Tuesday, March 27, 2018

Tree positive story

*மரத்தின் 'மகிழ்ச்சி' – விழியன்*

_மழலைகள் கதை நேரம் – 054_

நிவேதா தன் பள்ளியை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தாள். இன்று அவள் பள்ளியில் பேச்சுப் போட்டி. எந்த தலைப்பில் பேசுவது என்றே அவளுக்கு தெரியவில்லை. ஒரே குழப்பம். ஒரு மர நிழலில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தாள். புலம்பினாள். கொஞ்ச நேரம் கழித்து நடக்க துவங்கினாள். அப்போது தான் அவள் ஒன்றினை கவனித்தாள். அவள் நிழலிலேயே நடப்பது புரிந்தது. அவள் பள்ளிக்கு போகும் வழியில் மரமே இல்லை. முதலில் அமர்ந்த மரமும் கூட நேற்று  இல்லை. நிவேதா நடக்க நடக்க மரமும் அவளோடு வந்ததை கவனித்தாள். பயந்தாள்.

"நிவேதா, ஏன் கவலையாக இருக்கின்றாய்?" என்றது மரம். மரம் பேசுமா? மரம் நடக்குமா? குழம்பிய நிவேதா மரத்திடமே கேட்டாள்  "மரமே நீ எப்படி பேசுகின்றாய்? நீ எப்படி நடக்கின்றாய்?". மரம் தன் கதையினை சொன்னது. கேட்டதும் என்ன சொல்வது என்றே புரியவில்லை. "சரி, பள்ளிக்கு வா. உனக்கு ஒரு வழி சொல்கின்றேன்" என்றாள் நிவேதா.

பேச்சுப்போட்டியில் நிவேதாவின் பெயர் அழைக்கப்பட்டது. மேடை ஏறினாள்.

"நண்பர்களே, நான் இங்கே ஒரு கதையை சொல்லப்போகின்றேன். இது நிஜக்கதை. ஆனால் இந்த கதையின் முடிவில் ஒரு தீர்விற்கு நாம் ஒன்றிணைய வேண்டும். நம் நாட்டின் வடக்கு பகுதியிலே இமய மலை என்ற மாபெரும் மலைத்தொடர் உள்ளது. அங்கே பல மலைகள் உள்ளன. அங்கே இருந்த மலை ஒன்றில் ஒரு மரத்திற்கு வினோத ஆசை பிறந்தது. இந்தியா முழுக்க சுற்றி வரும் ஆசை தான் அது.  ஆனால் மரத்தால் நடக்க முடியாது ஏன் நகர கூட முடியாது. உயரமாக வளர்ந்து அந்த மலையை கூட முழுமையாக பார்க்க முடியவில்லை. ஒரு நாள் ஒரு முனிவர் அந்த பக்கம் வந்தார். அவரிடம் தன் விருப்பத்தை தெரிவித்தது. அவரும் சம்மதித்தார். தன் சக்தி மூலம் மரத்திற்கு நடக்கும் திறனினை கொடுத்தார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. இந்தியாவை சுற்றி பார்த்துவிட்டு ஐந்து வருடத்தில் திரும்பிட வேண்டும். அந்த மரம் இந்தியா முழுக்க சுற்றியது. பகலில் நடந்தால் மக்கள் பயந்துவிடுவார்கள் என்று இரவில் மட்டுமே நடந்தது. பல ஆறுகள், பல நிலப்பரப்புகள், பல மனிதர்கள், பல வித மரங்கள், பல மண் என நன்றாக அனுபவித்தது. எல்லா மாநிலங்களையும் சுற்றிவிட்டது. கடைசியாக தமிழகம் வந்தது. அதற்கு தமிழகம் பிடித்துவிட்டது. அது கிளம்பி நான்கு வருடம் ஆறு மாதங்கள் முடிந்துவிட்டது"

"இன்னும் ஆறு மாதமே இருக்கும் மரத்திற்கு இரண்டு பிரச்சனைகள் வந்துவிட்டது. திரும்பி ஆறு மாதத்தில் இமய மலை திரும்பவேண்டும். ஐந்து வருடத்தில் திரும்பவில்லை என்றால் அது வளர்ந்த காட்டுப்பகுதி அழிந்துவிடும் என முனிவர் சொல்லி இருக்கின்றார். புல் பூண்டு கூட முளைக்காது என்று சொல்லி இருக்கின்றார். அந்த காட்டுப்பகுதியை காப்பாற்ற அந்த மரம் ஆறு மாதத்தில் திரும்பி போக வேண்டும். இரண்டு பிரச்சனைகள் அந்த மரத்திற்கு. ஒன்று விரைவான வழி. மற்றொன்று தண்ணீர்.  வந்த வழி நெடுகிலும் அந்த மரத்திற்கு தண்ணீர் ஒழுங்காக கிடைக்கவில்லை. வெகுநாட்கள் ஒரே இடத்தில் நின்றால் தான் அதன் வேர் உள்ளே சென்று தண்ணீர் பருக முடியும். விரைவாக செல்லும்போது தண்ணீர் எளிதாக கிடைக்க வேண்டும். இந்த பிரச்சனையை எப்படி சாமாளிப்பது? உங்களுக்கு ஒரு உண்மையை சொல்ல வேண்டும். அந்த மரம் இப்போது நம் பள்ளி வாசலில் உள்ளது"

ஒரே பரபரப்பு. எல்லோரும் மரத்தை காண ஓடினார்கள். ஆமாம் இது வித்யாசமான மரமாக இருந்தது. அதே சமயம் மரமும் இவர்களை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தது. மரத்தினையும் அதன் கிளைகளையும் அதன் இலைகளையும் தொட்டுப்பார்த்தார்கள்.  ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் வந்தார்கள். ஒன்றாக கூடி என்ன செய்வது என மாணவர்களுடன் விவாதித்தார்கள்.

தமிழகத்தின் அவர்கள் ஊரில் இருந்து இமய மலை வரையில் விரைவாக போகும் பாதையினை போட்டார்கள். பின்னர் ஒரு ஆசிரியரும் ஐந்து மாணவர்கள் மரத்துடன் அடுத்த ஊர் வரையில் நடந்து செல்வதென முடிவானது. அடுத்த ஊரில் இருக்கும் பள்ளியில் மரத்தை ஒப்படைத்துவிடவேண்டும். அங்கிருந்து அடுத்த ஊருக்கு அந்த ஊர் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும்  வழிநடத்துவார்கள். வெகு தூரமாக இருந்தால் சைக்கிளில் செல்வது என முடிவானது. முழு வரைபடமும் மரத்தில் ஒட்டினார்கள். என்ன செய்ய வேண்டும் என்று பல மொழிகளில் எழுதினார்கள். இமயம் வரையில் பல மொழிகள் பேசும் மாநிலங்கள் உள்ளன அல்லவா?

மறுநாள் காலை நிவேதாவும் அவள் நண்பர்கள் நால்வரும் மற்றும் ஒரு ஆசிரியரும் மரத்துடன் கிளம்பினார்கள். ஐந்து பேர் தான் கிளம்பினார்கள் என்றாலும் செய்தி அறிந்து வழி எல்லாம் மக்கள் கூட்டம். நடக்கும் மரம் என்றால் சும்மாவா? அதே போல வழி எல்லாம் மக்கள் தங்களால் முடிந்த நீரினை எடுத்து வந்தார்கள். மரத்திற்கு ஊற்றினார்கள். இன்னொரு அதிசயமும் நடந்தது. வழி முழுக்க மரக்கன்றுகள் நட்டார்கள். மரத்தின் அவசியத்தை உணர்ந்தார்கள்.

ஆறு மாதத்தில் பல்வேறு மாநில மாணவர்களின் உதவியுடம் நடக்கும் மரம் இமயமலை அடிவாரத்தை அடைந்தது. ஒவ்வொரு ஊரிலும் மாணவர்கள் ஒன்றிணைந்தார்கள். மரத்தினை கட்டிப்பிடித்தார்கள். முத்தமிட்டார்கள். வழிநடத்தினார்கள். மாணவர்களுக்கு நன்றி கூறிவிட்டு மலைக்குள் நடக்க துவங்கியது மரம். காட்டினையும் காப்பாற்றிவிட்டது நாட்டிலும் பல லட்சம் மரங்களை உருவாக்கியது. மகிழ்ச்சியாக அந்த மரம் தன் இடத்தினை அடைந்தது.

-- விழியன்
(நன்றி - மின்மினி இதழ்)

No comments:

Post a Comment