உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
----------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...................)
---------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண் 226 :*
*பாடல் பெற்ற தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருத்திணை நகர்:*
----------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள இருபத்து இரண்டு தலங்களில் இத்தலம் ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.
திருத்திணைநகர் எனும் இந்த ஊரை, தற்போது தீர்த்தனகிரி என்று அழைக்கிறார்கள்.
*இறைவன்:* சிவக்கொழுந்தீசர், திருந்தீஸ்வரர், சிவாங்கரேஸ்வரர்.
*இறைவி:* கருந்தடங்கண்ணி, நீலாம்பிகை, ஒப்பிலா நாயகி, இளங்கொம்பன்னாள்.
*தல விருட்சம்:* சரக்கொன்றை.
*தல தீர்த்தம்:* ஜாம்பவ தடாகம்.
*ஆகமம்:* காரண காமிகம்.
*தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர். -ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
*இருப்பிடம்:*
கடலூர் சிதம்பரம் பிரதான சாலையில், கடலூருக்கு சுமார் பதினெட்டு கி.மீ. தொலைவிலுள்ள ஆலப்பாக்கம் தாண்டி மேட்டுப்பாளையம் என்ற கிராமம் வரும்.
அங்கிருந்து தீர்த்தனகிரிக்குச் செல்லும் சாலை பிரிகிறது. பிரியும் சாலையில் சுமார் நான்கு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு
சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்,
தீர்த்தனகிரி அஞ்சல்,
கடலூர் வட்டம்,
கடலூர் மாவட்டம்
PIN - 608 801
*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோயில் அமைப்பு:*
இவ்வாலயத்திற்குச் செல்லும் பொழுது, இராஜகோபுரம் மூன்று நிலைகளைத் தாங்கியபடி கிழக்கு நோக்கிய வண்ணம் அருளோவிய காட்சியாகத் தெரிவதைக் கண்டதும், *சிவ சிவ,சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
கோபுர வாயில் வழி உள் நுழைந்ததும், நேரே கவசமிட்ட கொடிமரத்தை முதலில் கண்டு கொண்டோம்.
கொடிமரத்து முன் நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
அடுத்திருந்த நந்தியாரைக் கண்டு, வணங்கிவிட்டு ஆலயத்துள் சென்று ஈசனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
இதற்கடுத்ததாக இருந்த பலிபீடத்தருகாக போய் நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு, மேலும் நமக்கு ஆணவமலம் துளியாதிருக்கும் மனமும் வேண்டும் என்று, கேட்டு வணங்கிக் கொண்டு திரும்பினோம்.
வெளிப் பிராகாரத்தில் விநாயகர் இருப்பதை பார்த்து விட்டோம். விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
அடுத்து, நால்வர்கள் சுப்பிரமணியர், வீரசேன மன்னன் ஆகியோரின் சந்நிதிகள் இருக்க தொடர்ச்சியாக வணங்கியபடி மே நகர்ந்தோம்.
இத்தலத்தின் தலமரமாகிய கொன்றையும், அடுத்தடுத்து பைரவர், சூரியன் திருமேனிகளும் இருக்க வணங்கிக் கொண்டோம்.
பிரகார வலம் முடித்து, தெற்கிலுள்ள பக்கவாயில் வழியாக உள்ளே சென்றோம். இதற்கு நேரே நடராச சபை இருந்தது.
நடராஜர் முன்வந்து நின்று பணிந்து வணங்கினோம். இவரையும் இவரால் நளினத்தினையும் கண்டு, பக்திப்பாங்கால் விழியோரம் ஈரமாக உணர்வைப் பெற்றோம்.
கூப்பிய கரங்களுடன் நடராஜப் பத்து பாடல்களைப் பாடத் தொடங்கினோம். நாவு தழுதழத்தது, தொண்டை விம்மியது, குரல் வரமறுத்தது, அழுகை பொங்கியது. ஆனால் மனம் ஆனந்தித்தில்எனவே மனதிற்குள்ளாக பாடி முடித்தோம்.
சிரமேற் கைகளை உயர்த்தி குவித்து தொழுது, குருக்கள். தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு நகர்ந்தோம்.
நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும், சிறிய மூர்த்தங்கள் அமைந்துள்ளன.
இக்காட்சி, திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சி காண்பது மிகவும் அபூர்வமாக இருந்தது.
இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது என்று அருகிருந்தோர் கூறினர்.
நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதிக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர்.
இதனால், கலைகளில் மேன்மை, சிறப்பு புகழ் எய்தலாலாம் என்பது நம்பிக்கை வேண்டுவோர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
உள் மண்டபத்தில் இடதுபுறமாக திரும்பி வரும்போது, மூலவர் சந்நிதி இருந்தது. சந்நிதி முன் வந்து வணங்கி, மனமுருகி பிரார்த்தித்து வணங்கி அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.
இறைவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி தழுவல் நிகழ்கிறதென குருக்கள் கூறினார்.
கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் கண்டு தொழுது கொண்டோம்.
லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மா, விஷ்ணு நின்று தரிசிக்கும் இறைவனை தரிசிக்கும் கோலத்தில் காணப்படுகின்றனர்.
சண்டேசுவரர் சந்நிதிக்கும் சென்று இவரை வணங்கும் நெறிமுறையுடன் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்து அம்பாள் கருந்தடங்கண்ணி அம்மை சந்நிதிக்கு வந்து, இங்கேயும் மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
இறைவனும் சுயம்பு லிங்கமாக அவ்விடத்தில் எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் *தினைநகர்* என்று பெயர் பெற்றது.
*தல அருமை:*
இக்கோயில் நான்கு யுகங்களாக உள்ளது.
இவ்வூருக்கு அருகில் கருடனால் உண்டாக்கப்பட்டதான பெருமாள் ஏரியின் தென்புறத்தில் இருக்கும் எழுமூர் என்ற ஊரில் பெரியான் என்பவன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.
அந்த யுகத்தில் கோயில் இருந்த இடம் அனைத்தும் காடாக இருந்தன.
அப்போது இத்தலத்தின் தலவிருட்சமான கொன்றை மரம் இருந்த இடத்தில்தான் பெரியான் என்பவனின் விளைநிலம் இருந்தன.
பெரியான் சிறந்த சிவபக்தன். வறுமை வந்த காலத்திலும், நாயன்மார்கள் போல, சிவனடியார்களுக்கு அன்னமுது அளித்து அதன் பிறகே தான் உண்ணும் வழக்கம் கொண்டிருந்தான்.
தனது நிலத்தில் தினையைப் பயிரிட்டு அதன் மூலம் கிடைத்த வருமானத்திலிருந்து அடியார்களுக்கு அமுதளித்து வந்தான்.
இவனது அடியார் தொண்டை உலகமறியச் செய்ய நினைத்த இறைவன், ஒருநாள் அவன் முன்னால் அடியார் வடிவில் தோன்றி, தனக்கு அமுதளிக்குமாறு வேண்டினார்.
இதைக் கண்டு இரங்கிய பெரியானும், நான் தற்போது நிலத்தை உழுது கொண்டிருக்கிறேன். இதில் பயிரிட வேண்டி, தினை விதைகளை இதோ வைத்திருக்கிறேன்.
தாங்களோ பசியால் மிகவும் வாடி களைத்திருக்கிறீர்கள்.
நான் எனது வீட்டிற்குச் சென்று உணவு எடுத்து வருகிறேன். அதுவரையில் தாங்கள் தினை விதைகளை உட்கொள்ளலாம் என கூறி அவர் கைகளில் தினையைக் கொடுத்து தனது இல்லத்திற்குச் சென்றான்.
இறைவனோ பெரியான் திரும்பி வருவதற்குள் கையில் கொடுத்துவிட்டுச் சென்ற தினை விதைகளை நிலத்தில் விதைத்துவிட்டு, இன்றே இவை விளைந்து முதிர்ந்த நிலையுடன் இருக்குமாறு அருளிச் செய்து விட்டு மறைந்தருளிருந்தார்.
அமுது கேட்டு சிவனடியார் வந்த செய்தியை, இல்லம் திரும்பிய பெரியான் தன் மனைவியிடம் கூறினான்.
வீட்டில் உணவுப் பொருள்கள் எதுவும் இல்லாததால் நிலத்தில் விதைப்பதற்காக வைத்திருந்த தினையை கஞ்சி காய்ச்சி எடுத்துக் கொண்டு மனைவியுடன் விளைநிலங்களுக்கு வந்தான்.
அங்கு தினைப்பயிர்கள் முற்றி வளர்ந்து விளைந்திருந்த அதிசயத்தை கண்டனர்.
இருவரும் நாலாபுறமெங்கும் அடியாரைத் தேடியும் அமுது கேட்டு வந்திருந்த அடியாரைக் காணவில்லை.
பசியின் நேரமறிந்து அடியார்க்கு உணவு அளிக்க முடியாது போயினதால் தன் உயிரை விட்டொழிக்க முடிவெடுத்தான் பெரியான்.
உடனே அவன் மனைவி பெரியானை தடுத்து விட்டு......"முதலில் என்னைக் கொன்று விட்டு, அதன் பிறகு நீங்கள் உயிரை விடுங்கள் என்றாள்.
சரியென்ற பெரியான், ஏர் உழும் மழுவால் மனையை குத்த ஓங்கும்போது............
ஈசன் தடுத்து காட்சி கொடுத்து பெரியான் கையிலிருந்து கஞ்சியை வாங்கி குடித்தார்.
இவ்வாறு இன்றே தினை விளைவித்து இன்றே விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.
இவ்வரலாற்றை தென்புறச் சுவற்றில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
இப்போதும் தினை அமுதைத்தான் சுவாமிக்கு நிவேதமாக படைக்கப்படுகிறது.
*சம்பந்தரை அடியார்கள் எதிர்கொண்டது:* இத்தலத்துப் பெருமானை திருமாலானவர் மூன்று தினங்கள் வழிபட்டு, முராசுரனை வதைத்ததால் முராரி என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
ஜாம்பவான் இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நீண்ட ஆயுள் பெற்றான். ராமபிரானுடன் ராவணனைத் தேடும் வானர சேனைகளுக்குத் துணை புரிந்தார்.
அம்பாள் சன்னதியில் இவர் பூஜித்த சிவலிங்கம் உள்ளது. தீர்த்தம் ஒன்றும் இவர் பெயரில் அமைந்துள்ளது.
தல விருட்மான கொன்றை மரத்தடியில் நந்திதேவர் இறைவனை வழிபட்டுள்ளார்.
பிராகாரத்தில் உள்ள கொன்றை மரத்தடியில் சிவலிங்கமும் நந்தியும் இருக்கிறது.
பதஞ்சலி,வியாக்கிரபாதர் ஆகியோரும் இங்கு வந்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றனர்.
*தல பெருமை:*
வங்க தேசத்து மன்னனான விசுவ நிருபன் என்பவன் பிரமஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு ஒவ்வொரு சிவத்தலமாகத் தரிசனம் செய்து கொண்டு வரும்போது திருத்தினை நகரை அடைந்து இங்கிருந்த தாமரைத் தடாகத்தில் விதிப்படி ஸ்நானம் செய்து இறைவனைக் காலந்தோறும் தொழுது வந்தான்.
இதனால் அவனது சரும நோயும், பிரமஹத்தி தோஷமும் நீங்கின.
இவனது மகனான வீர சேனன் என்பவன் இங்கு மூன்று ஆண்டுகள் தங்கித் திருப்பணிகள் செய்வித்தான்.
இவனது வில்லேந்திய உருவச்சிலை நால்வர் சன்னதியில் இருக்கிறது நாம் காணலாம்.
தேவியின் திருநாமம் நீலாயதாக்ஷி என்பதாகும். அம்பிகையின் இப்பெயர், இத்தலத்தின் மீது சுந்தரர் அருளிய தேவாரத் திருப்பதிகத்தில், "கருந் தடங்கண்ணி பங்கனை" எனக் குறிப்பிட்டுள்ளார்..
அம்பிகையின் மகாமண்டபத்திலுள்ள சுவற்று ஓவியங்கள் சம்பந்தர், அப்பர் ஆகியோர் இத்தலத்துக்கு வருகை தந்தபோது அடியார்கள் எதிர் கொண்டு அழைப்பதைச் சித்தரிப்பதாக வரைந்து வைத்திருக்கிறார்கள்.
பிராகாரச் சுவற்றில் தலவரலாற்றுச் சிற்பங்களின் வரிசையில், பெரியான், அடியவராக வந்த இறைவன், தினை விதைத்தது, தினை முதிர்ந்து நிற்பது, கொன்றையடியில் காட்சி தருவது பெரியானும் அவனது மனைவியும் வணங்குவது போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆண்டு முழுதும் பூக்கும் சரக்கொன்றை மரம்
தல விருக்ஷமாகப் பிராகாரத்தில் அமைந்திருக்கும் சரக்கொன்றை மரமானது ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டவை.
தேவ கோஷ்டங்களிலுள்ள மூர்த்தங்களில் இரு கால்களையும் மடக்கிய வண்ணம் காட்சி தரும் தக்ஷிணாமூர்த்தி குறிப்பிடத்தக்கவர்.
சண்டிகேசுவரரும், சண்டிகேஸ்வரியும் சேர்ந்து ஒரே சன்னதியில் காட்சியளிப்பது மேலும் ஒரு சிறப்பு.
தீர்த்தங்கள்:
*கௌரி தீர்த்தம்:* பிராகாரத்தில் கிணற்று வடிவிலுள்ளது. சிவபூஜைக்காக அம்பிகையால் உண்டாக்கப்பட்டது.
*ஜாம்பவான் தீர்த்தம்:* ஜாம்பவானால் ஏற்படுத்தப்பட்ட இத்தீர்த்தம் தற்போது தாமரைக் குளமாகக் கோயிலின் வடபுறம் அமைந்துள்ளது.
*கருட தீர்த்தம்:*
ஏரி வடிவிலுள்ள இத்தீர்த்தத்தின் அருகில் கருட லிங்கக் கோயில் இருக்கிறது.
*தேவ தீர்த்தம்:*
அருகிலுள்ள கடல், தேவ தீர்த்தம் எனப்படுகிறது.
*சக்கர தீர்த்தம்:*
ஊரின் மூலையில் உள்ள மற்றொரு தீர்த்தம் இது.
இத்தலத்தைத் தேவாரம் பாடிய மூவரும் வந்து தரிசித்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.
ஆனால் நமக்கு சுந்தரர் அருளிய ஒரு பதிகம் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஏனையவை மறைந்து போயின என்பர்.
வாழ்க்கை நிலையாமையை உணர்த்தும் அற்புதமான திருப்பதிகத்தை இத்தலத்து இறைவன் மீது சுந்தரர் பாடியருளியுள்ளார்.
எனவே ஒரு முறை இவ்வாலயம் செல்லுங்கள்!. சுந்தரர் பதிகம் ஈசன்முன் பாடி வாழ்வில் சுகந்தம் பெறுவீர்! சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
சிவாலயத் தல யாத்திரை செய்வதில் முன்னைவிட தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருவது தெரிகிறது. இதை பார்க்கையில் மனது மிக சந்தோஷம் கொள்கிறது.
வாட்சப் மற்றும் முகநூல் மூலமாகவும், இதனினும் மேலாக தொலைக் காட்சிகள் தரும் திருத்தல தரிசனமாக, பல ஊர்களை அறிமுகம் செய்து வருவதாலும் விழிப்புணர்ச்சி எழுச்சி கண்டுள்ளது.
இன்றைய வாழ்வில் தம் குடும்பம் மேம்படவும், பணம் சம்பாதிப்பதிலும், முக்கிய பங்காகிறது.
இதில் கிடைத்த சம்பாத்தியத்தையும், மருத்துவம் பாராத வாழ்வும் வேண்டும் என்று மக்கள் எண்ணும்போது, *இறைவா!* என்று அலறுவது தெரிகிறது.
ஜோதிடர்களும் தங்கள் பங்குக்கு மக்களை பரிகாரத் தலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கவலைகள் பெருகி வரும் இந்நாளில் மக்கள் இறைவனை நாடிவர ஆரம்பித்து விட்டனர்.
இதனால் மக்கள் பெரும்பாலும் பிரபலமான கோயில்களையும், பரிகாரக் கோயில்களையும் தேடிச் செல்கின்றனர்.
ஆனால் ஒரு தலத்துக்கு செல்லும் வழி அருகிலேயே மற்றொரு பாடல் பெற்ற தலங்களும், தேவாரம் இல்லாத சிவன் கோயில்களும் இருக்கிறது.
இவற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்கு சிலர் செல்வதில்லை. செல்ல நினைக்கும் தலத்தை மட்டுமே நினைவில் கொண்டு செல்வதனால், வழியிலிருக்கும் தலத்தைத் தரிசிக்கும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர்.
*(அதனால்தான் தற்போது அடியேன் பதிந்து வரும் பாடல் பெற்ற சிவ தல தொடரின் கடைசியில் அருகாமையிலுள்ள தலங்களையும், அதன் தொலைவுகளையும் சுட்டி வருகிறேன்.)*
பாடல் பெற்ற தலத்திற்கு சென்றால்தான் தரிசனப் பலன் கிடைக்கும் என்பதில்லை.
தேவாரம் பாடப்படாத சிவதலத்திற்கு சென்று தரிசித்தாலும் பலாபலன் உண்டு.
பாடல் பெற்ற தலமும், பாடல் கிடைக்கப் பெறாத தலமுமான எண்ணற்ற தலங்கள் திரும்பிப் பார்க்கக் கூட ஆளில்லாத நிலையில் இன்றும் நிறைய இருக்கின்றன.
இதைக் காணும் போது நெஞ்சு கொஞ்சம் கணக்கிறது. அந்தந்த
ஊர்களில் இருப்பவர்கள்கூட,
அந்த ஊர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்ததை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி நகர்ந்து விட்டதன் காரணமும் ஒன்று.
போதாக் குறைக்கு ஆலய நிலங்களையும், சொத்துக்களையும் பரிபாலணம் காணாத நிலை நிறைய இருந்து வருகிறது.
பிரபலமான கோயில்களுக்குச் சென்று, உண்டியல் முன் வரிசையுடன் நின்று காணிக்கை செலுத்தும் அன்பர்கள், ஏழ்மை நிலையில் உள்ள சிவாலயங்களை கொஞ்சம் பாருங்கள். கொஞ்சம் உதவுங்கள்.
இக்கோயில்களுக்கு முடிந்தபோதெல்லாம் சென்று வழிபாடுகள், உழவாரப் பணிகள் போன்றவற்றையும் செய்யலாம், அல்லது *செய்யத் தூண்டுதல் தொண்டு* செய்யலாம்.
அப்போதுதான் இக்கோயில்களில் தீபம் எரியும். ஏழ்மை நிலையிலுள்ள அர்ச்சகர்கள் வாழ்விலும் ஒளி ஏற்படும்.
மன்னர்கள், தமது பிற்கால சந்ததியர்களுக்காக விட்டுச் சென்ற ஆலயங்களை, நாம் பாராமுகமாய் இருந்து பாழாக்கி விடவேண்டாம்.
தீர்த்தனகிரி என்ற பெயரில் உள்ள இத்திருத்தினை நகரில் இருக்கும் சிவக் கொழுந்தீசுவரர் திருக்கோயிலும், நாம் தரிசிக்க சென்றிருந்த காலங்களில் வசதியில்லா நிலை கொண்டிருந்தது. சிவ சிவ. (இப்போதைய நிலை அடியேனுக்குத் தெரியா?)
*சுந்தரர் தேவாரம்:*
பண்: தக்கேசி.
1.🔔நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்ற மில்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
கரிய சோதியை வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
🙏🏾மனமே, நீ, திருநீற்றை அணிந்துள்ள அழகிய நெற்றியையுடையவனும், அந்நெற்றியில் ஒரு கண்ணை உடையவனும், வரிசைப்பட்ட வளைகளையணிந்த உமையவளைத் தனது ஒரு கூற்றில் வைத்த செய்கையை உடையவனும் , குற்றம் சிறிதும் இல்லாத வனும், கற்றையாகிய அழகிய சடையின் கண் நீரைக் கட்டியுள்ள அழகனும், தேவர்களுக்கு அரிய ஒளியாய் உள்ளவனும் ஆகிய, வரியையுடைய வரால் மீன்கள் துள்ளுகின்ற சேற்றையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .
2.🔔பிணிகொளாக்கை பிறப்பிறப் பென்னு
மிதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்
துணிய வேண்டிற் சொல்லுவன் கேள்நீ
அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதில்மூன்
றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும்
ஐயன் வையகம் பரவிநின் றேத்தும்
திணியும் வார்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
🙏🏾மனமே, நீ, நோயுடைய உடம்புகளிற் பிறத்தலும், பின்பு அவற்றினின்று இறத்தலும் ஆகிய இவ்வல்லலை ஒழித்து இறைவன் திருவடியிணைக்கு ஆளாதலைத் துணிந்து நிற்க விரும் பினால், அதற்கு வழிசொல்லுவேன, கேள்! வஞ்சனையை இயல்பாக உடைய அசுரர்கள் வாழ்ந்த மூன்று ஊர்களை, அழகிய, கொடிய வில்லால் அழியுமாறு வெகுண்ட தலைவனாகிய, செறிந்த, நீண்ட சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, உலகமெல்லாம், முன்னிலையாகவும், படர்க்கையாகவும் நின்று துதிக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக மனமே அஞ்சாதே!.
3.🔔வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்
மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
முடியு மாகரு தேல்எரு தேறும்
மூர்த்தி யைமுத லாயபி ரானை
அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்
அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச்
செடிகொள் கான்மலி திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
🙏🏾மனமே, நீ, மாவடுப்போலும் கண்ணிணை களையுடைய மாதர்பாற் செல்கின்ற மையலைப் பொருந்தி, அம் மையல் காரணமாகத் தோன்றுகின்ற பல, வஞ்சனைகளுக்கும் இடமாய்க் கெட்டொழிய நினையாதி மற்றும், எருதில் ஏறுகின்ற மூர்த்தியும் , எப்பொருட்கும் முதலாகிய பெருமானும், அடியார்கள் எம் அடிகள் என்று வணங்கித் துதிக்கும் அப்பனும், இணையில்லாத பெருமையையுடைய தனங்களையுடைய உமைக்குத் தலைவனும் ஆகிய புதல்களைக்கொண்ட காடுகள் நிறைந்த திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக!
4.🔔பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற்
பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக்
காவ வென்றுழந் தயர்ந்துவீ ழாதே
அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி
மாவின் ஈருரி உடைபுனைந் தானை
மணியை மைந்தனை வானவர்க் கமுதைத்
தேவ தேவனைத் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
🙏🏾மனமே, நீ, அகன்ற நிலப்பரப்பின்கண் தீவினை களையே செய்தும், பொய்கள் பலவற்றையே பேசியும் திரிந்து, உயிர்வாழ்வதற்கு இவையே ஏற்புடையன என்று கருதித் துன்பமுற்று மெலிந்து அழியாது மற்றும், உலகிற்கு முதல்வனாய் உள்ளவனது இயல்புகளை, நல்லாசிரியர்பாற் பெற்ற அறிவினால் சிந்தித்து, புலியினது உரித்த தோலை உடுத்தவனும், மாணிக்கம் போல், யாவர்க்கும் வலிய சார்பாய் உள்ளவனும், தேவர்களுக்கு அமுதம் போல்பவனும், அவர்கள் அனைவர்க்கும் இறைவனும் ஆகிய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லை யாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக!
5.🔔ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்
டுடல் தளர்ந்தரு மாநிதி யியற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானைக்
கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
🙏🏾உளமே, ஒரு பொருளல்லாத உயிர் வாழ்க்கையைப் பெரிய பொருளாக நினைந்து, அந்த நினைவின் வழியே, மெய் வருந்த, அரிய பெரிய பொருட்குவையை ஈட்டி என்றும் இனிது வாழ்தல் எமக்கு இயலும் என்று உலகத்தார் பேசுகின்ற இச் செருக்குரைதானும் பொய் என்பதனை நினை. மனமே, மலைபோலும் தோள்களை உடையவனும், பல கூத்துக்களை வல்லவனும் ஆகிய உலகில் உள்ளவர் எல்லாம் சென்று பலகாலும் மகிழ்ந்து தங்குகின்ற திருத் தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக!.
6.🔔வேந்த ராய்உல காண்டறம் புரிந்து
வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத்
தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடும்இப்
பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்
பரம னைக்கடற் சூர்தடிந் திட்ட
சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
🙏🏾மக்கள், அரசராய் நின்று உலகத்தை ஆண்டு, செங் கோல் செலுத்திப் பெருமிதத்துடன் அமர்ந்திருந்ததற்கு இடமாய் நின்ற மனித உடம்பாகிய இதனை, இதனொடு கொண்ட தொடர்பு நாள் தோறும் தேயப்பெற்று, பின்பு விட்டு நீங்கி, கொடிய துன்பத்தை நுகர் கின்ற இந்நிலையில்லாத வாழ்வினை, மனமே, சிறிதும் விரும்பாது விடு. மற்றும், மனமே, பாம்பை அகங்கையிற் கொண்டு ஆட்டுதலை விரும்பியவனும், யாவர்க்கும் மேலானவனும், கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகப் பெருமானார்க்குத் தந்தையும் ஆகிய, திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லை யாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக!.
7.🔔தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
🙏🏾மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை யுடையராகாது, தவத்தொழிலைச் செய்து, பயனில்லாத சொற்களைப் பேசி,பின்னுதல் பொருந்திய சடைகளைச்சேர்த்துக் கட்டிக் கொள்ளுதலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே, மக்கள், பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது. ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க. நீ, தேவர் கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய, செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக் கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று, இவனே தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக!.
8.🔔பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
பலருங் கண்டழு தெழஉயிர் உடலைப்
பிரிந்து போம்இது நிச்சயம் அறிந்தாற்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
🙏🏾மனமே, அன்புள்ள சுற்றத்தாரும், மற்றும் துணையாயுள்ளாரும் ஆகிய பலருங் கண்டு, உடல்மேல் விழுந்து அழுது எழும்படி, உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும். இது நிச்சயம். இதனை நீ அறிந்துள என்றால், அறியாமையையுடைய வாழ்வாகிய இம்மாறுபட்ட நெறியை நீங்கி, கரிய பெரிய கண்களை யுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும், உயிர்களில் நிறைந்திருப்பவனும், காலனுக்குக் காலனும், எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய, செருந்தி மரங்கள் பொன்போலும் மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை, விரும்பி அணுகச் சென்று அடைவாயாக!.
9.🔔நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன்
நன்மை யொன்றிலாத் தேரர்புன் சமணாம்
சமய மாகிய தவத்தினார் அவத்தத்
தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
உமையொர் கூறனை ஏறுகந் தானை
உம்ப ராதியை எம்பெரு மானைச்
சிமய மார்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
🙏🏾மனமே, நீ நன்மையை அடையவிரும்பினால், நன்மை சிறிதும் இல்லாத புத்தமும் சமணமும் ஆகிய சமயங்களைப் பொருந்திய தவத்தினரது பயனில்லாத செயல்களை விட்டொழி. நம்மைப் பலர் இகழ்ந்து பேசுதற்கு முன்பே, உமையை ஒரு பாகத்தில் உடையவனும், எருதை விரும்பி ஏறுபவனும், தேவர்கட்கு முதல்வனும், எங்கட்குத் தலைவனும் ஆகிய, மலைச்சிகரம் போலப் பொருந்திய சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளி யிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக!.
10.🔔நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து
நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்
சேடு லாம்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான்
நாட லாம்புகழ் நாவலூ ராளி
நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்
முத்தி யாவது பரகதிப் பயனே
🙏🏾எல்லையில்லாத, நிலையற்ற பிறவியை வெறுத்து, அதனினின்றும் நாம் நீங்குதலே பொருந்துவது என்று சொல்லி மனத்தைத் தெளிவித்து, திரட்சி பொருந்திய சோலைகளையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானது திருவடியிணையை நினைத்தற்கு ஆகும் புகழையுடைய திருநாவலூர்க்குத் தலைவனும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினையும் பாட வல்லவர் அடையும் இன்ப நிலையாவது , மிக மேலான நிலையாகிய முடிந்த பயனேயாம் .
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
வைகாசி விசாகத்தில் தேர் உற்சவம் நடைபெறுகிறது.
பங்குனி மாதம் 25,26,27 ஆகிய மூன்று தினங்கள் ஈசனின் திருநெற்றியில் கதிரவன் பிரவாகப் படுகிறான்.
*தொடர்புக்கு:*
வெங்கட்ராம குருக்கள்:
04142- 278324
98425 49486
94434 34024
*அருகிலுள்ள பாடல் பெற்ற தல தொலைவுகள்:*
திருதினை தலத்திலிருந்து தொலைவுகள்....................
சிதம்பரம்....................26.கி.மி.
திருநாரையூர்............44.கி.மி.
கூடலையாற்றூர்......49.கி.மி.
விருத்தாசலம்............52.கி.மி.
திருவதிகை................40.கி.மி.
திருமாணிக்குழி.......35.கி.மி.
திருப்பாதிரிப்புலியூர் 28.கி.மி.
தியாகவல்லி.............12.கி.மி.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம். (தியாகவல்லி)*
---------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment