வணங்கிக் கொண்டிருந்தபோது, மன இறுக்கம் தளர்ந்த மாதிரி இருந்தது. மகிழ்ச்சியுடன் சிரசிற்கு மேல் நம் கரங்கள் உயர்ந்தன ஆடவல்லானை நோக்கியபடி.

நடராஜப் பெருமானின் தரிசித்தபின், சண்டீஸ்வரர் சந்நிதி முன்பு வந்து சேர்ந்தோம்.

வழக்கமாக, இவரை வணங்கும் நெறிமுறையுடன் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்க, இவர்கள் அனைவரையும் ஒவ்வொருத்தராக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

சோமேசர் சன்னதிக்கு வலது பக்கமாக அமைந்திருந்தன சௌந்தரநாயகி அம்மனின் சன்னதி. மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்று வெளிவந்தோம்.

கருவறை மண்டப திருச்சுவரினை, இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்திகள் ஆக்கிரமித்து ஆரவாரமாக அலங்கரித்ததைக் கண்டு ரசித்தோம், வணங்கினோம்.

அடுத்தாற்போல, சோமேசருக்கும், சௌந்திரநாயகிக்கும் உரிய தனி பள்ளியறை சன்னதியைக் கண்டோம்.

தாளிட்ட கதவின் அருகாக நின்று நெஞ்சுக்குள் ஈசனையும், அம்மையையும் நிறுத்தி வணங்கிப் பின் திரும்பினோம்.

*ஸ்ரீ ஸ்வர்ண காளீஸ்வரர் –ஸ்ரீ சொர்ணவல்லி.*
சோமேஸ்வரருக்கும், சுந்தரேஸ்வரருக்கும் இடையில், அமைந்திருந்தது சொர்ணகாளீஸ்வரர் சந்நிதி அமைந்திருந்தது.

இந்த சுவர்ண காளீஸ்வரர் திருமேனியானவர்,..... உமாதேவிக்கு அருள்பாலிப்பதற்காகவே இறைவன், தானே சுயம்புலிங்கமாக எழுந்தருளியவர் இந்த ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர் ஆவார்.

மாறவர்மன் சுந்தரபாண்டியனால் சொர்ணகாளீஸ்வரருக்கு தொன்னூறு அடி உயரத்தில் ராஜகோபுரத்தைக் கட்டிக் கொடுத்திருந்தான். 

அக்கோபுரத்தை, அன்னாந்து வியந்து நோக்கிப் பார்த்து, சிவ சிவ என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

சௌந்தரநாயகி சன்னதிக்கு அடுத்து அமைந்து இருந்தது சொர்ணகாளீஸ்வரர் சன்னதி.

முன்னிருந்த கொடிமரத்து முன்பாக விழுந்தெழுந்து வணங்கிக் கொண்டோம்.

இதனையடுத்திருந்த நந்தீஸ்வரரையும் வணங்கி ஈசனைக்காணும் அனுமதியும் கேட்டுத் தொடர்ந்தோம்

மேலும் தொடர, உள்ளே அதிகார நந்தியைக் கண்டு சிரமேற் கைகள் உயர்த்தி குவித்து தொழுது கொண்டோம். மேலும் நந்தியாரிடம், ஈசனைத் தொழ உள் புகுவதற்கு விண்ணப்பத்தையும் நந்தியாரிடம் கூறி பெற்றுக் கொண்டோம்.

சுவாமி சந்நிதி வாயிலில், பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருக்க, சில நிமிடங்கள் அதிகமாகவே எடுத்துக் கொண்டோம் ஈசனைத் தரிசிப்பதற்கு.

ஈசனைக் கண்கள் நிறைவான அளவுக்குப் பார்த்து வணங்கினோம்.
அர்ச்சகர் ஏற்றி இறக்கிக் காட்டிய தீபாரதனையைக் கண்டு கைகள் உயர்த்தி குவித்து வணங்கினோம்.

அர்ச்சகர் தீபாரதனை தட்டுடன் வர, இருகைகளாலும் தீபசுடரை ஒற்றியெடுத்து வணங்கிக் கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நம் நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

இதனைத் தொடர்ந்து வல்லப கணபதியார் நால்வர் பெருமான்கள், அறுபத்து மூவர்களும் தொடர்ந்தாற் போல காட்சி தந்த திருமேனிகள் ஒவ்வொன்றையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு தொடர்ந்தோம்.

