Friday, January 19, 2018

Kapaaleeswarar temple, Mylapore

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
கோவை கு கருப்பசாமி.
______________
தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:
(நேரில் சென்று தரிசித்ததைப் போல....................)
______________
தேவாரம் பாடல் பெற்ற தல எண் 213

பாடல் பெற்ற சிவ தல தொடர்:

சிவ தல அருமைகள் பெருமைகள்:

கபாலீஸ்வரர் திருக்கோயில், திருமயிலை (சென்னை):
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் இருபத்து மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.

இறைவன்: கபாலீஸ்வரர்.

இறைவி: கற்பகாம்பாள்.

தல விருட்சம்: புன்னை மரம்.

தல தீர்த்தம்: கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்.

ஆகமம்: காமிக ஆகமம்.

ஆலயப் பழமை: ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்.
இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.

ஆலயப் பழமை: ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

இருப்பிடம்:
சென்னை நகரின் மத்தியில் மைலாப்பூரில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

திருமயிலை புறநகர் ரயில் நிலையம் கோவிலுக்கு மிக அருகாமையில் இருக்கிறது.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
மைலாப்பூர்,
சென்னை,
PIN - 600 004

ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு:
கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்டு இவ்வாலயம், சென்னை நகரின் நடுப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது.

கிழக்கில் உள்ள கோபுரமே பிரதான இராஜகோபுரம்.
ஏழு நிலைகளைத் தாங்கியபடி சுமார் நூற்று இருபது அடி உயரம் வரை இருக்கும் எனத் தோன்றுகின்றதது.

அண்ணாந்து விண்ணை நோக்கி பார்க்க, கிழக்குக் கோபுரம் முழுமையும் தெரிந்தது. சிவ சிவ, சிவ சிவ என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் கண்டது கிழக்கு வெளிப் பிரகாரத்தை.

இதில் வரிசையாக இருப்பனவற்றில், முதலில் அண்ணாமலையாரைக் காணப் பெற்றோம். சிரசுமேற் கைகள் உயர்த்தி குவித்து சிவ சிவ என வணங்கிக் கொண்டோம்.

அடுத்து, நர்த்தன விநாயகர் இருப்பதை காணப் பெற்றோம். விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

அடுத்து, ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. கைதொழுது தொடர்ந்தோம்.

தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்திருக்க, வேலவனை வணங்கிக் கொண்டு அவனருட் புண்ணகையில் மயங்கியவாறு வெளிவந்தோம்.

மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம் இருந்தது. 

இதன் முன் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்திருந்த பலிபீடத்தருகாகப் போய் நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு, மேலும் ஆணவமலம் துளியாதிருக்கும் எண்ணத்தை தந்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்திருக்கும் நந்தியின் அருகில் போய் நின்று வணங்கிவிட்டு, ஈசனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
 
மூலவர் ஈசனைக் காணும் சுவாமி சந்நிதிக்கு விரைந்தோம். உள்ளே இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தந்து கொண்டிருந்தார்.

ஈசனின் தனிசனப் பார்வை அருமையாக கிடைத்தது. மனதிற்கு இனிமையான இருந்தது. மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

அடுத்து, அம்மையின் சந்நிதிக்கு வந்தோம். தெற்கு நோக்கியபடி அம்பாள் கற்பகாம்பாள் அருட்காட்சி தந்து கொண்டிருந்தாள்.

இங்கேயும் ஈசனை வணங்கிக் கொண்டதுபோல மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

கருவறைச் சுற்றில் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்கள் இருக்கக் கண்டு அனைவரையும் தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் வணங்கித் தொழுதோம்.

தல அருமை:
சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன.

இதனால் தானும், சிவனுக்கு ஈடானவன் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது.

இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார்.

பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து போவது இயல்பு.

மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மாவை ஈசனால் படைக்கப்படுவார்.

ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார்.

சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்தார் சிவபெருமான்.

அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார்.

ஆகவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார்.

தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.

மேற்கு வெளிப் பிரகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம், ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே இருக்கிறது. சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.

வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் இருந்ததது. சந்நிதியையும் விருட்சத்தையும் சுற்றி வந்து வணங்கிக் கொண்டோம்.

அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தாள்.
சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார்.

இதுவே, புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறதைக் காணமுடிந்தது. வணங்கவும் செய்தோம்.

இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது.

வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார்.

தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார்.

தேவியர்கள் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர்.

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது பத்து பாடல்கள் பாடப்பெற்றிருக்கிறது.

தல பெருமை:
பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள்.

சிவனும் உபதேசிக்க முனைப்பெடுத்து, உபதேசத்தை அருளிக்கொண்டிருந்த சமயத்தில்........

அவ்வேளையில் அங்கு மயில் ஒன்று நடனமாடவே, அந்த மயிலைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை உண்ணிப்பாக கவனிக்காமல் மயில் நடனத்தை வேடிக்கை பார்த்தாள்.

பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பதுதானே இயல்பு.

அதனால், குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதாவாகவே பிற! என்று மயிலாக மாறும்படி செய்து சபித்து விட்டார்.

தன் நிலை குற்றத்தைப் புரிந்து கொண்ட அம்பிகை, தன் குற்றத்திற்கு விமோசனம் கூறுமாறு கேட்டாள்.

அதற்கு ஈசன், நீ பூலோகத்தில் என்னை மயில் வடிவில் வந்து வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார். 

அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.

பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.

தல சிறப்பு:
திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

இவர் சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியை செலுத்துபவர். இவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள்.

திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர், தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தார்.

அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து போனாள்.

மகள் இறந்து விட்ட போதிலும், இவள் சம்பந்தருக்கு உரியவளே என்ற எண்ணம் சிவநேசருக்கு வர, மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து பணிந்தெழுந்து தொழுதார்.

கன்னி மாடத்தில் வைத்திருந்த அஸ்திக் குடத்தை எடுத்து வந்து சம்பந்தர் முன் வைத்து, பூம்பாவை பற்றிய விபரங்களை முழுமையையும் சொல்லி அழுதார்.

சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை" என்று தொடங்கும் பதிகம் பாடினார்.

பதிகம் பாடி முடித்ததும் அஸ்தி குடம் பிளந்து உடையப் பெற்றது.

வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரைப் பார்த்து வணங்கினாள்.

சிவநேசர் சம்பந்தரை வணங்கி, பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.

விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் இவள் எனக்கு மகள் ஆகின்றாள், என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார்.

இதனால், பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள்.

இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. இதனருகில் சம்பந்தரும் இருக்கிறார்.

சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்ஸவத்தின் எட்டாம் நாள் காலையில் இத்தலத்தில் வைத்து விசேஷமாக நடக்கிறது.

அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர்.

ஒரு கும்பத்தில் அஸ்திக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது.

பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அறுபது, எண்பதாம் திருமணம் செய்ய ஏற்ற தலம் இது.

பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது, இக்கோயிலில் நடக்கும் பன்னிருதிருமுறை விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இவ்விழாவின் எட்டாம் நாளில், 63 நாயன்மார்களும் வீதியுலா செல்கின்றனர்.

இதேபோல் மாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் கடலாட்டு விழாவும் பிரசித்தி பெற்றது.

அப்போது சிவன் கடலுக்குச் சென்று தீர்த்த நீராடி வருவார்.

சம்பந்தர் தனது பதிகத்தில் ஆறாவது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும், பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரிய வருகிறது.

"பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசி மகநாளில் பக்தர்கள் கடலில் புனித நீராடிவதைக் கண்டு களிப்போடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று தன் பதிகத்தில் பாடுகிறார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில், சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது.

ஆனால், இத்தலம் வந்த சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புக்களை குறிப்பிட்டு பதினோரு பதிகங்களை பாடியிருக்கிறார்.

சம்பந்தர் பாடிய பதிகத்தில் திருமயிலை கோவிலைப் பற்றியும், இங்கு சிறப்பாக நடக்கும் விழாக்களைப் பற்றியும் குறிப்பிட்டு இவைகளை எல்லாம் பார்த்து அனுபவிக்காமல் நீ இறந்து போகலாமா பூம்பாவை என்று தன் பதிகத்தில் பாடுகிறார்.

இவ்வாறு திருவிழா குறித்து பதிகம் பெற்ற பெருமையுடைய தலம் இத்தலம்.

சிறப்புகள்:
வாயிலார் நாயனார் அவதாரஞ் செய்த தலம் இது.

துறைக்கொண்ட செம்பவள இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்" என்று சுந்தரமூர்த்தி நாயனார் வணங்கிப் பணிந்தார் இத்தல இறைவனை.

வழிபட்டோர்கள்:
இத்தல இறைவனை திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர்.

மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு:
பழைய கோயில் இப்போது உள்ள சாந்தோம் கதீட்ரல் சர்ஜ் உள்ள இடத்தில் இருந்தது.

அருணகிரிநாதர் காலம் வரையில் கி.பி.1450 ஆண்டு கடற்கரையிலுருந்தது.

"கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ்ப் பாடலால் தெரியப்படும்.

கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் அவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையையும், தங்கள் தொழுகைக்கு இடத்தையும் கட்டிக்கொண்டார்கள்.

கி.பி.1672-க்கு முன்பு அப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருந்திருக்கிறது.

சுமார் 1910ல் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் அங்கே கிடைத்துள்ளன.

இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது.

இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது.

"ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" என சம்பந்தரும்,

"கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே"என திருப்புகழிலும், உளதை அறிய தெரிய முடிகிறது.

இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

அப்போது கட்டியவர்கள் கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக கட்டுமானத்தில் வைத்து இணைத்து பிணைத்து கட்டிவிட்டார்கள்.

அப்படி கட்டப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது கல்வெட்டுக்கள் வரை காணப்படுகின்றன. (ஒழுங்கின்றி தாறுமாறாக கோர்வையாக காணாது.)

சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் காணப்படவில்லை.

அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன.

பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. 

இக்கல்வெட்டுக்கள் ஒன்றில், தமிழ் வட்டெழுத்துக்களாலால், கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை
என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டிருக்கின்றன.

இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.

ஆலயத் தொண்மை:
இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தவை.

மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது.

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவ காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்.

பிற்காலத்தில், பதினாறாம்  நூற்றாண்டில் போத்துக்கீசர்இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டினர்.

மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்து விட்ட செய்தி உண்டு.

பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டதெனவும் தெரிகிறது.

தெப்ப உற்சவம்:
மட்குடத்திற்குள் சாம்பலும், எலும்புமாய் இருந்த பூம்பாவை உயிர்பெற்று எழுந்த தலம் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் உறையும் திருமயிலை.

இப்பூம்பாவை உயிர்பெற்று எழ வேண்டும் என்பதற்காகத் திருஞான சம்பந்தர் திருமயிலை தேவாரப் பதிகம் மூலம் 'தைப்பூசங் காணாதே போதியோ போய்விடுவாயோ பூம்பாவாய்' என்று தன் பதிகத்தில் கேள்வி எழுப்புகிறார் பூம்பாவையை எழுப்ப.

காணக் கிடைக்காத அற்புதக் காட்சி, காணக் கிடைக்கும்பொழுது தவறவிடலாமா என்பது இதன் பொருள்.

இப்படிப்பட்ட திருத்தலத்தில் நடைபெறும் தெப்ப உற்சவம் எவ்வளவு உயர்வானதாக இருக்க வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பதிகத்தில் குறிப்பிடப்பட்ட இத்தெப்ப உற்சவம் நடைபெறும் இத்திருக்குளம் அவ்வளவுக்கவ்வளவு சிறப்பானதாக இன்றும் உள்ளது.

பழமையான பாரம்பரிய விதிகளைக் கடைப்பிடித்துவரும் கோயில்களில் பிரதானமானது இந்தக் கோயில்.

முன்னோர்களுக்குத் திதி கொடுக்க, வாழை இலையில் வைத்த பிண்டம் போன்ற உணவுப் பொருட்கள், தெப்பத் திருவிழாவின்போது வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, கொழுக்கட்டை ஆகியவற்றைக் குளத்து நீரில் போடக் கூடாது.

இவற்றை மீன்கள் உண்ணுவதே இல்லை. மாறாக மீனுக்குத் தேவையான உயிர்க் காற்றை இவை மறைமுகமாக உண்டு மீன்களின் உயிரைப் பறிக்கின்றன என்பதுதான் உண்மை.

ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் மீனாகத் திருக்குளத்தில் வாழ்கிறார்கள் என்பது நமது நம்பிக்கை.

குப்பையைப் போட்டு அவற்றிற்கு மூச்சுக் காற்று கிடைக்காமல் செய்வது எந்த விதத்தில் புண்ணியம் சேர்க்கும்? பாவங்கள் மட்டுமல்ல குப்பைகளும் சேர்ந்துவிடாமல் பத்திரமாக குளத்தைக் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு பக்தனின் தலையாயக் கடமை.

ஏற்றம் தரும் ஏழு:
ஏழு என்ற எண்ணை அடிப் படையாகக் கொண்ட விஷயங்கள் மயிலையின் தனிச்சிறப்பைக் கொண்டவை.

கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர்,
மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர்,
தீர்த்த பாலீஸ்வரர் ஆகிய மயிலையில் உள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் எல்லாப் பேறுகளும் கிடைக்கும் என்பர்.

அதேபோல் மயிலாப்பூரில் ஏழு தீர்த்தங்களும் சிறப்புடன் திகழ் கின்றன.

கபாலி தீர்த்தம்,
வேத தீர்த்தம்,
வாலி தீர்த்தம்,
கங்கை தீர்த்தம்,
வெள்ளி தீர்த்தம்,
கடவுள் தீர்த்தம் (கடல்),
ராம தீர்த்தம் ஆகியன.

சிங்கார வேலன்:
முருகனுக்கும் உகந்த திருத்தலம் மயிலை.

சிக்கல் திருத்தலத்தில் சக்தி வேல் பெற்ற முருகப் பெருமான், மயிலைக்கும் வந்து வழிபட்டு சிங்கார வேல் ஒன்றைப் பெற்றாராம்.

ஆகவே, இங்குள்ள முருகனுக்கு சிங்கார வேலன் என்றும் பெயர்.
 
முருகப்பெருமானிடம் தன்னை இத்தலத்திற்கு வந்து வணங்கு, என்று சொன்ன ஈசன், அண்ணன் விநாயகனையும் வணங்குக!' என்று பணித்தார் ஈசன்.

அதன்படியே இங்குள்ள கணபதியையும் வணங்கி வழிபட்டார் கந்தவேல்.

இதனால் மகிழ்ந்த விநாயகர் ஆனந்தக் கூத்து ஆடினார். அதனால் இவர் இங்கு நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.

பங்குனிப் பெருவிழா:
இந்தத் தலத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பது பங்குனிப் பெருவிழாவும், அதிலும் பிரதானமான அறுபத்து மூவர் திருவிழாவுமே.

பங்குனிப் பெருவிழாவின் எட்டாம் நாளன்று காலையில், 'பூம்பாவை உயிர்ப்பித்தல்' நிகழ்ச்சி நடைபெறும்.

கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்ப்பித்த பின்னர், மண் குடுவையில் உள்ள வெல்லம் பிரசாதமாகத் தரப்படும்.

அஸ்தியில் இருந்து பூம்பாவையை ஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததை ஐதீகமாகக் கொண்டு இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து மாலையில் 63 நாயன்மார்களுடன் விநாயகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் நான்கு மாடவீதிகளில் நள்ளிரவு வரை வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

பக்தர்கள் தங்களால் இயன்றளவு தானம் வழங்குவது இவ்விழாவின் தனிச்சிறப்பு.

பத்தாம் நாள் காலை விழாவில்,  கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு, அம்பாள் மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார்.

பௌர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பாள் அம்பிகை.

கல்யாணத் தடைகளால் வருந்தும் அன்பர்கள், இந்த வைபவத்தைத் தரிசித்து ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டு வர, விரைவில் தடைகள் யாவும் நீங்கி கல்யாணம் கைகூடும்.

காரணப் பெயர்கள்:
மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர்.

இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள்.

பிரமாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.

உமையவள் மயிலாக வந்து இங்கு ஈசனை வழிபட்டதால்- மயிலை.

சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகாவிஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால் வேதபுரி.

சுக்ராச்சார்யார் இங்குள்ள ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் சுக்ரபுரி.

மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனைப் போற்றி வழிபட்டதால் கபாலீச்சரம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது திருமயிலை.

மூவேந்தர் காலத்தில், புலியூர் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்ததாக விளங்கிய மயிலை, வடமொழியில் 'கேகயபுரி' எனப்பட்டது.

'மயிலாப்பி' என்றும் இந்தத் தலம் அழைக்கப்பட்டதை அப்பர் பெருமானின், 'மயிலாப்பிலுள்ளார்...' என்ற திருத்தாண்டகத்தின் வரிகளிலிருந்து தெரியலாம்.

திருமழிசை ஆழ்வார்- 'மாமயிலை' என்றும், திருமங்கை ஆழ்வார் - 'மயிலை' மற்றும் 'மாமயிலை' ஆகிய பெயர்களாலும், சுந்தரர் 'தொன்மயிலை' என்றும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் மயிலாப்பில், மயிலாப்பு, மயிலாபுரி ஆகிய பெயர்களும் இவ்வூருக்கு உண்டு.

கயிலையே மயிலை:
"காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி" என்று பாபநாசன் சிவன் பாடிப்பரவினார்.

சென்னையில் பாடல் பெற்ற தலங்கள் மூன்று அவை மூன்றும் கடற்கரையோரம் அமைந்திருக்கின்றன.

வடக்கிலே திருவொற்றியூரும், மத்தியிலே திருமயிலையும், தெற்கிலே திருவான்மியூரும் அமைந்துள்ளன.

இந்த மூன்று தலங்கள் இவற்றுள் நடு நாயகமாக அமைந்ததுதான் திருமயிலை தலம்.

பிரம்மன் பூசித்து தன் இறுமாப்பு நீங்கி படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலமானதால் பிரம்மபுரி . 

வேதங்கள் (மறைகள்) பூசித்து அரசு தொடுகையால் உண்டான பாவத்தைப் போக்கிய தலம் எனவே இத்தலம் வேதபுரி (வேத நகர்) என்றும் அழைக்கப்படுகின்றது.

எலியாக இருந்த போது திருமறைக்காட்டிலே எம்பெருமானின் கருவறையின் தீபத்தை தூண்டியதால் அடுத்த பிறவியில் அசுர ராஜனாக பிறந்த பலி சக்கரவர்த்தியிடம், மஹா விஷ்ணு வாமன அவதாரத்தில் வந்து மூவடி மண் கேட்ட போது அதை தடுக்க முயன்று கண்ணை இழந்தார்.

இழந்த அந்த கண்ணை இத்தலம் வந்து வணங்கி, அசுர குரு சுக்கிராச்சியார் கண்ணைப் பெற்ற தலம் எனவே இத்தலம் சுக்கிரபுரி
என்றும் அழைக்கப்பட்டது.

திருமயிலை ஐதீகங்கள்:
தன் மனதையே ஞானக் கோவிலாகக் கொண்டு வழிபட்டு முக்தி அடைந்த வாயிலார் நாயனார் வாழ்ந்த தலம்.

மாலவன் புகழ் பாடிய பன்னிரண்டு ஆழ்வார்களுள் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் அவதரித்த தலம். 

உலகப் பொது மறையாம் திருக்குறளை வழங்கிய வள்ளுவர் வாசுகியுடன் வாழ்ந்த தலம் இது.

அப்பர் பெருமான் பாடிய ஐயன் கபாலியாகவும் அம்மை கற்பக வல்லியாகவும் எழுந்தருளி அருள் பாலிக்கும் ,
"மயிலையே கயிலை, கயிலையே மயிலை" என்னும் திருமயிலையில் பங்குனிப் பெருவிழாவை நாம் அனைவரும் காணவேண்டிய சிறப்பான விழாவாகும்.

திருமயிலையின் சிறப்பே அதன் திருவிழாக்கள் தான் இத்தலத்தின் பல்வேறு திருவிழாக்களைக் காணாமல் போதியோ? பூம்பாவாய் என்று பதிகம் பாடித்தான் திருஞான சம்பந்தர் இறந்த பின் சாம்பலும் எலும்புமாக இருந்த பூம்பாவையை அங்கத்துடன் உயிருடன் எழுப்பினார் எனவே இத்தலத்தின் பல்வேறு திருவிழாக்கள்  தரிசனத்தின்போது நடைபெறும் நாளன்று அனைவரும் சென்று தரிசித்தால் பலனருள் பெறுவது திண்ணம்.

சம்பந்தர் தேவாரம்:
பண்: சீகாமரம்
1.🔔மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

🙏🏾பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?

2.🔔மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

🙏🏾பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?

.🔔3வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

🙏🏾பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

4.🔔ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

🙏🏾பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?

5.🔔மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

🙏🏾பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?

6.🔔மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

🙏🏾பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

7.🔔மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

🙏🏾பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ?

8.🔔தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

🙏🏾பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ?

9.🔔நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும் 
முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

🙏🏾பூம்பாவாய்! நல்ல தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய, மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ?

10.🔔உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

🙏🏾பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ?

11.🔔அழகானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

🙏🏾மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன்மீது, தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது நலம்புகழ்ந்து பாடிய இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர்.

           திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment