Wednesday, December 6, 2017

Poem on Muruga starting with chappal & ending with broom by Kalamega pulavar

Courtesy:Sri.Mayavaram Guru

முருகனைப் புகழ்ந்து பாட "செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்" - ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்.
"ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?"
"முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?" என்றார் காளமேகம்.
"வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்" என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.
என்ன கொடுமை? இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?
அதைத் தகும் என்றும் முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.
செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே
செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.
விளக்குமாறு என்பதற்கு விளக்கம் சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா
.
இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.

No comments:

Post a Comment