இதற்கடுத்தும், பைரவர், சப்தமாதர்,
விநாயகர், ஆகியோர்களை
வணங்கி விட்டு நகர.......

தனி சன்னதியில், சந்திரசேகர் இருக்க, வணங்கிவிட்டு நகர்ந்தோம்... திரும்ப
பஞ்சலிங்கங்கள், அஷ்டலட்சுமிகள், தனி சன்னதியிலும், செந்தில் முருகனும், இவர்களைத் தொடர்ந்து வருணனால் பூஜிக்கப்பட்ட வருணலிங்கத்தையும் கண்டு கைதொழுது திரும்பினோம்.

அடுத்திருந்த நடராஜரின் அலங்காரத் தரிசனத்தையும், தூக்கிய திருவடியைக் கண்டு,....அவ்விடத்திலேயே சிறிது நேரம் அமர்ந்து தியாணித்து இருந்தோம்.

நடராஜப் பெருமானின் திருமேனியை திரும்ப ஒரு தடவை வணங்கிக் கொண்டு வெளியே வந்ததும், பைரவர் சந்நிதிக்கு வந்து பவ்யபயத்துடன் வணங்கித் திரும்பினோம்.

இத்துடன் வெளிப்பிரகாரம் முடிவாகின.

உட்பிரகாரத்தில் விநாயகரைக் கண்டு தலையில் குட்டிக் கொண்டு வணங்கி, இதனைத் தொடர்ந்தாற்போல பைரவர் வரை மனம் திருப்தியான அளவுக்கு தரிசனம் கிடைத்ததை என்னிடம் மகிழ்ந்தோம்.

தட்சிணமூர்த்தி தனிச்சிறப்பு வாய்ந்தவர் என அங்கிருந்த குருக்கள் நம்மிடம் கூறினார்.

கருவறை சுவற்றில் பிரம்மா, துர்க்கை, சண்டீஸ்வரர்,
சுப்பிரமணியர் ஆகியோர் காட்சி தந்தனர். நகர்ந்து சென்றபடியே வணங்கிய கரங்கள் நெஞ்சுக்கு நேராகவே இருந்தன.

அடுத்து, சொர்ணவல்லி அம்பாள் சந்நிதிக்கு விரைந்தோம்.

அம்பாள் சொர்ணவல்லி தனி சந்நிதியில் இருந்து அருள்பார்வையை வழங்கிய வண்ணமிருந்தாள். கண்கள் குளிர அம்பாளை தரிசித்து, மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

சுவாமி, அம்பாள் இருவரின் கருவறையும் கருங்கல்லில் மிக நுட்பமான கலை வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. பார்த்து பார்த்து ரசித்து, மனமகிழ்ந்து வணங்கினோம்.

இங்குள்ள பள்ளியறை பொண்ணாலானது. ஊஞ்சல் முழுவதும் பொண்ணால் உருவாக்கப்பட்டது. இந்த பள்ளியறை ஊஞ்சல் தங்கத்தாலும், தந்தத்தாலும் ஆனதாம்.

*ஸ்ரீ சுந்தரேஸ்வரர் – ஸ்ரீ மீனாட்சி அம்மன்:*
இவ்வாலயம் உருவாகக் காரணம்.......

வேட்டைக்கு வந்த வரகுண பாண்டியன் இரவு வந்து விட்டதால், மதுரைக்குத் திரும்ப முடியாமல் தவித்ததால், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அவருக்காக திருக்கானப்பேரில் வந்து காட்சி கொடுத்த அதிசயத்தை நினைவு கூறும் வண்ணம் எழுப்பப்பட்டதுதான் இந்த சுந்தரேஸ்வரர் மீனாட்சி கோயில் ஆகும்.

சொர்ணகாளீஸ்வரர் சன்னதிக்கும், சொர்ணவல்லியம்மை சன்னதிக்கும் இடையில் அமைந்திருந்தன சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருக்கோயில்.

சந்நிதி முன்பாக, மீனாட்சி சந்தரேசரைக் கண்டு நின்றிருந்தோம். ஈசனுக்கு அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது.

நாமும், நெஞ்சுக்கு நேராக கூப்பிய கரங்களுடன், மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிவிட்டு, ஈசனருட் பிரசாதத்துடன் வெளி நகர்ந்தோம்.

அடுத்து, மீனாட்சியிடமும், இறைவனிடம் வேண்டி வணங்கிக் கொண்டதுபோல இந்த மீனாட்சியை வணங்கிக் கொண்டு, மீனாட்சியம்மையின் அருளைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

இங்கு பரிவார தேவதைகள், தனித்தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.

மேலும், நடராஜரும் அருள்பாலித்துக் கொண்டிருக்க ஆனந்தித்து வணங்கிக் கொண்டோம்.

இங்கு, சுவாமி சன்னதி முன் சந்நிதியை நோக்கியவாறு பிரகாரச் சுவரில் வரகுண பாண்டியன் கூப்பிய கரங்களுடன் நிற்கிறார்.  

*சந்திரசேகர மூர்த்தி:*
ஈசனின் சிறப்பு மிகுந்த ஆறு திருமூர்த்தங்கள் திருக்கானப்பேர் சிவாலயத்தில் அமைந்திருக்கின்றன.

இவற்றில் முக்கியமானவர் செய்யுங்கள் ஆவார்.

தக்கனின் இருபத்தேழு பெண்களை சந்திரன் மணந்து கொண்டார்.

ஆனால் அவர்களில் கார்த்திகை, ரோகிணி இருவரிடம் மட்டுமே மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.

இதனால் கோபம் கொண்ட தக்கன், சந்திரன் ஒவ்வொரு கலையாக தேயவும், சயரோகம் பற்றவும் சாபமிட்டார். 

சந்திரன் சிவனை வணங்கியதால், அவரின் கலைகள் மீண்டும் வளர அருளியதோடு அவரது சயரோகத்தையும் ஈசன் நீக்கி அருளினார்.

சந்திரனை தன் திருமுடியில் அலங்கரிக்கும் வண்ணம் அணிந்தும் கொண்டார்.

திருப்பாற்கடலைக் கடையும்போது இலக்குமியுடன் தோன்றிய சந்திரனுக்கு அருள்பாலித்த மூர்த்தமே சந்திரசேகரமூர்த்தம்.

நோய்களால் பீடிக்கப்பட்டு  வருந்துவோர் சந்திரசேகரரை வணங்கினால் நோய் நீங்கி நலம் பெறுவர். 

*தலச் சிறப்பு:*
இத்திருத்தலத்திற்கு பல திருநாமங்கள் உண்டு. 

இடபம் பூஜித்ததால் *இடபபுரி* என்றும்,
காளிபூஜித்ததால்
*காளிபுரி*என்றும்,
மகாகாளன் பூஜித்ததால்
*கணபுரி*என்றும்,
பிரம்மன் பூஜித்ததால்
*பிரம்மபுரி* என்றும்,
குபேரன் பூஜித்து திருப்பணிகள் செய்ததால்
*தென்னளகாபுரி*என்றும்,
ஆதிசேடன் பூஜித்ததால்
*சேடபுரி* என்றும்,
இந்திரனின் ஐராவதம் பூஜித்ததால் *அயிராவதபுரி* என்றும், எல்லவற்றிற்கும் மேலாக
இறைவி உமாதேவியார் இத்திருத்தலத்தில் தேவதாரு மரத்தின்கீழ் சுயமாய் எழுந்தருளியுள்ள காளீஸ்வர மூர்த்தியை பூஜித்தமையால், இத்தலம்
*தேவதாரு வனம்* என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

அகலிகை காரணமாக கௌதம முனிவரால் சாபம் பெற்ற இந்திரன் சிவகங்கையில் மூழ்கி ஆயிரத்தெட்டு சிவலிங்கம் அமைத்து வழிபட்டார்.

அந்த ஆயிரத்தெட்டு லிங்கமே இன்று நமக்கு சகஸ்ரலிங்கமாக காட்சியருள் புரிகிறது.

கருடன் தன் தாயின் வேதனையை போக்க இத்தலத்தில் வழிபட்டார்.

வருணன், திக்குபாலர்,
அகத்தியர், சேரமான் பெருமாள் நாயனார் போன்றோர்கள் இத்திருத்தலத்தில் வழிபட்டு உய்தவர்கள். 

*தீர்த்தச் சிறப்பு:*
திருக்கானப்பேர் ஆலயத்தின் தீர்த்தங்கள் வரலாற்றுச் சிறப்பானவை..

1. *இலக்குமி தீர்த்தம்:*
வாலகில்லியார் சாபத்தால் மானுட உருப்பெற்ற இலக்குமி, இத்தலத்தில்,
தீர்த்தம் உருவாக்கி வழிபட்டு உண்மை உருப் பெற்றதால், இத்தீர்த்தம் இலக்குமி தீர்த்தம் எனப்பெயர்.

2. *சுதர்சன தீர்த்தம்:*
திருமாலின் சுதர்சன சக்கரம் அதன் கூர் மழுங்கியபோது இங்கு வழிபட்டு ஒளிபெற்றதால் உருவான தீர்த்தமே சுதர்சன தீர்த்தம்.

3. *திக்குபாலகர் தீர்த்தம்:*
திக்குபாலகர்கள் வழிபட்டதன் நினைவாக ஏற்படுத்திய தீர்த்தமே திக்குபாலகர் தீர்த்தமாகும்.

4. *உருத்திர தீர்த்தம்:*
ஆயிரம் கோடி உருத்திரர்கள் அன்னையின் சினத்தால் அயிரை மீன்களாகி அடைக்கலம் புகுந்த தீர்த்தம் உருத்திர தீர்த்தம் ஆகும்.

வீரசேன பாண்டியன் குழந்தைப்பேறுக்காக தங்கத்தால் செய்த பொய் குழந்தையை இத்தீர்த்தத்தில் நீராட்ட அது உயிர் பெற்று உண்மைக் குழந்தையான வரலாறு உண்டு. 

மார்கழிப் பவுர்ணமியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் இந்த உருத்திர தீர்த்தத்தில் வந்து கலந்து புண்ணியம் தேடிக் கொள்வதாக ஐதீகம். 

5. *சிவகங்கை தீர்த்தம்:*
தேவதாச பாண்டியன் காசிக்குச் சென்று கங்கை நீர் கொண்டு, இறைவனை நீராட்ட விரும்பினார்.

ஆனால் காளீசரோ சிவகங்கைத் தீர்த்த நீரின் புனிதத்தன்மையை உணர்த்தியதால் அந்நீரால் இறைவனை நீராட்டி மன்னன் மகிழ்ந்து வணங்கினார்.

6. *ஆனைமடு தீர்த்தம்:*
தேவேந்திரனின் வெள்ளை யானை ஐராவதம் தனது கொம்பினால் தோண்டிய தீர்த்தமே ஆனைமடு தீர்த்தம். 

இத்தீர்த்தத்தில் நீர் எடுத்தே திருக்கானப்பேர் மூர்த்திகள் நீராட்டப்படுகின்றனர்.

ஸ்ரீ ராமபிரான் தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க, இந்த தீர்த்தத்தில் நீராடினார்.

சுகரிதனின் சயரோகத்தை நீக்கிய இத்தீர்த்தத்தில் நீராடி தனது பேயுரு நீங்கப் பெற்றார் வேதகன் என்ற அந்தணர்.

இந்த ஆனைமடு தீர்த்தத்தில் நீராடி காளீசரையும், சோமேசரையும் வழிபடும் பக்தர்கள் பிணிகள் நீங்கி நன்மை பெறுகின்றனர்.

திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், கல்லாட தேவர், கபிலதேவர்,பரண தேவர், சேக்கிழார்,
அருணகிரிநாதர்,வள்ளலார் முதலிய அருளாளர்களால் போற்றப்பட்ட புண்ணிய ஸ்தலம் திருக்கானப்பேர் ஆகும்.

*லிங்கச் சிறப்பு:*
சுயமாய் உண்டானது சுயம்பு லிங்கம்.
தேவர்களால் செய்யப்பட்டது திவ்ய லிங்கம்.
தேவ, பிரம்ம ரிஷிகளாலும், யோகிகளாலும் பூஜிக்கப்பட்ட
லிங்கம் ஆர்ஷ லிங்கம்.
மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது மானுட லிங்கம்.

திருக்கானப்பேரில்
1.காளீஸ்வரர் – சுயம்புலிங்கம்.
2.சேமேசலிங்கம்,
சகஸ்ரலிங்கம்,வருணலிங்ம்– திவ்ய லிங்கம்.
3. சுந்தரேஸ்வரர் – மானுட லிங்கம்.
4.அகத்தியர் முதலிய ரிஷிகளும்,யோகிகளும் வழிபட்டதால் சோமேசர் –ஆர்ஷ லிங்கம்.

இந்த நால்வகை லிங்கங்களும் இத்தலத்தில் அமைந்திருக்கிறது தனிப்பெரும் சிறப்பு.

இதனால், மூர்த்தி, தீர்த்தம்,
ஸ்தலம் மூன்றிலும் சிறந்ததும், மூன்று சிவாலயங்கள் அமையப் பெற்றதுமான புண்ணிய ஸ்தலமே திருக்கானப்பேர் என்னும் காளையார் கோயில்.  

இத்தகைய பெருமை வாய்ந்த ஆலயத்தின் கோபுரத்தைக் காக்க, மருது சகோதரர்கள் தங்கள் தன்னுயிரை ஈந்தனர். 

இத்தகைய பெருமைகளை தன்னகத்தே கொண்ட திருக்கானப்பேர் காளையார் கோயிலுக்கு ஒரு சென்று தரிசித்து பல பேறுகளை பெறுவர்.      

*தல அருமை:*
சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டாள்.

பின் காளி தனது கரிய உருவமும், அசுரனைக் கொன்ற பாவமும் நீங்கப்பெற்று சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் திருக்கானப்பேர் என்ற் காளையார்கோவில்.

*ஐராவதம் வழிபட்டது:*
இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது.

இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டது. தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கி தேவலோகம் சென்றது.

யானை உண்டாக்கிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு யானை மடு (கஜபுஷ்கரணி) என்று பெயர்.

இத்தீர்த்தம் என்றும் வற்றாத நிலையில் இருக்கிறது. சதுர வடிவில் உள்ள இந்த தீர்த்தக்குளத்தின் நடுவில் அழகான நீராழி மண்டபம் அமைந்துள்ளது.

இராமபிரான் ராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது.

இந்த கஜபுஷ்கரணி தீர்த்தம் கோயிலுக்கு வெளியே கோபுரங்களுக்கு எதிரிலுள்ளது.

இத்தலத்திலுள்ள சிவகங்கை தீர்த்தம் காளி தனது வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும்.

மேலும் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் முதலிய தீர்த்தங்களும் உள்ளன.

தலவிருட்சமாக கொக்குமந்தாரை விளங்குகிறது.

இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி என்று தலபுராணம் கூறுகிறது.

இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும்.

இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க பல சிவாலயங்களை தரிசித்து வந்தபோது இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான்.

இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது மற்றொரு சிறப்பம்சம்.

இத்தலத்திலுள்ள பெரிய இராஜகோபுரத்தைப் பற்றி ஒரு வரலாறு உண்டு. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும் மருதுபாண்டிய சகோதரர்களுக்கும் மூண்ட போரில் தப்பித்த மருது சகோதரர்கள் காட்டில் ஒளிந்து இருந்தனர்.

மருதுபாண்டிய சகோதரர்களைக் கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர், அவர்கள் வந்து சரணடையாவிட்டால் இந்த பெரிய கோபுரத்தை இடித்துவிடப் போவதாகப் பறை சாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து கோபுரத்தைக் காக்க விரும்பி தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, பின்னர் வெள்ளையரால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்றனர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியல் தலத்திற்கு வந்தார்.

அங்கு இறைவனை வழிபட்டுவிட்டு இரவு தங்கினார். இரவில் அவர் கனவில் காளை வடிவம் தாங்கிக் கையில் பொற்செண்டு பிடித்துத் கொண்டு திருமுடியில் சுழியும் அணிந்து காட்சி தந்த இறைவன் "யாம் இருப்பது கானப்பேர்" எனக்கூறி மறைந்தார்.

கண் விழித்த சுந்தரர், சேரர் பெருமானுடன் இத்தலத்திற்கு வந்து பணிந்து பதிகம் பாடிப் பரவினார். கானப்பேர் திருத்தலத்தில் காளை வடிவில் குடியிருக்கும் இறைவனே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.

           திருச்சிற்றம்பலம்.

இத்தல பதிவு நீளம் கருதி, மீதி நாளை பதியப்படும். (நாளை அரிய பல செய்திகளுடன்.)

---------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment