மூன்று யுகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் #சிரஞ்சீவி !!!
மார்கழி மாத அமாவாசையில் மூல நட்சத்திரத்தன்று அனுமன் பிறந்ததால், அந்நாளை அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றோம். ஆந்திர மாநிலத்தில் சித்திரை மாதப் பௌர்ணமியன்று கொண்டாடுகின்றனர்.
வடநாட்டில் வைகாசி பௌர்ணமியை அடுத்துவரும் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடுகின்றனர். அனுமனை அவர்கள் மகாவீரர் என அழைக்கின்றனர். கர்நாடகாவில் ராம நவமி தொடங்கி ஒரு வாரம் வரை அனுமன் ஜெயந்தி விழாவைக் கொண்டாடுகின்றனர்.
ஆஞ்சனேயரின் அவதாரமாகக் கருதப் படுபவர்களில் துவைத மத ஸ்தாபகரான ஸ்ரீமத்வாச்சாரியார் முதன்மையானவர்.
அடுத்து மந்த்ராலய மகான் ராகவேந்திர சுவாமிகள். அத்துடன் 15-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த மத்வ மகாஞானியான வியாசராய தீர்த்தர். இவர் விஜயநகர அரசரான கிருஷ்ண தேவராயர் காலத்தவர். (1440-1530). இவருக்கு அனுமன் 14 முறை தரிசனம் தந்தாராம்.
வியாசராயர் தன் வாழ்நாளில் 732 தலங்களில் அனுமன் சிலைகளைப் பிரதிஷ்டை செய்த பெருமைக்குரியவர். இவர் பிரதிஷ்டை செய்த அனுமன் சிலைகளில், தலையைச் சுற்றி அமைந்துள்ள வாலில் மூன்று மணிகள் கட்டப்பட்டிருக்கும். வலக்கை உயர்ந்திருக்கும். இடக்கையில் சௌகந்திகா மலர் இருக்கும். இப்படி காட்சி தரும் அனுமன் சிலைகள் வியாசராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை என அறியலாம்.
ஆஞ்சனேயர் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அருகேயுள்ள அஞ்சனை கிராமத்தில் அவதரித்ததாகக் கருதப்படுகிறது. இங்குள்ள ஒரு குகையில் அஞ்சனை மடியில் அனுமன் வீற்றுள்ள புராதன சிலை உள்ளதால்தான் இவ்வாறு கூறுகின்றனர். திருமலையில் அவதரித்தார் என்றும் சொல்வர்.
அனுமன் ஒரு இசை ஞானி. "குண்டக்ரியை' ராகத்தை முதலில் பாடியவர் அனுமன்தான். நாரதர், தான் ஒரு சங்கீதமேதை என கர்வம் கொண்டிருந்தார். அதைப் போக்கவே அனுமன் இந்த ராகத்தைப் பாடினார் என்பர்.
ஆஞ்சனேயரை ரகுவம்ச ரட்சகன் என்பர். காரணம்... அசோக வனத்தில், இராவணனின் இம்சை பொறுக்காத சீதை தன்னை மாய்த்துக் கொள்ள முயல, அப்போது அங்கு வந்த அனுமன் ராமனின் கணையாழியைக் காட்டி சீதையைக் காப்பாற்றினார்.
யுத்தத்தின்போது மேகநாதனான இந்திரஜித் விடுத்த நாகபாணத்தால் லட்சுமணன் மூர்ச்சை யடைந்தான். அதுகண்ட ராமர், "எது போனா லும் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் உன்னைப் பிரிந்திருக்க முடியாது' எனக் கூறி உயிர்விடத் துணிந்தபோது, அனுமன் சஞ்சீவி மலையுடன் வந்து இலக்குவணனைப் பிழைக்க வைத்து ராமரையும் காப்பாற்றினார்.
இராமன் சீதையை மீட்டுக்கொண்டு அயோத்தி திரும்பும்போது, சுகப்பிரம்ம மகரிஷி வற்புறுத்தியதால் அவர் ஆசிரமத்தில் தங்கினார். பரத, சத்ருக்னர்கள் ராமர் சரியான தருணத்தில் வராததால், அக்னியை வலம் வந்து அதில் இறங்கி உயிர்விடத் துணிந்தனர்.
அவ்வேளையில், ராமரின் ஆலோசனைப்படி ஆகாய மார்க்கமாக வந்த அனுமன், ராமர் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் எனக் கூறி அவர்களைக் காத்தார்.
ரகுவம்ச வாரிசுகளான லவன், குசன் இருவரும், ராமர் தன் தந்தை என அறியாமல் அவரை எதிர்த்துப் போரிட்டனர். பொறுமை இழந்த ராமர், தன் ராம பாணத்தை எய்ய முயலும்போது, அனுமன் சீதையை அங்கு அழைத்து வந்து தடுத்து, லவன், குசனைக் காப்பாற்றினார்.
இப்படி ஒவ்வொரு சமயத்திலும் அனைவரையும் அனுமன் காத்ததால் இவர் ரகுவம்ச ரட்சகன் எனப்படுகிறார்.
கண்ணனுக்கும் அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. கண்ணன் அர்ச்சுனனின் தேர்ச் சாரதியாய் இருந்தார். அனுமன் அர்ச்சுனன் தேரில் வெற்றிக் கொடியாய் இருந்தார். கண்ணன் பாண்டவர்களுக்காக துரியோதனனிடம் தூது சென்றார். அனுமன் ராம- லட்சுமணர்களுக்காக இராவணனிடம் தூது சென்றார்.
கண்ணன் கோகுலத்தவர்களைக் காப்பாற்ற கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தார். அனுமன் லட்சுமணன் மூர்ச்சை தெளிவிக்க சஞ்சீவி மலையைத் தூக்கி வந்தார். இருவருமே விஸ்வரூப தரிசனம் காட்டியவர்கள் தான்.
வெற்றிலை மாலை
அசோக வனத்தில், சீதை அருகே இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து ஒரு இலையைப் பறித்து, அனுமன் சிரசுமீது வைத்து சிரஞ்சீவியாக வாழ வாழ்த்தினார். அதனால் நாம் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுகிறோம்.
வடை மாலை
போர்க்களத்தில் எதிரிகளின் உடலை வடைபோல தட்டி துவம்சம் செய்தார்
அனுமன். அதனால் கொழுப்புச் சத்து நிறைந்த உளுந்தால் வடை மாலை செய்து அவருக்குச் சூட்டி வழிபடுகிறோம்.
வெண்ணெய்
வெண்ணெய் உருகுவதுபோல நம் பிரார்த்தனைக்கு உருகி உதவி செய்வார் என்பதாலும்; போர்க் களத்தில் வீர அனுமன் பாறைகளையும் மலைகளையும் பெயர்த்துப் போர் செய்த தால், அவரது வெப்பம் தணித்து குளிர்ச்சி ஏற்படுத்த வும் வெண்ணெய் சாற்றி வழிபடுகிறோம்.
செந்தூரம்
சீதை ஒருநாள் தன் நெற்றி யில் செந்தூரம் இட்டுக்கொள் வதைக் கண்ட அனுமன் அதற்குக் காரணம் கேட்க, தன் கணவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ செந்தூரம் இட்டுக் கொள்வதாகக் கூறினாள் சீதாதேவி. இது கேட்டு மகிழ்ந்த அனுமன் கருணைக் கடவுளான ராமர் என்றும் நீடுழி வாழ தன் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டார். அதனால்தான் இன்றும் அனுமன் கோவில்களில் பூஜை செய்த பின், எண்ணெய் கலந்த செந்தூரப் பொடியை அனுமனின் உடல் முழுவதும் பூசுகின்றனர். பக்தர்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள செந்தூரம் தருவர்.
அனுமனின் வால்
அனுமனுக்கு வாலில்தான் சக்தி அதிகம். எனவே வால் தோன்றுமிடத்தில் சந்தன குங்குமப் பொட்டிட்டு, ராம நாமம் ஜெபித்தபடி பூஜை செய்யவேண்டும். இவ்வாறு தினமும் பொட்டிட்டு, வாலின் முனை வரை பூர்த்தியானதும், சுபதினத்தில் வடைமாலை சாற்றி வழிபடலாம். இதனால் நினைத்ததை நமக்கு நிறைவேற்றி வைப்பார் அனுமன்.
அனுமன் இதயத்தில் சீதை- ராமர்
பட்டாபிஷேகம் முடிந்தபின் ராமர் அனைவருக்கும் பரிசளித்தார். அனுமனுக்கு சீதையின் கழுத்திலிருந்த முத்துமாலை பரிசாகக் கிடைத்தது. அனுமன் அந்த முத்துமாலையில் இருந்து ஒவ்வொரு முத்தாக எடுத்துக் கடித்துப் பார்த்தார். அதைக் கண்ட விபீஷணன் "என்ன பார்க்கிறீர்கள்?' என, "இதில் ராமர்- சீதை உருவம் தெரிகிறதா என்று பார்த்தேன்; இல்லை' என்றார்.
அதற்கு விபீஷணன், "உன் உடலில் ராமர்- சீதை உருவம் தெரியுமா?' எனக் கேட்டான்.
அனுமன் தன் மார்புச் சதையைக் கிழித்துக் காட்ட, அங்கு ராமர்- சீதை தெரிந்தனர். இது கண்ட விபீஷணன் அனுமனின் காலில் விழுந்து வணங்கினான்.
அனுமன் வைகுண்டம் செல்ல மறுத்த காரணம்
ராமாவதாரம் முடிந்தபின் ராமர் வைகுண்டம் செல்லும்போது தன்னுடன் வர அனைவரையும் அழைத்தார். ஆனால் அனுமன் வர மறுத்தார். "பூவுலகில்தான் ராம நாமம் கேட்க முடியும். அதனால் ராம நாமம் கேட்டபடி இருக்க இங்கேயே இருந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டார்.
அதனால்தான் ராமாயண கதா காலட்சேபம் நடத்தப்படும் இடங்களில் ஒரு பலகையை தனியாகப் போட்டு வைப்பார்கள். அனுமன் அதில் அமர்ந்து ராம சரிதம் கேட்பதாக ஐதீகம்.
திரேத யுகத்தில் பிறந்த அனுமன் துவாபர யுகம் கடந்து இந்தக் கலியுகத்திலும் பூவுலகில் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். அவரைப் பணிந்தால் நல்லனவெல்லாம் நடக்கும்!.
[truncated by WhatsApp]
No comments:
Post a Comment