உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்புசாமி.*
_________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல..............)
_________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்:195:*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
🎇 *சத்தியநாதசுவாமி திருக்கோவில், கச்சிநெறிக் காரைக்காடு.*🎇
__________________________________________
*இறைவன்:* சத்தியநாதசுவாமி ஜகதீசுவரர் , சத்தியவிரதேஸ்வரர், காரை திருநாதேஸ்வரர்.
*இறைவி:* பிரம்மராம்பிகை. (இத்தலத்திற்குரிய உற்சவ அம்பாளாகவும் இவளே)
*தல விருட்சம்:* காரைச் செடி.
*தல தீர்த்தம்:* இந்திர விரதம், சத்திய விரதம்.
*ஆகமம்:* சிவாகமம்
*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர் - 1
*இருப்பிடம்:*
காஞ்சிபுரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் திருக்காலிமேடு என்ற இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
காஞ்சீபுரம் ரயில்வே ரோடில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சத்தியநாதேஸ்வரர் திருக்கோவில்,
திருக்காலிமேடு,
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம்,
PIN - 631 501
*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.00மணி வரையிலும் ஆலயம் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
*பெயர் காரணம்:* இவ்வாலயம் இருக்கும் பகுதி முழுவதும் காரைச்செடி காடாக இருந்த காரணத்தால் காரைக்காடு என்று பெயர் பெற்றது.
இக்காலத்தில் இப்பகுதி திருக்காலிமேடு என்ற பெயருடனும், இவ்வாலயம் திருக்காலீஸ்வரர் கோயில் என்றும் வழங்குகின்றது.
இந்திரன் வழிபட்ட காரணத்தால் இத்தலம் இந்திரபுரி என்றும் வழங்கப்பெறுகிறது.
*கோவில் அமைப்பு:*
ஆலயம் மேற்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து மூன்று நிலைகளைத் தாங்கிய கோபுரம் அமைந்திருக்க *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து உள்ப புகுந்தோம்
முகப்பு வாயில் வழியே கோபுரத்தை நோக்கிச் செல்லும் போது இடையில் நந்தி மண்டபத்திலிருந்த நந்தியாரை வணங்கிக்கொண்டு உள் புக அனுமதி வேண்டிக் கொண்டோம்.
பலிபீடத்தருகாக வந்து நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்திருந்த கொடிமரத்தருகே வீழ்ந்து வணங்கியெழுந்து கொண்டோம்.
அடுத்து, நந்தி மண்டபத்திலிருந்த நந்தியாரை வணங்கிக் கொண்டு உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டோம்.
நந்தியார், பக்கவாட்டுச் சாயலில் முகத்தைச் சாய்த்தபடி இருந்தார்.
நாமும் அவர் முகத்தை நோக்கிச் சாய்ந்து பார்க்க, அப்படியே வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்திருந்த கோபுர வாயிலைக் கடந்து உள்சென்று வெளிப் பிராகாரம் தெரிய வலம் வந்தோம்.
வெளிப் பிராகாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி சந்நிதிகள் காணக்கிடைக்கவில்லை.
உள் வாயிலைக் கடந்து செல்ல, மேற்குச் சுற்றிலிருந்து வடக்குச் சுற்றுக்குள் வரவும் நடராஜ சபையைக் கண்டோம்.
சிவகாமியம்மை தாளமிட்டுக் கொண்டிருந்தாள். அத்தாளத்திற்கு ஆடியபடி இருந்தார் பெருமான் .
அவன் ஆடலழகு கோல நளினத்தை மெய்மறந்து ரசித்து, சிரமேற் கைகள் உயர்த்தி குவித்து தொழுது கொண்டோம்.
அடுத்து நால்வரின் சந்நிதிக்கு முன் வந்து நின்று, தூக்கி உயர்த்திய கைகளோடு, ஒவ்வொருவரையும் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்து மீண்டும் சம்பந்தர் தனியாகவும் இருக்க, மீண்டும் அவரை வணங்கி நகர்ந்தோம்.
தொடர்ந்து செல்ல, இந்திரன், புதன், பைரவர் ஆகியோர்களின் சிலா வடிவங்களைக் கண்டு ஒவ்வொருவரையும் வணங்கிக் கொண்டோம்.
வடகிழக்கு மூலையில், மகாகணபதியும் இவரைத் தொடர்ந்து மூன்று லிங்கங்களும், லிங்கங்களின் இடையே இரண்டு நாகர்களான நந்தியும் இருக்க, வணங்கியபடியே நகர்ந்தோம்.
வடமேற்கு பகுதிக்குள் வந்தபோது, வள்ளி தெய்வானையுடன் முருகன் மயிலுடன் அருட்கோலம் காட்டினார். சிரந்தாழ்ந்து வணங்கினோம்.
வடகிழக்கு வலம் முடியவும், தெற்குபுறமாக திரும்ப, ஒரு கையில் அட்சர மாலையிடனும், மற்றொரு கையில் சுவடிக்கட்டுடனும் நீலகண்ட சிவாச்சார்யார் அமர்ந்து இருந்தார்.
இவரை குனியக் குனிந்து பயபவ்யத்துடன் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இவர்தான், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவராவார்.
நீலகண்டபாஷ்யம் என வழங்கப்படும் பிரம்ம சூத்திரத்தை சைவமுறையில் சிவபரமாக விளக்கியுள்ளார் இவர்.
அடுத்திருந்த பிரதோச நாயகர் சந்நிதியில், சந்திரசேகரும், அம்பிகையும், இருக்கக்க கண்டு கைதொழுது கொண்டோம்.
வலம் நிறையவும், மூலவர் இருக்கும் சந்நிதிக்கு வந்தோம்.
கருவறை உள்வாயிலில், ஒரு புறத்தில் விநாயகரும், மறுபுறத்தில் சூரியனும் மூல மூர்த்தமாக இருக்க வணங்கி உள்ளே அடியெடுத்து வைத்தோம்.
சுயம்புமூர்த்தமான பெருமான், சற்று உயரமான பாணத்துடன் செந்நிற வண்ணத்தில் காட்சியருள் தந்தார்.
இவருகே, அம்பாளின் திருவுருப்படிமமும் அமைந்திருந்தன. இந்த அம்பாளே பிரம்மராம்பாள் எனும் திருநாமத்துடன் உற்சவ மூர்த்தமாக வலம் வருபவள் என அருகிருலிருந்தோர் கூறினர்.
ஈசனையும் அம்பாளையும் ஒருசேர, மனமுருகி பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.
காஞ்சிபுரத்தில், அம்பாள் காமாட்சியே பிரதானம் என்பதாலும், சிவலாயங்களில் அம்பாளின் சக்திபூராவும் காமாட்சி தேவிக்குள் ஐக்கியம் என்பதால், சிவாலயங்களில் தனியே அம்பாள் சந்நிதி கிடையாது.
கருவறையைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் செல்கையில், மூர்த்தங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் சந்நிதிகளும் குச்சி சென்று, தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட உண்டாக்கிய தீர்த்தம் இந்திர தீர்த்தம் இருக்கிறது.
இது தற்போது வேப்பங்குளம் என வழங்கப் பெறுகிறது. ஆனால், இந்த தீர்த்தம் தற்போது நன்கு பராமரிக்கப்படாத நிலையில் காணப்படுகிறது.
(நாம் தரிசிக்கச் சென்ற காலத்தில் பராமரிப்பு இல்லாத நிலையில் தீர்த்தத்தை கண்டோம், இப்போது எப்படியிருக்கிறது என நாம் அறியப்படவில்லை.)
இத்தலத்திலுள்ள இறைவனை புதன் வழிபட்டு கிரகநிலை பெற்றதால் மிதுனம் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் புதன் வலுவிழந்து இருப்பவர்கள் இத்தலம் வந்து புதன்கிழமை இந்திர தீர்த்தம் என்கிற வேப்பங்குளத்தில் நீராடி காரைக்காட்டு ஈஸ்வரரை வணங்குதல் சிறப்புடையதாகும் என்கின்றனர்.
*தல அருமை:*
சிவி எனும் இந்திரனும், புதனும் பூசித்து பேறு பெற்ற தலம் இது.
இந்திரன் பூசித்தமையால் இந்திரேசம் என்றும், இவன் உண்டாக்கிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என்றும் வழங்கப்பட்டது.
இத்தீர்த்தத்தை *வேப்பங்குளம்* என்று அழைக்கிறார்கள்.
சோழ மன்னர்களால் எடுத்தியம்பப்பட்ட இத்திருக்கோயிலை, தேவகோட்டை செட்டியார்களால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது.
முன்காலத்தில் இங்கு சோழமன்னனின் அரண்மனை இருந்ததாகவும், பின்னாளில் இயற்கையாக மணல்கள்சூழ அவை மண்மேடாகிவிட்டன என்கின்றனர்.
இதனாலேயும் காரைமேடு எனவும் கூறி அழைக்கின்றனர்.
*இக்கோயிலுக்கு செல்லும்போது, அருகிலிருக்கும் தலங்கள் தரிசிக்க வசதியாக.*
*திருக்காலிமேடு* சத்தியநாதசுவாமி திருக்கோயில் * * * * *
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவில்
இருக்கிறது
*பிள்ளையார்பாளயம்* (திருக்கச்சி மேற்றளி) திருமேற்றளிநாதர்
திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்காலி மேட்டிலிருந்து நான்கு கி.மீ தொலைவில் இருக்கிறது.
*பிள்ளையார்பாளயம்* (கச்சி அநேகதங்காபதம்) -
அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருமேற்றளிநாதர் கோயிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது.
*பிள்ளையார்பாளயம்* கைலாசநாதர் திருக்கோயில்
அநேகதங்காபதேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் இருக்கிறது.
*சுரகரேசம்* ஜ்வரஹரேசுவரர் திருக்கோயில்
ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் இக்கோயில் இருக்கிறது.
கைலாசநாதர் கோயிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது.
*காஞ்சிபுரம்*
ஏகாம்பரநாதர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
ஜ்வரஹரேசுவரர் கோயிலிருந்து சிறு தொலைவில் இருக்கிறது.
*பஞ்சுப்பேட்டை* (ஓணகாந்தன்தளி) ஓணேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
அரக்கோணம் பேருந்து சாலையில் இருக்கிறது.
ஏகாம்பரநாதர் கோயிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது.
*திருஞானசம்பந்தர் தேவாரம்:*
1.🔔வாரணவு முலைமங்கை பங்கினரா யங்கையினில்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.
🙏🏾சிவபெருமான் கச்சு அணிந்த மெல்லிய முலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . அழகிய கையில் போருக்குரிய மழுவை ஏந்தியவன் . திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன் . மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகளையும் , பிரளயகாலத்து ஒலியோ என்று சொல்லும் பேரோசையையுமுடைய காஞ்சியில் , நீர் நிரம்பிய மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றான் .
2.🔔காரூரு மணிமிடற்றார் கரிகாட ருடைதலைகொண்
டூரூரன் பலிக்குழல்வா ருழைமானி னுரியதளர்
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.
🙏🏾சிவபெருமான் கார்மேகம் போன்ற நீலநிறமுடைய கண்டத்தார் . கொள்ளிகள் கரிந்த சுடுகாட்டிலிருப்பவர் , பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சை எடுத்துத் திரிவார் . மான்தோலை ஆடையாக உடுத்தவர் . அப்பெருமான் தேரோடும் நீண்ட வீதிகளையுடைய செழிப்புடைய திருக்கச்சிமாநகரில் நீர் நிறைந்த , மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக் காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .
3.🔔கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமே லிளமதியோ
டாறணிந்தா ராடரவம் பூண்டுகந்தா ரான்வெள்ளை
ஏறணிந்தார் கொடியதன்மே லென்பணிந்தார் வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
🙏🏾ஒலிநிறைந்த திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கொடிபோன்ற இடையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவர் . குளிர்ந்த சடைமீது இளம்பிறைச் சந்திரனோடு , கங்கை , பாம்பு இவற்றை அணிந்து மகிழ்ந்தவர் . வெற்றிக் கொடியில் வெண்ணிற இடபத்தைக் கொண்டுள்ளார் . மலைபோன்ற மார்பில் எலும்பு மாலையை அணிந்துள்ளார் . திருநீற்றையும் அணிந்துள்ளார் .
4.🔔பிறைநவின்ற செஞ்சடைகள் பின்றாழப் பூதங்கள்
மறைநவின்ற பாடலோ டாடலராய் மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
🙏🏾பிறைச்சந்திரனைச் சூடிய சிவந்த சடைகள் பின் பக்கம் தொங்க , பூதகணங்கள் நால்வேதங்களை ஓதப் பாடலும் , ஆடலும் கொண்டு மழுப்படை ஏந்திச் சிவபெருமான் விளங்குகின்றார் . அப்பெருமான் சிறகுகளையுடைய வண்டுகள் இனிய கனிகளில் சொட்டும் தேனை உறிஞ்சி உண்ட மகிழ்ச்சியில் இன்னொலி செய்யும் திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .
5.🔔அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த வருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோளரவ நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்று மோங்கெரியில் வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
🙏🏾சிவபெருமான் அன்று ஆலமரநிழலின் கீழிருந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அருளாளர் , குன்றாத வலிமையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டு , கொல்லும் தன்மையுடைய பாம்பை நாணாகப்பூட்டி , பகையசுரர்களின் முப்புரங்களை மிக்க நெருப்பில் வெந்தழியும்படி செய்தவர் . அப்பெருமான் ஒலிமிகுந்த திருக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .
6.🔔பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்று மொருநொடியில்
வின்மலையி னாண்கொளுவி வெங்கணையா லெய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
🙏🏾தேவர்கள் பலவகையான மலர்களைத் தூவி இறைவனின் திருவடிக்கீழ்ப் பணிந்து வணங்க , நன்மைபுரியாது தீமை செய்த வலிய அசுரர்களின் மூன்று நகரங்களையும் , ஒரு நொடியில் , மேருமலையை வில்லாகக் கொண்டு , வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு அக்கினியாகிய அம்பை எய்து அழித்த , இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சிவபெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .
7.🔔புற்றிடை வாளரவினொடு புனைகொன்றை மதமத்தம்
எற்றொழியா வலைபுனலோ டிளமதிய மேந்துசடைப்
பெற்றுடையா ரொருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
🙏🏾சிவபெருமான் புற்றில் வாழும் ஒளிமிக்க பாம்பையும் , கொன்றை மலரையும் , ஊமத்தை மலரையும் அணிந்து , ஓய்தல் இல்லாது அலைவீசும் கங்கையோடு , பிறைச்சந்திரனையும் தாங்கிய சடையையுடையவர் . தம் திருமேனியில் ஒருபாகமாக உமாதேவியைக் கொண்டவர் . நெற்றிக்கண்ணையுடையவர் . அப்பெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .
8.🔔ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்
தாழ்விரலா லூன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குங் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
நீண்டமறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
🙏🏾ஏழுகடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனை அழகிய கயிலையின் கீழ் நொறுங்கும்படி தம் காற்பெரு விரலை ஊன்றி வலியழித்த தன்மையுடையவர் சிவபெருமான் . அவர் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்வார் . அப்பெருமான் ஆழ்ந்த அகழியும் , சுற்றிய வயல்களும் , மதில்களும் நிறைந்த அழகுடன் திகழும் , நீண்ட வீதிகளையுடைய ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .
9.🔔ஊண்டானு மொலிகடனஞ் சுடைதலையிற் பலிகொள்வர்
மாண்டார்தம் மெலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரு மோரிருவ ரறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
🙏🏾சிவபெருமானின் உணவு ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சு . உடைந்த தலையாகிய பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவார் . இறந்த தேவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர் . வரிகளையுடைய பாம்போடு , அழகிய ஆமையோட்டையும் அணிந்தவர் . திருமால் , பிரமன் இருவரும் அறியா வண்ணம் ஓங்கிய நெருப்புப் பிழம்பாய் நின்றவர் . அப் பெருமான் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .
10.🔔குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவா ருரைப்பனகண் மெய்யல்ல
வண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகம்
கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
🙏🏾விதண்டாவாதம் பேசி நல்லூழ் இல்லாமையால் சமண சமயம் சார்ந்தோரும் , மஞ்சள் காவியாடையை உடம்பில் போர்த்திய வலிய உரைகளைப் பேசித் திரியும் புத்தர்களும் இறை யுண்மையை உணராதவர்கள் . ஆதலால் அவர்கள் பேசுவதை விடுத்து , வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் மலை போன்ற திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு கண்டவர்கள் மகிழும்படி ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வணங்குங்கள் .
11.🔔கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே.
🙏🏾கண்ணுக்கு இனிமை தரும் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் , தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியை வைத்த சிவபெருமான் திருவடிகளை வாழ்த்தி , குளிர்ச்சி பொருந்திய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் இறைவனுலகில் இருப்பதாகிய சாலோக பதவியை அடைவர் .
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
மார்கழி திருவாதிரை,
சிவராத்திரி,
ஐப்பசி அன்னாபிஷேகம்,
புதன் கிழமைகளில் சிவ தரிசனம் சிறப்பு என்பதால், அன்றையதினம் பிறநாட்களைக் காட்டிலும், கூடுதல் நேரம் ஆலயத் திறப்பு இருக்கிறது.
பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி ஆகிய தினத்தில், திருமஞ்சனங்கள், அலங்காரங்கள் சிறப்புடன் நடத்துவிக்கின்றனர்.
*தொடர்புக்கு:*
சிவக்குமார். 98438 32997
__________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment