Monday, December 18, 2017

Thiruvelvikkudi temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
_________________________________________
*தல எண்:168*

*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவில், திருவேள்விக்குடி.*
_________________________________________
*இப்பதிவின் கடைக்கோடியில் திருவிசைப்பா தொடர் ஐந்தாம் பாடலும் உரையும் இருக்கிறது. வாசித்து ஈசன் கருணை பெறுவீர்களாக!*
---------------------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் இருபத்து மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:*மணவா ளேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர்.

*இறைவி:* பரிமளசுகந்த நாயகி.

*தல விருட்சம்:* நாகலிங்கம்.

*தல தீர்த்தம்:* கெளதகா பந்தன தீர்த்தம்.

*ஆகம பூஜை:* சிவாகம முறைப்படி.

*தேவாரம் பாடியவர்கள்:* திருஞானசம்பந்தர்• மூன்றாம் திருமுறையில் ஒரு பதிகம்.
சுந்தரர்• ஏழாம் திருமுறையில் ஒரு பதிகம்.

(திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான பதிகம்)

*பெயர்க்காரணம்:* சிவனின் திருமண வேள்வி நடைபெற்ற தலம். ஆதலின் இப்பெயரினைக் கொண்டது.

இறைவனுக்குக் கங்கண காரணம் செய்தபடியால் இதற்கு கெளதுகா சந்தன ஷேத்திரம் என்று பெயர்.

*இருப்பிடம்:*
மயிலாடுதுறை  கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே மூன்று கி.மி. தொலைவில் திருவேள்விக்குடி தலம் இருக்கிறது.

குத்தாலத்தில் இருந்து திருவேள்விக்குடி செல்ல ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோவில்,
திருவேள்விக்குடி,
குத்தாலம் அஞ்சல்,
குத்தாலம்.
மயிலாடுதுறை வட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம்.
PIN - 609 801

*ஆலய தொடர்புக்கு:* தொலைபேசி எண் 
04364 235462

*ஆலயப் பூஜை காலம்:*
காலை 7.00  மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு:*
இத்தலத்திற்குச்  செல்கையில் மூன்று நிலைகளைத் தாங்கிய கிழக்கு நோக்கிய வண்ணமிருந்த இராஜகோபுரத்தைக் கண்டு *சிவ சிவ,சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.

ஆலய முகப்பு வாயிலுக்கெதிராக அமையப்பெற்றிருந்த கெளதகா பந்தய தீர்த்தத்திற்கு வந்து, தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

இரண்டு பிரகாரங்கள் உடைய இக்கோயிலுக்கு உள் புகுகிறோம்.

கருவறைக்கு முன்னே அர்த்த மண்டம், மகாமண்டபம் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் அகத்தியப் பெருமான் சிலைதிருமேனியும், நடராஜர் சந்நிதியும், பிள்ளையார் திருமேனியும் இருக்க பணிந்து விழுந்தெழுந்து வணங்கிக் கொண்டு தொடர்ந்தோம்.

இறைவன் சந்நிதிக்கு வந்து, கண்குளிர தரிசித்து, மணங்குளிர அவனருளைப் பெற்று வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.

இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர் ஆகியோர்களைக் கண்டு ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலாஉருவில் அம்பாள் இறைவன் சந்நிதிக்கு இடதுபுறத்தில் இருக்கிறாள்.

இறைவி சந்நிதிக்கு விரைந்தோம். அம்பாள் தெற்கு நோக்கி அருளிய வண்ணமிருந்தாள். 

நன்றாக அம்பாளின் தரிசனத்தை கண்டு வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் தான் நீங்கியது.

அகத்தியருக்கு இத்தலத்தில் அர்த்த மண்டபத்தில் தனி சந்நிதி இருக்கிறது.

செம்பியன் மாதேவி, இராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன.

நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கெளதுகா பந்தன தீர்த்தத்தில் நீராடி மணவாளேஸ்வரர் மற்றும் பரிமளசுகந்த நாயகியை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

இத்தலத்தில் இருந்து சுமார் இரண்டு கி.மி. தொலைவில் உள்ள திருமணஞ்சேரி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்றது.

*தல அருமை:*
ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார்.

பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.

உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர்.

திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார்.

அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.

சுய உருவம் பெற்ற அம்பிகை ஈசனை நினைத்து பதினாறு திங்கட்கிழமை விரதம் இருந்து மனலால் லிங்கம் செய்து வைத்து பூஜை செய்து வர பதினேழாவது திங்கட்கிழமையில் சிவபெருமான் தோன்றி ஈஸ்வரியை திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணம் கூறுகிறது.

பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன.

பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் *திருவேள்விக்குடி* என்ற பெயர் ஏற்பட்டது.

*தல பெருமை:*
அரசகுமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட அவளின் உறவினர்கள் இத்திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

அரசகுமாரன் எவ்வளவோ வேண்டியும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை.

அரசகுமாரன் இத்தலம் வந்தான். நின்று போன தன் திருமணம் நடக்க வேண்டும் என்று இத்தல இறைவனை வேண்டினான்.

இனைவன் ஒரு பூதத்தை அனுப்பி அப்பெண்ணைக் கொண்டு வரச் செய்து அரசகுமாரனுக்கும் அப்பெண்ணிற்கும் திருமணம் செய்து வைத்தார் என்று தல வரலாறு கூறுகிறது.

இறைவன் பகலில் இத்தலத்திலும்,இரவில் குத்தாலத்லில் எழுந்தருளுவதாக ஐதீகம்.

திரேகத்தில், சொரி, சிரங்கு படை உள்ளவர்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை ஆராதித்தால் பீடித்திருந்த தோல் நோய் ஒழியப் பெறுவர்.

அகத்தியர் வாதாபியைக் கொன்றதனால், இத்தலத்தின் மூலம் சாபம் நீங்கப் பெற்றார்.

சுந்தரருக்கு ஏற்பட்டிருந்த குட்டநோயும் இத்தலத்தின் மூலம் நீங்கப் பெற்றார்.

பிள்ளையார் திருமணச் சடங்கிங்போது, தனக்குத் தானே பூஜை செய்த தலம்.

இத்தலம் திருமணத்தலம் ஆனதால், இங்கு கொடி மரமும், நவக்கிரகமும் கிடையாது.

குத்தாலத்தில் இறைவன் எழுந்தருளும் ஐதீகம் இருப்பதால், பகலில் இத்தலம் வந்து தரிசனம் முடித்துத் திரும்ப, குத்தாலம் சென்று இறைவனைத் தரிசிக்கும் அமைப்புடன் அமைந்துள்ளது.

ஒரே நாளில், பகலில் இங்கு தரிசித்து விட்டு, குத்தாலத்தில் இரவில் தரிசித்து விடலாம்.

திருமணத் தடை உள்ளவர்கள் இவ்வாறு ஒரே நாளில் தரிசனம் செய்ய, தடை நீங்கப் பெறுவது உறுதி.

எதிர்கொள்பாடி தலத்தில் தேவர்கள், அகத்தியர் திருமனக் கோலத்துடன் எதிர்கொண்டு அழைத்தனர்.

தற்காலத்தில் ஒவ்வொரு பெளர்ணமியிலும் கிரக, திருமண தடையும், பாப சாப விமோசனமும், மாங்கல்யத் தோஷம் நீங்கிவும், புத்திர பாக்கியம் பெறவும், இங்கு யாகம் செய்வித்து மாலை அணிவிக்கப்படுகிறது.

*சம்பந்தர் தேவாரம்:*
1.🔔ஓங்கிமே லுழிதரு மொலிபுனற் கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

🙏🏾சிவபெருமான் , மேன்மேலும் ஒங்கி எழுந்து ஓசையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு சடையில் தாங்கியவர் . இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை யோட்டையே பாத்திரமாகக் கொண்ட தலைவர் . முறைப்படி , பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும் , நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும் திருத்தலத்தை உடையவர் . அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

2.🔔தூறுசேர் சுடலையிற் சுடரெரி யாடுவர் துளங்கொளிசேர்
நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண் பிறைபுல்கு சடைமுடியார்
நாறுசாந் திளமுலை யரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

🙏🏾சிவபெருமான் , புதர்ச்செடிகள் நிறைந்த சுடு காட்டில் ஒளிவிடும் நெருப்பேந்தி ஆடுபவர் . விளங்கும் ஒளி யுடைய திருநீற்றினைக் கலவைச் சந்தனம் போல மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்பவர் . வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடையவர் . மணம் கமழும் சந்தனக்குழம்பை அணிந்த இளமையான கொங்கைகளையுடைய உமாதேவியோடு பொருள்வளமிக்க திருத்துருத்தியில் பகற்காலத்தில் தங்கியிருப்பவர் . இரவில் திருவேள்விக் குடியில் வீற்றிருந்தருள்பவர் .

3.🔔மழைவள ரிளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்கு லரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

🙏🏾குளிர்ச்சியான இளம்பிறையும் , கொன்றை , ஊமத்தை போன்ற மலர்களோடு ஒரு வெண்தலையும் பொருந்திய நீண்ட சடையின் மீது , கரும்பு முதலிய பயிர்களை வளர்க்கும் கங்கை நதியினைத் தங்கச் செய்த எம் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் பிரம கபாலம் ஏந்தியவர் . அவர் இழைகளால் நெய்யப்பட்ட ஆடை யணிந்த அல்குலையுடைய உமாதேவியோடு பகலில் , மேன்மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியில் வீற்றிருந்தருளுவார் . அவரே இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுவார் .

4.🔔கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை யரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
விரும்பிடம் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே

🙏🏾இறைவன் கரும்பு வில்லையுடைய பெருந்தகை யாகிய மன்மதனின் அழகிய உடலை அழித்தவர் . வண்டுகள் மொய்க்கும் , தேன் மணம் கமழும் தூய கொன்றை மலரை அழகிய ஒளிமிக்க சடைமுடியில் அணிந்தவர் . அவர் தாமரை மொட்டுப் போன்று அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தல மாகும் . அவரே இரவில் வீற்றிருந்தருளுவது திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும் .

5.🔔வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎங் கண்ணுதற் கபாலியார்தாம்
துளங்குநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

🙏🏾அழகு மிளிரும் சந்திரனும் , பொன் போன்ற கொன்றைமலரும் , வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச் சடைமுடியில் வைத்தருளிய , நெற்றிக்கண்ணையுடைய எங்கள் சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தியவர் . அசைகின்ற முப்புரி நூலணிந்த மார்பினர் . அவர் உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் .

6.🔔பொறியுலா மடுபுலி யுரிவையர் வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளு நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்
மறியுலாங் கையினர் மங்கையொ டொருபக லமர்ந்தபிரான்
வெறியுலாந் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

🙏🏾சிவபெருமான் வரிகளையுடைய கொல்லும் தன்மையுடைய புலித்தோலாடை அணிந்தவர் . நெடிய பாம்பை ஆபரணமாகப் பூண்டவர் . பிச்சை எடுப்பதை நெறியாகக் கொண்ட தன்மையர் . இத்தகைய எளிமை உடையவர் ஆயினும் , எவராலும் நினைத்துப் பார்ப்பதற்கும் அரிய பெருமையுடையவர் . மான்கன்று ஏந்திய கையினர் . அத்தகைய பெருமான் உமாதேவியாரோடு பகலில் , நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுகின்றார் .

7.🔔புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து
திரிதரு மியல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொ டொருபக லமர்ந்தபிரான்
விரிதரு துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

🙏🏾சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவர் . புலியின் தோலை அரையில் உடுத்தவர் . திருவெண் நீற்றை அணிந்து கொண்டு திரியும் இயல்பினர் . திரியும் புரங்கள் மூன்றையும் தீயால் வளைவித்து எரித்தவர் . சந்தனக் கீற்றுக்கள் எழுதப் பெற்ற அழகிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு பகலில் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் .

8.🔔நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கனிந் நீள்வரையைக்
கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ னாள்வினை கீழ்ப்படுத்தார் 
பூண்டநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
வேண்டிடந் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

🙏🏾நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பெரிய கிரீடத்தை அணிந்துள்ள இராவணன் ` இப்பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்து அப் பாலிடுவேன் ` என்று ஆணவத்துடன் எழுந்த அவனது முயற்சியை அழித்தருளியவர் சிவபெருமான் . அவர் பூணூல் அணிந்த திருமார்பினர் . அவர் உமா தேவியோடு பகலில் , விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார் .

9.🔔கரைகட லரவணைக் கடவுளுந் தாமரை நான்முகனும்
குரைகழ லடிதொழக் கூரெரி யெனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

🙏🏾ஒலிக்கின்ற கடலில் பாம்புப் படுக்கையில் துயில்கொள்ளும் திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்த தம் திருவடிகளை , செருக்கழிந்து தொழுமாறு ஓங்கிய நெருப்பு வடிவாய் நின்றவர் சிவபெருமான் . அவர் மலைமகளான உமாதேவியோடு பகலில் வீற்றிருந்தருளும் இடம் வளமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

10.🔔அயமுக வெயினிலை யமணருங் குண்டருஞ் சாக்கியரும்
நயமுக வுரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடுங் கண்ணியொ டொருபக லமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

🙏🏾பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சுடும் வெயிலில் தவமென்று நிற்றலையுடைய சமணர்களும் , குண்டர்களாகிய புத்தர்களும் , இன்முகத்தோடு நயமாகப் பேசி , நகைச்சுவை ததும்பும் செயல்களைச் செய்து திரிபவர்கள் . ஆதலால் அவர் உரைகளைக் கொள்ளாதீர் . கயல்மீன் போன்ற , அழகிய , வரிகளையுடைய நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு பகலில் அகன்ற நகராகிய திருத்துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுகின்றார் . அவரை வழிபட்டு உய்வீர்களாக .

11.🔔விண்ணுலாம் விரிபொழில் விரைமணற் றுருத்திவேள் விக்குடியும்
ஒண்ணுலாம் மொலிகழ லாடுவா ரரிவையொ டுறைபதியை
நண்ணுலாம் புகலியு ளருமறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணுலா மருந்தமிழ் பாடுவா ராடுவார் பழியிலரே.

🙏🏾ஒளிவிடும் , ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து திருநடனம் செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந் தருளுகின்ற , ஆகாயம்வரை உயர்ந்துள்ள விரிந்த சோலைகள் நிறைந்த , மணம் பொருந்திய மணற் பரப்பையுடைய திருத்துருத்தி , திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப் போற்றி அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய தமிழ்ப்பதிகத்தைப் பாடுபவர்களும் , பரவசமடைந்து ஆடுபவர்களும் எவ்விதமான பழியும் , பாவமும் இல்லாதவர்களாவர் .

     திருச்சிற்றம்பலம்.

*சுந்தரர் தேவாரம்:*
1.🔔மூப்பதும் இல்லை பிறப்பதும்
இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு
மாகச்சிந் திக்கினல்லால்
காப்பது வேள்விக் குடிதண்
துருத்திஎங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

🙏🏾ஆராயுங்கால் எங்கள் தலைவர் , பிறத்தலும் இல்லை ; பின்பு வளர்ந்து முதுமை அடைதலும் இல்லை ; முடிவில் இறந்தொழிதலுமில்லை ; உறைவிடம் காட்டிடத்துள்ளது ; அதுவன்றி ஊர்களுள் தமக்கு உரித்தாகக் காப்பது திருவேள்விக்குடியும் , தண்ணிய திருத்துருத்தியும் , அன்றியும் அரைக்கண் இறுகக் கட்டுவது பாம்பு ; இவற்றை முன்பே அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தேயிருப்பேம் . இவற்றை அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தொழிவேமோ !

2.🔔கட்டக்காட் டின்னட மாடுவ
ரியாவர்க்கும் காட்சியொண்ணார்
சுட்டவெண் ணீறணிந் தாடுவர்
பாடுவர் தூயநெய்யால்
வட்டக்குண் டத்தில் எரிவளர்த்
தோம்பி மறைபயில்வார்
அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

🙏🏾எங்கள் தலைவர் , இடரைத் தரும் காட்டிலே நடனம் ஆடுவார் ; யாராலும் காண்பதற்கு அரியவர் . சுடப்பட்ட வெள்ளிய சாம்பலைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடல் பாடல்களைச் செய்வார் ; வேதத்தைப் பலகாலும் பயில்கின்றவர்களாகிய அந்தணர்கள் , வட்டமாகிய குழியில் , தூயதாகிய நெய்யினால் எரியை வளர்த்துப் போற்றி , அதன்கண் பாகம் செய்த பொருள்களை ஏற்று உண்பார் ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே !

3.🔔பேருமோர் ஆயிரம் பேருடை
யார்பெண்ணோ டாணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர்
பெற்றவா நாமறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமு
துண்டுகண் டங்கறுத்தார்க்
காரம்பாம் பாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

🙏🏾எங்கள் தலைவர் , பெயரும் தமக்குரியனவாக ஆயிரம் உடையவர் ; இவர் பெண்ணும் அல்லர் ; ஆணும் அல்லர் ; இவர்க்கு ஊரும் ஒற்றிஊரே ; அதுவன்றி வேறோர் ஊரை உடைய ராதலை நாம் அறிந்திலோம் ; இருண்ட கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உணவாக உண்டு , கண்டம் கறுப்பாயினார் ; இவர்க்கு ஆரமாவது , பாம்பே ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

4.🔔ஏனக்கொம் பும்மிள வாமையும்
பூண்டங்கோர் ஏறுமேறிக்
கானக்காட் டிற்றொண்டர் கண்டன
சொல்லியுங் காமுறவே
மானைத்தோல் ஒன்றுடுத் துப்புலித்
தோஒல் பியற்குமிட்டி
யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

🙏🏾எங்கள் தலைவர் பன்றியின் கொம்பையும் , இளமையான ஆமையின் ஓட்டினையும் அணிந்து , ஒற்றை எருதின்மேல் ஏறுபவராய் , தம்மை அடியார்கள் காட்டில் கண்ட கோலங்களையெல்லாம் பலபடியாக எடுத்துச் சொல்லிய பின்பும் , விருப்பம் உண்டாக , மானினது அழகிய தோல் ஒன்றை அரையில் உடுத்து , தோளின் கண்ணும் புலித்தோலை இட்டு , உடம்பின் மேல் யானைத் தோலைப் போர்த்துக் கொள்பவர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

5.🔔ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர்
ஊரிடு பிச்சையல்லால்
பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர்
ஏறியொர் பூதந்தம்பால்
பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ
றும்பல பாம்புபற்றி
ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

🙏🏾எங்கள் தலைவர் நாவிற்குச் சுவைகள் பலவற்றை ஊட்டி உண்பதற்கு , ஊரவர் இடுகின்ற பிச்சையையன்றி மற்றோர் உணவையும் இலர் . ஒற்றை எருதைக் கயிற்றிற் கட்டி வைத்துக் கொண்டு , அதன் மேல் ஏறிச் செல்வர் . சிறிய பூதங்கள் தம்மிடத்தில் பாட்டு ஈதலைக் கேட்டு நின்று இன்பம் நுகர்பவராவர் . புற்றுக்கள் தோறும் சென்று பல பாம்புகளைப் பிடித்து ஆட்டிப் பிழைப்பர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

6.🔔குறவனார் தம்மகள் தம்மக
னார்மண வாட்டிகொல்லை
மறவனா ராய்அங்கோர் பன்றிப்பின்
போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதியா
ராய்அங்கோர் சோர்வுபடா
அறவனா ராவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

🙏🏾எங்கள் தலைவர்தம் புதல்வர்க்கு மனைவி , ஒரு குறவர் மகள் ; இவரும் கொல்லும் தொழிலையுடைய வேடுவராய் முன்பு ஒரு பன்றிப்பின் சென்றார் ; இவை மாயமாம் . இவர் இப் பெற்றியரான இறைவரும் , முன்னவரும் , ஒளி வடிவினரும் , அறவரும் ஆவதை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

7.🔔பித்தரை ஒத்தொரு பெற்றியர்
நற்றவை என்னைப்பெற்ற
முற்றவை தம்மனை தந்தைக்குந்
தவ்வைக்குந் தம்பிரானார்
செத்தவர் தந்தலை யிற்பலி
கொள்வதே செல்வமாகி
அத்தவ மாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

🙏🏾என்னைப் பெற்ற நற்றாயும் , வயது முதிர்ந்த அவள் தாயும் , இவ் விருவர்க்கும் அன்னை , தந்தை , தமக்கை என்பவரும் ஆகிய எல்லோர்க்கும் இறைவராய் உள்ள இவர் . பித்தரைப் போன்ற ஒரு தன்மை உடையராய் இருக்கின்றார் ; அன்றியும் , இறந்தவர் தலை யோட்டில் பிச்சை ஏற்பதே செல்வமாக , அன்னதொரு தவமுடைய ராதலை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

8.🔔உம்பரான் ஊழியான் ஆழியான்
ஓங்கி மலர்உறைவான்
தம்பர மல்லவர் சிந்திப்
பவர்தடு மாற்றறுப்பார்
எம்பர மல்லவர் என்னெஞ்சத்
துள்ளும் இருப்பதாகி
அம்பர மாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

🙏🏾இந்திரன் , உருத்திரன் , மால் , அயன் , என்னும் இவர்கள் அளவில் உள்ளரல்லர் என்றும் , ` தம்மை நினைப்பவரது மனக்கவலையைப் போக்குபவர் எம்மளவல்லவர் ` என்றும் சொல்லப்படுகின்ற இவர் , என் மனத்திலும் இருத்தலுடையவராய் வேறு வெளியாதலை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

9.🔔இந்திர னுக்கும் இராவண
னுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர் மாமறை
பாடுவர் மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முக
னும்முட னாய்த்தனியே
அந்தரஞ் செல்வ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

🙏🏾எங்கள் தலைவர் தேவர் கோமானாகிய இந்திரனுக்கும் , அரக்கர் கோமானாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தார் . அந்தணர்க்குரிய மந்திரம் ஓதுதல் , மறைபாடுதல் என்பவற்றையும் , வேடர்க்குரிய மான் கன்றைப் பிடித்தலையும் உடையவர் . ` மால் , அயன் ` என்னும் இருவரும் உடனாயிருப்ப , அவரொடு நிற்றலேயன்றி , தாம் மட்டும் தனியே உயர்ந்தும் செல்வர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

10.🔔கூடலர் மன்னன் குலநாவ
லூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடி
யார்க்கடி மைவழுவா
நாடவல் லதொண்டன் ஆரூரன்
ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்
திருப்பது பண்டமன்றே.

🙏🏾பகைவர்க்கு அவர் வணங்கும் அரசனும் , மேன்மை பொருந்திய திருநாவலூர்க்குத் தலைவனும் , நன்மையை யுடைய தமிழைப் பாடவல்ல சிவனடியார்க்கு அடிமை வழுவாது செய்யுமாற்றால் அப்பெருமானை அடைய எண்ணுகின்றவனும் ஆகிய நம்பியாரூரன் , தன் தலைவனுக்கு ஆட்படுதல் இவ்வாறெனச் சொல்லி இப்பதிகத்தைப் பாடவல்லவர் , மேலான உலகத்தில் சென்று தங்குதல் பொருளன்று மிக எளிது.

         திருச்சிற்றம்பலம்.

*கல்வெட்டில்:*
கல்வெட்டில் இறைவனை மணவாளநம்பி, மங்கல நக்கர், திருவேள்விக்குடி உடையார் என்று உரைக்கிறது.

*திருவிழாக்கள்:*
சிவராத்திரியும், பங்குனி உத்திரமும் சிறப்புடன் நடக்கிறது.

*தொடர்புக்கு:*
வைத்தியநாத குருக்கள்.
04364- 235 462
99422 39089

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள தலங்களின் நாளைய தலப்பதிவு *ஐராவதேஸ்வரர், எதிர்கொள்பாடி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
-----------------------------------------------------------------
*🔔திருவிசைப்பா.🔔*
ஒன்பதின்மார்கள் அருளிய ஒன்பதாம் திருமுறை.
         *ஐந்தாம் பாடல்.*
                *🔔5🔔*
-----------------------------------------------------------------
🔔 *கோலமே மேலை வானவர் கோவே!*

*குணங்குறி இறந்தோர் குணமே!*

*காலமே கங்கை நாயகா எங்கள்,*

*காலகா லா! காம நாசா!*

*ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்,*

*கோயில்கொண்டு ஆடவல் லானே!*

*ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்,*

*தொண்டனேன் நணுகுமா நணுகே!*

🙏🏾
அழகிய திருவடிவம் கொண்டவனே!

மேற்பதங்களில் உள்ள தேவர்களுக்கு அரசனே!

குணங்குறிகளைக் கடந்து நின்ற ஒப்பற்ற பண்பனே!

காலத்தின் வடிவமாக இருப்பவனே!

கங்காதேவிக்கு தலைவனே!

யமனை வென்றவனே!

மன்மதனை அழித்தவனே!

நஞ்சினையே அமுதமாக உண்டருளிச் செம்பொன் வேயப்பெற்ற அம்பல வெளியைக் கோயிலாகக் கொண்டு ஆனந்த தாண்டவம் புரியும் வல்லவனே!

உலகமாய் இருப்பவனே!

நல்ல யோகியாகிய உன்னை உறுதுணை இல்லாத தனித்தவனும் தொண்டனுமாகிய யான்,

நெருங்கும் வண்ணம் நீ நெருங்கி அருள்வாயாக!

திருச்சிற்றம்பலம்!.
திருச்சிற்றம்பலம்!!..
திருச்சிற்றம்பலம்!!!...
----------------------------------------------------------------------
*📎தினமும் கொஞ்சம்......, திருமாளிகைத்தேவரைப் பற்றி........*

இன்றைய திருவாவடுதுறை, திருவிசைப்பா பாடல் பாடியபோது, *நவகோடி சித்தர்புரம்* என்ற பெயருடன் இருந்தது.

இத்தலத்தில் போகநாதர் எனும் சித்தர், ஞான யோக சாதனைகள் நிகழ்த்தி மகிழ்ந்து கொண்டிருந்தார்.

இவர்களுடைய சீடர்களில், திருமாளிகைத்தேவரும் ஒருவராவார்.

மேலும், இவரோடு உடன் உறைந்த போகருடைய சீடர்களில், கருவூர்சித்தரும் ஒருவராவார்.

திருமாளிகைத்தேவர், சைவவேளான் குலத்தைச் சார்ந்தவர்.

எனவே, சோழமன்னர்களுக்கெல்லாம் தீட்சா குருவாக விளங்கி ஓங்கியிருந்தார்.

திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த,
பரி ஏறும் பெரியோன், 
தெய்வப் படிமம் பாதம் வைத்தோர்,
மாணிக்கத்கூத்தர்,
குருராயர்,
சைவராயர் என்று உயர்ந்த ஐந்து கொத்தாருள் ஒருவராக சைவராயர் வழியில் தோன்றியவர் திருமாளிகைதேவர்.

இவர்கள் முன்னோர்கள் வாழ்ந்து வந்த பெரிய மடமே திருமாளிகை மடமாகும்.

இம்மடத்தின் சார்வாகவே, திருமாளிகைதேவர் எனப்பட்டார்.

             திருச்சிற்றம்பலம்.

*இன்னும் நாளைய பதிவுடன்.....*
___________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment