உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
--------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.................)
---------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண் 227:*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*சோபுரநாதர் திருக்கோயில், திருச்சோபுரம்:*
-------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள இருபத்து இரண்டு தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகப் போற்றப் படுகிறது.
திருச்சோபுரம் என்னும் இத்தலவூரை தற்சமயம் தியாகவல்லி என்று அழைக்கின்றனர்.
*இறைவன்:* சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர்.
*இறைவி:* சோபுரநாயகி, தியாகவல்லியம்மை.
*தல விருட்சம்:* கொன்றை.
*தல தீர்த்தம்:* பரம தீர்த்தம்.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர். - முதலாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
*இருப்பிடம்:*
கடலூர் சிதம்பரம் சாலை வழியில் கடலூரில் இருந்து பதினெட்டு கி.மி. தொலைவிலுள்ள ஆலப்பாக்கம் என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து பிரிந்து ஆலப்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சென்று ரயில் பாதையைக் கடந்து சுமார் ஒன்றரை கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
திருசோபுரம் கிராமத்தில் சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்,
திருச்சோபுரம்,
தியாகவல்லி அஞ்சல்,
கடலூர் வட்டம்,
கடலூர் மாவட்டம்.
PIN - 608 801
*தொடர்புக்கு:*
98436 70518
*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
மணற்பாங்கான பகுதியில் இருக்கிறது இக்கோயில். மேற்கு நோக்கி அமைந்திருந்தது.
விசாலமான இடப்பரப்பினைக் கொண்டு ஆலயம் பரவி விரிந்திருந்தன.
ஓரு முகப்பு வாயில் மட்டுமே இருக்க அவ்வாயிலுள்ளாக *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்தவாறே உள்ளே பிரவேசித்தோம்.
உள்ளே நுழைந்ததும், கவசமிட்ட கொடிமரத்தைக் காணப் பெற்றோம். இதன் முன்பாக நெடுஞ்சான்கிடையாக விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
அடுத்திருந்த பலிபீடத்தருகாக போய் நின்று, நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்தோம். மேலும் நம்மனதில் ஆணவமலம் துளியாதிருக்கும் மனத்தையும் தருமாறு வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
வெளிப் பிரகாரத்திற்குள் செல்லும்போது, அனைத்து வணங்கிக் கொள்ள சந்நிதிகள் ஏதுமில்லை.
இரண்டாவது வாயில் தெரிந்தது. இதன் வழியே உள்ளே நுழைந்து உட்பிரகார வலம் வரும் போது, சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவன சக்கரவர்த்தி அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் இருக்க, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்திருந்த விநாயகரைக் காணப் பெற்று விட்டோம். விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் வணங்கிக் கொண்டோம்.
விநாயகரைத் தொழுது நகரவும், அறுபத்துமூவர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் இருந்தன.
சிரசுமேல் கைகள் உயர்த்தி குவித்த வண்ணம், அறுபத்துமூவர் திருமேனிகளையும் கண்டு வணங்கியபடியே நகர்ந்தோம். சோமாஸ்கந்தர் சந்நிதிக்கும் சென்று தொழுது கொண்டோம்.
அடுத்து, கருவறை முன்பு இருந்த மண்டபத்தருகாக சென்றபோது, நேரே மூலவர் சந்நிதி காட்சி கிடைத்தது.
உள்புகுந்தோம். ஈசனை மனதார நினைந்து நினைந்து உருகி ஈசன் திருமேனியைப் பார்த்து வணங்கினோம். அவனைக் காணும்போது, உள்ளம் விம்ம, கண்களில் கண்ணீர் அரும்பியது.
ஈசனிடம் என்னவெல்லாமோ வேண்டுமேன்று கேட்க நினைத்துத்தான் அவன் சந்நிதிக்குள் நுழைந்தோம்.
இப்போது, மனதுக்குள்ளிருந்து கேட்க நினைத்த வார்த்தைகள்..... இப்போது சந்நிதிக்குள் நுழைந்ததும் வார்த்தை வெளி வரவில்லை.
வார்த்தை வெளி வருவதற்காக, வணங்கித் திரும்புவதை கொஞ்சம் தாமதித்தோம். நம் கண்கள் அவனை பார்த்து தொழுதது. நம் கைகள் அவனைப் பார்த்து கொழுதது. ஆனால், நம் மனம் கேட்க நினைத்ததைக் கேட்கபதற்கு, நம் வாய் உதவிக்கு வரவில்லை.
முடிவில், எல்லாம் உன் செயல்!......, உம்மிடம் நாம் கேட்டா நீ அருளப் போகிறாய்!....., எம் மனதில் உள்ளதை நீ அறிந்து அருள்வாய் என நினைத்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் அவன் திருமேனியைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.
அர்ச்சகர் எடுத்துவந்ந தீபாரதனையை ஒற்றியெடுத்து வணங்கிவிட்டு, அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.
அடுத்து அம்மையை வணங்கித் தரிசிக்க அவளாலயத்துக்கு நகர்ந்தோம். சுவாமி சந்நிதியின் இடதுபுறமாய் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி நின்ற கோலத்துடன் அருளிய வண்ணம் காட்சி தந்தாள்.
அம்மையின் முன் நின்று மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
சுவாமி, மற்றும் அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளையும் ஒரே இடத்திலிருந்து நின்று தரிசிக்கக் கூடிய அமைப்புடன் இருவரின் சந்நிதிகளும் அமைந்திருந்தன.
அம்மை சந்நிதியிலிருந்தவாறே, சுவாமி சந்நிதியைப் பார்த்து மீண்டும் வணங்கிக் கொண்டோம்.
இத்தலத்து மூலவரான சிவலிங்கத் திருமேனியை, அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என குருக்கள் நம்மிடம் கூறினார்.
சதுர ஆவுடையாருடன் இதன்மீதுள்ள பாணத்தின் சுற்றளவு சற்று குறைவாகவும் நீட்டுவாக்கிலும் இருந்தன லிங்கத் திருமேனி.
லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்ட அகத்தியரின் கைத்தடம் லிங்கத் திருமேனியில் பதிந்து இருக்கிறது.
கோஷ்டத்தில் வலம் செய்கையில், மூர்த்தத்தில் லிங்கோத்பவருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் இருந்தனர்.
கண்டு, சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம். மும்மூர்த்திகளின் இந்த தரிசனம் விசேஷமானது என உடனிருந்தோர் கூறினர்.
*சிறப்பு:*
இக்கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.
திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவியான தியாகவல்லி அம்மையார் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த காரணத்தால் தியாகவல்லி என்று பெயர் பெற்றதாகக் கூறுவர்.
இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டிருந்ததாம்.
பிற் காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்திருக்கிறார்.
ஆனால், அங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் வெளியே தெரிந்திருக்கிறது. அதன்பின், ஊர்மக்கள் ஓத்துழைப்புடன் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர்.
*சம்பந்தர் தேவாரம்:*
பண்:பழந்தக்கராகம்.
1.🔔வெங்கணானை யீருரிவை போர்த்துவிளங் கும்மொழி
மங்கைபாகம் வைத்துகந்த மாண்பதுவென் னைகொலாம்
கங்கையோடு திங்கள்சூடிக் கடிகமழுங் கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய் சோபுரமே யவனே.
🙏🏾கங்கை திங்கள் ஆகியவற்றை முடிமிசைச்சூடி மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்து தூய திருநீறு பூசித் திருச்சோபுரத்தில் விளங்கும் இறைவனே! கொடிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திய, விளக்கமான மொழிகளைப் பேசும் மலைமங்கையை இடப்பாகத்தே கொண்டு மகிழும் உனது செயலின் மாண்பு எத்தகையதோ?.
2.🔔விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவிரிந் திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கியதென் னைகொலாம்
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தனலுள் ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுரமே யவனே.
🙏🏾வாயில்களாற் சிறந்த முப்புரங்களும் அனலுள் அழுந்துமாறு சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! விடைமீது அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக் கையில் ஏந்தி விரிந்து விளங்கும் சடையின்கண் ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத் தடுத்துத் தாங்கி இருத்தற்குக் காரணம் என்னையோ?.
3.🔔தீயராய வல்லரக்கர் செந்தழலுள் ளழுந்தச்
சாயவெய்து வானவரைத் தாங்கியதென் னைகொலாம்
பாயும்வெள்ளை யேற்றையேறிப் பாய்புலித்தோலுடுத்த
தூயவெள்ளை நீற்றினானே சோபுரமே யவனே.
🙏🏾பாய்ந்து செல்லும் வெண்ணிறமான விடையேற்றின் மீது ஏறி, பாயும் புலியினது தோலை உடுத்துத்தூய வெண்ணீற்றை அணிந்துள்ளவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொடியவர்களாகிய வலிய அரக்கர் சிவந்த அழலுள் அழுந்துமாறு கணை எய்து தேவர்களை வாழ்வித்தது என்ன காரணம் பற்றியோ?
4.🔔பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந்
தல்லல்வாழ்க்கை மேலதான வாதரவென் னைகொலாம்
வில்லைவென்ற நுண்புருவ வேனெடுங்கண் ணியொடும்
தொல்லையூழி யாகிநின்றாய் சோபுரமே யவனே.
🙏🏾வில்லை வென்ற வளைந்த நுண்புருவத்தையும், வேல் போன்ற நீண்ட கண்ணையும் உடைய உமையம்மையோடும், பழமையான பல ஊழிக்காலங்களாக நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! பல் இல்லாத மண்டையோட்டைக் கையிலேந்திப் பலர்இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் அல்லல் பொருந்திய வாழ்க்கையின்மேல் நீ ஆதரவு காட்டுதற்குக் காரணம் என்னவோ?
5.🔔நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேன் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரணமென் னைகொலாம்
ஊற்றமிக்க காலன் றன்னை யொல்கவுதைத் தருளி
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே.
🙏🏾வலிமை பொருந்திய காலனை அழியுமாறு உதைத் தருளி, எல்லாப் பொருள்கட்கும் தோற்றமும் ஈறுமாகி நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மணம் மிக்க கொன்றை மலர்கள் நிறைந்த செஞ்சடையின்மேல் பிறைமதியை அழகு பெறவைத்து மகிழ்தற்குக் காரணம் என்னையோ?
6.🔔கொன்னவின்ற மூவிலைவேற் கூர்மழுவாட் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற்பென் னைகொலாம்
அன்னமன்ன மென்னடையாள் பாகமமர்ந் தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுரமே யவனே.
🙏🏾அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்தி, இடையில் அழகிய கோவண ஆடையை அணிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொல்லும் தொழில் பொருந்திய மூவிலை வேலையும் தூய மழுவாட்படையையும் உடையவனே! நிறத்தால் பொன்னை வென்ற கொன்றை மாலையை நீ விரும்பிச் சூடுதற்குரிய காரணம் என்னையோ?
7.🔔குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடியார் பணிவார்
கற்றகேள்வி ஞானமான காரணமென் னைகொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டயன்வெண் டலையில்
துற்றலான கொள்கையானே சோபுரமே யவனே.
🙏🏾ஊன் வற்றிய ஆமை ஓட்டையும், ஒளி பொருந்திய பாம்பையும் அணிகலனாகப்பூண்டு, பிரமனின் வெண்மையான தலையோட்டில் பலியேற்று உண்ணும் கொள்கையனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! குணமும் குற்றமும் நீயே என்று பணியும் உன் அடியவர்கட்குத் தாங்கள் கற்ற கல்வியும், கேள்வியும் அதனால் விளையும் ஞானமுமாக நீயே விளங்குதற்குக் காரணம் என்னவோ?
8.🔔விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.
🙏🏾இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.
9.🔔விடங்கொணாக மால்வரையைச் சுற்றிவிரி திரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரணமென் னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர்மே லயனும்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுரமே யவனே.
🙏🏾மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நீரைக் கடைந்தபோது, அத னிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?
10.🔔புத்தரோடு புன்சமணர் பொய்யுரையே யுரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த பெற்றிமையென் னைகொலாம்
மத்தயானை யீருரிவை போர்த்துவளர் சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே சோபுரமே யவனே
🙏🏾மதம் பொருந்திய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து , நீண்ட சடையின் மேல் புள்ளிகளையுடைய நாகப் பாம்பைச்சூடியவனே ! திருச்சோபுரம் மேவிய இறைவனே ! புத்தர் களும் , சமணர்களும் பொய்யுரைகளையே பேசிப் பித்தராகத் திரி தலைக் கண்டு நீ மகிழ்தற்குக் காரணம் என்னையோ ?.
11.🔔சோலைமிக்க தண்வயல் சூழ் சோபுரமே யவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக்கோன் நலத்தான்
ஞாலமிக்க தண்டமிழான் ஞானசம்பந்தன் சொன்ன
கோலமிக்க மாலைவல்லார் கூடுவர்வா னுலகே.
🙏🏾சோலைகள் மிகுந்ததும், குளிர்ந்தவயல்களால் சூழப்பட்டதுமான திருச்சோபுரம் மேவிய இறைவனைச் சீலத்தால் மிக்க, பழமையான புகழை உடைய அந்தணர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனும், நன்மைகளையே கருதுபவனும், உலகில் மேம்பட்ட தண் தமிழ் பாடியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய அழகுமிக்க இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகை அடைவர்.
திருச்சிற்றம்பலம்.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை.*
---------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment