Wednesday, January 3, 2018

Thirumetrali nathar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
_________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற திருக்கோயில் தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.............)
_________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண் 192*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

☘ *திருமேற்றளிநாதர் திருக்கோவில், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம்.*☘
________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டு முப்பத்தாறு தலங்களில் இத்தலம் இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:* திருமேற்றளிநாதர்.

*இறைவி :** காமாட்சி்யம்மை.
 
*தல விருட்சம்:*  வில்வம்.

*தல தீர்த்தம்:* விஷ்ணு தீர்த்தம்.

*ஆகமம்:* காமிக ஆகமம்.

*பெயர்க்காரணம்:*
தளி-கோயில் என பொருள் படும் கச்சி ஏகம்பத்திற்கு, மேற்கு திசையில் இருப்பதினால் *திருக்காட்சி மேற்றளி* எனப் பெயர் பெற்றது. பச்சிமாலயம் எனவும் இத்தலத்தை அழைப்பர்.

*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர்- நான்காம் திருமுறையில் ஒரே ஒரு பதிகமும்.
சுந்தரர் - ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகமும். ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.

*இருப்பிடம்:*
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கி.மி. தொலைவில் பிள்ளையார்பாளயம் என்னும் இடத்தில் திருமேற்றளித் தெருவில் இந்தத் தலம் அமைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு திருமேற்றளிநாதர் திருக்கோவில்,
திருமேற்றளித் தெரு, பிள்ளையார்பாளயம்,
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம்,
PIN - 631 501

*ஆலயப் பூஜை காலம்:*
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை மணி 5.00 முதல் இரவு 9.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம்  திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு:*
ஆலயத்திற்கு வந்து சேரவும் முதலில் மூன்று நிலைகளைத் தாங்கிய இராஜகோபுரம் கிழக்கு நோக்கியபடி காட்சி தெரிய *சிவ சிவ, சிவ சிவ* மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டு, உள் புக முனைந்தோம்.

கோபுர வாயிலின் வெளியே ஒருபுறத்தில் துவார கணபதியைக் கண்டோம். விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிக் கொண்டோம்.

மற்றொரு புறத்தில் முருகப்பெருமானும் இருக்க இவரையும் சிரமேற் கைகுவித்து தொழுது கொண்டோம்.

உள்ளே நுழைந்ததும் பரந்த விசாலமான இடவெளி இருந்தது.

தொடர்ந்து முன்னே சென்றால் நந்தியாரைக் கண்டோம். இவரை வணங்கிக் கொண்டு, ஆலயத் தொழுகைக்கு வந்திருப்பதை இவரிடம் தெரிவித்துக் கொண்டோம்.

மேலும் இறைவனை தரிசிக்க உள் புகும் அனுமதியும் வேண்டிக் கொண்டோம்.

அடுத்திருந்த பலிபீடத்தருகாக நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு நகர்ந்தோம்.

அடுத்துத் தனிக்கோயிலாக விளங்கி அருளும் இருமூலவரில் ஒரு மூலவரான மேற்கு நோக்கிய மேற்றளிநாதர் சந்நிதிக்கு முன் வந்து நின்றோம்.

மனமுருகி உருகி பிரார்த்தனை செய்து அர்ச்சகர் ஏற்றியிரக்கிய தீபாராதனையை ஒற்றியெடுத்து வணங்கிக் கொண்டு, அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை நெற்றிக்கு திரித்துத் தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

அங்கு இருந்த உண்டியலில், இறைவனுக்கென வீட்டிலேயே ஒதுக்கி எடுத்து வைத்திருந்த காணிக்கையை உண்டியலில் சிவ சிவ என கூறி செலுத்திக் கொண்டோம்.

அடுத்து,கோஷ்டத்தில் செல்லும்போது, கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, திருமால், பிரமன், துர்க்கை ஆகியோர்களைக் கண்டு, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்திருந்த சண்டேசுவரர் சந்நிதிக்குச் சென்று, இவரை மரபுமுறைப்படி வணங்கி, உள்ளதைக் கூறி, இல்லாதென எதுவுமில்லை தத்துவமாக உள்ளங்கையினை விரித்து காட்டி, இவர் தியாணத்தை கலைக்காது அமைதியுடன் வணங்கி விட்டு, அடுத்து வரும் பக்தருக்கு நகர்ந்து வழிகொடுத்தோம்.

இதனின் இடதுபுறமாக அம்பாள் சந்நிதி இருந்தது. அம்பாள் நின்ற கோலத்துடன் கருணை காட்டி காட்சி தந்தாள்.

இறைவனிடம் வேண்டிக் கொண்டது போலவே, அம்பாளிடம் பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

காஞ்சி மண்டலம் முழுமைக்கும் அம்பாள் காமாட்சியேயாதலின் இம்மூர்த்தம் பிற்காலப் பிரதிஷ்டை என அங்கிருந்த குருக்கள் நம்மிடம் கூறினார்.

அடுத்திருந்த இடதுபுறத்தில் நால்வர் சந்நிதியில் நால்வரையும் கண்டு, சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டே நகர்ந்தோம்.

இதுவும் ஒரு பிறகால பிரதிஷ்டை என்று சொன்னார்கள்.

கோபுர வாயிலைக்கடந்து உள்நுழைந்து பிராகார வலமாக வரும் போது செல்வ விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி, காசிவிசுவநாதர், பைரவர் சந்நிதிகள் இருக்க ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

திருமேற்றளீஸ்வரரே இவ்வாலயத்தில் பிரதான மூர்த்தியாவர். ஆயினும், கோவிலின் ராஜகோபுரமும், பிரதான வாசலும் ஓத உருகீஸ்வரருக்கே இருக்கிறது.

ஓதஉருகீஸ்வரரையும் கண்டு வணங்கி பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு நகர்ந்தோம்.

ஓத உருகீஸ்வரருக்கு நேரே உள்ள நந்திக்குத்தான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகிறதாக தெரிந்து கொண்டதுடன் வெளிவந்தோம்.

திருமேற்றளி தவமிருக்கும் தெருவின் ஒருமுனையில், மேற்றளீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கின்றன.

இதே தெருவின் மறுமுனையில் திருஞானசம்பந்தர் பெருமானின் பெயரில் ஆலயம் இருக்கிறது.

ஆலயம் மிகச் சிறியதாக இருந்தாலும் அழகாக இருக்கிறது.

இவ்வாலயத்தில் ஞானசம்பந்தர் சந்நிதி மட்டுமே அமைந்திருக்கிறது.

மூலத்திருமேனியான திருஞானசம்பந்தர், திருமேற்றளி ஆலயத்தின் கோபுரத்தை நோக்கி கைகளை குவித்து, வணங்கும் நிலையில், காட்சியாய் நிற்கிறார்.

இவரின் உற்சவத்திருமேனியானவர்,வலக்கையின் சுட்டிவிரலுடனும், இடக்கையில் பொற்கின்னத்தை பிடித்தவாறும் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள்.

மேலும், இதே தெருவின் மையத்தில், *உற்றுக் கேட்ட முத்தீசர்* ஆலயம் இருப்பதையும் கண்டு தரிசித்தோம்.

இப்பெயர் வந்ததற்கு கண் காரணம்...

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்து பதிகம் பாடிய போது, சிவபெருமான் இவரருகில் அமர்ந்து இருந்து பாடலை கேட்டுக் கொண்டிருந்ததனால்.. இந்த ஆலயத்திற்கு, உற்றுக் கேட்ட முத்தீசர் என்கிறது வரலாற்றுரைப்பு.

*தல அருமை:*
ஒருமுறை மகாவிஷ்ணுவிற்கு சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

எனவே சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார்.

சிவனோ, இது சாத்தியப்படாது என சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

விஷ்ணுவும் விடுவதாக இல்லை. சிவனை வேண்டி தவம் செய்ய தொடங்கினார்.

விஷ்ணுவின் மன திடத்தை கண்டு வியந்த சிவன் அவருக்கு அருள்புரிய எண்ணம் கொண்டார்.

அவரிடம் இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி தவம் செய்து வழிபட்டு வர லிங்க வடிவம் கிடைக்கப் பெறும் என்றார்.

அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு தீர்த்தத்தில் நீராடி வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார்.

சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என்று எண்ணி, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார்.

அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு லிங்க வடிவம் பெற்றபோது சம்பந்தர் தனது பதகத்தைப் பாடி முடித்தார்.

எனவே, இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது.

தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம்.

சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர் *ஓதஉருகீஸ்வரர்* என்ற பெயருடன் இவ்வாலயத்தில் கிழக்கு நோக்கி சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

ஆனால் திருஞானசம்பந்தர் பாடலால் மகாவிஷ்ணுவிற்கு சிவசாரூபம் கிடைத்ததாகப் புராணங்கள் கூறும் பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

*தல சிறப்பு:*
தல விநாயகராக சித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார்.

நூற்றியெட்டு ருத்ரர்கள் வழிபட்டதாக சொல்லப்படுகிறது. சான்றாக ஆனந்த ருத்ரேசம் , மகா ருத்ரேசம் கோயில்கள் உள்ளவை.

*வழிபட்டோர்கள்:*
சீகண்டர் , வீரபத்ரர் , மண்டலாதிபதிகள் , குரோதர் , புதன் முதலியோர் வழிபட்ட தலம்.

*இரண்டு மூலவர்:*
மூலவர் மேற்றளிநாதர் மேற்கு நோக்கி தனிக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் திருக்காட்சி தருகிறார்.

மற்றொரு மூலவரான ஓத உருகீஸ்வரர் கிழக்கு நோக்கி உள்பிரகாரத்தில் திருக்காட்சி தருகிறார்.

இவரது சந்நிதியில் சிவனாரின் முன்பு இரு பாதங்கள் மட்டும் உள்ளன.

சம்பந்தர் பதிகத்தை கேட்டு திருமால் உருகியதாகவும் , அவரது பாதங்களே இவை என்றும் வரலாறு சொல்லப்படுகிறது.

அம்பாள் திருமேற்றளிநாயகி கிழக்கு நோக்கி வெளிப்பிரகாரத்தில் தனிச்சன்னதியில் திருக்காட்சி தருகிறார்.

அம்பாள் சந்நிதிக்குப் பக்கத்தில் உள்ள சிறிய மண்டபத்தில் காஞ்சி கச்சபேசர் கோயிலின் உற்சவ அம்பாள் கச்சபேசர் ஆலய பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் எழுந்தருளிவிக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வைப்பது வழக்கமாக உள்ளது.

திருமேற்றளிநாதர் கோஷ்டத்தில் விநாயகரும் , தட்சிணாமூர்த்தியும் திருக்காட்சி தருகின்றனர்.

ஓதவுருகீஸ்வரர் சந்நிதி கோஷ்டத்தில் விநாயகர் , தட்சிணாமூர்த்தி , திருமால் , பிரம்மன் , துர்க்கை முதலானோர் திருக்காட்சி தருகின்றனர்.

உள்பிரகாரத்தில் நால்வர் , பைரவர் , விநாயகர் , முருகர் முதலான சந்நிதிகள் இருக்கின்றன.

நடராஜர் சபையில் நடராஜர் வடிவம் வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது.

இங்கிருந்த நடராஜர் வடிவம் கச்சபேசர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றும் அறியப்பட்டோம்.

உற்சவமூர்த்தங்களின் சந்நிதியில் சந்திரசேகரர் , விநாயகர் , வள்ளி-தெய்வயானை உடனான முருகர் முதலான மூர்த்தங்கள் இருக்கின்றன.

கோயிலுக்குப் பக்கத்தில் வெட்டவெளியில் ஜேஷ்டாதேவியின் வடிவம் உள்ளது. இவ்வடிவம் மேற்புறம் காகம் , ஆடு முதலிய உருவங்களுடனும் , பூதம் ஒன்றின் மீது ஒரு கையை வைத்தவாரும் , நின்ற கோலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

கச்சி ஏகம்பத்திற்கு மேற்றிசையில் அமைந்துள்ள ஆலயமாதலால் கச்சி மேற்றளி எனப்படுகிறது.

மகா சிவராத்திரி , பங்குனி உத்திரம் , கந்தசஷ்டி , சம்பந்தர் குரு பூஜை , சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த உற்சவம் முதலானவை சிறப்புடன் நடைபெறுகின்றன.

வேண்டிய வரங்கள் கிடைக்கவும் , கல்வியில் சிறந்து விளங்கவும்  வழிபடவேண்டிய தலம் இது.

*சுந்தரர் தேவாரம்:*
1.🔔நொந்தா வொண்சுடரே நுனை
யேநி னைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய்
மனமேபு குந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திரு
மேற்ற ளிஉறையும்
எந்தாய் உன்னையல்லால் இனி
ஏத்த மாட்டேனே.

🙏🏾அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே, என் தந்தைக்கும் பெருமானே, கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே, என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய்; ஆதலின், இனி அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன். 

2.🔔ஆட்டான் பட்டமையால் அடி
யார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிற
வாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ் திரு
மேற்ற ளிஉறையும்
மாட்டே யுன்னையல்லால் மகிழ்ந்
தேத்த மாட்டேனே.

🙏🏾பெருமையையுடைய பல மாளிகைகள் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் செல்வமாய் உள்ளவனே, அடியேன் உனக்கு அடிமையாயினமையால், உன் அடியார்க்கு அடியனாகின்ற பேற்றைப் பெற்றேன். அதனால், உன்பால் அடியேன் வேண்டற்பாலன பலவற்றையும் வேண்டி, இறுதியாகப் பிறவாத நிலையை வேண்டியொழிந்தேன். இனி, என் மகிழ்ச்சி மீதூர்வால் உன்னைப் புகழ்தலன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன். 

3.🔔மோறாந் தோரொருகால் நினை
யாதி ருந்தாலும
வேறா வந்தென்னுள்ளம் புக
வல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித் திரு
மேற்ற ளியுறையும்
ஏறே யுன்னையல்லால் இனி
ஏத்த மாட்டேனே.

🙏🏾அடியேன் ஓரொருகால் மயக்கம் உற்று உன்னை நினையாதிருப்பினும், நீதானே வந்து என் உள்ளத்தில் புகுந்து நினைப்பிக்கவல்ல உண்மைப் பொருளானவனே. சேறு நிறைந்த குளிர்ந்த கழனிகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற ஆண் சிங்கம் போல்பவனே. இனி, அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன். 

4.🔔உற்றார் சுற்றமெனும் மது
விட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என்குறைவென் இட
ரைத்து றந்தொழிந்தேன்.
செற்றாய் மும்மதிலுந் திரு
மேற்ற ளிஉறையும்
பற்றே நுன்னையல்லால் பணிந்
தேத்த மாட்டேனே.

🙏🏾மூன்று மதில்களையும் அழித்தவனே, கச்சித் திரு மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற துணையானவனே, அடியேன், என்னோடு நெருங்கிய உறவினர் பலர் உளர் என்றும், மற்றும் சுற்றத்தார் பலர் உளர் என்றும் நினைத்து, அவர்கள் தொடர்பிலே பட்டு, உய்ந்து போகமாட்டாது நிற்கின்ற அந்நிலையைத் துறந்து, உன்னையே புகலிடமாக அடைந்தேன். அதனால், இப்பொழுது, எத்தன்மையதான பொருளால், என்ன குறை அடியேனுக்கு இருக்கின்றது? ஒன்றும் இல்லை. என் துன்பங்களையெல்லாம் அடியோடு நீக்கிவிட்டேன். ஆதலின் இனி, உன்னையன்றிப் பிறரைப் பணிந்து புகழ்தலைச் செய்யவே மாட்டேன். 

5.🔔எம்மான் எம்மனையென் றவர்
இட்டி றந்தொழிந்தார்
மெய்ம்மா லாயினதீர்த் தருள்
செய்யும் மெய்ப்பொருளே
கைம்மா ஈருரியாய் கன
மேற்ற ளிஉறையும்
பெம்மான் உன்னையல்லால் பெரி
தேத்த மாட்டேனே.

🙏🏾உடம்பு இடமாக வருகின்ற மயக்கமாயினவற்றை எல்லாம் நீக்கி, மெய்யுணர்வைத் தந்தருளுகின்ற மெய்ப்பொருளாய் உள்ளவனே, யானையை உரித்த தோலை உடையவனே, பெருமை பொருந்திய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற பெரியோனே, என்னைத் தாங்குகின்ற. 'என் தந்தை' என்றும், 'என் தாய்' என்றும் சொல்லப்பட்டவர்கள் என்னை இங்குத் தனியே வைத்து விட்டு இறந்துவிட்டார்கள்; ஆகவே, இனி, உன்னையன்றிப் பிறரை நான் பெரிய பொருளாக நினைத்துப் புகழவேமாட்டேன். 

6.🔔நானேல் உன்னடியே நினைந்
தேன்நி னைதலுமே
ஊனேர் இவ்வுடலம் புகுந்
தாய்என் ஒண்சுடரே
தேனே இன்னமுதே திரு
மேற்ற ளிஉறையும்
கோனே உன்னையல்லாற் குளிர்ந்
தேத்த மாட்டேனே.

🙏🏾எனது ஒளி பொருந்திய விளக்குப் போன்றவனே, தேன் போன்றவனே, இனிய அமுதம் போன்றவனே, கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நானோ எனில், உன் திருவடியை அடைய நினைத்தேன்; அங்ஙனம் நினைத்த அளவிலே நீ ஊன் பொருந்திய இவ்வுடலுள்ளே வந்து புகுந்துவிட்டாய்; ஆதலின், இத்தகைய பேரருளாளனாகிய உன்னையல்லது பிறரை அடியேன் உளங்குளிர்ந்து புகழவேமாட்டேன். 

7.🔔கையார் வெஞ்சிலைநா ணதன்
மேற்ச ரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும் மெரி
யுண்ண எம்பெருமான்
செய்யார் பைங்கமலத் திரு
மேற்ற ளிஉறையும்
ஐயா உன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

🙏🏾எம் பெருமானே, வயலின்கண் பரவியுள்ள பசிய தாமரைகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நீ உன் கையின்கண் பொருந்திய கொடிய வில்லினது நாணின்மேல் அம்பைத் தொடுத்து, மூன்று மதில்களையும் தீ உண்ணும் படி எரித்தாய்; ஆதலின், உன்னையன்றிப் பிறரைத் தேவராக எண்ணிப் புகழவேமாட்டேன். 

8.🔔விரையார் கொன்றையினாய் விம
லாஇனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால் உட
லில்உயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திரு
மேற்ற ளிஉறையும்
அரையா உன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

🙏🏾நறுமணம் பொருந்திய கொன்றைமாலையை உடையவனே. தூயவனே, அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகளையுடைய கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, அடியேன். என் உடலில் உயிர் உள்ளவரையிலும் இனி, உன்னையன்றிப் பிறரை, 'தேவர்' என்று என் நாவினாற் சொல்லவும் மாட்டேன்; உன்னையன்றிப் பிறரை உயர்ந்தவராக மதித்துப் புகழவும் மாட்டேன்; இது திண்ணம். 

9.🔔நிலையா நின்னடியே நினைந்
தேன்நி னைதலுமே
தலைவா நின்னினையப் பணித்
தாய்ச லமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திரு
மேற்ற ளிஉறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்
தேத்த மாட்டேனே.

🙏🏾சந்திர காந்தக் கற்கள் நிறைந்த பெரிய மதில் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற மலைபோன்றவனே. தலைவனே, அடியேன், உனது திருவடியையே நிலைத்த பொருளாக உணர்ந்தேன்; அவ்வாறு உணர்ந்த அளவிலே அவ்வாறே மாறாது என்றும் உன்னையே உணர்ந்து நிற்குமாறு எனக்கு உன் திருவருளைச் செய்தாய்; அதனால், அடியேன், என், துன்பமெல்லாம் ஒழிந்தவனாயினேன்; ஆகவே, இனி அடியேன், உன்னையன்றிப் பிறரை, மனம் மகிழ்ந்து புகழவேமாட்டேன். 

10.🔔பாரூர் பல்லவனூர் மதிற்
காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவிற் றிரு
மேற்ற ளிச்சிவனை
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்டன்ஆ ரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார் சிவ
லோகஞ் சேர்வாரே.

🙏🏾நிலம் முழுதும் ஆணை செல்கின்ற பல்லவனது அரசிருக்கை ஊராகிய, மதிலை உடைய காஞ்சி மாநகரின்கண் சிறப்புப் பொருந்திய இடத்தில் விளங்கும் திரு மேற்றளியின்கண் உள்ள சிவபெருமானை, திருவாரூர்ப் பெருமானுக்கு அடியவனான அணுக்கத் தொண்டனாம் நம்பியாரூரன் பாடிய, தாள அறுதி பொருந்திய இப் பாடல்களைப் பாடவல்லவர், சிவலோகத்தை அடைவார்கள். 

          திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
அருள்மிகு கச்சபேசர் திருக்கோயில் விழாவின்போது, ஐந்தாம் நாளில் அம்மனை எழுந்தருளச் செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வீதியுலா நடைபெறுகிறது.

சிவராத்திரி,
பங்குனி உத்திரம்,
சம்பந்தர் குருபூஜை,
ஞானப்பால் கொடுத்த உற்சவம்.

*தொடர்புக்கு:*
J.அர்ச்சகர் செளந்தரமெளலி 
98653 55572

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டு  தலங்களின் நாளைய தலப்பதிவு *ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், திருஓணகாந்தன்தளி.*
________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment