Monday, April 9, 2018

Apaatala -rudra chat meaning -Sanskrit

Ranganatha Vadhyar:
ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:

ஆபாதால நப: ஸ்தலாந்த புவன

ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்

ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்

பூர்ணேந்து வாந்தாம்ருதை:

அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்

ருத்ராநுவாகான் ஜபன்

த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்

விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||

இந்த ஸ்லோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறது? 
பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முடியாது. 
எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும்.

 குண-தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. 

அதன் பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அது நிர்விகாரமானது. 

பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. 

அது எதையும் மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ்களங்கமாக இருக்கும். 

நிர்குணமான பரமாத்ம வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக அது தெரியும்.

மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. 

"பூர்ணேந்து" என்று சுலோகத்தில் வருவது, 'பூரண இந்து!'; இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். 

ஈசுவரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட "ஸகள" ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக்கொண்டு சந்திர மௌலியாக இருக்கிறார். 

ரூபமே இல்லாத பரமாத்மா 'நிஷ்கள' தத்வமாயிருக்கிற போது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. 

அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடு இல்லாமல், லிங்கமாக சகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். 

அதிலிருந்து அமிருதமே கங்கை மாதிரி கொட்டுகிறது.

யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். 

அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அமிருதம் ஒழுகும். 

அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. 

ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். 

இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்வது.ருத்திர அபிஷேகம் செய்வது. 

ஸ்ரீருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை எல்லாம் அறிவுறுத்துகிறது.

ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம்தான். ஸ்ரீ ருத்ரத்தில் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. 

ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீருத்ரம் சொல்லுகிறது.

No comments:

Post a Comment