உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
--------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.........................)
------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்:246*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*பரங்கிரிநாதர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்:*
---------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பதினான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*🌙இறைவன்:*
பரங்கிரிநாதர், பரங்குன்றநாதர், சத்தியகிரீஸ்வரர்
*💥இறைவி:*
ஆவுடை நாயகி.
*🌴தல விருட்சம்:* கல்லத்தி மரம்.
*🌊தல தீர்த்தம்:* சரவணப் பொய்கை, லட்சுமி தீர்த்தம், பிரமகூபம்.
*🔥ஆகமம்:* காரணாகம முறைப்படி.
*🌸ஆலயப் பூஜை காலம்:*
*📔தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம்.
சுந்தரர் - ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம்., ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.
*🛣இருப்பிடம்:*
மதுரையில் இருந்து சுமார் எட்டு கி.மி. தொலைவில் இக்கோவில் இருக்கிறது.
மதுரையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இக்கோவிலுக்கு அடிக்கடி உள்ளன.
*✉அஞ்சல் முகவரி:*
அருள்மிகு பரங்கிரிநாதர் திருக்கோவில்
திருப்பரங்குன்றம் அஞ்சல்
மதுரை
PIN - 625 005
*பெயர் காரணம்:*
பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.
திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.
இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது.
இம்மலையின் உயரம் சுமார் அறுநூற்று இருபது அடி உயரம் வரை இருக்கும்.
இம்மலையை நினைத்தபோது வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.
மலை அடிவாரத்தில் வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் இந்த அழகுமிக்க குடைவரைக் கோவில் சிவபெருமானுக்காகவே தோற்றுவிக்கப்பட்டு ஒரு பாடல் பெற்ற தலமாக இருந்தாலும், இத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்ற காரணத்தினால் மிகவும் புகழுடன் விளங்குகிறது.
மதுரையில் இருந்து மேற்கே சுமார் எட்டு கி.மி. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில் இதுவாகும்.
*🏜கோயில் அமைப்பு:*
இக்கோயிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்திருந்தது.
இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனா தேவியின் திருமணக் கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளை கொண்டு காட்சி கிடைத்தன.
ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகளைத் தாங்கிக் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்திருந்தன.
*சிவ சிவ சிவ சிவ என்றும், ஓம் சரவணபவ சரணம்* என்றும் மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தம் இருந்தது. இங்கு சென்று தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டோம்.
இதனின் மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறு இருப்பதாகக் கூறக்கேட்டு, அங்கும் சென்று நீரைப் பெற்று சிரசிலிட்டு ஈசனை நினைந்து வணங்கிக் கொண்டோம்.
இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திருந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாற்றில் வாசிக்கப்பட்டிருந்தோம்.
இக்காலத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று சொல்கிறார்கள்.
இத்தீர்த்த நீரே குன்றிலுறை குமரன் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக குருக்கள் ஒருவர் நம்மிடம் கூறினார்.
கல்யாண மண்டபத்தையடுத்துக் கொடிமர மண்டபம் இருந்தது. இங்கிருந்த கொடிமரத்தின் முன்புறம் நெடுஞ்சான்கிடையாக விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
அடுத்திருந்த மயில் வாகனத்தை வணங்கித் தொடர்ந்தோம்.
அடுத்து, நந்தியாரைக் கண்டு வணங்கிக் கொண்டு, ஆலயத்துள் தரிசனம் செய்ய உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
இதனையடுத்து, மூஷிக வாகனத்தார் இருந்தார் இவரையும் வணங்கிக் கொண்டு தொடர்ந்தோம்.
இம் மூன்று வாகனங்களும் ஒரிடத்தில் வரிசையாக இருப்பதை இந்தத் தலத்தில்தான் தரிசித்தோம். இத்தலத்தின் சிறப்பு.
கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர் இருந்தார் இருவிநாயகரைக் கண்டு கைதொழுது கொண்டோம்.
மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவிசமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் இருந்தன.
ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோயில் வள்ளி தெய்வயானையோடு ஆறுமுகப்பெருமானும், அருணகிரிநாதரும், பஞ்சலிங்கமும், சுவரதேவரும், சனீசுவரரும் சந்நிதிகள் கொண்டிருந்தனர்.
இங்கும் அனைத்து சந்நிதிக்கும் முன் வந்து நின்று வணங்கிக் கொண்டோம்.
மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டிருந்தது அர்த்த மண்டபமும் கருவறையும் அமைந்திருந்தன.
அர்த்த மண்டபத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்தோம். இந்த ஆறுபடிகளும் *சடாட்சரப் படிகள்* என்று கூறப்படுகின்றன.
கருவறையில் ஒரு பெரிய பாறை உள்ளது, இந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினியின் உருவத்தையும், அதனருகில் கீழ்ப்பாகத்தில் மூலவரான முருகப்பெருமான் திருமணக்கோலம் கொண்டு காட்சியினையும் கண்டோம்.
மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவத்தையும் அழகாக குடைந்து வடிவமைக்கப்பட்டிருந்தது.
சிரமேற் கைகுவித்து இருவரையும் வணங்கிக் கொண்டோம்.
மூலவரான முருகப்பெருமானது திருவடியின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளாகிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல் தேவதைகளின் உருவங்களும் பாறையில் வடிக்கப்பபட்டிருந்தன.
இந்த யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், தெய்வயானையை பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டு புரிய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர்.
மூலவர், பரங்குன்றநாதர் கிழக்கு நோக்கி அருளாசிகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
மனமுருக, மனமினிக்க பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.
மூலவர் திருச்சந்நிதிக்கு அருகில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலில் பவளக் கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சியளித்தார்.
இக்கோயிலின்வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்பட்டன.
கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோயிலில் சத்யகிரீசுவரர் என்ற சிவலிங்கபெருமான் காட்சிதர வணங்கிக் கொண்டோம்.
திருமணக் கோலங்கொண்ட முருகன் உயர்ந்த இடத்தில் எல்லாத் தெய்வங்களும் சூழ காட்சி தருகின்றார்.
இப்பெருமானின் திருமணச்சடங்கிற்கு அனைத்துத் தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன எனக் கூறும் வகையில் கருவறை அமைக்கப்பட்டிருந்தது.
பரங்குன்றின் அடிவாரத்துக் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்திருக்கினாறன.
இதை முருகன் தம் வேலினால் உண்டாக்கினார் எனக் கூறுவர்.
திருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர்.
இத்தென்பரங்குன்றத்தில் உமையாண்டவர் கோயில் என்று வழங்கப்படுகின்ற குடைவரைக் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.
இங்கும் சென்று, மனமுருக பிரார்த்தனை செய்து ஈசனை வணங்கிக் கொண்டோம்.
இக்கோயிலில் கலைத்திறன் மிக்க சிற்பங்கள் பல பரவிக் கிடக்கின்றன. காண்பதற்கு பிரமிப்பாக இருந்தது.
இதன் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் குகை ஒன்று இருக்கிறது.
சென்று பார்த்தோம். அக்குகையில் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகள் இருந்தன. சுனை ஒன்றும் இருக்கிறது.
பரங்குன்றநாதர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் சிறப்பு நுழைவுக் கட்டணம் செலுத்தி அதற்கான தனி வழியில் செல்ல வேண்டும்.
இப்படிச் சென்றால் தான் ஈசனைத் தரிசிக்க முடியும். மேலும் விநாயகர் முருகன் துர்க்கை, சந்நிதிகளையும் அருகிலிருந்து தரிசிக்க முடியும்.
இல்லாவிடில் இலவச தரிசனத்தில் சற்று தொலைவிலிருந்து மற்ற மூன்று சந்நிதிகளான விநாயகர், துர்க்கை, முருகர் ஆகியோரை மட்டுமே தரிசிக்க இயலும்.
குடவரைக் கோவிலின் அமைப்பு இவ்வாறு அமைந்திருக்கிறது.
*முருகன் திருமணம்:*
முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும்.
அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர்களையப் பெற்றார்கள். இதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான்.
இதன்படி முருகன் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில்தான் நடந்தது.
திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்தினார். சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நின்றார்கள்.
பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நின்றார்கள்.
இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.
*சிறப்பு:*
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.
சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.
இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
*லிங்க வடிவ மலை:*
திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை.
திருப்பரங்குன்றத்தில்
தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்த இடமிது.
இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது.
முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
*முருகன் நக்கீரருக்கு கீரிய தீர்த்தம்:*
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசிவிசுவநாதர் கோவில் இருக்கிறது.
மலைமேல் குமரர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியசாமி சன்னதியும் இருக்கிறது.
இச்சந்நிதி வளாகத்தில் வற்றாத கங்கை தீர்த்த குளம் (சுனை) ஒன்றும் இருக்கிறது.
இது தெய்வீக புலவர் நக்கீரரின் பாவ விமோசனம் பெறுவதற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள வேலைக் கொண்டு மலையின் பாறையை கீறி உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது.
இதை நினைவூட்டும் விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில், கோவிலின் கருவறையில் இருந்து முருகப் பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல், மலை மேல் உள்ள குமாரருக்கு எடுத்து செல்லப்படுவது வழக்கம்.
காலையில் கருவறையிலிருந்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல் எடுத்து வரப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் இருந்த பல்லக்கில் வைக்கிறார்கள்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மலைமேல் உள்ள குமரர் சன்னதிக்கு கொண்டு செல்கிறார்கள்.
தொடர்ந்து அங்குள்ள காசிக்கு நிகரான கங்கை தீர்த்த குளத்தில், தங்கவேலுக்கு மகா அபிஷேகம் நடத்துகிறார்கள்.
மேலும் பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்துகின்றனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு *"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,"* *"வீரவேல் முருகனுக்கு அரோகரா!"* என்று பக்தி கோஷத்துடன் வணங்குகின்றனர்.
அதன் பின்பு பக்தர்கள் அனைவருக்கும் கதம்ப சாதம் வழங்குகிறார்களாம்.
இதனையடுத்து மதியம் இரண்டு மணிக்கு மேல் மலையை விட்டு வேல் எடுத்து வரப்பட்டு, மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு கொண்டு வருகிறார்கள்.
இங்கு பழனியாண்டவருக்கும், தங்கவேலுக்கும் மீண்டும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
பிறகு அங்கு இருந்து மேளதாளங்கள் முழங்க பூப்பல்லக்கில் வேல் எடுத்து நகரின் முக்கிய ரத வீதிகள் வழியே வலம் வந்து கோயிலில் கொண்டு வந்து சேர்க்கின்றனர்.
*தல அருமை:*
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு ஒம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தார்.
அப்போது, தன் தாயாரின் மடிமீது முருகன் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகனும் அவ்வுபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்களின் நியதி .
முருகன் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவனும், முருகனும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டது.
இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகன் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.
இந்நிலையில் சிவனும், பார்வதியும் தோன்றி, முருகனுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள்.
சிவன் பார்வதி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.
இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமே திருப்பரங்குன்றம் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் என அழைக்கப்படும் பரங்கிநாதர் ஆலயமாகும்.
இங்கு, திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே...என்று,
திருப்பரங்குன்றைத் தொழுதவருக்கு நோயே இல்லை என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர்.
மேலும், சுந்தரரும், கச்சியப்பரும், வள்ளல்பெருமானும், அருணகிரிநாதரும் போற்றிப் பாடிப் பரவியிருக்கிறார்கள்!
சிவ ஸ்தலமாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு இது முருகனுடைய அறுபடைவீட்டுத் தலமாக மட்டுமே தெரிந்திருக்கின்றனர்.
மைம்மலை துழனியும் வடிவும் பெற்றுடைக் கைம்மலை பொழிதரு கடாம்கொள் சாரலின் அம்மலை என்கிறார்- கச்சியப்ப சிவாச்சார்யர்.
*தல பெருமை:*
ஒருமுறை, வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் யார் பலசாலி என்று போட்டி.
அப்போது, மேரு மலையைத் தங்களுடைய போட்டிக்களனாக தேர்ந்தெடுத்தனர்.
வாயுதேவன், தனது பலத்தையெல்லாம் உபயோகித்து மலையைப் பிடுங்கியெறியப் பார்த்தான்.
ஆதிசேஷன், அதை நகரவிடாமல் பிடித்து அமிழ்த்தி, தான்தான் பலசாலி என்று நிரூபிக்க நினைத்தான்.
இந்தப் போட்டியில், மேருவின் சில சிகரங்கள் தனியாகப் பிரிந்துவந்து நெடுந் தூரத்தில் போய் விழுந்தன.
அப்படிப்பட்ட சிகரங்களில் ஒன்று தான் பரங்குன்றம் ஆயிற்றாம். மேருவோடு இருந்தபோது, இதற்கு 'ஸத்பம்' என்று பெயராம்.
*அரிச்சந்திரன்:*
அரிச்சந்திர மகாராஜா, பொய் சொல்லாமல் சத்தியம் காக்கப் படாதபாடுபட்டவர் என்பதை தெரிந்து வைத்திருப்போம்.
விஸ்வாமித்திரர் இவரைப் பொய் சொல்லும்படி தூண்டினார். பல்வேறு சங்கடங்களுக்கும் உள்ளாக்கிப் பார்த்தார்.
நாட்டை இழந்து, மனைவி மக்களை இழந்து வாடியபோதும், சத்தியத்தை மீறமாட்டேன் என்கிற உறுதியோடு இருந்தார் அரிச்சந்திரன்.
இந்த திருபரன்குன்றத்துக்கும் வந்தார். இங்கே பகவானே சத்யமாகவும் மலையாகவும் உறைவதை உணர்ந்து வழிபட்டார்.
சத்யமாக, உண்மையாக
இறைவன் உறையும் தலம் என்பதால், இந்தத் தலத்துக்கு *'சத்யகிரி'* என்றும், கடவுளுக்கு *'சத்யகிரீஸ்வரர்'* என்றும் பெயர்கள்.
சத்யத்தின் வழியில் தன்னை ஆற்றுப்படுத்திய ஆண்டவனுக்கு நன்றிக்கடனாக, கோயில் கட்டிப் பிராகாரங்களும் எழுப்பினார் அரிச்சந்திரன் என்கிறது சத்யகிரி மஹாத்மியம்.
இப்போது, மலைச்சாரலில் ஸ்ரீதடாதகைப் பிராட்டியார் (மீனாட்சியம்மையின் பால திருநாமம்)- ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் இடமே, ஆதியில் முருகனுக்கு அம்மையும் அப்பனும் காட்சிகொடுத்த இடம்.
கம்பத்தடி மண்டபத்திலிருந்து வலதுபுறமாகச் சென்றால், இந்த ஆலயத்தை அடையலாம்.
மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கியபின்னரே, முருகனைத் தரிசிக்கச் செல்லவேண்டும் என்பது மரபு.
மிக அமைதியாக இருக்கிறது ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய மண்டபம். நிறையவே இங்கு அமைதியாக அமர்ந்து தியானித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
கம்பத்தடி மண்டபத்தின் தென்கிழக்குப் பகுதியில், நூறடி நீள சுரங்கப் பாதையன்று இருக்கிறது.
இச்சுரங்கப் பாதையானது திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை மீனாட்சியம்மை ஆலயத்துக்கும் ஆதிசொக்கேசர் ஆலயத்துக்கும் சுரங்கப் பாதைகள் இருந்ததாகவும், இப்பாதை, திருமலை நாயக்கர் வருவதற்காக இவை பயன்பட்டன என்றும் செவிவழிச் செய்திகளாக நாமும் கேட்டிருந்தோம்.
நின்றசீர்நெடுமாறன், அரசி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் ஆகியோருடன் இங்கு வந்து வழிபட்ட ஞானசம்பந்தர், குறிஞ்சிப் பண்ணில் பதிகம் பாடினார்.
நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
*'சூடலன் அந்திச் சுடர் எரியேந்திச் சுடுகானில்'* எனத் தொடங்கும் பதிகத்தை ஞானசம்பந்தர்
பாடினார்.
(இப்பதிவின் இறுதியில் இப்பதிகம் முழுமையும் இருக்கிறது.)
பரங்கிரிநாதரைச் சுந்தரரும் பாடியிருக்கிறார். *'உனக்கு அடிமையாக இருக்க அஞ்சுகிறோம்'* என்று சிவனைப் பழிப்பதுபோல் புகழ்கிறது சுந்தரரின் பதிகம்.
நக்கீரர், தாம் அருளிய திருமுருகாற்றுப்படையில்தான், ஆறுபடை வீடுகள் என்ற மரபைத் தொடங்கி வைக்கிறார். முதலாவதாக அவர் குறிப்பிடுவது திருப்பரங்குன்றத்தைத்தான்
ஆகவே, ஆறுபடை வீடுகளில் முதலாவது எனும் பெருமை இந்தத் தலத்தையே சாரும்.
முருகன் சந்நிதிக்கு அருகில், சிவனாரை எதிரெதிராக நோக்கியபடி, ஸ்ரீமகாலட்சுமியுடன் அருள் பாலிக்கிறார் ஸ்ரீபவளக்கனிவாய்ப் பெருமாள்.
என்ன இருந்தாலும்... மருமகன் முருகனுக்கு மாமனாரும் மாமியாரும் இவர்கள்தாமே...
திருமாலின் ஆனந்தக் கண்ணீர்த் துளிகளிலிருந்து அவதரித்தவர்கள்தான் சௌந்தரவல்லியும் அமிர்தவல்லியும் ஆவார்கள்.
முருகப் பெருமானை மணமுடிக்க வேண்டி, முறையே செளந்தரவள்ளி நம்பிராஜன் மகளான வள்ளியாகவும், அமிர்தவள்ளியினவள் தேவேந்திரன் மகளான தெய்வானையாகவும் வளர்ந்தனர்.
தேவேந்திரனும் இந்திராணியும், சூரபத்மனால் பற்பல கொடுமை களுக்கு உள்ளாகி, தேவலோகத்திலிருந்து விரட்டப்பட்டு ஒளிந்து வாழ்ந்த காலத்தில், செல்வமகளைத் தங்களுடைய ஐராவத யானையிடம் விட்டுச் சென்றனர்.
யானை (அது தேவ யானை) வளர்த்த பெண் என்பதால், அவள் தெய்வானை (தெய்வ யானை- தேவ சேனா- தேவ குஞ்சரி) ஆனாள்.
மருமகனையும் மகளையும் புளகாங்கிதத்துடன் கண்ணுறும் திருமால் திருமகள் சந்நிதியில், அவர்களுடன் மதங்க முனிவரும் காட்சி தருகிறார். (இந்தப் பெருமாள், மீனாட்சியம்மன் திருமணத்தின்போதும், மதுரைக்கு எழுந்தருள்வார்).
முருகக் கடவுளின் திருமணத்தில் பங்கு பெற ஏனையோரும் வந்து தங்கியதால், இந்தத் தலத்துக்கு சிறப்புகள் அதிகம். திருமணம், பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெற்றது.
மூலவரான முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய்க் காப்பும் புனுகும் சார்த்துகின்றனர்.
திருமண நாளன்று தங்கக் கவசம். அபிஷேகங்கள் யாவும் அவருடைய ஞானவேலுக்கு மட்டுமே நடைபெறுகிறது.
சூரசம்ஹாரத்துக்கு முன்பே முருகன் திருப்பரங்குன்றத்துக்கு வந்துள்ளாராம். சூரபத்மனின் இளைய சகோதரனான தாரகனையும், அவனுடைய தோழன் கிரௌஞ்சனையும் வதைத்த பிறகு, தென் திசையில் தேவமலையில் முருகன் தங்கினார்.
அங்கிருந்து புறப்பட்டு, தெற்கிலுள்ள பல தலங்களுக்கும் வந்தவர், திருவிடைமருதூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு வந்து வழிபட்டிருக்கிறார்.
பிறகு, வெப்பமான பாலைப் பகுதி வழியே வந்தபோது, அவரை பராசரப் புத்திரர்களான தத்தர், அநந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி ஆகியோர் அறிந்து உணர்ந்தனர்.
திருப்பரங்குன்றில் தவம் செய்து கொண்டிருக்கும் அவர்கள், வட திசையில் சென்று முருகனின் கழலடிகளில் பணிந்தனர்.
அவர்களுக்கு அருள்வதற்காகப் பரங்குன்றம் அடையும் பெருமான், அங்கிருந்து திருச்செங்கோடு சென்று, பின்னர் செந்திலம்பதியை அடைகிறார்.
பராசரப் புத்திரர்கள் தவம் செய்ததால், இத்தலம் *பராசர க்ஷேத்திரம்* எனப்படுகிறது.
சரி, இந்த ஆறு பேரும் ஏன் இங்கு வந்தார்கள் தெரியுமா?.....
கார்த்திகைப் பெண்களிடம் வளரும் குழந்தைகளைக் காண, பார்வதியம்மை வந்தாள்.
குழந்தைகளை அவள் வாரி அணைக்க, அறுவரும் இணைந்து ஆறு முகங்கள் கொண்ட கந்தன் ஆயினர்.
அன்னை, குழந்தைக்குப் பாலூட்டினார். பாலின் சில துளிகள் சரவணப் பொய்கையில் சிந்தின.
அந்தப் பாலைப் பருகிய ஆறு மீன்கள், ஆறு முனிவர்களாகி விட்டனனர்.
உண்மையில், பராசரரின் புதல்வர்களான ஆறுபேரும், சிறுவர்களாக ஆற்று நீரில் விளையாடுவது வழக்கம்.
அப்போது மீன்களைப் பிடித்துத் துன்புறுத்தி வந்திருக்கின்றனர். மகன்கள் செய்யும் கொடுமையைக் கண்ட பராசரர், நீங்கள் ஆறுபேரும் மீன்களாக வேண்டும் எனச் சபித்தார்.
அதன்படி ஆறுவர் மீன்களாயினர். சாப நிவர்த்தியாக, 'எப்போது குமரக் கடவுளுக்கு அன்னை அளிக்கும் ஞானப்பால் பொய்கையில் சிந்தி, அதை இந்த மீன்கள் பருகுகின்றனவோ, அப்போது சாப விமோசனம் கிடைக்கும்' என முனிவர் மொழிகிறார்.
பாலைப் பருகி, சாப விமோசனம் பெற்ற அவர்கள் குமரனின் அருளையும் பெறவேண்டும் என்பதற்காகத் திருப்பரங்குன்றில் தவம் செய்யப் பணித்தாராம் சிவனார்!
திருப்பரங்குன்றத்திற்கு தீர்த்தங்கள் ஏராளமாக உண்டு என சொல்வர். சித்த தீர்த்தம், மண்டல தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பாண்டவர் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், குஷிர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், புஷ்ப தீர்த்தம், புத்திர தீர்த்தம், சத்ய தீர்த்தம், பாதாள கங்கை (காசி தீர்த்தம்), சரவணப் பொய்கை என விவரிக்கின்றன புராணங்கள்.
லட்சுமி தீர்த்தக் கரையில் உள்ள விநாயகரை வணங்கி, உப்பும் மிளகும் சேர்த்து, தீர்த்தத்தில் போட்டால், தோல் நோய்கள் நீங்குப் பெறுவர் என சிலர் சொல்லக் கேட்டோம்.
மலைக் குகையில் சிறைப்பட்டிருந்த நக்கீரரைக் காப்பாற்ற, பாறையைப் பெருமான் பிளந்ததாகச் சொல்வர்.
என்ன நடந்தது? சிவனாருடன் நக்கீரர் வாதிட்ட கதை நமக்குத் தெரியும். தமிழ்க் கடைச்சங்கத் தலைமைப் புலவரான அவர், சிவனைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என்றிருந்தார்.
தம்மையும் நக்கீரர் பாடவேண்டும் என்கிற ஆசை முருகனுக்கு இருந்தது.
எனவே, முருகன் அண்டாபரணன் எனும் வீரனை அழைத்து, எப்படியேனும் நக்கீரரிடம் குற்றம் கண்டுபிடித்துச் சிறை செய்து வா என்று கட்டளையிட்டார்.
நக்கீரரின் அவதாரத் தலம் பரங்குன்றம். மலையடிவாரச் சரவணப் பொய்கைக் கரையில், அவர் பூஜை செய்து கொண்டிருந் தார்.
எதேச்சையாக அரசிலை ஒன்றைக் கிள்ளிவிட்டார் அது, நீரில் பாதியும் நிலத்தில் பாதியுமாக விழுந்தது.
நீர்ப் பாதி மீனானது; நிலப் பாதி பறவையானது. அவை, ஒன்றையன்று பற்றி இழுத்தன.
நக்கீரர், அவற்றைப் பிரிப்பதற்காக, நகத்தால் கீறினார். இரண்டும் உயிர் நீத்தன.
இதைப் பார்த்த அண்டாபரணன், கொலைக் குற்றம் என்று சொல்லி, அவரைச் சிறையில் இட்டான்.
ஏற்கெனவே (முருகன் திருவிளையாடலால்) சிறையில் தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது புலவர்கள் இருந்தனர்.
ஆயிரம் பேர் சேர்ந்துவிட்டால் பலி' என்ற நிலையில், அத்தனை பேரும் நக்கீரரை ஏசினர்.
கந்தனைப் பாடாததால் ஏற்பட்ட குறை என்பதை உணர்ந்த நக்கீரர், எல்லோ ரையும் விடுவிப்பதற்காகத் திருமுருகாற்றுப்படை பாடினார்.
முன்னூற்று பதினேழு வரிகள் கொண்ட இந்த நூல், 'முருகு' என்றே கடவுள் பெயரால் அழைக் கப்படுகிறது.
சங்க இலக்கியத்தின் ஒரே பக்திப் பனுவல் இதுதான்.
*சம்பந்தர் தேவாரம்:*
பண்: குறிஞ்சி.
1.🔔நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
ஆடலனஞ்சொ லணியிழையாளை யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.
🙏நீண்டு விரிந்த ஒளிக்கதிர்களை உடைய வெண் பிறையோடு வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சூடுதலை உடையவன். அந்திப் போதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவன். அழகிய சொற்களைப் பேசும் அணிகலன்களோடு கூடிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு பாடுபவன். அத்தகைய பெருமானது நல்லநகர் பரங்குன்று.
2.🔔அங்கமொராறும் மருமறைநான்கும் மருள்செய்து
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.
🙏நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளிச் செய்து, திருநீறு அணிந்த மார்பில் அழகுமிக்க வெண்ணூலைப் பொலிவுற அணிந்து, பிறை பாம்பு ஆகியவற்றை விளங்கும் சடைமீது சூடித் தேன் போன்ற மொழியினளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாய்ச் சிவபிரான் விளங்கும் நன்னகர் திருப்பரங்குன்றம்.
3.🔔நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மே னிரைகொன்றை
சீரிடங்கொண்ட வெம்மிறைபோலுஞ் சேய்தாய
ஓருடம்புள்ளே யுமையொருபாக முடனாகிப்
பாரிடம்பாட வினிதுறைகோயில் பரங்குன்றே.
🙏கங்கை சூடிய நிமிர்ந்த சடைமுடிமேல் வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சிறப்புற அணிந்துள்ள எம் இறைவன் மிக உயர்ந்துள்ள தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள உமையம்மையோடும் உடனாய்ப் பூதகணங்கள் பாட இனிதாக உறையும் கோயில் திருப்பரங்குன்றம்.
4.🔔வளர்பூங்கோங்க மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போன்மேனித் தையனல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.
🙏வளர்ந்துள்ள கோங்கு முதலிய மரங்களும், மணம் தரும் மாதவி முதலிய செடிகளும், மல்லிகை முதலிய கொடிகளும் நிறைந்துள்ள வண்டுகள் முரலும் சோலைகள் சூழ்ந்த சாரலை உடைய திருப்பரங்குன்றம், ஒரு பாகமாகிய தளிர் போன்ற மேனியளாகிய தையல் நல்லாளோடு பொருந்திக் கொத்தாகச் செறிந்த பூக்களைக் கொண்ட கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகிய சிவபிரானது நகராகும்.
5.🔔பொன்னியல் கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியவீசன் றொன்மறை
பன்னியபாட லாடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை யுறுநோயே.
🙏பொன் போன்ற கொன்றை மலர், பொறிகள் விளங் கும் பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள முறுக்கேறிய சடைமுடியோடு பொருந்திய ஒளி வடிவினனாகிய ஈசனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடிஆடுபவனுமாகிய சிவபிரான் எழுந் தருளிய திருப்பரங்குன்றை எண்ணிய சிந்தை உடையவர்க்கு மிக்க நோய்கள் எவையும் இல்லை.
6.🔔கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனன்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்ற னன்னகர்போலும் பரங்குன்றே.
🙏வாயிலை உடைய காவல் பொருந்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் கனலில் மூழ்குமாறு அம்பினை எய்த வில்லினனும், அந்திக் காலத்தில் சுடுகாட்டில் அருகில் தன்னொடு பழகிய பூதகணங்கள் பாட நின்றாடுபவனும் போர்க்கருவியாகிய சூலப்படையை ஏந்தியவனுமாகிய சிவபிரானது நன்னகர் திருப்பரங்குன்றம்.
7.🔔அயிலுடைவேலோ ரனல்புல்குகையி னம்பொன்றால்
எயில்படவெய்த வெம்மிறைமேய விடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.
🙏கூரிய வேற்படையை உடையவனும், அனல் தழுவிய கை அம்பு ஒன்றால் மூவெயில்களை எய்து அழித்தவனும் ஆகிய எம் இறைவன் மேவிய இடம், ஆண் மயில்கள் பெண் மயில்களைத் தழுவிச் சிறந்த வகையில் நடனம் ஆடும் வளர்ந்த சோலைகளில் பெண் வண்டுகளோடு கூடிய ஆண் வண்டுகள் இடையறாது இசைபாடும் சிறப்புடைய திருப்பரங்குன்றாகும்.
8.🔔மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று
நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.
🙏மை எனத்தக்க கரிய மேனியனாகிய வாட்போரில் வல்ல இராவணனின் மகுடம் பொருந்திய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை ஒன்றிய மனத்துடன் அங்குள்ள பெருமானின் சேவடிகளைச் சிந்தித்துச் சிவனே என்று நித்தலும் ஏத்தித் துதிக்க, வினைகள் நம் மேல்நில்லா.
9.🔔முந்தியிவ்வையந் தாவியமாலு மொய்யொளி
உந்தியில்வந்திங் கருமறையீந்த வுரவோனும்
சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி
பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.
🙏மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் தந்த அளவில் முந்திக் கொண்டு இவ்வுலகை ஓரடியால் அளந்ததுடன் வானுலகங்களையும் ஓரடியால் அளந்த திருமாலும், அத்திருமாலின் ஒளி நிறைந்த உந்திக் கமலத்தில் தோன்றி அரிய மறைகளை ஓதும் நான் முகனும் மனத்தாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் பிழம்பாய் நின்ற சோதி வடிவினனும், விளையாடும் பந்து தங்கிய அழகியகையை உடைய மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்பரங்குன்று.
10.🔔குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டானீழன் மேவியவீசன் பரங்குன்றைத்
தொண்டாலேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.
🙏பருத்த உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன் மிடுக்காய்ப் பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மரநிழலில் வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டு செய்து ஏத்தினால் நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும்.
11.🔔தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
படமலிநாக மரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி
விடமலிகண்ட னருள்பெறுந்தன்மை மிக்கோரே.
திருச்சிற்றம்பலம்.
🙏பரப்புமிக்க பொய்கையை உடைய சண்பை என்னும் சீகாழிப்பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தன் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டிய பரங்குன்றிறைவர் மீது பாடிய தொடை நயம் மிக்க பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் தம் துன்பம் நீங்கி விடமுண்ட கண்டனாகிய சிவபிரானின் அருள்பெறும் தகுதியில் மேம்பட்டவராவர்.
திருச்சிற்றம்பலம்.
*🎡திருவிழாக்கள்:*
சித்திரை திருவிழா,
வைகாசி விசாகம்,
கந்த சஷ்டி,
திருக்கார்த்திகை திருவிழா,
*☎தொடர்புக்கு:*
0452- 2482248
0452- 2482648
98653 70393
98421 93244
94433 82946
*📣அருகிலுள்ள பாடல் பெற்ற தலங்கள்:*
திருப்பரங்குன்றத்திலிருந்து தொலைவுகள்.........................
திருப்பூவணம்...........27.கி.மி.
அருப்புக்கோட்டை....49.கி.மி.
திருஏடகம்...................23.கி.மி.
திருஆப்பனூர்...........13.கி.மி.
சிம்மக்கல்...................13.கி.மி.
கூடலழகர்...................10.கி.மி.
வண்டியூர்...................14.கி.மி.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *திருஏடகநாதேஸ்வரர் திருக்கோயில், திருவேடகம்.*
----------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment