உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
--------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......................)
------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 243*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*🏜திருஅண்ணாமலை:* (திருவண்ணாமலை)
-------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள இருபத்து இரண்டு தலங்களில் இத்தலம் இருபத்து இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*🌙இறைவன்:*
அருள்மிகு அண்ணாமலைநாதர்.
*💥இறைவி:*
அருள்தரும்
உண்ணாமுலையம்மை.
*🌴தல விருட்சம்:*
மகிழ மரம்.
*🌊தல தீர்த்தங்கள்:*:
சிவகங்கை, பிரம, அக்கினி, இந்திர தீர்த்தங்கள்
*🔥ஆகமம்:*
*📔தேவாரம் பாடியவர்கள்:* திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
*✉அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி,
திருவண்ணாமலை அஞ்சல்,
திருவண்ணாமலை. மாவட்டம், 606 601
*☎தொடர்புக்கு:*
தொபே. 04175 252438
*🛣இருப்பிடம்:*
புகழ்பெற்ற தமிழக நகரங்களில் ஒன்று.
விழுப்புரம் - காட்பாடி வழியில் இரயில் நிலையம். அனைத்து நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
நினைக்க முத்திகிடைக்கும் தலம் இது.
*🙏வழிபட்டு பேறுபெற்றவர்கள்:*
சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற தலம்.
*சாபம் நீங்கியவர்கள்*
வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்தமையின் மாறின.
இத்தலத்திலுள்ள விநாயகரை, ஸ்ரீசம்பந்த
விநாயகர், முக்குறுணி விநாயகர் என்றும் கூறுவர்.
கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் மலைப்பகுதியிலுமாக மொத்தம் முன்னூற்று அறுபது தீர்த்தங்கள் இருந்தன.
(இப்பொழுது முழுமையாக காணக் கிடைக்கவில்லை.)
இதில் மிக உயர்ந்தவையிலும் சிறந்தவையானது சிவகங்கையும், பிரம தீர்த்தமும் ஆகும். மேலும் மலைப்பகுதியிலுள்ள அக்னிதீர்த்தமும், இந்திர தீர்த்தமும் ஆகும். இந்திர தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
*🎡திருவிழாக்கள்:*
இத்தலத்தில் நடைபெறும் பெரியவிழா கார்த்திகைத் திரு விழாவாகும். இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளைத் தீர்த்தமாகக் கொண்டு நடைபெறும்.
சித்திரைமாதத்தில் சித்திரை நட்சத்திரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பிரமோற்சவமும், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணமும் ஆறுநாள் விழாவும், மாசிமகத்தில் வல்லாளன் திருவிழாவும், தைமாதம் திருவூடல் விழாவும்,
ஆனி விழாவும்......
ஆடியில் அம்பிகைவிழாவும், பவித்ரோற்சவம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை உற்சவம், திருவாதிரை முதலியனவும் சிறப்பாகக்கொண்டாடப்பட்டு வருகின்றன.
அயனும் மாலும் அகந்தைகொண்டு, அடிமுடிதேட அன்னமும் வராகமுமாக மாறித் தேடி அயற்சி அடைந்தாராக, அக்கினி வடிவாய் நின்று அருள்செய்தவர் அண்ணாமலைநாதர்.
முருகன் தாருகனை வதஞ்செய்து வணங்கிச்சென்ற தலம் பலவற்றுள் இதுவும் ஒன்று.
சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லையாயினும் சேக்கிழார் வரலாற்றால் ஊகிக்கவேண்டியுள்ளது.
நக்கீரர், பரணர், கபிலர், பட்டினத்தார் ஆகிய இந்நால்வரும் அண்ணாமலையைப் பற்றிப்பாடிய பாக்கள் பதினொராந்திருமுறையில் வாசிக்கப் பெறலாம்.
வச்சிராங்கதன் என்னும் பாண்டியன் தினமும் வலம்வந்து திருப்பணி பல செய்துள்ளான்.
வல்லாளமகாராஜன் அண்ணாமலையை ஆண்டுவந்தான்.
அருணகிரி நாதர் கோபுரத்திலிருந்து இறக்க எண்ணி வீழ்ந்தபோது முருகன் தோன்றி அருள்செய்தான்.
குகைநமச்சிவாயர், குருநமச்சிவாயர் முதலானவர்கள் சித்தி பல செய்துள்ளனர்.
கோயிலின் வடகிழக்குமூலையில் ஆயிரங்கால் மண்டபம் இருக்கிறது.
கிழக்குப் பக்கத்தில் நுழையும்போது உள்ள உட்கோபுரம் வல்லாளமகாராஜன் கோபுரம் என்று வழங்கப்படுகிறது.
வல்லாள கோபுரத்தின் வடகிழக்கு மூலையில் சக்திவிலாசமும் உள்ளது.
மேற்கு நோக்கி உட்சென்றால் கிளிக்கோபுரத்தைக் காணலாம்.
தலவிருட்சத்திற்கு மேற்கே கல்யாணமண்டபம் உள்ளது.
பஞ்சபூதத் தலங்களில்
அக்னித் தலம் இது.
பல சிவாலயங்களில் சிவனின் கருவறையின் பின் உள்ள சிற்பம் லிங்கத்பவராக காட்சி தருகிறார்.
இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்று சைவர்கள் வணங்கி வருகிறார்கள்.
ஆதலால்தான் இம்மலையை ஒவ்வொரு பெளர்ணமியிலும் கிரிவலம் செய்வதை கடைபிடிக்கின்றனர். (இப்போது வாய்ப்பு கிடைக்கும் நாளிலெல்லாம் பக்தர்கள் கிரிவலம் செய்ய வருகின்றனர். இது தவறல்ல.)
பல்வேறு இடங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இங்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள்.
இவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர்,
குகை நமச்சிவாயர்
போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் இருக்கின்றன.
அண்ணாமலை 'அண்ணா' என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருள்.
பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று பெயர்.
*காலம்:*
திருவண்ணாமலையிலுள்ள மலையானது இருநூற்று அறுபது கோடி ஆண்டுகள் பழமையானது என விஞ்ஞானி ஒருவர் தன் ஆய்வில் தெரிவித்துள்ளார்.
இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலியுகத்தில் கல் மலையாகவும் காணும் பேறை நாம் பெற்றிருக்கிறோம்.
*கோபுர தரிசனம்:*
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய
திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்டனர்.
சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக ( பன்றி) அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார்.
பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார்.
முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டார்.
அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, அதற்கு தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூறியது.
பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுவித்து, தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி பணித்தார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் தனி ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார்.
இதனால் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் 'தான்' என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்திட சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை ஆகும். அந்த நாளே மகா சிவராத்திரி நாளானது.
*மலை வலம்:*
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையையும் வலம் வரும் வழமை இங்குள்ளது.
மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது.
மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியனால் திருப்பணி செய்யப்பட்டது.
பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்க சந்நிதிகள் உள்ளன.
எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படும் மரபு.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் அமைந்துள்ளது.
தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் இவ்வாலயம் செல்வதில்லை. இது தவறு. மலைவலம் செய்யும்போது அவசியம் ஆதிஅண்ணாமலை சந்நிதிக்குச் சென்று கைதொழ வேண்டும்.
அம்மையை வணங்கி வராத பிருகுமுனிவர் அவ்வளவு சக்தியையும் இழந்தார்.
நாம இவ்வழியாக கிரிவலம் சென்றும் ஆதிஅண்ணாமை சந்நிதியைத் தரிசிக்காமல் போவது கிரிவலப் பலன் இல்லா.
இந்த மலையின் சுற்றளவு பதினான்கு கிலோமீட்டர் தொலைவுகளைக் கொண்டவை. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கூறுவது உண்மை.
மலையை வலம் செல்லும்போது நாம் இடப்பக்கம் நடக்க வேண்டும். இது சாலை விதிக்காமல் அல்ல.
ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கமாக சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலப்பக்கமாக வருவதாக ஐதீகம்.
கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ (நமசிவாய, சிவாயநம) அல்லது திருமுறைகளையோ (தேவாரம், திருவாசம்) உச்சரித்துச் செல்வது நல்லது.
இவ்விதம் மொழிந்து கொண்டே செல்வதால், வேறேதும் நினைவுகள் நமக்கு வரா.
இதை தவிர்த்து வேறு விசயங்கள் எதையும் பேசியபடி செல்லுதல் கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடையை கடைப்பிடிக்க வேண்டும்.
அவசரமாகவோ , வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டோ செல்லதல் கூடாது.
*கோயில் அமைப்பு:*
ஆலய பரப்பளவு இருபத்து நான்கு ஏக்கர்கள். ஆறு பிரகாரங்கள். ஒன்பது
ராஜகோபுரங்கள்.
இவ்வாலயத்தில் நூற்றி நாற்பத்திரண்டு சன்னதிகள். இருபத்திரண்டு விநாயகர் இருப்பிடங்கள்.
முன்னூற்று ஆறு மண்டபங்கள். ஆயிரம் தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உள்ளது.
இதன் அருகே பாதள லிங்கம், நாற்பத்தி மூன்று செப்புத் திருமேனி சிலைகள்.
மற்றும், கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை இருக்கின்றன.
*கோபுரங்கள்:*
அண்ணாமலையார் கோயிலிலுக்கு ஒன்பது கோபுரங்கள் இருக்கின்றன. அவைகளில் ராஜா கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும்.
தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்களும் உள்ளன.
*மண்டபங்கள்:*
இச்சிவாலயத்தில் முன்னூற்று ஆறு மண்டபங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரம் கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், பதினாறுகால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள் மண்டபம் ஆகியவையாகும்.
*சந்நிதிகள்:*
சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கமாக நாம் கருதி வணங்கி வருகிறோம்.
அம்மன் உண்ணாமலையம்மை ஆவார். முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்க சந்நிதி ஆகிய சன்னதிகளும் உள்ளன.
*🌸வழிபாடு:*
இக்கோவிலில் ஆறுகால பூசை தினமும் நடைபெறுகிறது. பஞ்ச பருவ பூசைகளும், சுக்ரவாரம் மற்றும் சோமவார பூசைகளும் நடைபெறுகின்றன.
பஞ்ச பருவ பூசைகள் என்று அழைக்கப்படுபவை, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி பூசைகளானவை.
*கரும்புத் தொட்டில்:*
குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தங்களுக்கு குழந்தை பிறக்க அண்ணாமலையை முதலில் வந்து வேண்டிக் கொள்வர்.
அவ்வாறு குழந்தை பிறந்த பின்பு இங்கு வந்து கரும்புத் தொட்டிலினை கட்டி அதில் குழந்தையை இட்டு மீண்டும் கோவிலை கிரிவலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
இவ்வாறு கரும்புத் தொட்டிலில் இடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும்.
திருவிழா காலத்தில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.
*பிரம்மோற்சவம்:*
அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
*ஆனி மாத பிரம்மோற்சவம்:*
ஆனி மாத பிரம்மோற்சவம் என்பது தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுவையாகும்.
கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடக்கும்.
பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்கும் பூசைகள் செய்விக்கப் படுகின்றன.
விநாயகர் மற்றும் சின்னநாயகர் அம்மன், சந்திரசேகரர் வீதியுலா, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுதல், ஆனி திருமஞ்சனம் ஆகியவையும் சிறந்தோங்க நடைபெறுகின்றன.
*மாசி மகம் தீர்த்தவாரி:*
அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி சிலை வள்ளாள ராஜாவின் மகனாக சிவபெருமானே பிறந்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு.
இதன் காரணமாக வள்ளாள மகாராஜாவின் திதியை சிவபெருமானே அளிக்கின்றார். இந்த நிகழ்வினை மாசி மகம் தீர்த்தவாரி என்றும் அழைக்கின்றனர்.
*கார்த்திகை தீபம்:*
கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது.
இதில் முதல் பத்து நாட்கள் உற்சவர்களின் ஊர்வங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும், இதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.
சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.
இந்நாளிலேயேதான் தீபத்திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.
இதனை, *ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்'* என
தத்துவம் என்கிறார்கள்.
பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.
*பரணி தீபம்:*
பத்தாம் நாள் அதிகாலை நான்கு மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.
இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.
பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.
*மகாதீபம்:*
மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை இரண்டாயினத்து அறுநூற்று அறுபத்தெட்டு அடி உயரத்தைக் கொண்டவையாகும்.
மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்ததநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறார்.
அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த மகாதீபத்தினை பக்தர்கள் மலையின் மீது ஏறிப் பார்த்தும் வணங்குகின்றனர்.
*பாடல் பெற்ற தலம்:*
திருமுறைப் பாடல் பெற்ற இருநூற்று எழுபத்தினான்கு திருத்தலங்கள். (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன.
இவற்றில் இருபத்திரண்டு திருத்தலங்கள் நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த இருபத்திரண்டு தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.
*நால்வர்:*
திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள்.
மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு *திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் *திருவெம்பாவை* இருபது பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றியுள்ளார்.
கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் உண்டு. தெரியாதவர்கள் அடுத்தமுறை செல்லும்போது அவசியம் தரிசியுங்கள்.
*அருணகிரி நாதர்:*
அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் அவதரித்தவர்.
இங்குள்ள இறைவன் முருகப்பெருமான் மீது பாடல்களைப் பாடியுள்ளார்.
அவர் கோபுரத்தில் கிளியாக மாறிப் பாடியமையால் அக்கோபுரத்தினை கிளிக்கோபுரம் என்று அழைக்கின்றார்கள்.
*நூல்கள்:*
இத்தலத்தில் திருப்புகழ்,
கந்தர் அனுபூதி,
திருவெம்பாவை,
திருவம்மானை,
அருணாச்சல அஷ்டகம் போன்ற நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.
சைவ எல்லப்ப நாவலர் எழுதியது, அருணாசல புராணம், மற்றும் அருணைக் கலம்பகம் ஆகும்
குருநமச்சிவாயர் எழுதியது அண்ணாமலை வெண்பாவாகும்.
தேவாரம், திருவாசகம்,
பதினொராந்திருமுறை,
பெரியபுராணம்,
கந்தபுராணம், திருப்புகழ், சோனாசலமாலை,
திருவருணைக்கலம்பகம்,
அருணாசல புராணம்,
அருணாசல மகாத்மிய வசனம், அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, திருவருணை அந்தாதி, அண்ணாமலை சகதம், சாரப்பிரபந்தம்,
கார்த்திகை தீப வெண்பா,
சோணாசல வெண்பா,
சோணாசல சதகம்,
திருவருணைக்கலி வெண்பா, திருவருட்பதிகம், அருணாசலேசுவரர் பதிகம்-1ம், 2ம்,
உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேசர் நவகாரிகை மாலை,
உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம்,
அருணாசல சதகம்,
அருணாசல அட்சரமாலை,
அண்ணாமலையார் வண்ணம்,
திருவண்ணாமலைப் பதிகங்கள், அண்ணாமலைபஞ்ச ரத்னம், திருவருணைத் தனி
வெண்பா, அட்சரப் பாமாலை,
அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணசல அட்சரமாலை, அருணாசல
நவ மணிமாலை,
அருணாசல பதிகம்,
அருணாசல அஷ்டகம்,
அருணாசல பஞ்சபத்தனம்
ஆகியவை இச்சிவாலயத்தின் புகழைப் பாடுகின்ற நூல்களாகும்.
*தல சிறப்பு:*
இத்தலம் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
நினைத்தாலே முக்தி தலமென சிவபுராணம்
குறிப்படுகிறது.
காமதகனம் நிகழ்வு இத்தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.
ஆடிப்பூரத்தன்று மாலையில் உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி திருவிழா நடைபெறுகிறது.
இவ்வாறு தீமிதி திருவிழா நடைபெறும் சிவாலயம் வேறெங்கும் கிடையாது இங்கு மட்டுமே.
அருணகிரி நாதருக்கு விழா இத்தலத்தில் எடுக்கப்படுகிறது.
*ஞானிகளும் துறவிகளும்:*
இத்தலம் சித்தர்களின்
சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.
அண்ணாமலை சுவாமிகள், அப்பைய தீட்சிதர்,அம்மணி அம்மாள்,அருணகிரிநாதர்,அழகானந்த அடிகள், ஆதி சிவ பிரகாச சாமிகள், இசக்கி சாமியார், இடைக்காட்டுச் சித்தர், இரமண மகரிசி, இறை சுவாமிகள், ஈசான்ய ஞானதேசிகர், கண்ணாடி சாமியார், காவ்யகண்ட கணபதி சாத்திரி, குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், குருசாமி பண்டாரம், சடைச் சாமிகள்,சடைச்சி அம்மாள், சற்குரு சுவாமிகள்,
சேசாத்திரி சாமிகள், சைவ எல்லாப்ப நாவலர், சோணாசலத் தேவர், ஞான தேசிகர், தட்சிணாமூர்த்தி சாமிகள், தம்பிரான் சுவாமிகள், தெய்வசிகாமணி சித்தர், பத்ராச்சல சுவாமி, பழனி சுவாமிகள், பாணி பத்தர், மங்கையர்கரசியார், ராதாபாய் அம்மை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், விசிறி சாமியார், விருபாட்சி முனிவர், வீரவைராக்கிய மூர்த்தி சாமிகள் ஆகிய சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவார்கள்.
இவர்களில் பலர் அண்ணாமலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள் என்பது முக்கியம்.
சில சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணமலை கிரிவலப்பாதையிலேயே அமைந்திருக்கிறது.
தற்போதும் பல்வேறு சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாக கூறக் கேட்டிருக்கிறோம்.
திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது.
*தல அருமை:*
பிருங்கி முனிவர் அம்பாள் பார்வதியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார்.
அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார்.
அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய வேண்டிய தவமிருந்தாள்.
அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். சக்தியும் சிவமும் ஒன்றே என்று உண்மையை பிருங்கி உணர்ந்தார்.
இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்த பெருமையை உடைய தலம் இது.
*பிரமாண்டமான மணிகள்:*
திருவண்ணாமலை ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான மூன்று மணிகள் உள்ளன.
இதில் இரண்டு மணிகள் அண்ணாமலையார் சன்னதி மண்டபத்தில் உள்ளது. மற்றொரு மணி உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம். இந்த மூன்று மணிகளும் நூற்றாண்டை கடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
*அம்பாளுக்கு துணையான நந்தி:*
ஆலயங்களில் அம்பாள் சன்னதி முன்பு சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் நந்தி இருக்கிறது.
அம்பாளுக்குரிய சிம்மம் இங்கு இல்லை. ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். அவளுக்கு பாதுகாப்பாகவே நந்தி இருந்து விட்டார்.
இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி இருக்கிறார்.
*ஆலய அதிசயங்கள்:*
அண்ணா மலையார் ஆலயம் எத்தனையோ ஆச்சரியங் களையும், அதிசயங்களையும் கொண்டவை.
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் தனித்துவம் கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது.
இத்தலத்தின் இரண்டாம் பிரகாரத்தில் அறுபத்து மூவர் நாயன்மார்களுக்கு கற்சிலைகளும், வெண்கல சிலைகளும் இருக்கின்றன.
இரண்டாம் பிரகாரத்தில் திரும்பும் திசையெல்லாம் லிங்கங்களைக் காணுமாபோது, உடலெல்லாம் புல்லரிப்பு உணர்வு ஏற்படும்.
*🌸ஆலயப் பூஜை காலங்கள்:*
நடை திறப்பு: காலை 5.00 மணிக்கு
கோ பூஜை: காலை 5.15 மணிக்கு
பள்ளியெழுச்சி பூஜை: 5.30 மணிக்கு
உஷாகால பூஜை: 6.00 மணிக்கு
காலசந்தி பூஜை: 8.30 மணிக்கு
உச்சிகால பூஜை: 11.00 மணிக்கு
நடைசாற்றுதல்: நண்பகல் 12.30 மணிக்கு
நடை திறப்பு: 3.30 மணிக்கு
சாயரட்சை பூஜை: மாலை 5.30 மணிக்கு
இரண்டாம் கால பூஜை: இரவு 7.30 மணிக்கு
அர்த்தஜாம பூஜை : 9.00 மணிக்கு
பள்ளியறை பூஜை : 9.15 மணிக்கு
நடைசாற்றுதல்: 9.30 மணிக்கு
*அபிதகுஜாம்பாள் சன்னதி:*
இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அபிதகுஜாம்பாள் அனேக இடங்களில் இல்லாத அளவிற்கு சுமார் ஆறு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத் தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.
வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வரப்படுகிறது.
அவ்வப்போது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, நூற்றியெட்டு பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு அம்மனின் பரிபூர்ண அருளை பெற்றுவருவதாக நம்பப்படுகிறது.
காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபீதகு சாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
வியாபாரத்திலும், தொழி லிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக
இத் திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளங்குகிறாள்.
இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்படவும், குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலிய னவற்றை பெறலாம்.
*எட்டுக்கை காலபைரவர்:*
திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக் கரையில் கால பைரவர் சந்நிதி இருக்கிறது.
இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் சுமார் ஆறடி அடி உயரத் துக்கு வடித்திருக்கின்றனர்.
எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. திருஷ்டி, பயம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
தேய்பிறை அஷ்டமி நாளிலும் ஞாயிறு ராகு காலத்திலும் இவரை வழிபடுவது சிறப்பு.
இந்தியாவில் உள்ள கால பைரவர் சிலைகளில் இந்த சிலைதான் உயரமானது.
*சம்பந்தர் தேவாரம்:*
பண்: நட்டபாடை.
1.🔔உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
🙏உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.
2.🔔தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
🙏கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக்கருதி மர நிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.
3.🔔பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
🙏தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல் கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த் துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ்.(தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்).
4.🔔உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.
🙏உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு, உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு, முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித்திருவடிகளில் அதிரும் வீரக்கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.
5.🔔மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
🙏வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?
6.🔔பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.
🙏பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத்தோன்றிய நஞ்சை உட் கொள்ளும் அளவிற்குத்துணிபுடையவரும், அந்நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.
7.🔔கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.
🙏கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசை பாடச் செவ்வரிபரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.
8.🔔ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.
🙏ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.
9.🔔விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.
🙏விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.
10.🔔வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.
🙏உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக்கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலான குணம்.
11.🔔வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
திருச்சிற்றம்பலம்.
🙏வெம்மை மிக்க கதிரவன் ஒளி புகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு, குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.
திருச்சிற்றம்பலம்.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நாளைய தலப்பதிவு *அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருஆலவாய். (மதுரை)*
----------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Nice to see detail of Thiruvannamalai temple in Tamil. To get information in English you can check at this page.
ReplyDelete