Tuesday, April 10, 2018

Avinasiappar temple, Avinasi

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
__________________________________
*📣 இத்தலத்தின் பதிவு நீளம் கருதி, இன்றும் நாளையும் தொடர்ந்து வரும். அடியார்கள் இரு நாட்களின் பதிவுகளை இணைத்து வாசிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.*
__________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........................)
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர் எண்: 263*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்புக்கொளியூர் ( அவிநாசி ):*
_________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஆறாவதாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* அவிநாசியப்பர்.

*💥இறைவி:* கருணாம்பிகை.

*🌴தல விருட்சம்:* பஞ்ச வில்வம், (இடைப்பட்ட காலத்தில் மாமரம். தற்போதும் இம்மாமரம் இல்லை.)

*🌊தல தீர்த்தம்:* 
(இத்திருத்தலத்தில் பல தீர்த்தங்கள் இருந்ததென புராண நூல் கூறுகிறது.)
தற்போது முக்கியமாக நான்கு தீர்த்தங்களே உள்ளன.

நாககண்ணிகை தீர்த்தம், திருக்குளம், திருநள்ளாறு, காசிக் கங்கை.

*🔥ஆகமம்:*

*📔தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர் -1

*🛣இருப்பிடம்:*
கோயமுத்தூரிலிருந்து சுமார் நாற்பத்தி மூன்று கி.மி. தொலைவிலும், திருப்பூரிலிருந்து சுமார் பதினான்கு கி.மீ. தொலைவிலும்,  அவிநாசி தலம் உள்ளது.

அருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் எட்டு கி.மி. கோயமுத்தூர் - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.

*✉அஞ்சல் முகவரி:*
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில்,
அவிநாசி அஞ்சல்,
அவிநாசி வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.
PIN - 641 654

*☘ஆலயப் பூஜை காலம்:*
தினமும், காலை 6.00 மணி முதல் பகல் 1.00  மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

*☎ஆலயத் தொடர்புக்கு:*
04296 273113

*கோயில் அமைப்பு:*
தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் *திருப்புக்கொளியூர்* என்று வழங்கப்பட்ட இந்த தலத்தை தற்போது அவிநாசி என அழைக்கப்படுகிறது.

இக்கோவில் சுமார் ஒன்றரை  ஏக்கர் பரப்பளவுடன் கிழக்கு திசையில் ஏழு நிலை ராஜ கோபுரத்தைக் கண்டதும், *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன. ராஜகோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கனபதியின் சிற்பங்கள் இருந்தன.

வல, இட, என இருபுற விநாயகரையும் பார்த்து காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம்.

உள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் இருந்தன. பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது.

மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தோம். மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருந்தது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருளாசி வழங்கிய வண்ணமிருந்தார்.

ஈசனைக் கண்டு மனமுருக ஆனந்தித்தும் பிரார்த்தித்தும் வணங்கிக் கொண்டோம். ஈசனுக்கு ஏற்றிரக்கி ஆராதித்த தீபாராதனையை ஒற்றியெடுத்து வணங்கிக் கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

மூலவர் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் இருந்த, முருகன் சந்நிதிக்குச் சென்று, மனமினிக்க வணங்கித் தொழுதோம்.

இதனின், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதி அமையப் பெற்றிருந்தது.
அம்மையாரைக் கண்டு கண்கள் கலங்கி நின்று வணங்கி துதித்தோம்.

இதனையடுத்து, மேலும் உள் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சிற்பங்கள் வரிசையாக இருந்தன. நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் வணங்கியபடியே நகர்ந்தோம்.

அடுத்து, ஸ்ரீகாலபைரவர் சந்நிதிக்கு வந்து வணங்கிக் கொண்டோம். இத்தலத்தில் சிறப்பிற்குரியவர் இவர்.

அடுத்து, நடராஜர் சபைக்கு வந்தோம். தூக்கிய திருவடியைக் கண்டு மெய்மறந்த நிலையில் வணங்கியபடியே நின்றிருந்தோம்.

பொன்னார் மேனியின் ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனியாக அருளழகு பொதிந்து காட்சியாய் நின்றார்.

மனம் கவர்ந்த பெருமானை, சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.

அடுத்து, இறைவி கருணாம்பிகை சந்நிதி, மூலவர் அவிநாசியப்பர் சந்நிதிக்கு வலதுபுறமாக அமைந்திருந்தது.

அம்மையும், அழகருள் பரவ இனிய திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு, கருணாம்பிகை காட்சி தந்தாள்.

இங்கேயும் ஈசனைக் கண்டு வணங்கிக் கொண்டது போல, அம்மையையும் வணங்கி விட்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டு
இருந்தது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

இப்படி வழிபட்டால், விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாமாம். விஷ ஜந்துக்களால் வருகிற கனவு, பயம் ஆகியவற்றில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கையின் வழிபாடுதான் இது.

*திருப்புகழ் தலம்:*
அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோவிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும், அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் இருக்கின்றன.

உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் அருள்கிறார்.

குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் இருக்கிறது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இவ்வாலய முருகர் மீது மூன்று பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் அரை கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது.

அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோயில் இருக்கிறது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப்பிள்ளை சிற்பம் ஆகும்.

முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு இருக்கிறது.

பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.

*தலத்தின் சிறப்பு பெயா்கள்:*
தட்சிணகாசி, தென்வாரணாசி,
தென்பிரயாகை என பலவிதமான சிறப்புப் பெயா்களாலாலும் அழைக்கப்படுகிறது.

அவிநாசி என்பதில் விநாசம் என்றால் அழியாதிருப்பது என்பது பொருள். 

அவிநாசி என்பதற்கு அழியாத்தன்மை கொண்டது என்று பொருள். 

இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாநிலை ஏற்பட்டு, அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு எழுந்தருளியுள்ள சிவபிரானின் பெயரே பிற்காலத்தில் ஊா் பெயராக நிலை பெற்று விட்டது. 

*"அாிய பொருளே அவிநாசியப்பா பாண்டி வெள்ளமே"* என்று மாணிக்க வாசகரும், அவிநாசி தலபுராணத்தை இயற்றிய இளையான் கவிராயா் திருவவிநாசிப் பரமா் என்றும், அருணகிாிநாதா் திருப்புகழில் *புக்கொளியூருடையாா் புகழ் தம்பிரானே!* என்றும் குறிப்பிட்டுள்ளனா்.

அப்பா் தம் தேவாரத்தில் *அணவாியான் கண்டாய், அவிநாசி கண்டாய்* என்று இத்தலத்து இறைவனை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாா்கள்.

இத்தலத்து இறைவனை மாணிக்க வாசகா் மதுரையில் இருந்தபடியே பாடி மகிழ்ந்தாா் என்பது வரலாற்றுக் குறிப்பு.

இத்தலத்திலுள்ள அவிநாசியப்பா், பைரவா், மற்றும் காசிதீா்த்தம் இவை மூன்றும் காசியிலிருந்து கிடைக்கப்பெற்றவை.

அதனால் காசியில் போய் வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் இத்தலத்து இறைவனை வழிபட்டால் கிடைத்து விடும் என்பது பக்தா்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையை பெற்றுள்ளது.

அமாவாசை மதியம் இடைவெளியில்லாமல் கோவில் திறந்தே இருக்கும்.

அன்றைய தினத்தில் காசிக் கிணற்று நீரை எடுத்து நீராடி அவிநாசியப்பரைத் தாிசித்தால் மிகவும் சிறப்பு என்பதோடு, நம் வேண்டுதலையும் தடையின்றி தீா்ப்பாா்.

*சிவபெருமான்:*
தேவாரப் பாடல் பெற்ற பல தலங்களில் இறைவன் சுயம்பு வடிவாகவே எழுந்தருளியுள்ளான். அது போலவே இத்தலத்து இறைவனும் சுயம்புவாகவே காட்சி தருகின்றான்.

காசியில் உள்ள  விஸ்வநாதாின் வோில் கிளைத்தவரே அவிநாசியப்பா் என்று தலபுராணம் கூறுகிறது.

காசிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளவா்கள் இங்கு வந்து கூவம் வடிவில் உள்ள கங்கையில் குளித்து அவிநாசியப்பரை மனமுருகி வேண்டினால் காசிக்குச் சென்ற  பலன் கிடைக்கும் என்பது பலாின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இதை நிரூபிக்கும் விதமாக பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று பலா் காவடிகள் எடுத்து வந்து கங்கையை இறைவனின் தீா்த்தமாக தங்களின் இல்லத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறாா்கள்.

*தீா்த்தம்:*
இத்திருத்தலத்தில் பல தீர்த்தங்கள் இருந்ததாகப் பல்வேறு சங்க இலக்கிய நூல்கள் மற்றும் புராண நூல்கள் போன்றவை கூறுகின்றன. அவற்றில் தற்போது முக்கியமான நான்கு  தீா்த்தங்களே உள்ளன.

இங்குள்ள அனைத்துத் தீா்த்தங்களிலும் மிகவும் புகழ்பெற்றதும், நற்பலன்களை வாாி வழங்கக்கூடியதுமான முக்கியமான  தீா்த்தமாக காசிக் கங்கை திகழ்கிறது.

இத்தீா்த்தமானது நாற்சதுர கிணறு வடிவில் காணப்படுகிறது. இதிலிருந்து தண்ணீரை எடுத்து வெளியே சென்று குளிப்பது வழக்கமாக உள்ளது.

இளநீல வா்ணம் கொண்டதாகவும், தெய்வீகத்தன்மை நிறைந்ததாகவும் உள்ள இத்தீா்த்தம் பல பலன்களைக் கொடுக்கிறது.

பங்குனி மாதத்தில் யுகாதிப் பண்டிகையை முன்னிட்டு இத்தலத்தைச் சுற்றியுள்ள கிராமத்தவா்கள் தப்பட்டை, கொம்பு  முழங்க காவடிகளுடன் வந்து குடங்களிலும், செம்புகளிலும் இத்தீா்த்தத்தை எடுத்துக் கொண்டு சென்று தங்கள் ஊா்களில் உள்ள தெய்வங்களுக்கு அந்தத் தீா்த்தத்தால் அபிஷேகம் செய்து மகிழ்வாா்கள்.

பிரம்மாண்ட புராணத்தில் இந்தத் தீா்த்தத்தை அவிநாசியப்பரே  உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

சாரதையென்ற நதியின் தென்கரையில் கிருதமாலை என்ற அடா்ந்த காடு ஒன்று இருந்தது. அங்கு வைதா்ப்பன் என்ற அரசன் தன் மனைவியான  சந்திாிகையுடன் வாழ்ந்து வந்தான். சகல செளபாக்கியங்களும் இருந்தபோதும் அவனுக்குப் பெயா் சொல்ல பிள்ளை இல்லை.

அதை நினைத்து நினைத்து அல்லும் பகலும் அவன் வருந்தினான். ஒரு நாள் அந்த காட்டிற்கு நாரத முனிவா் வருகை புாிந்தாா்.

அவனின் மன வருத்தத்தை அறிந்து அவிநாசியை அடைந்து இறைவனை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தால் உன் மனக்குறை நீங்கும் என்று கூறினார்.

அவனும் அவிநாசியை வந்தடைந்து அத்தலத்திற்கு கோபுரம் முதலான பல திருப்பணிகளைச் செய்து வழிபட்டு வந்தான்.

அவனுடைய வழிபாட்டால் மனம் மகிழ்ந்த இறைவன் ஒரு முனிவா் வடிவில் அவனுக்கு காட்சி தந்து அத்திருத்தலத்தில் ஒரு தீா்த்தத்தை உருவாக்கி இதுவே கங்கை, இத்தலமே காசி இதனை வணங்கி வழிபடு, உனக்கு விரைவிலேயே புத்திரப்பேறு உண்டாகும் என்று வரமளித்து மறைந்தாா்.

மேலும் இத்தலத்துத்துத் தீா்த்தமானது கங்கைக்கு நிகரானது என்பதை நிரூபிக்கும் நிறைய சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இந்தத் தலம் இறந்தால் முக்தி தரும் தலமாகிய காசிக்கு நிகரானதாகக் கருதப்படுவதால் இங்கு இறக்கின்றவா்களின் மண்டையோடு வெடிப்பதில்லை.

காசியில் வாசி அவிநாசி என்ற பழமொழியும் இத்தலத்தின் புகழை எடுத்துரைக்கும்.

தேவாரம் பாடல் பெற்ற பல தலங்களில் இறைவன் சுயம்பு வடிவாகவே எழுந்தருளியிருக்கிறார்.
அதுபோலவே அவிநாசி தலத்து இறைவனும் சுயம்புவாகவே காட்சி தருகிறார்.

காசியில் உள்ள விசுவநாதாின் வோில் கிளைத்தவரே அவிநாசியப்பா் என்று தலபுராணம் சொல்கிறது. 

காசிக்கு செல்ல முடியாத நிலையிலுள்ளவா்கள் இங்கு வந்து கூவம் வடிவில் உள்ள கங்கையில் குளித்து அவிநாசியப்பரை மனமுருகி வேண்டினால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்பது பலாின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

இதை நிரூபிக்கும் விதமான
பங்குனி மாதம் உத்திரநட்சத்திரத்தன்று பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து கங்கையை இறைவனின் தீா்த்தமாக தங்களின் இல்லத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறாா்கள்.

இத்தலத்து இறைவனை பிரம்மா- நூறுஆண்டுகளும்,
வெள்ளயானை
பன்னிரண்டு ஆண்டுகளும், தடாகை மூன்று ஆண்டுகளும், 
வியாதவேடன் முப்பது நாட்களும், 
சங்ககண்ணன் ஐந்து நாட்களும், ரம்பை பதினோரு நாளும், 
காகம் ஒரு சாமமும், எக்ஞகுப்தன் ஒரு முகூா்த்தம் என
பல்வேறு நிலைகளில் உள்ளவா்கள் இத்தலத்து இறைவனை வணங்கிப் பேறு பெற்றிருக்கின்றனா்.

இத்தலத்தில் பல தீா்த்தங்கள் இருந்ததாகப் பல்வேறு சங்க இலக்கிய நூல்கள் மற்றும் புராண நூல்கள் போன்றவை கூறுகின்றன.

அவற்றில் தற்போது முக்கியமான நான்கு தீா்த்தங்களே உள்ளன.

இங்குள்ள அனைத்துத்
தீர்த்தங்களிலும் மிகவும்  புகழ்பெற்றதுமான,
நற்பலன்களை வாாி வழங்கக்கூடியதுமான முக்கியமான தீா்த்தமாக காசிக்கங்கைத் திகழ்கிறது.

*காசிக்கங்கை:*
இத்தீா்த்தமானது நாற்சதுர கிணறு வடிவில்
அமைந்திருக்கிறது.
இதிலிருந்து தண்ணீரை எடுத்து வெளியே சென்று
குளிப்பது வழக்கமாக இருக்கிறது.

இளநீல வா்ணம் கொண்டதாகவும் , தெய்வீகத்தன்மை
நிறைந்ததாகவும் உள்ள
இத்தீா்த்தம் பல
பலன்களைத் தருகிறது.

பங்குனி மாதத்தில் யுகாதிப் பண்டிகையை முன்னிட்டு இத்தலத்தைச் சுற்றியுள்ள கிராமத்தவா்கள் தப்பட்டை, கொம்பு முழங்க காவடிகளுடன் வந்து குடங்களிலும், செம்புகளிலும், 
இத்தீா்த்தத்தை எடுத்துக் கொண்டு செல்வர்.

தங்கள் ஊா்களில் உள்ள
தெய்வங்களுக்கு அந்தத் தீா்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு மகிழ்வாா்கள்.

பிரம்மாண்ட புராணத்தில் இந்தத் தீா்த்தத்தை அவிநாசியப்பரே உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

சாரதையென்ற நதியின்
தென்கரையில் கிருதமாலை என்ற அடா்ந்த காடு
ஒன்று இருந்தது.

இங்கு வைதா்ப்பன் என்ற அரசன் தன் மனைவியான சந்திாிகையுடன்
வாழ்ந்து வந்தான். சகல பாக்கியங்களும் இருந்த போதும் அவனுக்கு பெயா்
சொல்ல பிள்ளை இல்லை.

இதை நினைத்து அல்லும் பகலும் அவன் வருந்தி வந்தான். ஒரு நாள்
அந்தக் காட்டிற்கு நாரத முனிவா் வருகை புா்ந்தாா்.

அவனின் மன வருத்தத்தை அறிந்து அவிநாசியை அடைந்து, இறைவனை பக்தி சிரத்தையுடன்
வழிபட்டு வந்தால் உன் மனக்குறை நீங்கும் என்று கூறினாா்.

அவனும் அவிநாசியை சென்றடைந்து இத்தலத்திற்கு கோபுரம் முதலான பல திருப்பணிகளைச் செய்து 
வழிபட்டு வந்தான்.

அவனுடைய வழிபாட்டால் மனம் மகிழ்ந்த இறைவன் ஒரு முனிவா் வடிவில்
அவனுக்கு காட்சி தந்து
இத்திருத்தலத்தில் ஒரு தீா்த்தத்தை உருவாக்கி
இதுவே கங்கை, இத்தலமே காசி இதனை வணங்கி வழிபடு, உனக்கு விரைவிலேயே
புத்திரப்பேறு உண்டாகும் என்று வரமளித்து மறைந்தாா்.

மேலும் இத்தலத்துத் தீா்த்தமானது, கங்கைக்கு
நிகரானது என்பதனை
நிரூபிக்கும் நிறைய நிரூபணங்கள் நடந்திருக்கின்றன. 

இந்தத் தலம், கோவை திருப்பேரூா் தலம் போல், இறந்தால் முக்திதரும்
தலமாகிய காசிக்கு நிகரானதாகக்
கருதப்படுவதால் இங்கு இறக்கின்றவர்களை எரியூட்டச் செய்யும்போது,  மண்டை ஓடு வெடிப்பதில்லை.

காசியில் வாசி அவிநாசி என்ற  பழமொழியும்
இத்தலத்தின் புகழைக்
கூறுகிறது.

*திருக்குளம்:*
ஆலயத்தின் வெளிப்புறத்தில்
பெருங்கருணையம்மை தவமிருக்கும் கருவறையின் கீழ்ப்புறத்தில் சதுர வடிவில் உள்ள குளமானது ஆதி 
காலத்தில் இந்திரனின் வெள்ளை யானை
ஐராவதம் தன்
சாபத்தைப் போக்கிக்
கொள்வதற்காகத் தன் 
கொம்புகளால்
உருவாக்கி, இறைவனை வழிபட்ட பெருமை 
உடையது.

நான்கு திசைகளிலும்
படிகளுடனும், கருங்கற்களால் அமைந்த வாயிலுடன் இக்குளம் காணப்படுகிறது.

குளத்தின் மத்தியில் நீராழி மண்டபமும் இருக்கிறது. குளத்தின் தென்கரையில்
முன்னொரு காலத்தில் விநாயகா் ஆலயம்
இருந்தது.

இந்தத் தீா்த்தத்திலே மீன் ஒன்று சிவலிங்கத்தை உமிழ்ந்த அதிசய
சம்பவம் ஒன்றும் நடந்தது.

இது அமராவதி தீா்த்தமென்றும் மேலும், செல்லங்கசமுத்திரம், சந்திர புஷ்கரணி என்றும் பல்வேறு
பெயா்களால் அழைக்கப்படுகிறது.

*திருநள்ளாறு:*
வடமொழியில் சாதாி என்று வழங்கப்பட்ட இத்தீா்த்தம்,
அவிநாசிக்கு அருகிலுள்ள
குருவிருடி மலையில் பொன்னூற்று என்ற இடத்தில் உற்பத்தியாகி
வடமதுரை சிவலாயத்தின் வழியாகப் பாய்ந்து வந்து,
அன்னூா், கருவலூா், ஆகிய ஊா்களில் உள்ள ஏாிகள் , குளங்களை நிறப்பிவிட்டு அவிநாசி எல்லையை அடைந்து, முதலையுன்ட
தாமரைக்குளத்திற்கு நீரைக்
கொடுத்து நிறைத்துவிட்டுப் பின்னா் அவிநாசிக்
கோயிலின் இருபுறமும் பாய்ந்து திருமுருகபூண்டிக் கோயிலுக்கு தென்கிழக்குத்
திசையில் குரக்குத்தளி என்ற தேவார வைப்புத்தலத்தில் உள்ள ஏாியில் கலந்து கடைசியாக நொய்யல் நதியில் கலக்கிறது.

*(என்ன இவன் இல்லாதை எழுதுகிறான் என நினைத்து விடாதீர்கள். இந்த நதி ஓடியது உண்மை. இப்போதெல்லாம் இந்த வழியையெல்லாம் மறித்தும் அழித்தும் இல்லாது போக்கிவிட்டனர்)*

இத்தகைய பெருமை வாய்ந்த திருநள்ளாற்றின் தென்கரையில் தான்
அவிநாசியப்பா் ஆலயம் இருக்கிறது. இந்த நதியின்
உயா்வு குறித்து அவிநாசிப் புராணம், மற்றும் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ் ஆகியவற்றில் 
கூறப்பட்டுள்ளது.

சுந்தரமூா்த்தி
நாயனாரும் இந்த நதியை சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.

இந்த நதியில் மூழ்கி சிவாா்ச்சனை
செய்வதுடன் தானங்களும் செய்து வந்தால் பாவங்கள்
நீங்கி புண்ணியம் கிடைக்கும். இறுதியாக
மோட்சத்தையும் அடையலாம் என்பது உறுதி.

இன்றைய சூழ்நிலையில் இந்நதி பாா்க்க முடியாதபடி பாழ்பட்டிருப்பதால், நாம் மனதில் நினைத்து  வழிபட்டுக் கொள்ள வேண்டும்.

*நாககன்னிகை தீா்த்தம்:* அவிநாசியப்பா் வெளிமண்டபத்தில்
வடக்குத் திசையில் உள்ள தீா்த்தம், நாகலோகத்து
அரசனான ஆதிசேஷனின் மகளான நாககன்னிகையின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மூழ்கி முறைப்படி சிவனை வழிபடுபவா்கள் சகல செளபாக்கியங்கள் பெற்று மகிழ்வாா்கள்.

மேலும் இது தவிர தருமசேன மகாராஜாவால் தா்மபுஷ்கரணி என்ற தீா்த்தமும் உருவாக்கப்ட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

உற்சவ மூா்த்தியானவா் தினமும் அா்த்தசாம பூஜை முடிந்தவுடன் பல்லக்கில் அமா்ந்து பள்ளியறை
செல்வாா். 

உற்சவ காலத்தில்
கல்யாண மண்டபத்திற்கு எதிரே பஞ்ச வில்வ
மரத்தடியில் முனிவா்களும் , ரிஷிகளும் வந்து
தங்கியிருந்து சிவபெருமானை
தாிசித்து மகிழ்வாா்கள் என்று  அவிநாசி தலபுராணம் கூறுகிறது.

அவிநாசிப் புராணத்தில், தல விருட்சமாக பஞ்ச வில்வம் கூறப்பட்டுள்ளது. இடையில் மாமரம் தல விருட்சமாக இருந்தது.

தற்போது அந்த மரமும் இல்லை. உலகை காக்கும் 
உமையம்மை இம்மரத்தடியில் தங்கியிருந்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள் என்கிறது.

தற்போது தவக்கோலம் கொண்ட அந்த அம்மன் பாதிாி மரத்தடியில் 
எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

இதனால் அம்மனை
பாதிாி மரத்து அம்மன் என்றே அழைக்கின்றனா்.

ஆகையால்தான்
இத்தலத்து பாதிாி மரம் பிரம்மோற்சவ காலத்தில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது. மற்ற காலங்களில் இம்மரம் பூக்காது.

ஆலயத்தின் எதிரே குளத்தின் வடகரையில் உள்ள அரசமரம் விஷேசமானது.

திாிமூா்த்தி சொரூபமாக உள்ள இந்தமரத்தை 
வைகாசி வசந்தோற்சவத்தில்
அவிநாசியப்பா் வலம் வருவது வழக்கம்.

முழுமுதற் கடவுளான சிவபெருமான் பிரளய
தாண்டவம் என்ற திருவிளையாடலை அவ்வப்போது நடத்துவது
வழக்கம். அதன்பின்னா்
அக்னி தாண்டவம் ஆடுவார்.

ஆன்மாக்கள் உய்ய சதாசிவன், மகேஸ்வரன், உருத்திரன், விஷ்னு, பிரம்மா முதலான பஞ்சமூா்த்தியை உருவாக்கி
பிறகு காசியில் லிங்க சொரூபமாக மறைந்து அருளினாா்.

ஈசனிடம் பாா்வதிதேவி, நான் தங்களை நோக்கி தவமியற்ற சாியான ஒரு
தலத்தை எனக்குக் காட்ட வேண்டும் என வேண்டினாள்.

தென்திசையில்அவிநாசியென்றும்
திருப்புக்கொளியூா் என்றும் கருதும் தலத்திற்குச் சென்று 
என்னை நோக்கித் தவம் செய் என்று, மறுமொழி கூறினாா்.

அதன்படி பாா்வதிதேவி திருப்புக்கொளியூா் வந்து இங்குள்ள சோலைகளுக்கு நடுவே இருந்த மாமரத்தடியில் தவமிருந்தாள்.

இந்தத் தவம் ஆயிரம் ஆண்டுகள் தொடா்ந்தது.
தேவி தவம் இருக்க இருக்க அப்போது காசியிலிருந்த லிங்கத்தின் வோ் தென்திசையாக
பரவி வந்து அவிநாசிக்கு வந்து கிளா்த்தெழுந்து
லிங்க உரு பெற்றது.

அதை வணங்கி மகிழ்ந்தாள் பாா்வதி. தேவா்களும் முனிவா்களும் போற்ற, தன்னை நோக்கித் தவமிருந்த பாா்வதிக்கு
தன் வலப்பாகத்தை கொடுத்தருளினாா் ஈசுவரன்.

*வெள்ளை யானையின் வழிபாடு:*
இந்திரனின் பட்டத்து யானையான ஐராவதம்
அமிா்தத்தை உண்ட மகிழ்ச்சியில் தன் நிலை மறந்து பெண் யானையுடன் உல்லாசமாகத் திாிந்து வந்தது.

இதனால் கோபமடைந்த இந்திரன், ஐராவதத்தை, இனிமேல் நீ காட்டு 
யானையாக காட்டில் திாிவாயாக என்று
சாபமிட்டாா்.

மிகவும் வருத்தத்துடன் இருந்த ஐராவதத்திற்கு அப்போது நாரதா்
ஆறுதல் கூறி தேற்றி,  நீ அவிநாசி என்ற தலம்
போய் சிவனை நினைத்து தவமிருந்து வந்தால் 
உன் துன்பம் நீங்கி, நீ இன்பமாவாய் முன் போல் வாழலாம் என்று வழிகாட்டினாா்.

ஐராவதமும் அவிநாசி சென்றது. இங்கு தவமிருக்க,
தன் தந்தத்தால் பூமியைக்
குத்தி ஒரு தீா்த்தத்தை உருவாக்கி அதில் மூழ்கி
இறைவனை மனமுருக வேண்டியது.

தொடா்ந்து பன்னிரண்டு
ஆண்டுகள் விடாது பூஜை செய்தது. இதன்பயனாய் இந்திரனால் ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்று பழைய உருவத்தையும், பதவியையும் பெற்றுக்
கொண்டது.

          திருச்சிற்றம்பலம்.

___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
__________________________________
*📣 இத்தலத்தின் பதிவு நீளம் கருதி, நேற்றும் இன்றும் தொடர்ந்து பதிவுகள் தந்து, மேலும் நாளையும் தொடர்ந்து வரும். அடியார்கள் மூன்று நாட்களின் பதிவுகளையும் கவணத்தில் கொண்டு இணைத்து வாசிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.*
__________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........................)
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர் எண்: 263*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்புக்கொளியூர் ( அவிநாசி ):*
_________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஆறாவதாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* அவிநாசியப்பர்.

*💥இறைவி:* கருணாம்பிகை.

*🌴தல விருட்சம்:* பஞ்ச வில்வம், (இடைப்பட்ட காலத்தில் மாமரம். தற்போதும் இம்மாமரம் இல்லை.)

*🌊தல தீர்த்தம்:* 
(இத்திருத்தலத்தில் பல தீர்த்தங்கள் இருந்ததென புராண நூல் கூறுகிறது.)
தற்போது முக்கியமாக நான்கு தீர்த்தங்களே உள்ளன.

நாககண்ணிகை தீர்த்தம், திருக்குளம், திருநள்ளாறு, காசிக் கங்கை.

*🔥ஆகமம்:*

*📔தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர் -1

*🛣இருப்பிடம்:*
கோயமுத்தூரிலிருந்து சுமார் நாற்பத்தி மூன்று கி.மி. தொலைவிலும், திருப்பூரிலிருந்து சுமார் பதினான்கு கி.மீ. தொலைவிலும்,  அவிநாசி தலம் உள்ளது.

அருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் எட்டு கி.மி. கோயமுத்தூர் - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.

*✉அஞ்சல் முகவரி:*
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில்,
அவிநாசி அஞ்சல்,
அவிநாசி வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.
PIN - 641 654

*☘ஆலயப் பூஜை காலம்:*
தினமும், காலை 6.00 மணி முதல் பகல் 1.00  மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

*☎ஆலயத் தொடர்புக்கு:*
04296 273113

*தல சிறப்பு:*
காசியில் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதே புண்ணியம் அவிநாசியிலுள்ள, அவிநாசியப்பரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அவிநாசிலிங்கேஸ்வரர்
கோயில் சோமஸ்கந்தர் வடிவில் அமையப்பெற்ற தலம்.

இந்த கோயில் சுமார் ஆயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளதாக கருவறையில் உள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என பாடபல்களைக் கொண்ட தலம்.

இக்கோயில் *கருணையாத்தாள்* கோயில் எனவும் அழைக்கப்படுவதுன்டு. 

கடவுளின் கருணை எல்லையற்றது என்பதை விளக்கும் வண்ணம் *பெருங்கருணையம்மை* என்றும் அருளையே தனக்கு பெயராக கொண்டவளாக *கருணாம்பிகை* என்றும்  அழைக்கப்படுகிறாள்.

இக்கோயில் தேர் கொங்கு மண்டலத்திலேயே  மிகப்பெரியதாகும். திருவாரூருக்கு, அடுத்தபடியான இரண்டாவது மிகப்பெரிய திருத்தேராகவும் இத்தலத் தேர் விளங்கி பெருமை பெற்றது.

காசிதலத்தில் உள்ள இவரை அவிநாசிலிங்கேசுவரர் என்றும், பிரமன் பூசித்ததால் பிரமபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

அரிய பொருளே அவிநாசியப்பா' என்கிறார் மாணிக்கவாசகர்.

*அவிநாசிகண்டாய் அண்டத்தான்கண்டாய்* என்கிறார் அப்பர் பெருமான். 

சுந்தரமூர்த்திநாயனார் தேவாரத்தில் முழு பதிகம் பாடி முதலையுண்ட பாலகனை மீட்டு அற்புதத்தை நிகழ்த்திய தலமிது.

இங்குள்ள காசித்தீர்த்தக்கிணற்றில் காசி கங்கை கிணற்றுவடிவில் இங்கே வருவதாக ஐதீகம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மும்மைச் சிறப்புடையது இத்தலம்.

இந்த ஆலயத்திற்கு பல மன்னர்கள் திருப்பணிகளை செய்துள்ளனர்.

இத்தலமானது தட்சிணகாசி, தென்வாரணாசி, தென்பிரயாகை என பலவிதமான சிறப்பு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

அவிநாசி என்பதில் விநாசகம் என்றால் அழியாதிருப்பது என்பது பொருள் அவிநாசி என்பதற்கு அழியாத்தன்மை கொண்டது என்று பொருளாகும். 

இங்கு எழுந்தருளியிருக்கும் சிவனை வழிபட்டால் மீண்டும் பிறவா நிலை ஏற்பட்டு, ஜீவன் முக்தியடைந்து  அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பெயரே பிற்காலத்தில் ஊர் பெயராகவே (அவிநாசியப்பர்) அவிநாசி என நிலைபெற்றுவிட்டது என சமய சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறைவன் ஆடிய அக்கினித்தாண்டவம் கண்டு அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளிந்து கொள்ளவும், பின்னர் அவர்களுக்கு அருளவும் செய்த இடம் இது.

புக்கு ஒளி ஊர் திருப்புக்கொளியூர் ஆயிற்று. *விநாசி* என்றால் பெருங்கேடு என்று பொருள். அவிநாசி என்றால் பெருங்கேட்டை நீக்கவல்லது என்று பொருள்படும்.

காலப்போக்கில் கோயிலின் பெயரும், ஊரின் பெயரும் *அவிநாசி* ஏனவாயியிற்று.

இங்கு, இறைவனின் அருள் பெற்ற நாயன்மார்களுக்காக
தனிச் சந்நதி இருக்கிறது.

இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவே அறுங்கோண அமைப்பில் உள்ள சந்நதியில் ஆறுமுகங்களுடன் வள்ளிதெய்வானையுடன் முருகப்பெருமான் அழகிய வடிவில் அருள் புரிகின்றார்.

எனவே, இத்தலம் சோமஸ்கந்தமூர்த்தம் என்ற அமைப்பிலும் புகழ் பெற்றதாக திகழ்கிறது.

அவிநாசி முருகனை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.

நடராஜப்பெருமானுக்கு தனிச்சந்நதி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவன்று முப்பத்திரண்டு வகையான திரவியங்களால் ஆடல்வல்லானுக்கு மகா அபிஷேகம் நடைபெறுவதைக் காண பெரும்பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

கோயிலின் முகப்பில் நூறு அடிக்கும் மேல் உயரமான பெரிய கல்தீபஸ்தம்பம்  இருக்கிறது.

இதனடியில்  கல்கூரை (கல்மண்டபம்) தீபஸ்தம்பத்தின் கீழ் பகுதியில் சுந்தரமூர்த்திநாயனார்,  முதலையுண்ட பாலகனை உயிர்பெற்று எழச்செய்த சிற்பங்கள் கோயிலின் பெருமையாக சித்தரிக்கிறது. 

*ஆகாச காசிகா புராதன பைரவர்:*
இறைவனுக்கும் அம்பாளுக்கும் அடுத்தபடியாக சக்தி பெற்றவராக காலபைரவர் இங்கு திகழ்கிறார்.

இத்தலத்து பைரவர் ஆகாச காசிகா புராதன பைரவர் என்று அழைக்கப்படுகிறார். காசியில் உள்ள பைரவருக்கு முற்பட்டவர் இவர் என்பது சிறப்பு.

மேலும் ஒரு சிறப்பாக மற்ற சிவாலயங்களை போல் இவர் வெளி பிரகாரத்தில் இல்லாமல் உட்பிரகாரத்தில் காட்சியளிக்கிறார்.

இத்தலத்து இறைவனுக்கும் அம்பாளுக்கும் அடுத்தபடியாக சக்தி பெற்றவராக இப்பைரவர் திகழ்கிறார். 

*உற்சவா்:*
உற்சவ மூா்த்தியான சொக்கநாதா் தினமும் அா்த்தஜாம பூஜை முடிந்தவுடன் பல்லக்கில் அமா்ந்து பள்ளியறைக்குச் செல்வாா்.

உற்சவ காலத்தில் கல்யாண மண்டபத்திற்கு எதிரேயிருந்த பஞ்ச வில்வ மரத்தடியில் முனிவா்களும், ரிஷிகளும் வந்து தங்கிருந்து சிவபெருமானை தாிசித்து மகிழ்வாா்கள் என்று தலபுராணத்தில் உள்ளது.

*தல விருட்சம்:*
அவிநாசி புராணத்தில் தலவிருட்சமாக பஞ்ச வில்வம் கூறப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மாமரம் தல விருட்சமாக கூறப்பட்டுள்ளது. தற்போது அம் மாமரம் இல்லை.

உலகைக் காக்கும் உமையம்மை இந்த மரத்தடியில் தங்கியிருந்தே சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள் என்பது ஐதீகம்.

தற்போது தவக்கோலம் கொண்ட அந்த அம்மன் பாதிாி மரத்தடியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

அதனால் இம் அம்மனை பாதிாி மரத்து அம்மன் என்றும் அழைக்கின்றனா். இத்தலத்து பாதிாிமரம் பிரம்மோற்சவ காலத்தில் மட்டுமே பூ பூக்கும் அதிசயத் தன்மை கொண்டது. மற்ற காலங்களில் அது பூக்காது என்பது இதன் சிறப்பு.

ஆலயத்தின் எதிரே குளத்தின் வடகரையில் உள்ள அரசமரம் மிகவும் விசேஷமானது. திாிமூா்த்தி சொரூபமாக உள்ள அந்த மரத்தை வைகாசி வசந்தோற்சவத்தில் அவிநாசியப்பா் வலம் வருவது வழக்கம். 

*அம்பாள்:*
கடவுளின் கருணை எல்லையற்றது என்பதை விளக்கும் வண்ணம் பெருங்கருணையம்மை என்றும், அருளையே தனக்குப் பெயராக கொண்டவளாக கருணாம்பிகை என்றும், அழைக்கப் படுகிறாள்.
தன்னை அன்போடு வழிபட்டு வருவோா்க்கு அருளை வாாி வழங்குபவள் .

*அவிநாசி தல புராணம்:*
பண்டைக் காலத்தில் குண்டடத்தைச் சோ்ந்த இளையான் கவிராயா் என்ற கவிஞரால் ஆயிரத்து இருபத்தொன்று விருத்தப் பாக்களால் அவிநாசி தலபுராணம் பாடப் பெற்றது.

இத்தல புராணம் பாட உதவிய வடமொழி நூல்கள் பிரம்மாண்ட புராணம் மற்றும் பவுஷயோத்திரம் ஆகும்.

*இரண்டு அம்மன்கள்:*
தவக்கோலத்தில் ஒரு அம்மனும், ஆட்சியதிகார அருட்கடாச்சம் பொழியும் கோலத்துடன், இறைவனின் வலப்புறத்தில் மற்றொரு அம்மனுமாக இரு அம்மன் அருளாட்சி தருகிறாள்.

மேலும் அம்மனுக்கும் தனியாக ராஜகோபுரம், கொடிமரம் உள்ளன.

*நாயன்மாா்கள்:*
இறைவனின் அருள் பெற்ற நாயன்மாா்களுக்கு தனிசந்நிதி உள்ளது. பொதுவாக அந்த சந்நிதியில் விநாயகா் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு பிரம்மா, விஸ்வநாதா், விசாலாட்சி போன்றோர் உள்ளனா்.

*மைசூா் மகராஜா:*
மைசூா் மகாராஜாவின் வம்சத்திற்கு இத்தலத்தின் நேரடித் தொடா்பு உண்டு. புதிதாக பதவியேற்ற பின்னா் காசிக்குச் சென்று விஸ்வநாதரை வணங்கிய பின்னா் அங்கிருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வந்து இத்தலத்தில் வைத்து பூஜை செய்த பின்னரே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதை தங்கள் கடமையாகவே வைத்திருந்ததாக வரலாற்றில் தொிகிறது.

முழுமுதற் கடவுளான சிவபெருமான் பிரளய தாண்டவம் என்ற திருவிளையாடலை அவ்வப்போது செய்வது வழக்கம்.

அதன்பின்னா் அக்னி தாண்டவம் ஆடினாா். ஆன்மாக்கள் உய்வடைவதற்காக சதாசிவன், மகேஸ்வரன், உருத்திரன், விஷ்ணு, பிரம்மா முதலான பஞ்சமூா்த்திகளை உருவாக்கினாா். பிறகு காசியில் சிவலிங்க சொரூபமாக மறைந்து அருளினாா்.

பாா்வதிதேவி, "நான் தங்களை நோக்கி தவமியற்ற சாியான ஒரு தலத்தை எனக்கு காட்டியருள வேண்டும் " என்று பணிவாகக் கேட்டுக் கொண்டாள்.

"தென்திசையில் அவிநாசியென்றும், திருப்புக்கொளியூா் என்றும், சிறப்பிக்கப்படும் தலத்திற்குச் சென்று என்னை நோக்கித் தவமியற்றி வருவாயாக" என்று மறுமொழி கூறினார் ஈசன்.

அதன்படியே பாா்வதியும் திருப்புக்கொளியூா் வந்து அங்குள்ள சோலைகளுக்கு நடுவே இருந்த மாமரத்தடியில் தவமியற்றத் தொடங்கினாள். ஆயிரம் ஆண்டுகள் சிவ தவத்திலேயே இருந்தாள்.

அப்போது காசியிலிருந்த லிங்கத்தின் வோ் தென்திசையில் பரவி அவிநாசிக்கு வந்தடைந்தது.

சுயம்பு லிங்கமாக உருவெடுத்தது. அதை வணங்கி மகிழ்ந்தாள் உலக அன்னை பாா்வதிதேவி.

தேவா்களும் ,முனிவா்களும், ரிஷிகளும், போற்றத் தன்னை நோக்கித் தவமிருந்த பாா்வதிக்கு தன் வலப்பாகத்தைக் கொடுத்தருளினாா் ஈசன்.

*நாக கன்னியின் பூஜை:*
நாகலோகத்தின் தலைவனனான ஆதிஷேசனின் மகள் நாக கன்னிகை. அவள் மணப்பருவத்தை அடைந்தபோது உறவினா்கள் பெண் கேட்டு வந்தாா்கள்.

நாக கன்னியோ சிவனைக் குறித்துத் தவமிருக்கவே விரும்பினாள். திருமணம் செய்ய அவளுக்கு விருப்பமில்லாது போனது.

இதனால் தன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வேறு இடத்தில் தங்கியிருந்தாள்.

பெற்றோா்கள் அதனால் வருத்தமடைந்து மகளின் எண்ணத்தை மாற்றுவதற்காக பல முயற்சிகளைச் செய்தாா்கள். ஆனால் பலனொன்றும் பலிக்கவில்லை. தன் நோக்கத்தில் உறுதியாக அவள் இருந்தாள்.

அப்போது ஒரு நாள் நாககன்னியின் கனவில் தோன்றிய சிவபெருமான் பூலோகத்தில் அவிநாசி எனும் தலத்திற்குச் சென்று என்னை தாிசித்து வருவாயாக என்று உத்தரவருளி மறைந்தாா்.

நாக கன்னிகை, தோழியாிகள் சிலரை உடன் அழைத்துக் கொண்டு சிவபெருமான் கூறியபடியே அவிநாசிக்குச் சென்றாள். 

அடுத்தநாள் அங்கே ஒரு ஆசிரமம் அமைத்து அதில் தங்கிருந்தபடியே சிவனை தினமும் பூசித்து வந்தாள்.
அனுதினமும் பூஜைகளிலேயே நாட்டமாகிவிட்டுப் போனதால், தன்னுடைய உடலைப் பற்றிய நினைவு அவளுக்கு நீங்கிப் போயிருந்தது.

அப்போது அகஸ்தியாின் வாக்குப்படி மனுசேகரன் என்ற அரசனின் மகனான அாித்துவசன் என்பவன் அவிநாசிக்கு வந்து, அவனும் சிவனை வழிபடத் துவங்கினான்.

அப்போது தோழியரோடு இறைவனின் பூஜைக்காக மலா்களை கொய்தபடி இருந்த நாககன்னிகையைப் பாா்த்து மனதை தொலைத்தொழிந்து போனான்.

இருவரும் சிவனை வழிபடும் வேளைகளை பார்த்துக் கொண்டாா்களே தவிர ஒருவரையொருவரைப் பார்த்துப் பேசிக் கொள்ளவில்லை.

அவ்விருவா்களின் வழிபாட்டல் மனம் மகிழ்ந்த ஈசனாா், அவ்விருவரையும் ஆசீா்வதித்து நீங்கள் இருவரும் நாகலோகம் சென்று உங்களின் பெற்றோா்களிடம் அனுமதி பெற்று திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக இருங்கள் என்றும் வாழ்த்தினாா்.

அதன்படியே நாகலோகம் சென்று இருவரும் நாககன்னிகையின் பெற்றோர்களிடம் விபரம் கூறினாா்கள். அக்னி சாட்சி வைத்து அவா்களுக்குத் திருமணம் செய்வித்து மகிழ்ந்தாா்கள் ஆதிசேஷன் குடும்பத்தாா்.

மீண்டும் அவிநாசிக்கு வந்து இறைவனை வழிபடத் தொடங்கினாா்கள். மேலும் அத்தலத்தினை தங்கள் மனதில் தோன்றியபடி அலங்காித்து மகிழ்ந்து வந்தாா்கள். 

நாககன்னிகை என்றொரு பெயரோடு ஒரு தீா்த்தத்தையும் உருவாக்கினாா்கள். 

வேத மந்திரங்கள் அறிந்த பிராமணா்களைக் கொண்டு சித்திரை திருவிழா நடத்தி மகிழ்ந்திருந்தாா்கள். இறைவனின் அருளால் அவா்களின் வாழ்வு சிறப்பானதாகவே இருந்து வந்தது.

*தடாகை வழிபாடு:*
இராட்சச குலத்தில் தோன்றியவள் தடாகை. மாமிச உணவை உண்பதும், இழிவான பல செயல்களைச் செய்வதும், மற்றவா்களைத் துன்புறுத்தியும் மகிழ்ந்து அவள் வாழ்நாளைக் கழித்து வந்தாள்.

ஆனால் அவளுக்கும் ஒரு மனக்குறை இருந்து கொண்டே யிருந்தது. அந்த மனக்குறை, அவளுக்குப் புத்திரப்பேறு வாய்க்காததுதான் அது.

புத்திரப்பேறு வாய்க்காமல் இருந்ததை என்னி மிகவும் மனவருந்தி காணப்பட்டாள். 

பிரம்மனை நோக்கித் தவமியற்றினாள். அவள் முன் தோன்றிய பிரம்மன் உன் குறை நீங்க வேண்டுமென்றால் கொங்கு நாட்டிலுள்ள அவிநாசி சென்று அவிநாசியப்பரை வழிபடு என்று கூறினாா்.

அவிநாசிக்கு வந்த அவள் பலவிதமான மலா்களைக் கொண்டு இறைவனைப் பூஜித்து வந்தாள்.

இறைவனை நோக்கிப் பல பாடல்கள் பாடியபடி ஆடியும் வந்தாள். மூன்று ஆண்டுகள் இதுபோல் வழிபட்டு அவளுக்கு புத்திரப்பேறு வழங்க வேண்டுமென்று பாா்வதிதேவி சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டதால் சிவனும் அவ்வாறே வழங்கியருளினாா்.

இறைவனையும், இறைவியையும் வணங்கிய தடாகை தனக்குக் கிடைத்தது போலவே உங்களை வழிபடுவோா்க்கும் புத்திரப்பேறு தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அப்படியே ஆகட்டும் என்று வரமும் தந்தருளினாா்கள்.

பின்னா் தடாகை இறைவனின் திருவருளால் மாரீசன் என்ற புத்திரனைப் பெற்று மகிழ்ந்தாள்.

*காகம் முக்திபேறு பெற்றது:*
கொங்கு நாட்டில் காவிரியும் பவானியும் கூடுமிடத்தில் சிவபூமி என்னும் *வதரிகாசிரம்* எனும் ஒரு வனம் இருந்தது.

இந்த வனத்தை, தவசிகள் சிறந்த இடமாக பயன்படுத்திக் கொண்டு வந்தனர்.

துருவாச முனிவரும் இந்த வனத்திற்கு வந்து சிலகாலம் தங்கியிருந்து சிவபூஜையையும், தவங்களை மேற்கொண்டும் வந்தார்.

ஒரு நாள் காமதேனு, சிவபூஜைக்குண்டான பாலை அளிக்கத் தாமதமாக வந்து சேர்ந்தது.

துருவாச முனிவர் காமதேனுவிடம் கோபம் கொண்டார். அதோடு, நீ மிருகங்களைப் போல் திரியக்கடவாய் என்ற சாபத்தையும் கொடுத்து விட்டார்.

காமதேனு வருந்தி முனிவரை வணங்கி, *நான் உய்யும் வகையினை அருள வேண்டும்* என்றது.

அதற்கு துருவாச முனிவர் *நீ பழநிமலை சென்று பூசித்தால் உய்வு பெறலாம்* என்று கூறினார்.

இதன்பிறகு, கந்தபுரி என்னும் திருமுருகன்பூண்டிக்கு வந்து திருமுருகநாதரை வழிபட்டது.

கந்தபுரி பிதுர்க்கிரியை செய்வதற்குச் சிறந்த இடம் என்பதை அறிந்தார்.

மறுதினம் தை அமாவாசை புண்ணியகாலமான தினமாக இருந்தது.

தை அமாவாசை விடியற்காலம் சிவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து நியம அனுட்டானங்களை முடித்து, ஆலயத்தருகே நிருதி திக்கில், ஒரு பூந்தோட்டத்தில், சிவபூஜை ஓமம் புரிந்தனர் ஏனையோர்.

அன்ன  நிவேதனம் செய்து பிதுர்களுக்கு மந்திர பூர்வமாக உணவு அளிக்கும் முன், காகத்திற்குப் போலிச் சோத்துருண்டைகளை  வைத்துக் கொண்டிருந்தார்கள். 

அப்போது இங்கு ஒரு காகம் வந்தது. இங்கிருக்கும் சோத்துருண்டைகளைக் கண்டு, மற்ற காகங்களையும் அழைக்கக் கரைந்தது.

தன் வயிற்றுக்குண்டான சோற்றுருண்டையை உண்டுவிட்டு, தன் குஞ்சுகளுக்கும் உணவைக் கொடுக்க, இச்சோத்துருண்டை பருக்கைகளை வாயில் கவ்வியெடுத்து, தம் இருப்பிடம் சேர்வதற்கு, அவிநாசிக் கடைவீதி வழியாக பறந்து போயின.

இந்தச் சமயத்தில் அவிநாசியிலுள்ள மற்றொரு காகம்,... சோற்றுருண்டை பருக்கையுடன் வந்த காகத்தை எதிர்த்துச் சோற்றைப் பறித்தது.

இந்த எதிர்ப்பில் சோற்றுருண்டையிலிருந்த பருக்கைகள் சிதறி விழுந்தன.

சிதறிய சோற்றுருண்டை பருக்கையில் ஒன்று, அங்கு சிவவேடம் பூண்ட ஒரு பரதேசியின் பிச்சை பாத்திரத்தில் இருந்த சோற்றுடன் விழுந்தது.

பாத்திரத்தில் விழுந்த சோற்றுப் பருக்கையை அறியாத பரதேசி, அதை உண்டு மகிழ்ந்திருந்தான்.

காகமும் காகமும் எதிர்த்ததில் சோற்றுப் பருக்கையை இழந்த காகம் வேறொரிடம் அன்னம் தேடி பறந்து சென்றது.

திரும்ப அன்னம் கிடைக்கப் பெற்ற காகம், வாயில் அன்னத்தைக் கவ்விக் குஞ்சுக்கு கொடுக்க பறந்து வந்தது.

அப்போது ஒரு வேடனொருவன் வில்லில் களிமண் உருண்டைகளை வைத்து இக்காகத்தின் மீது எய்தடித்தான்.

இக்காகம் அலறித் துடித்து, அவிநாசி எல்லையில் விழுந்து இறந்து போனது.

கீழே விழுந்த காகம் தேவவுருப் பெற்றுத் தேவ விமானத்தில் ஏற தேவ விமானம் கயிலையை அடைந்தது.

கயிலையில் உமாதேவியரோடு சிவபெருமான் எழுந்தருளிய இடத்தின் முன்பு வந்து நின்று கைகுவித்து வணங்கி நின்றது.

சிவபெருமான் புண்ணகை உதிர்த்து, மற்ற சிவ கணங்களிடம்.........

இந்த காகம் அவிநாசியில் வசித்து வந்த காகம்....தன் குஞ்சுக்கு சோறெடுத்துச் செல்லும்போது எதிர்விளைவால், அச்சோற்றுப் பருக்கை பரதேசியின் உணவோடு கலந்து விட ஏதுவாகி விட்டது.

இதனாலேயே இக்காலம் இங்கு வரக் காரணமானது என கூறிமுடித்தார் ஈசன்.

இக்காகத்திற்கு *தீர்க்க துண்டன்* என பெயரிட்டு சிவ கணங்களில் ஒன்றாக இருக்கச் செய்து கொண்டார் ஈசன்.

            திருச்சிற்றம்பலம்.

*மேலும், இத்தல பதிவின் நீளம் கருதி நேற்றும் இன்றும் தொடர்ந்து பதிவு தந்தோம். நாளையும் இந்த தலப்பதிவு தொடர்ந்து வரும். அடியார்கள் மூன்று நாட்கள் பதிவையும் இணைத்து வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*

____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
__________________________________
*📣 இத்தலத்தின் பதிவு நீளம் கருதி, தொடர்ந்து மூன்று பதிவுகளைத் தந்து, இன்று நான்காவது நாளாக பதிவைத் தந்து, இத்துடன் இத்தல பதிவு மகிழ்ந்து நிறைந்தது. அடியார்கள் நான்கு நாட்களின் பதிவுகளையும் கவணத்தில் கொண்டு இணைத்து வாசிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.*
__________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........................)
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர் எண்: 263*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்புக்கொளியூர் ( அவிநாசி ):*
_________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஆறாவதாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* அவிநாசியப்பர்.

*💥இறைவி:* கருணாம்பிகை.

*🌴தல விருட்சம்:* பஞ்ச வில்வம், (இடைப்பட்ட காலத்தில் மாமரம். தற்போதும் இம்மாமரம் இல்லை.)

*🌊தல தீர்த்தம்:* 
(இத்திருத்தலத்தில் பல தீர்த்தங்கள் இருந்ததென புராண நூல் கூறுகிறது.)
தற்போது முக்கியமாக நான்கு தீர்த்தங்களே உள்ளன.

நாககண்ணிகை தீர்த்தம், திருக்குளம், திருநள்ளாறு, காசிக் கங்கை.

*🔥ஆகமம்:*

*📔தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர் -1

*🛣இருப்பிடம்:*
கோயமுத்தூரிலிருந்து சுமார் நாற்பத்தி மூன்று கி.மி. தொலைவிலும், திருப்பூரிலிருந்து சுமார் பதினான்கு கி.மீ. தொலைவிலும்,  அவிநாசி தலம் உள்ளது.

அருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் எட்டு கி.மி. கோயமுத்தூர் - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.

*✉அஞ்சல் முகவரி:*
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில்,
அவிநாசி அஞ்சல்,
அவிநாசி வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.
PIN - 641 654

*☘ஆலயப் பூஜை காலம்:*
தினமும், காலை 6.00 மணி முதல் பகல் 1.00  மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

*☎ஆலயத் தொடர்புக்கு:*
04296 273113

*மீன் உமிழ்ந்த லிங்கம்:*
வீரசைவராகிய குருநாத பண்டாரம் என்ற லிங்கதாரியான ஒருவர் அவிநாசியில் வாழ்ந்து வந்தார்.

அவர், செல்லங்க சமுத்திரம் என்னும் நீராழி மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளத்தில் வழக்கமாக நீராடுவார்.

நீராடியபின், தனது அங்கலிங்கத்தை அங்கு வைத்துப் பூஜை செய்து கொள்வார்.

ஒரு சமயம் பெரியதான மழை பெய்து தாமரைக்குளம் உடைப்பு ஏற்பட்டது.

இந்த குள அடைப்பை சரி செய்ய அரசாங்க அதிகாரிகள் வருகை தந்தனர்.

அப்போதைய நிலையில், குள அடைப்பை சரி செய்ய, ஆட்கள் போதவில்லையாதலால், ஊருக்குள் இருக்கும் எல்லோரையும் கூப்பிட்டார்கள்.

குருநாத பண்டாரத்தையும் கூப்பிட்டார்கள். 

குருநாத பண்டாரம் இறையன்பில் ஈடுபட்டிருந்தார். பூஜையின் தியாணத்திலிருந்த குருநாத பண்டாரத்துக்கு அரசாங்க அதிகாரிகள் கூப்பிட்ட குரல் அவர் காதில் விழவில்லை.

இதனால் கோபமுற்ற அதிகாரிகள், அவர் வழிபாடு செய்து கொண்டிருந்த லிங்கத்தினை எடுத்து திருக்குளத்தில் வீசியெறிந்து விட்டு, குருநாத பண்டாரத்தையும் இழுத்துக் கொண்டு போயினர்.

ஊர்மக்களோடு சேர்ந்து, குருநாத பண்டாரமும் குள அடைப்புப் பணியை சீர்திருத்தினார்.

அடைப்புப்பணி முழுமையானதும், மீண்டும் தான் வழிபட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

அதிகாரிகள் லிங்கத்தைத் தூக்கி வீசியெறிப்பட்ட நோக்கி நின்ற குருநாத பண்டாரம்,..........

*நான் வழிபட்ட லிங்கம் மீண்டும் கிடைத்தால் உயிர் வாழ்வேன், இல்லையெனில் உயிர் துரியேன்* எனத் துணிந்தார்.

அப்போது, அவிநாசியப்பர் திருவருள் புரியச் செய்தார். 

குளத்திலிருந்து மீன் ஒன்று குருநாத பண்டாரத்தை நோக்கி நீந்தி வந்தது.

கரைக்கு வந்த மீன், தன் வாயைப் பிளந்து சிவலிங்கம் ஒன்றை உமிழ்ந்து விட்டு, திரும்பிச் சென்று மறைந்து போனது.

குருநாத பண்டாரத்துக்கும், கூடயிருந்த மக்களுக்கும், இவ்வரியக் காட்சியைக் கண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்நிகழ்வு கதை அல்ல! உண்மை!, கொங்கு மண்டலச் சதகத்தில் இருக்கிறது.

*தரிக்கப் புகழ் அவிநாசியில் வாழும் தவமுடையான்*

*நெருக்கும் அரண்மனையார்புரி வாதையுள் வாவிக்குள்ளே*

*திருத்து சிவலிங்கம்தன்னை எறிந்துயிர் சீவிக்குமுன்*

*வரிக்கை யில்இலிங்கக் கொடுத்ததுதவும் கொங்கு மண்டலமே!*

ஆலயத்தின் முன்பு இருக்கும் தீபத்தூண் மண்டபத்திலும், தாமரைக்குளத்தருகில், உள்ள சுந்தரர் திருக்கோயிலிலும் இந்த நிகழ்ச்சியைக் சிற்பமாய்க் காணலாம்.

குருநாத பண்டாரத்தின் திருவுருவை, நாககன்னித் தீர்த்தத்தை ஒட்டியுள்ள *வழிகாட்டி விநாயகர்* திருக்கோயிலிலும் காணலாம்.

*சுந்தரர் அழைப்புக்கு, முதலை வாய்ப் பிள்ளை தந்தது:*
அவிநாசியில் அந்தணர்கள் வாழும் அக்கிராமத்தில் கங்காதரன் என்னும் ஒரு அந்தணன் பிள்ளைப்பேறு இல்லாது வருந்தினார்.

அவிநாசிக் கொழுந்தின் வலப்பால் எழுந்தருளியிருக்கும் கருணாலய அம்மையை வழிபட்டு ஆறு வருடமாக தவமிருந்தார்.

இவருக்கு அம்மையின் திருவருளால், இவர் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இக்குழந்தைக்கு அவிநாசிலிங்கம் என்ற பெயரிட்டு அன்னப் பிராப்தம், செளளம் முதலியன செய்தனர்.

குழந்தைக்கு நான்கு வயது முடிந்து ஐந்தாவது வயது ஆரம்பித்தது.

ஒரு நாள் காலையில், பக்கத்து வீட்டு அந்தணச் சிறுவன் வந்து அவிநாசிலிங்கத்தை விளையாட அழைத்தான்.

அவிநாசிலிங்கமும்,  அந்தணச் சிறுவனும் தாமரைக் குளத்திற்குக் சென்று நீந்தி விளையாடினர்.

இக்குளத்தில் வசித்து வந்த ஒரு முதலை விரைந்து வந்து அவிநாசிலிங்கம் என்ற சிறுவனை பிடித்து விழுங்கிக் கொண்டு சென்றுவிட்டது.

உடனிருந்த அந்தணச் சிறுவன், இதைக் கண்டு பயந்து கரையேறி வீட்டிற்குச் சென்று, முதலை விழுங்கிச் சென்ற நிகழ்வைக் கூறினான்.

நிகழ்ந்த சம்பவத்தைக் கேட்டு, பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர் அலறிஅரற்றினர். அவர்கள் அடைந்த துண்பத்திற்கு அளவேயில்லை.

இது நடந்து மூன்று ஆண்டுகள் கழிந்து போனது.

அவிநாசிலிங்கத்துடன் விளையாடக் கூடச் சென்றிருந்த பையனுக்கு, அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு பூணூல் அணியும் நிகழ்வு நடத்தினர்.

இவர்களின் வீட்டெதிரில் முதலை விழுங்கிய பாலகனின் வீட்டில் பிள்ளையை பறிகொடுத்த நிகழ்வை எண்ணி அழுது வருந்தினர்.

இந்த சமயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசிக்கு வந்தார். அந்தணர்கள் வாழும் வீதி வழியாக ஆலயம் சென்றார்.

அப்போது ஒரு வீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை சத்தத்தையும் கேட்டார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், அங்குள்ள அந்தணர்களை நோக்கி, காரணத்தைக் கேட்டார்.

அந்தணர்கள் சுந்தரரை வணங்கி, ஒரே வயதுள்ள இரண்டு சிறுவர்கள் விளையாடச் சென்று, குளத்தில் முதலை விழுங்கிய நிகழ்வைக் கூறி,... இந்த வீட்டுப் பாலகனுக்கு பூணூல் உபநயனம் நடக்கிறது, எதிர்வீட்டிலுள்ள பெற்றோர்களின் குழந்தையைத்தான் முதலை விழுங்கிவிட்டதால் மைந்தனை நினைந்து அழுகிறார்கள் என்றனர்.

இதைக் கேட்டு திருவுளம் இரங்கி நின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளை நோக்கி வந்து வணங்கினார்கள்.

*இன்ப மகனை இழந்தவர் நீங்களா?* என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

தங்களின் புகழைக் கேட்டு தரிசிக்க நினைத்திருந்தோம். ஈசனருளால் தாங்கள் இங்கு வரக் கண்டோம், தாங்களைக் காணும் பேறு பெற்றவர்களானோம் எனக்கூறி சுந்தரமூர்த்தி சுவாமிகள் கால்களில் வீழ்ந்து வணங்கிப் பணிந்தெழுந்து...ஆம்! முன்னமே நேர்ந்தது!, அது இருக்கட்டும் தங்களைத் தரிசிக்கவே முன் நிற்கிறோம் என்றனர்
பிள்ளையை இழந்த பெற்றோர்கள்.

இவர்கள் மகனை இழந்த துன்பத்தையும் மறந்து நம்மை வணங்கி அன்பை செலுத்துவதைக் கண்ட சுந்தரமூர்த்தி​ சுவாமிகள்,.........

இவர்கள் புதல்வனை அம்முதலை வாயினின்று அழைத்து கொடுத்தாலே, பின்னர் அவிநாசியப்பர் திருவடிகளைச் சென்று பணிந்தேன் எனக் கூறி.......

பிள்ளையை விழுங்கிய முதலைக் குளம் எங்குள்ளது? என்றார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாமரைக் குளக் கரையில் நின்று கொண்டு, மனத்தை சிவபெருமானிடம் நிறுத்தினார்.

தம் திருக்கரங்களைக் கொண்டு மோதி தாளமிட்டார்.

முதலை முன்னே விழுங்கிய சிறுவனை மீளக் கொண்டு வரும் பொருட்டுத் தம் திருவாயால் *எற்றான் மறக்கேன்* என்று தொடங்கும் தேவாரம் பாடினார்.

*உரைப்பார் உரையுகந்து உள்கவல் லார்தங்கள் உச்சியாய்!*

*அரைக்கா டரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!*

*புரைக்காடு சோலைப் புத்தொளி யூரவி நாசியே!*

*கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே!*

என்ற நான்காவது திருப்பாடலை பாடியுமுன்னே, வறன்டு கிடந்த தாமரைக் குளத்தில் மழை பெய்தது. நீர் நிரம்பி கரை வரை உயர்ந்தது.

தாமரைகள் மலர்ந்தன. முதலையொன்று கரையினை நோக்கி விரைந்து வந்தது.

உருத்திரன் தாதுவை உண்டு பண்ணினான்.

பிரம்மன் உருவத்தை உண்டாக்கினான்.

யமன் உயிரை கொடுத்தான்.

திருமால் உடல் வளர துணை செய்தார்.

விரைந்து கரை வரை வந்த முதலை, விழுங்கிய நாளின் பின்னாலான மூன்றாண்டு கால வயது வளர்ச்சியையும் சேர்த்துக் கொண்டு, கரையினில் உமிழ்ந்து விட்டு நீருக்குள் அமிழ்ந்து மறைந்து போனது.

தேவர்கள் மலர் மாரி பெய்தனர். கரையில் கூடியிருந்த மக்கள் அதிசயித்துப், ஆரவாரம் செய்தனர்.

அன்பொழுக மனம் உருகிய தாய் ஓடிச்சென்று புதல்வனை வாரியெடுத்து அனைத்து முத்தமிட்டாள்.

பெற்றோர்கள் இருவரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கால்களில் வீழ்ந்து வணங்கிப் பணிந்தனர்.

சுந்தரர் மீண்ட புதல்வனை அழைத்துக் கொண்டு, ஆலயத்துள் உள் புகுந்து அவிநாசியப்பரையும், கருணாலயச் செல்வியையும் வணங்கித் திருப்பதிகம் பாடி முடித்து வெளிவந்தனர்.

வீடாடுக்கு வந்து இந்த புதல்வனுக்கும் மங்கலம் ஒழிக்க உபநயனம் நடத்தி வைத்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

திரும்ப மலைநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று துடியலூர், திருப்பேரூர், முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, மேலும் கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்றடைந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய திருமுறை பாடல்களின் மகிமையை எத்தனை குயர் பேப்பர்களில் எழுதினாலும் முழுமையாகா.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சாலையும், வாகனமும் இல்லாக் காலத்தில் தமிழகம் முழுதும் இவர்கள் நடந்தே பயணம் செய்து, பல திருத்தலங்களை தரிசித்து, நமக்கு *திருமுறை* என்னும் இந்த அரிய பொக்கிஷத்தை கொடுத்துவிட்டுச்  சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் நம்மிடம் தந்து விட்டுச் சென்ற பதிகத்தை, இறைவனைப் பார்த்து ஒப்புவித்தோமானால், நலம்பேறு நம்மை வந்து சேரும்.

சுந்தர் பெருமானின் இப்பதிகத்தை இனியேனும் பத்து முறையாவது ஈசனின் முன்பு பாடி, வாழ்வில் பேறு அடைய அடியேன் அவா.

*சுந்தரர் தேவாரம்:*
பண்: குறிஞ்சி.

1.🔔எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் 
உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே.

🙏புற்றின்கண் வாழ்கின்ற, படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள  அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன். உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன். உன்னை எக்காரணத்தால் மறப்பேன்!.

2.🔔வழிபோவார் தம்மோடும் வந்துடன்
கூடிய மாணிநீ
ஒழிவ தழகோசொல் லாய்அரு
ளோங்கு சடையானே
பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன்
னைக்கிறி செய்ததே

🙏அருள் மிக்க , தவக்கோலத்தையுடையவனே, பெருமரப் பொழில்களையும், நிறைந்த இளமரக் காக்களையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது? உன்னை வணங்கச் செல்பவர் களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன், உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ? நீ சொல்லாய் .

3.🔔எங்கேனும் போகினும் எம்பெரு
மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண்
டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள்
வேன்பிற வாமையே

🙏மிகுதியான, ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எங்கள் தலைவனே, எம்பெருமானாகிய உன்னை நினைத்தால், கொங்கு நாட்டிலே புகுந்தாலும், மற்றும் எங்கேனும் சென்றாலும், என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர். ஆகவே ன, உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன்.

4.🔔உரைப்பார் உரைஉகந் துள்கவல்
லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச்சொல்லு காலனையே

🙏உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவு மானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

5.🔔அரங்காவ தெல்லா மாயிடு
காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை
நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி
யூர்அவி னாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண்
டகுழைக் காதனே

🙏திருப்புக்கொளியூரில் உள்ள, குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையையுடைய, அவினாசி என்னும் திருக்கோயிலை இடமாகக்கொண்ட, குழையை யணிந்த காதினை உடையவனே, உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது, எல்லாரும் அழிகின்ற முதுகாடு ; அதுவன்றியும் நீ , அம்பை எடுத்து, வரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து, மூன்று ஊர்கள் அழிய அழித்தாய்.

6.🔔நாத்தா னும்உனைப் பாடல்அன்
றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற
சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி
யூர்அவி னாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட
குற்றமுங் குற்றமே

🙏எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறொன்றைச் சொல்லாது என்றும், உனக்கு வணக்கம் என்றும் சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளிவடிவாய் உள்ள வனே, பூவையணிந்த, நீண்ட சடையை உடையவனே, நடனம் ஆடு பவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, அவினாசி என்னும் திருக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ?

7.🔔மந்தி கடுவனுக் குண்பழம்
நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ் சலம்புட்பம்
இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி
யூர்அவி னாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன்
நரகம் புகாமையே

🙏பெண்குரங்கு, ஆண்குரங்குக்கு, அது செல்லும் மலைப்புறங்களில், உண்ணத் தக்க பழங்கள் கிடைக்கவேண்டி, காலை, நண்பகல், மாலை என்னும் காலங்கள் தோறும் நீரையும், பூவையும் இட்டு வழிபாடு செய்ய, அதன் மனத்திலும் புகுந்து இருப்ப வனே, திருப்புக்கொளியூரில் உள்ள, அவினாசி என்னும் திருக் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற, ` நந்தி என்னும் பெயரை உடையவனே, உன்னிடம் நான் நரகம் புகாதிருத்தலையே வேண்டிக் கொள்வேன்.

8.🔔பேணா தொழிந்தேன் உன்னைஅல்
லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி
யேல்இன்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி
யூர்அவி னாசியே
காணாத கண்கள் காட்டவல் 
லகறைக் கண்டனே

🙏அணிகலமாகவும், வில்நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் உன்னையன்றிப் பிறதேவரை விரும்பாது நீங்கினேன். அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன். காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல, நஞ்சினையணிந்த கண்டத்தை யுடையவனே, என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின், உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன்.

9.🔔நள்ளாறு தெள்ளா றரத்துறை
வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்
தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்
னைக்கிறி செய்ததே

🙏திருநள்ளாறு, திரு அரத்துறைகளில் உள்ள நம்பனே, வெள்ளாடையை விரும்பாது, புலித்தோல் ஆடையை விரும்புபவனே, பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக் கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது?

10.🔔நீரேற ஏறு நிமிர்புன்சடை
நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ
ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
லார்க்கில்லை துன்பமே.

           திருச்சிற்றம்பலம்.

🙏நீர் தங்குதலால் பருமை, பெற்ற, நீண்ட புல்லிய சடையை உடைய, தூய பொருளானவனும், போர்செய்யும் எருதை ஏறுபவனும், கருமை பொருந்திய கண்டத்தையுடையவனும் ஆகிய, திருப்புக்கொளியூரிலுள்ள, அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது தொண்டனாகிய நம்பியாரூரன், ஒரு பயன் கருதிப் பாடிய, இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும் .

            திருச்சிற்றம்பலம்.

இத்துடன் நான்கு நாட்களாக இத்தல அருமைகள் பெருமைகள் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.

*இவ்வாலய தரிசனம் செய்யுங்கள். நன்மை பேறு அடையுங்கள்! நீவீர் வாழ்க! வளர்க!!*

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *விகிர்தேசுவரர் திருக்கோயில், திருவெஞ்சமாக்கூடல்.*

___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment