Tuesday, March 27, 2018

Surrender to Goddess - Periyavaa

அம்பாளிடம் சரணடையுங்கள்

என் தந்தை சிமிழி ப்ரம்ம ஸ்ரீவெங்கடராம சாஸ்திரி ஸ்ரீமடத்தின் அபிமானத்துக்கு மிக்க உகந்தவர்.எனது பால்யத்திலேயே அவர் மறைந்தார். பகவத் சங்கல்பத்தில் இரு சன்னியாசிகள் மூலம் தேவி உபாசனை கிட்டியது. பல ஆண்டுகள் உபாஸித்த பிறகும் ,உபாஸனையில் உடலும் வாக்கும் ஈடுபடும் அளவுக்கு மனதும்  ஈடுபடவில்லையோ என ஒரு தாபம்! சாந்தி கிடைக்கவில்லை என்ற எண்ணம் வலுத்தது.

பெரியவாளிடம் சென்றேன். என் மனக் குறைய அவரிடம் கொட்டினேன்.

"பூஜையில் வாக்கும் செயலும் ஈடுபடும் அளவுக்கு மனம் ஈடுபடவில்லை"

"அதற்கு நான் என்ன செய்யணும்?"

'மனம் அலையாதிருக்கும் வழியைக் காட்டணும்"

"நீ என்ன படித்திருக்கிறாய்?"

படித்தது அனைத்தும் சொன்னேன்

"இத்தனை படித்தும் உனக்கு விவேகம் இல்லையென்றால் என்னால் உன்னைத் திருத்த
முடியாது."

"என்னால் என்னைத் திருத்திக் கொள்ளமுடியவில்லை; அதனால்தான் பெரியவாளிடம் வந்தேன்."

"என்னை என்ன செய்யச் சொல்றே?"

"மனம் அலைபாயாதிருக்க வழிகாட்ட வேண்டும்"

"நீ என்ன பூஜை பண்றே?"

"அம்பாளை படத்திலும், விக்ரஹத்திலும், யந்திரத்திலும் பூஜை செய்கிறேன்."

"படத்தில், யந்த்ரத்தில் அம்பாள் இருப்பதாக நினைத்துத் தானே செய்கிறாய்?"

"ஆமாம், அப்படித்தான்."

"அப்போது இந்தக் குறையையும் அவளிடத்திலேயே தெரிவித்திருக்கலாமே?"

"நிறையப் படித்திருக்கிறாய்..படம், விக்ரஹம், யந்த்ரம் எல்லாவற்றைலும் தேவி இருப்பதாக நினைத்து பூஜை செய்கிறாய்…ஆனால் ஒன்றிலும் உனக்கு நம்பிக்கை இல்லை.தேவி உன் வீட்டில் உன் அருகில் இருக்கும்போது என்னிடம் வந்து அழுகிறாய்
அவளிடம் உன் குறையைச் சொல்லத் தெரியவில்லை. இனி அங்கயே அழு.இங்கு வராதே" என கடுமையாகப் பேசி விட்டார்.

எனக்கு கண்களில் நீர் கோர்த்தது. மனதில் பேரிடி.. மறுபடி நமஸ்கரித்து விடை பெற நினைக்கும்போது,

"ரொம்ப கோவித்துக் கொண்டுவிட்டேனா? நீயே விரும்பி ச்ரத்தையாக தேவியை உபாஸிக்கிறாய்; மனம் ஈடுபடவில்லை என்ற குறையையும் உணர்கிறாய், உபாஸனை என்பதே அவள் அருகில் இருப்பதுதானே? உன் அருகில் இருப்பவளிடம் குறையைச் சொல்லாமல் நீட்டி முழக்கிக் கொண்டு இங்கு வந்துவிட்டாய். அதனால்தான் உனக்கு உறைக்கிறாற்போல் கடுமையாகச் சொன்னேன். இனி எதற்காகவும் , எந்தக் குறையானாலும் அவளைத் தவிர யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. அவளன்றி யாரும் உனக்கு உதவ மாட்டார்கள்"

அன்றிலிருந்து என் குறைகள் யாவையும் அவளுக்கே அர்ப்பணித்துவிடுகிறேன். கடும் துயரிலும் அவளிடம் மட்டுமே அழுகிறேன்.

இப்படிச் சொல்வது ஸ்ரீரங்கம் எஸ். ராதாகிருஷ்ண சாஸ்திரிகள். இந்த அறிவுரை அவருக்கு மட்டுமல்ல! நம் யாவருக்கும் சேர்த்துத்தான்! அவள் பாதங்களை இறகப் பிடித்துக் கொண்டால்  அவள் தாயானவள் நம்மை எந்தக் காலத்திலும் உதற மாட்டாள்!

No comments:

Post a Comment