Friday, April 13, 2018

Arthanareeswarar temple, Tiruchengode

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
__________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............................)
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர் எண்: 259*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு:*
___________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:*
அர்த்தநாரீஸ்வரர்,  மாதொரு பாகர்.

*💥இறைவி:* பாகம்பிரியாள்.

*🌴தல விருட்சம்:* இலுப்பை மரம்.

*🌊தல தீர்த்தம்:*  தேவ தீர்த்தம் (அர்த்தநாரீஸ் பாதத்தில் ஊறி வரும் சுணை ), கணபதி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், குமார தீர்த்தம், பாவநாச தீர்த்தம், தீன்ம தீர்த்தம், வைரவ தீர்த்தம், வாண தீர்த்தம், சண்முக தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்ணி தீர்த்தம், சப்தகன்னியர் தீர்த்தம், நாக தீர்த்தம்.

*🔥ஆகமம்:*

*ஆலயப் பழமை:* இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதானது.

*📔தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்.

*🛣இருப்பிடம்:*
ஈரோட்டிலிருந்து
இருந்து பதினெட்டு கி.மி. தொலைவிலும், சேலத்தில் இருந்து இருபத்தேழு  கி.மி. தொலைவிலும், திருச்செங்கோடு உள்ளது.

பேருந்து வசதிகள் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து திருச்செங்கோட்டிற்கு இருக்கின்றன.

*✉அஞ்சல் முகவரி:*
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,
திருச்செங்கோடு.
நாமக்கல் மாவட்டம்.
PIN - 637 211

*🌸ஆலயப் பூஜை காலம்:*
தினந்தோறும் காலை 6.00  மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*🏜கோயில் அமைப்பு:*
தேவாரப் பதிகங்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பாடப்பெற்ற சிவஸ்தலத்தைத்தான் இப்போது திருச்செங்கோடு என்று அழைக்கப்படுகிறது.

இந்த சிவஸ்தலத்தில் உள்ள கோயில் மேற்கு நோக்கி ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது.

இந்த மலை செந்நிறமாக இருப்பதால், செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து தொள்ளாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்ல சுமார் ஆயிரத்து இருநூற்று ஐம்பது படிக்கட்டுக்கள் ஏற வேண்டும்.

அல்லது, மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலமாகவும் செல்லலாம்.

மேற்கு கோபுரம் மூன்று நிலைகளைத் தாங்கியபடி காட்சி அளிக்கிறது. வடக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்து இருபது படிகள் கீழிறங்கிப் போனால் வெளிப் பிரகாரத்தை அடையலாம்.

இத்தலத்தில் இறைவி தவம் செய்து இறைவனது திருமேனியில் ஒரு பகுதியைத் தம்முடையதாகப் பெற்றார் என்று புராணம் கூறும்.

திருச்செங்கொடு மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோயில் இருக்கிறது.

திருவண்ணாமலை போல மலையே தெய்வமாக அமைந்துள்ளது இத்தல மலை. திருவண்ணாமலை கிரிவலம் போல இங்கும், இந்த மலையை அமாவாசை தோறும் கிரிவலம்வந்து வணங்குகின்றனர் பக்தர்கள்.

இந்தப் பாதை ஆறு கி.மி தூரம் கொண்டது. இந்த மலையின் வடிவழகைக் காண்பதற்கே ஒருமுறையாவது எல்லோரும் திருச்செங்கோடு செல்ல வேண்டும் என்பது அடியார்களோட அடியார்களின் அடியேனின் அவாவும் கூட.

மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் மூன்று கி.மி தூரத்திற்கு மலையிலேயே சாலை அமைக்கப் பட்டிருக்கிறது.

மலை ஏறும் போதே இந்த மலையைச் சுற்றி உள்ள சில மலைகளின் தரிசனமும் நமக்குக் கிடைக்கிறது. இந்த மலைச் சாலை திருக்கோயிலின் வாசல் வரை நம்மை அழைத்துச் செல்வது மனதிற்கு இனிமையாக இருந்தது.

நாங்கள் சென்றிருந்த நாளில் அடித்த வெய்யிலின் தாக்கத்தில் இம்மலை, கயிலாய மலைபோல, தக தகவென மின்னியது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடன் அமையப் பெற்றிருந்தது இந்தத் திருத்தலம்.

சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி இருப்பது உலகிலேயே இத்தலத்தில் மட்டும்தான். இதுவே இத்திருக்கோயிலின் பெருஞ்சிறப்பாகும்.

தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் என பல்வேறு தெய்வீக நூல்களில் இத்திருக்கோயில் போற்றி பாடப்பட்டிருக்கிறது.

இத்திருக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி பரிவார தெய்வங்கள் என மூன்று தனித்தனி கோயில் அமைப்புடன், ஒரே திருக்கோயிலாய் அமையப் பெற்ற திருத்தலம் இது.

இந்த திருச்செங்கோடு மலைக்கோயிலை
*மலைத்தம்பிரான்* என்றும் அழைக்கின்றனர்.

நாமக்கல் செல்லும் பாதையில் சிறுது தூரம் சென்று மலையடிவாரத்தை அடைந்து படிக்கட்டு வழியாகவும் செல்லலாம்.

முதற்படியில் இருந்த விநாயகப் பெருமானைக் கண்டு, முதலில் வணங்கினோம். நம் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டு வணங்கி நாம் படியேறத் தொடங்கினோம்.

இதனருகிலேயே ஆறுமுகப் பெருமானது கோயிலும் அமைந்திருந்தது. இவரையும் கண்டு கைதொழுது கொண்டோம்.

முதல் வணக்கத்தை விநாயகனுக்கும், மறுவணக்கத்தை முருகனுக்கும் செலுத்தி சந்தோஷம் கொண்டோம்.

இந்த முருகன் திருக்கோயிலின் முன்பு கிணறு இருந்தது. இங்கிருந்தே மலைக் கோயிலுக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேலே செல்லும் வழியில் செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் மடம்,
திருமுடியார் மண்டபம்,
தை மண்டபம் போன்ற மண்டபங்களை கண்டு ஆனந்தித்தபடியே  நடந்தோம். 

இதனை அடுத்து வீரபத்திர சுவாமி திருக்கோயில் இருந்தது. உள் புகுந்து, முன் வந்து நின்று பவ்யபயத்துடன் வணங்கி வெளிவந்தோம்.

இதன் மேல்புறம் நந்தி கோயில் இருந்தது. வணங்கிக் கொண்டோம். இங்கு பால், பசுக்கள் சம்பந்தமாக அவற்றின் வளம் பெருகி குடும்பங்கள் செழித்து எல்லா நலன்களையும் பெற்று வாழ இங்குள்ள நந்தி பகவானுக்கு, பக்தர்கள் பொங்கலிட்டு, வெண்ணை சாற்றி வேண்டி வழிபாடு செய்து விட்டு செல்வதை காண முடிந்தது.

நந்தி கோயிலில் இருந்து சற்றே கீழிறங்கியபோது, நந்தி மலைக்கும், நாக மலைக்கும் இடையே ஒரு பள்ளம் இருந்தது. இப்பள்ளத்தை *நாகர்பள்ளம்* என அழைக்கிறார்கள்.

இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் அறுபது  அடி நீளத்தில் இந்த பிரம்மாண்டமான தோற்றம் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது.

நாகரின் முழு உடலின் மீது பக்தர்கள், மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசியபடி இருந்தனர்.

இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது தமக்கிருந்த நாக தோஷம் நீங்குகிறது என அங்கிருந்தோர் கூறினர்.

படமெடுத்த நிலையில் அமைந்துள்ள ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது மிக பிரமிப்பாக தெரிந்தது.

மேலும் உயரே சென்றால் சிங்க மண்டபம் இருந்தது. இதற்கு அடுத்து அமைந்துள்ளது
அறுபதாம்படி என்னும் சத்தியவாக்குப் படிகள். இப்படியைப் பற்றி விசாரிக்கையில்.........

இந்தப் படிகளில் நின்று செய்யப்படும் சத்தியத்திற்கு அளவற்ற மதிப்பு என்பது நம்பிக்கை என்கின்றனர்.

இந்தப் படிகளின்மேல் நின்று யாரும் பொய்யாக சத்தியம் செய்யமுடியாது என்றும் கூறினர்.

பல்வேறு சண்டை சச்சரவுகள், வழக்குகள் இந்தப் படிகளின் மேல் செய்யப்படும் சத்தியத்தினால் முடிவுக்கு வருகின்றன என்று அங்கு ஈசனை காண வந்த பக்தர்கள் கூறக் கேட்டோம்.

இதுபோன்ற ஐதீகங்களினால்தான் சத்தியங்களும், உண்மைகளும் ஓரளவேனும் இன்று உயிரோட்டத்துடன் இருக்கின்றன என்பதை நாமும் உணர்ந்தோம்.

இந்த சத்தியவாக்குப் படிகளின் கடைசியில், சுப்ரமணியசுவாமி திருக்கோயில் இருந்தது. மனமினிக்க வணங்கிக் கொண்டோம்.

அறுபதாம் மண்டபம் இருந்தது. இங்கு அமர்ந்து கொஞ்ச நேரம் ஓவ்வெடுத்துக் கொண்டோம்.

இங்கு அருகில், கோபுரவாயில் மண்டபமும் மேலும் பல மண்டபங்களும் அமைந்திருந்தன.

இருப்பிடத்தை விட்டு எழுந்து திருக்கோயிலின் ராஜகோபுரத்தைக் கண்டோம். *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோயிலின் உள்ளே நுழைந்த உடனே இடது புறத்தில் இருந்த விநாயகப் பெருமானை நம் தலைக்கு குட்டு வைத்து வணங்கிக் கொண்டோம்.

அடுத்திருந்த செங்கோட்டு வேலவனின் சன்னதிக்கு வந்தோம். அருள்மிகு செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே இருந்த மண்டபத்தின் சிற்பங்கள் நம் மனதைக் கவர்ந்தது.

பொதுவாகவே இதுவரை பார்த்து வந்த எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களிலுள்ள பல்வேறு விதமான சிற்பங்கள் நுனுக்கமான அமைப்புகள், ஆச்சரியபட வைக்கும் அழகுடன் காட்சியாகத் தெரிந்தன.

திருக்கோயில் முழுக்க உள்ள எல்லா தூண்களிலும் சிற்பக்கலையின் திறத்தில் உயிரோட்டம் தெரிந்தது.

ஒவ்வொவொரு சிற்பங்களின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும் கண்டு, இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்ற எண்ணி எண்ணி வியந்து கொண்டே நடந்தோம்.

சிற்பங்களை ரசிப்பதிலேயே வேகு நேரம் நமக்கு செலவாகிப்போனது. காணப்பெறாத அந்த சிற்பியை, *வாழ்க உம் குலம்* என மனநிறைவாக மனதுக்குள் வாழ்த்திக் கொண்டோம்.

அடுத்து, திருமுருகன், செங்கோட்டுவேலவனை வழிபட அவர் சந்நிதிக்குச் சென்றோம்.

முருகன் வலக்கையில் வேலும், இடக்கையில் சேவலும் என ஏந்திக்கொண்டு, நின்ற கோலத்தில், செங்கோட்டு வேலவனாக காட்சி தந்தார்.

முருகப்பெருமானது தரிசனம் காணக் கிடைக்கப் பெற்ற நமக்கு, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய முருகப் பெருமானது வடிவழவு மிக மிக அற்புத அழகாக இருந்தது.

பேரழகன் முருகனின் அழகில் மயங்கியநாம், மனமினிக்க வணங்கிக் கொண்டு, அவனருட் பிரசாதத்தை உள் வாங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து, அம்மையும் அப்பனுமாக ஒருசேர காட்சிதரும், அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு வந்து சேர்ந்தோம்.

இங்கே சன்னதியின் கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் நின்ற திருக்கோலத்தில் அருளினை வழங்கிய படி காட்சி தந்தார்.

அர்த்தநாரீஸ்வரர் என்றும், மாதொரு பாகர் என்றும் அழைக்கப்படும் மூலவர், சுமார்  ஆறடி உயரம் வரை உள்ளவராகத் காட்சியருளினார்.

இவர், உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி அருட்காட்சி தந்தார்.

தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் ஏந்தி நின்றார்.

அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு அலங்கரித்திருந்தன.

சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிந்திருந்தனர் அர்த்தநாரீஸ்வரர். இவரின் காலடியில் ஒரு தீர்த்தம் சுரந்து வெளியேறிக் கொண்டே இருந்தன.

மூலவரின் காலடியில் இருக்கும் இந்த தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்குமாம் குருக்கள் சொன்னார்.

மூலவரை தரிசிக்க வரும் பவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுவது வழக்கம்.

நாம் தரிசனம் செய்யும் தருணத்தில், தீர்த்தத்தினைக் கேட்டதற்கு....பூஜைக்கு நாழியாகிவிட்டது, இத்தீர்த்தம் வேனுமென்றால் முன்னமே வரவேண்டியது தானே!, என அனைவரையும் பார்த்து ஒரு அர்ச்சகர் கூறிச் சென்றுவிட்டார்.

வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும்.

அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பர். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள் என்று இவ்வாலயத்திலிருந்த முக்கிய நபர் ஒருவர் கூறினார்.

இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.

தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது.

அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்தலத்து முருகனைப் பற்றி பாடியிருக்கிறார்.

செங்கோட்டு வேலவர் சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்திலுள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு ஒரு ஹசான்றாகக் காட்சி அளிக்கின்றன.

சிவனின் இடப்பாகம் பெற அம்பாள் பூஜித்த லிங்கம், மூலஸ்தானத்திற்குள் இருக்கிறது.

காலை, மதியம், மாலையில் நடக்கும் பூஜையின்போது மட்டும் இந்த லிங்கத்தை அர்த்தநாரீஸ்வரர் அருகில் வைத்து பூஜிப்பர் அந்நேரம் நாம் அங்கு இருந்தால் தரிசிக்கலாம்.

இந்த பூஜைகளை அம்பிகையே செய்வதாக ஐதீகம். உச்சிக்காலத்தில் இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கும்.

படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது.

நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

ஆதிசேஷன், மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்னு தனிக்கோயிலில் காட்சி தருகிறார்.

வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது இவருக்கு தனியே கொடியேற்றி பத்தாம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும்.

சிவராத்திரியன்று இரவில் இவருக்கு நான்கு  கால பூஜை நடப்பது விசேஷம்.

அர்த்தநாரீஸ்வரர் சதயம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருப்பதால், இந்நாளில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இவரை வணங்க வருகிறார்கள.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும்.

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளிமீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் முப்பது ஒற்றைக் கற்றூண்கள் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டு நம்மை மிரள வைக்கிறது.

செங்கோட்டு வேலவர் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் இருந்தன.

ஒவ்வொன்றையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டே நகர்ந்தோம்.

இம்மண்டபத்தின் கூரைப்பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல்சங்கிலிகள் ஆகிய சிற்ப விநோதங்கள் இருக்கின்றன.

இவைகள், வேறெங்கும் காணக்கிடைக்காத உளியில் பிறந்த உயிர்கள். அப்பப்பா! என்ன ஒரு கலை.

நாகேஸ்வரரின் கருவறையும் சிற்ப வேலைப்பாடுமிக்கதாய் இருந்தது. வணங்கியதும், சிற்பங்களை ரசிக்க ஆரம்பித்து விட்டோம்.

கருவறை முன்மண்டபத்தில் குதிரை மற்றும் யாளி மீதுள்ள வீரர்களின் கற்றூண் சிற்பங்கள் வியப்புக்குரியது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிற்பங்கள் முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச்செல்வங்கள் என்றால் அது உண்மை.

அம்மையப்பரின் இவ்வடிவினைக் கண்ட நமக்கு உடலின் உரோமக்கால்கள் சிலிர்த்தது. அம்மையப்பனை கண்ணிமை விலகாது நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் வணங்கிப் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

நம்மைச் சுற்றி பக்தர்கள் நெருக்கும் நெருடலைக் கூட நாம் உணரப் பெறாது, நம் கண்களையும், மனதையும் வயப்படுத்தி நம்மை நிற்கவைத்திருந்தான் இந்த ஈசன்.

இந்த நிலையிலிருந்து விடுபட சற்றுநேரம் ஆனது. அதுவும் பின்னால் வரும் பக்தர்களின் தரிசனம் காண வேண்டுமே என்ற நிலை வந்ததினால்................
இதிலிருந்து  மீண்டோம்.

வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கும் அம்மையப்பனை, தீபாரதணை ஜோதியுடன் தரிசித்துவிட்டு, மனமுருகி பிரார்த்தித்து வணங்கி அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

இங்கிருத்து அடுத்து, நாகேஸ்வரர் சன்னதியை அடைந்தால், ஸ்ரீதேவி தாயார், பூமா தேவிதாயார்
 உடனுறை ஆதிகேசவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

இதே மண்டபத்தின் தரையில் ஆமை மீது ஒரு மண்டபம் எழும்பி இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதன் மேற்பகுதி மரத்தால செய்யப்பட்டிருக்கிறது. திருவிழாக் சமயங்களில் உற்சவ பெருமானை இந்த மண்டபத்தில் வைத்துதான் பூஜைகள் நடைத்துகிறார்கள் என குருக்கள் நம்மிடம் கூறினார்.

மெலிதான நடையில் சில அடிகள் நடந்து வர, நாரி கணபதி சன்னதிக்கு வந்தோம். இவரையும் கண்டு தலையில் குட்டிக் கொண்டு நம் வணக்கத்தை தெரிவித்து, 'நல்வன நிகழ அருள்வாய்' என வேண்டுதலை விண்ணப்பித்து நகர்ந்தோம்.

இவரருகே தாண்டவப்பத்திரை
விலாச மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், ஆலங்காட்டுக் காளியும் எதிர் எதிரே இருந்தார்கள்.

இவர்களைப் பார்த்ததும், சிரசிற்குமேல் குவிந்தது நம் கரங்கள். ஈசனின் தூக்கிய திருவடிக்கு நம் சிரம் தாழ்ந்து பணிந்தது. காளியுடானான ஊர்த்தாண்டவரை சேர்த்து கண்டதால், மனம் ஏதோ ஒரு வகையான மகிழ்ச்சியில் லயிப்பதைப் போன்ற உணர்வினைப் பெற்றோம்.

மனமினிக்க வணங்கிக் கொண்டு, இங்கு பெறப்பட்ட விபூதியை, நெற்றிக்கு மேலும் மேலும் திரித்து தரித்துக் கொண்டோம்.

நடராஜரின் தரிசனம் கண்டு நகரவும், இந்த  சன்னதிக்கு அருகே இந்தத் தலத்தின்  தலவிருட்சமான இலுப்பை மரம் இருப்பதைக் கண்டோம்.

அருகில் சென்று வலம் வந்து, விருட்சத்தைப் தீண்டப்பெறாமல் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் சக்தி நிலைகள், மூலஸ்தான கருவறை, கொடிமரம் என இவற்றிற்கு அடுத்தாகத்தான் தலவிருட்சம் இருக்கும்.

ஆனால், இத்திருக்கோயிலில், நடராஜருக்கும், சஹஸ்ர லிங்கத்திற்கும் இடையே இக்கோயில் தல விருட்சமான இலுப்பை மரம் இருந்தது. இதுவும் சிறப்பு வாய்ந்த ஒரு அமைப்பாகும்.

பக்தர்கள் தங்களது வாழ்வு வளம் சிறக்க வேண்டும் எனக்கூறி  இந்த புனித விருட்சத்தினை சுற்றி வந்து வழிபாடு செய்து செல்வதைக் காணமுடிந்தது.

இந்த இலுப்பை விருட்சத்தை அடுத்து பஞ்ச லிங்கங்கள், விஸ்வநாதர்,
மல்லிகார்ஜுனர், தென்முகக் கடவுள்,
கொற்றவை, சூரிய பகவான், நாக ராஜா, பைரவ மூர்த்தி போன்ற பரிவார தெய்வங்கள் சந்நதிகள் இருந்தன.

இங்கிருக்கும் ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கித் துதித்தோம்.

இத்திருக்கோயிலின் கிழக்கு திசையில் சுமார் முன்னூறு அடிக்கும் மேலாக ஏறிச் செல்ல வேண்டியிருந்தது.

சிறு குன்றின் உச்சியில் பாண்டீஸ்வரர்
திருக்கோயில் இருக்கிறது.உச்சிப் பிள்ளையார் கோயில் எனவும் இக்கோயிலை அழைக்கிறார்கள்.

*தல அருமை:*
திருச்செங்கோடு திருமலை உருவான வரலாறு:

ஆதி காலத்திலே ஆதி சேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே உண்டான சண்டையில் யார் பெரியவன், வலியவன் என்ற வாக்குவாதத்தில், இருவரும் போர் புரிந்து கொண்டனர்.

இப்போரினால் உலகமெங்கும் பேரழிவுகள் உண்டாயின. இது போதாதென்றுமேரு மலையின் உச்சியை பலம் கொண்ட மட்டும் ஆதிசேஷன் அழுத்திப் பிடிக்க, வாயுதேவன் அந்தப் பிடியினை தளர்த்திட வேண்டும் என இருவருக்கும் ஒப்பந்தம்.

இவ்வாறு நடந்த வேளையில், இவர்களது சண்டையால் உலகம் அழிந்து விடப்போகிறது எனும் பயத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து நாகரை வணங்கி இந்தப் போரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டனர்.

இவர்களது பேச்சிற்கிணங்க ஆதிசேஷனும் தன் பிடியினை சற்று தளர்த்த, இதுதான் சமயம் என்று வாயு அடித்த வேகத்தில் மேரு மலையின் ஒரு சிகரப் பகுதியும், ஆதிசேஷனின் ஒரு தலையும் பெயர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு தென்திசைப் பக்கமாக வந்து விழுந்து விட்டன.

இவ்வாறு ஆதிசேஷனின் தலையுடன் மோதிய வேகத்தில், இதன் இரத்தம் தோய்ந்து செந்நிற மலையாக மாறிவிட்டது.
இதுவே திருச்செங்கோடு மலையாக இருக்கிறது.

இவ்வாறு பறந்து வந்து தென் திசையில் விழுந்த மேரு மலையானது, மூன்று பாகங்களாக சிதறி, ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், இன்னொன்று திருசெங்கோடாகவும் உருமாறி படிந்து விட்டது.

*உமையவள் இடப்பாகம் பெற்ற வரலாறு:*
கைலாசபுரியில் இருந்து தங்களை பிரிந்து சென்ற முருகப் பெருமானை நினைத்து உள்ளம் வருந்திய நிலையில் இருந்த சிவபிரான், தன் மனைவி பார்வதி தேவியை அழைத்துக் கொண்டு இயற்கையைக் கண் குளிரக் கண்டு, தன் மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள எண்ணினார்.

அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், தன் கணவருடன் உடன் செல்லும் களிப்பின் மிகுதியால், தன் திருக்கரங்களால், பெருமானது இரு கண்களையும் விளையாட்டுத் தனமாய் மூடி விட்டார்.

இதனால் சூரியன் ஒரு கண்ணும், சந்திரன் மறு கண்ணுமாய் விளங்கும் சிவபெருமானது கண்களை மூடியதன் பலனாய் உலகமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ட தேவர்கள், முக்கண்ணனை சந்தித்து இவ்வாறு பார்வதி தேவி தங்களது கண்களை மூடிய காரணத்தால் உலகில் பல்வேறு உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்து விட்டது.

இந்தக் காரணத்தால், உனக்கு பாவம் சேர்ந்தது. அந்த பாவத்தை நீ பூவுலகில் பிறந்து, கேதாரம், காசி, காஞ்சிபுரம் போன்ற க்ஷேத்திரங்களில் தவம் மேற்கொள்!.

உரிய நேரம் வரும்போது, நான் உன்னை வந்து சந்தித்து என்னுடன் அழைத்துச் செல்வேன் என கூறியருளினார்.

இதனால் வருத்தமுற்ற பார்வதி தேவி தனித்தனி உருவாய் உள்ளதாலேயே இத்தனை கஷ்டங்களும், ஆகையால் இறைவன் சொல்லுக்கிணங்க கேதாரம், காசி, காஞ்சி சென்று எல்லா இடங்களிலும் தவம் புரிந்தார்.

இவ்வாறாக காஞ்சியில் மணலைக் கூட்டி சிவலிங்கள் செய்து அதையே சிவபிரானாக எண்ணி தவமியற்றும் வேளையில் பெரு வெள்ளம் வந்தது.

எங்கே தன் மணல் லிங்கமும் தண்ணீரோடு சென்று விடுமோ என பயந்து அதனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

இக்காட்சியைக் கண்ட சிவபிரான் மனமிரங்கி கருணையுடன் வேண்டும் வரம் கேள் என்றார் உமையிடம்.

உலக நாயகி, சிவபெருமானிடம் தங்களது திருமேனியில் இடப் பாகம் தந்தருள வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு, நீ எனது கண்களை மூடிய பாவத்தினை இந்த காஞ்சியில் தவம் புரிந்ததால் நீங்கப் பெற்றாய்.

திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு தவம் மேற்கொள்வாயாக எனக் கூறினார்.

அங்கு தவமிருந்த தேவியிடம், உனது எண்ணம் அறிந்தேன், ஆனாலும், நிறைவாக நீ செந்நிற மலையான திருச்செங்கோடு சென்று தவமியற்ற எனது இட பாகத்தை வழங்கி அருளுவேன் என்று கூறிச் சென்றார்.

இதனை நிறைவேற்ற திருச்செங்கோடு சென்று பல காய் கனிகளுடனும், பல்வேறு பூஜை பொருட்களுடனும் புரட்டாசி மாதம், வளர்பிறை, அஷ்டமி திதியில் கேதார கௌரி விரதம்தொடங்கினாள் அன்னை.

புரட்டாசி மாதம், தேய்பிறை சதுர்த்தியன்று தேவியின் முன்னே தோன்றி, அன்னையின் தவத்தை மெச்சி, தனது இடபாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்தருளினார்.

இத்திருத்தலத்தில் கேதார கௌரி விரதம் இருபத்தோர் நாட்கள் கொண்டாடப்பட்டு, புரட்டாசி அமாவாசையன்று எழுந்திருத்தும் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

*பிருங்கி முனிவர் வழிபட்ட வரலாறு:*
ஒரு சமயம் திருக் கைலாயத்தில் பிரம்மன், விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் புடை சூழ, பரமசிவன் பார்வதி ஒன்றாய் வீற்றிருந்தனர்.

அனைவரும் சக்தி சிவன் என இருவரையும் வணங்கிய வேளையில் பிருங்கி முனிவர் மட்டும் சக்தியை விடுத்து சிவனை மட்டும் வணங்கிச் சென்றார்.

இதனைக் கண்டு மனம் வருந்திய உமையவள், தன் பதியிடம் தன் மன வருத்தத்தைக் கூறினார்.

பார்வதி தேவியின் மன வேதனையை புரிந்து கொண்ட சிவபெருமான், பிருங்கி முனிவரிடம் சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தி இல்லை என்ற உண்மையை பிருங்கி மகரிஷிக்கு எடுத்துரைத்தார்.

தன் தவறை உணர்ந்த மகரிஷி, அங்கேயே தங்கி அம்மையப்பனுக்கு சேவை செய்து கொண்டுள்ளார்.

*ஊமை பேசிய வரலாறு:*
பல காலங்கள் முன்பு கொங்கு நாட்டில்
காடம்பாடி எனும் ஊரில்
பாததூளி, சுந்தரம்
தம்பதியர் சிவ பக்தர்களாய் வாழ்ந்து வந்தனர்.

இவர்களிடத்தில் எல்லா செல்வங்களும் நிறைந்து காணப்பட்டாலும், பிள்ளைச் செல்வம் இல்லாத காரணத்தால் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தனர்.

பெரியவர்களின் ஆலோசனைப் படி இந்த திருச்செங்கோடு திருத்தலம் வந்து இத்தல இறைவனை வேண்டி வணங்கிட, இத்தம்பதியினருக்கு சந்தான பாக்கியம் உண்டானது.

அந்தக் குழந்தைக்கு மூன்று வயது ஆகியும் பேசும் திறனற்று இருந்தது. இதனைக் கண்டு மனம் வெதும்பிய பெற்றோர், ஈசன் அருளால் கிடைத்த பிள்ளையை ஈசனிடமே விட்டு விடுவோம் என்றெண்ணி திருச்செங்கோடு திருத்தலம் வந்தடைந்தனர்.

இதனிடையே ஏமப்பள்ளி 
என்னும் ஊரில், எல்லா நற் குணங்களுடன் கூடிய துறவின் மேல் விருப்பமுள்ள, சிவ பக்தன் வேலப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார்.

வேலப்பனது கனவில் வந்த நமசிவாயம், தம்முடனே வந்திருந்து தமக்குப் பணிசெய்து வாழப் பணித்தார் சிவபிரான்.

அதனை ஏற்று சிவனடியாராகவே வாழ்ந்து கொண்டிருந்தார் வேலப்பன்.

இவர் பல தொண்டுகள் புரிந்தும், இறைவனுக்கு சாமரம் வீசி திருத்தொண்டு புரிந்து வந்தபடியால் அவருக்கு சாமர வேலைப்ப பூபதி என்ற பெயரும் உண்டானது.

இந்நிலையில், இத்திருத்தலம் வந்தடைந்த காடம்பாடி தம்பதியினர், தம் குழந்தையை இறைவனிடமே ஒப்படைக்க எண்ணியபடி, வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடக்கும் போது தேர் காலில் குழந்தையை வைத்து விட்டனர். தேரை இழுத்து வந்து கொண்டிருந்த வேலப்பன்.

இந்த தம்பதியினரின் செயலைக் கண்டு அதிர்ச்சியுற்று இக்குழந்தை மாய்ந்தால் என் உயிரும் சேர்ந்து போகட்டும் என்று வேண்ட, அதிசயிக்கத் தக்க வகையில் ஓடி வந்து கொண்டிருந்த தேர் சக்கரம் பாலகனின் தலையைத் தாண்டிச் சென்றது.

பேசாத குழந்தையும் இதழ் விரித்து பேசத் தொடங்கியது. சிவ சிவ.

*சம்பந்த பெருமான்:*
ஞானசம்பந்தர் பெருமான் திருச்செங்கோடு வந்து சில காலம் தங்கியிருந்து சிவதொண்டு புரிந்து கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட பருவ மாற்றத்தால், மக்களை குளிர் சுரம் பீடித்துக் கொண்டது. இதனைக் கண்டு மனம் வாடினார் ஞான சம்பந்தர்.

இந்த சுரமென்னும் உடல் உபாதை நீங்கிட இத்தலத்திலேயே பெருமான் முன்பு பதிகம் பாடினார்.

இத்தலத்தில் ஞானசம்பந்தரால் பாடப்பட்ட  இப்பதிகத்தை இறையன்புடன் ஓதி வந்தால் தீவினையால் வரும் நோய்கள் நம்மை பாதிக்காது என்பது தெய்வீக நம்பிக்கை.

*தல பெருமை:*
ஒரு சமயம் கயிலைமலையில் பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது சிவனைக் காண வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி வலம் வந்தார்.

ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை. இதனால் பார்வதி தேவி கோபமடைந்தார். சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார்.

பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார்.

சிவன் இவருடைய தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார்.

சிவன் பிருங்கி முனிவருக்கு சிவன்,  மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார்.

ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, சிவனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.

இதனைக் கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி சிவனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி சிவனை நோக்கிக் கடுமையான தவத்தினை மேற்கொண்டார்.

சிவன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார்.
பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார்.

பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருவரையும் வணங்கினார்.

*மேற்குதிசை இராஜகோபுரம்:*
கோவை மாவட்டம் காடாம்பாடி எனும் ஊரில் ஐநூற்றுச் செட்டியார் எனும் இனத்தில் பிறந்த பக்தர் பாததூளி- சுந்தரியம்மாள் தம்பதியினருக்கு மகப்பேறு வாயக்காமல் இருந்து வந்தனர்.

இவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை தொடர்ந்து வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர்.

உமைபாகனுக்கு ஐந்து  வயது ஆகியும் வாய் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர்.

உமைபாகன் மீது தேர் எறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தானதருமம் செய்து வந்துள்ளனர் பாததூளி- சுந்தரியம்மாள்.

இவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றினைந்து திருச்செங்கோடு மலைமீது இராஜகோபுரம் அமைத்து தந்திருக்கின்றனர்.

*சம்பந்தர் தேவாரம்:*
பண்: வியாழக்குறிஞ்சி.

1.🔔வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்தண வும்விரலா ளொருபாக மமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தண னைத்தொழுவார் அவல மறுப்பாரே.

🙏விரிக்கப் பெற்ற பூணுநூல் திகழும் திருமார் பினனாய், நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து, பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய அழகிய தண்ணளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.

2.🔔அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.

🙏அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கை நதியோடு பாம்பினையும், சடையின்கண் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையின்கண் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடைய குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுவார் தடுமாற்றம் தவிர்வர்.

3.🔔பாலன நீறுபுனை திகழ்மார்பிற் பல்வளைக்கை நல்ல
ஏல மலர்க்குழலா ளொருபாக மமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.

🙏பால் போன்று வெள்ளிய திருநீற்றைப் புனைந்து விளங்கிய மார்பினோடு பல்வகை வளையல்களையும் பாங்குறப்புனைந்த கையினளாய், மணம் கமழும் நறுமலர்களைச் சூடிய கூந்தலினளாகிய உமையம்மை ஒரு பாகமாக அமைந்த கோலத்தோடு அழகிய மலர்கள் பூத்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய நீல நன்மாமிடற்றானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே நீதியாகும்.

4.🔔வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பி னண்ணும் 
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறு மந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.

🙏கச்சணிந்த தனங்களை உடைய அழகிய உமையம்மை விளங்கும் திருமார்பின்கண் கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலையோடு சினம் பொருந்திய பாம்பை அணிகலனாகப் பூண்டு சிறப்புப் பொருந்திய அந்தணர்கள் வாழும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய கங்கையணிந்த செஞ்சடையனாய் விளங்கும் சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதல் நீதியாகும்.

5.🔔பொன்றிக ழாமையொடு புரிநூல் திகழ்மார்பி னல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.

🙏திருமகள் விளங்கும் திருமாலாகிய ஆமையினது ஓட்டினோடு முப்புரிநூல் திகழும் மார்பின்கண் நல்ல பன்றியின் கொம்புகளையும் அணிந்து மூங்கில் போன்ற தோளினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்கக் குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் வானில் திகழும் மின்னல் போன்று விளங்கும் செஞ்சடையானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே மெய்ப்பொருளாகும்.

6.🔔ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.

🙏மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில் தடுத்த கங்கையோடு, பிறையையும் சடையின்கண் அணிந்து, தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் வேர்ப்பற்றோடு நீங்கும்.

7.🔔நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
வாட லுடைதலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.

🙏கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களோடு நிமிர்ந்து தோன்றும் சிவந்த சடைகள் தாழ்ந்து தொங்க, வெண்மையான புலால் நீங்கிய தலையோட்டில் பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையனாய், வெண்காந்தள் மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை நிலங்களால் சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய பெருமை உடையோனின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் தேய்ந்தொழியும்.

8.🔔மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவ னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.

🙏செஞ்சடைமீது நல்ல ஊமத்த மலரையும் இள மதியையும் கொத்தாக அலரும் கொன்றை மலருடன் ஒருசேர நெருங்கச்சூடிப் பூங்கொத்துக்கள் அலரும் தண்ணிய பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தத்துவனைத் தொழுவார் தடுமாற்றங்கள் இலராவர்.

9.🔔செம்பொனின் மேனியனாம் பிரமன்றிரு மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போ லொளியாய வாதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
நம்பன தாடொழுவார் வினையாய நாசமே.

🙏சிவந்த பொன்போன்ற மேனியினன் ஆகிய பிரமனும் திருமாலும் தேடுமாறு பவளத்திரள்போல ஒளி வடிவினனாய் ஓங்கி நின்ற மூலகாரணனும், கொம்புகளாகக் கிளைத்து நெருங்கிய மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் நாசமாகும்.

10.🔔போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதிய னைத்தொழநும் வினையான வீடுமே.

🙏போதி மரத்தை வழிபடும் புத்தர், அசோக மரத்தை வழிபடும் சமணர் ஆகியோர் பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக் காட்டிக் கூறும் புனைந்துரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே!, இசை பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய தண்பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம் விரித்த சிவபிரானைத் தொழுமின்; நம் வினைகள் யாவும் அழியும்.

11.🔔அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணும்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
நலமலி பாடல்வல்லார் வினையான நாசமே.

      திருச்சிற்றம்பலம்.

🙏அலைகள் மிகுந்த குளிர்ந்த நீரால் சூழப்பட்ட அழகிய புகலி நகரை விரும்பும் தலைமகனாகிய தமிழ் ஞானசம்பந்தன், கொல்லும் தொழிலில் வல்ல மூன்று இலை வடிவான சூலத்தைக் கையில் ஏந்தியவனாய சிவபிரான் எழுந்தருளிய கொடிமாடச் செங்குன்றூரைப் போற்றிப் பாடிய, நலம் மிக்க, இப்பதிகப் பாடல்களை ஓத, வல்லவர்களின் வினைகள் நாசமாகும்.

       திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*

*தொடர்புக்கு:*
04288 - 255925

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *பசுபதிநாதர் திருக்கோயில், கருவூர்.(கரூர்.)*

___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment