மதுரையில் மீன் பிடிக்கும் சிவபெருமான் !!!
திருவிழா நகரமாம் மதுரையம்பதியிலே தற்சமயம் "தைத்திருவிழா" சிறப்பாக நடந்தேறிவருகிறது. சோமசுந்தரபெருமானுக்கும் எம்பெருமாட்டி மீனாட்சிக்கும் சேர்ந்து நடக்கும் பிரமோற்சவங்களில் இந்த தை தெப்பத்திருவிழாவும் ஒன்று (சித்திரை, ஆவணி, மாசி ஆகியவை மற்றைய பிரமோற்சவங்கள்). ஆம், வரும் தைப்பூசத்தன்று மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வராளுக்கு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெறும். அதை முன்னிட்டு 12 நாட்கள் நடக்கும் திருவிழா அலாதியானது !!!
தினமும் ஸ்வாமியும் அம்பாளும், காலை மாலை இருவேளைகளிலும் வாகனங்களில் வீதி உலா வருவதோடு மட்டும் நில்லாமல், இந்தத் திருவிழாவினில் நாம் அனுபவிக்கவேண்டியது ஏராளம் !!! அதில் ஒன்று தான் இந்த எட்டாம் நாள் திருவிழாவான சிவபெருமான் மீன் பிடிக்கும் வைபவம் !!!
இந்நாளில் ஆலவாய் அண்ணல் தாமே வலை வீசி மீன் பிடிப்பர் !!! ஏன் ??? எதற்கு ??? திருவிளையாடல் புராணத்தில் வரும் "வலைவீசி அருளிய படலமே" இதற்கு பதில். ஒருமுறை கைலாயத்தில் ஈசன் சிவஞானபோதம் என்னும் நூலுக்கு பொருளுரைக்க, அதை சற்று கவனக்குறைவோடு கேட்ட அம்பிகை, அதனால் ஏற்பட்ட சாபத்தின் விளைவாக பூலோகத்தில், பாண்டிய நாட்டில், பாக்கம் என்னும் ஊரில், மீனவர் குலத்தில் வந்துதித்தாள் !!!.... தாயை பிரிந்த துயரத்தில் அந்த சிவஞானபோத நூலை கடலில் விட்டெறிந்தார் முருகப்பெருமான். அதன் விளைவாக அவரும் மதுரையம்பதியில் வணிகர் குலத்தில் ருத்ரசர்மன் என்னும் பெயரில் ஊமையாகவும், அவரை தடுத்து நிறுத்தாத நந்தியம்பெருமான் கடலில் சுறாமீனாகவும் பிறப்பு எடுத்தனர். !!!
நாட்கள் நகர நகர, சுறாமீனின் துன்பம் தாளாத மீனவகுல தலைவன் , அம்மீனை எவர் அடக்குகிறாரோ அவருக்கு தம் மகளை (அம்பிகையை) மணம்முடிப்பதாக வாக்களித்தார் !!! இதனை அறிந்த ஈசன் தானே மீனவ வேடம் கொண்டு (ஆஹா என்னே ஒரு அழகிய கோலம் !!! மீனை ஒத்த கண்ணுடைய அம்பிகையை தன்னுள்ளே சரிபாதியாக கொண்டவர், மீனவனாக தோன்றுகிறார் !!! தலையில் கட்டிய முண்டாசும், கழுத்தில் பூண்ட புலிநக மாலையும், தோளில் தொங்கிய பிண்ணிய மீன்வலையும், இடையில் இழுத்துக்கட்டிய வெண்ணிற ஆடையும், இதழில் புண்சிரிப்பும் .... நினைக்கும்போதே மெய்சிலிர்க்கிறது !!! ) அங்கே படகில் கடலில் தாவுகிறார் !!!
அவரைக்கண்டவுடன் சுறாமீன் தானாக வந்து வலையில் சிக்குகிறது !!! பின்னர் கரைக்கு வந்த மீனவனான் ஈசனுக்கு, மீனவப்பெண்ணாக வந்த அம்பிகை மாலையிட, உடனே அவ்விருவரும் பொய்வேடம் கலந்து நிஜரூப காட்சி அருள்கின்றனர் !!!
இச்சம்பவம் வெறும் கதையோடு மட்டும் நில்லாமல், வருடாவருடம் திருவிளையாடல் உற்சவமாகவே நடக்கறது மதுரையில் !!! அதுவே இந்த தைத்திருவிழா எட்டாம் நாள்! அன்றைய தினம் காலை ஸ்வாமியும் அம்பாளும், மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் ரயில்வே ட்ராக் அருகில் (எல்லீஸ் நகர் போகும் வழியில்) அமைந்த "வலை வீசி தெப்பக்குளத்திற்கு" தங்கப்பல்லக்குகளில் எழுந்தருள்வர். அங்கே இறைவன் சகல மரியாதைகளையுடன் மீன் பிடிப்பர் !!! பின்னர் மச்சக்கந்தி திருமண காட்சி நடைபெறும் !!! ஆம் மதுரை ராஜாவும் ராணியும் மீனவர்களாக மாறி மாலைமாற்றித் திருமணம் செய்துகொள்வர் !!! பின்னர் இரவு தங்கக்குதிரையிலும், பல்லக்கிலும் புறப்பட்டு கோவிலை அடைவர்.
(தற்காலத்தில் இந்த உற்சவத்திற்கு சுவாமி அம்பாள் வலைவீசி தெப்பக்குளம் செல்வதில்லை. சொல்லப்போனால் அந்த குளமே மூடப்பட்டு வேறு சில கட்டிடங்கள் அவ்விடத்தில் வந்துவிட்டன. எனவே இந்த உற்சவம் கோயிலுக்குள்ளேயே பழைய கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று கடலில் வலைவீசிய ஐயன், பின்னர் குளத்தில் அதைச்செய்ய, தற்சமயம் ஒரு பாத்திரத்தில் மீன்பிடிக்கிறார். அழகிய புராணத்தோடு கூடிய ஒரு நீர்நிலையினை இழந்தோம் என்று நினைக்கும்போது சற்று வேதனையாகத்தான் உள்ளது). எது எப்படியோ அம்மையும் அப்பனும் அன்று சிந்திய அதே புன்முறுவல் மாறாது இன்றுவரை நமக்காக நிற்கின்றனர் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
################
இறைவனின் திருவிளையாடலில் பங்கேற்ற இந்த புனிதம் மிக்க வலை வீசிய தெப்பக்குளம்...எது என்று மதுரையில் பிறந்த இந்தத் தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஶ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான அந்த குளமும்,அதன் நீர்பிடிப்புப் பகுதிகளான சுற்றுப்புறமும், மதுரை மாநகருக்கு பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிக்காக, மதுரை நகர் நிர்வாக சபைக்கு(இப்போது மதுரை மாநகராட்சி) தானமாக வழங்கப்பட்டது. அந்த "வலைவீசிய தெப்பக்குளம்" தான் மதுரை-மத்திய பேருந்து நிலையம். மாநகரில் வாழும் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில்...சமூக அக்கறையுடன்...திருக்கோவிலால் வழங்கப்பட்ட அந்த இடத்தில் அமைந்த பேருந்து நிலையத்துக்கு... பிற்காலத்தில் திமுக அரசு..."ஆன்மீகத்தின் முதல் எதிரியான---பெரியார் பெயரை சூட்டி..." பெரியார் பேருந்து நிலையம்" ஆக்கியதும் கூட மதுரையின் முக்கியமான ,தெரிந்து கொள்ளப்பட வேண்டிய வரலாறு தான்!
இனி நமக்கு...திருவிளையாடல் சினிமாப் படத்தில் சிவாஜி கணேசன் வித்தியாசமாக காலை சாய்த்து -இழுத்து அழகு நடையுடன் வரும் காட்சியை காணும் போது... சிவபெருமானின் "வலைவீசிய திருவிளையாடல்" நினைவும்,ஒவ்வொரு முறை பெரியார் பேருந்து நிலையத்தை கடக்கும் போதும்..."வலைவீசிய தெப்பக்குளம்" நினைவும் வரவேண்டும்.
இரா.சாமிநாதன்,மதுரை.
No comments:
Post a Comment