Thursday, December 14, 2017

Pazhamudir cholai temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
-----------------------------------------------------------------
                  *🔔6🔔*
    
    *அறுபடை வீடு தொடர்.*
-------------------------------------------------------------------
*அறுபடை வீட்டில் பழமுதிர் சோலை.*

(இப்பதிகத்தின் கடைக்கோடியில், திருவிசைப்பா- வின் நான்காவது பாடலும் தெளிவும் உள்ளது.)
------------------------------------------------------------------
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை எனும் *ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில்* ஆகும்.

மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது.

இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர்.

சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது.

*அமைவிடம்:*
மதுரை மாவட்டத்திலிருந்து வடக்கே இருபது கி.மீ. தூரத்தில் உள்ளது பழமுதிர்ச்சோலை.

திருமாலின் திருக்கோயிலான, சுந்தராஜப் பெருமாள் என்றழைக்கப்படும் அழகராக அவர் நின்று அருள்புரியும் அழகர்கோயில் திருத்தலத்தில் அமைந்திருப்பது பழமுதிர்ச்சோலை.

*பழமுதிர்ச்சோலை:*
மலைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று.

பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெயருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.

இவ்விடத்திற்கு மாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ் சோலை, அழகர் மலை என்ற பெயர்களும் வழங்கப் படுவதுண்டு.

*மாலும்-முருகனும்:*
பெருமாளும் அழகியவர், முருகன் என்றாலும் அழகுடையவன் என்றே பொருள்.

சுந்தரராஜன் என்றாலும் அழகுடைய பெருமாளைக் குறிக்கும்.

மிகப்பழமையான திருத்தலங்களில் அழகர் கோயிலும் ஒன்று.

திருமுருகாற்றுப் படையைத் தவிர, இதர சங்க இலக்கியங்களில், அழகர் கோயில் சிறந்த விஷ்ணுத் தலமாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மலையடிவாரத்தில் புகழ்மிக்க விஷ்ணு ஆலயம் உள்ளது.

திருமலையைப் போன்ற இனிய தோற்றமுடையதாக இருப்பதால் திருப்பதி திருமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இம்மலையை வணங்கி விட்டுச் செல்வர்.

*முருகன் அடியார்கள்:*
திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை கூறியருள்கின்றது.

புராண வரலாறுகளிலும், இலக்கியங்களிலும், பழமுதிர்ச்சோலை தலம், முருகஸ்தலம் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளியம்மையைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார்கள்.

எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார்.

மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற *"நூபுர கங்கை"*என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

*சைவ வைணவ ஒற்றுமை:*
அழகர்கோயில் அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அழகர் கோயிலில் உள்ள மூலவருக்கு கள்ளழகர் என்பது திருநாமம். மலையலங்காரன் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விசேஷ நாளல்ல.

ஸ்ரீ முருகப் பெருமானுக்கு உகந்த வெள்ளிக்கிழமையே விசேஷ நாளாகும். அன்று பூவங்கி சாத்தப்படுகிறது. அன்று தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

தவிர பெரும்பாலும் அர்ச்சனைக்கு அரளி புஷ்பமே சாற்றப்படுகிறது. மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல் பக்தர்களுக்குத் துளசி வினியோகிப்பது கிடையாது.

இக்கோயிலில் உற்சவம் ரதோச்வ காலங்களில் வரும் பெரும்பாலான மக்களுக்கும் அர்ச்சனை செய்பவர்களுக்கும் விபூதிதான் கொடுத்து வருகிறார்கள்.

துளசி எப்போதும் கொடுப்பதில்லை.

கோயில் மூலஸ்தானத்திலேயே சோலை மலைக்குமரன் எனும் வெள்ளி விக்ரகம் இருந்து வருகிறது.

பஞ்சலோகத்தில் சக்கரத்தாழ்வார் மூலவரைப் போன்று உற்சவ விக்ரகமும் இருந்து வருகிறது.

இத்திருத்தலம் வைணவத் தலமாகவும், குமார தலமாகவும் விளங்கி சிவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

*முருகனின் திருவிளையாடல்:*
அறுபடை வீடு ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகுத் திருமுருகன், இத்திருத்தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒளவையாரை நாவற்பழத்தை உதிர்த்து தந்து, சில வினாக்களைக் கேட்டு, *"சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?"* என்று கேட்டு ஓளவையைத் திகைக்கச் செய்து திருவிளையாடல் புரிந்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

*பக்தர்கள் எழுப்பிய ஆலயம்:*
முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும் இடைப்பட்ட காலத்தில் பக்தர்களால் மலைக்கு இடையே கோயில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கோயில் கட்டப்பட்டுள்ள இடமே பழமுதிர்ச்சோலையாகும்.

இங்கே கோயில் கொண்டுள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என அழைக்கப்படுகிறார்.

இக்கோயில் அழகர் கோயில் மலையில் நூபுரகங்கை என்னும் சிலம்பாற்றுக்குச் செல்லும் வழியில் மலை மீது சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில் எழுப்பப் பட்டுள்ளது.

அழகர் கோயிலை அடைந்ததும் உயர்ந்த பசுமையான மலையும், குளிர்ச்சியான காற்றும் நம்மை கவர்ந்திழுக்கின்றன.

ஒரு புதுமையான, அமைதி தவழும் சூழ்நிலை நிலவுவது பழமுதிர்ச்சோலையின் சிறப்பம்சமாகும்.

இத்திருக்கோயில் அமைக்கப் பெற்றுள்ள இடத்தில் படிக்கட்டுகள் சீராக இல்லாததால் நடந்து மட்டுமே செல்லத்தக்க கரடு முரடான மலைப்பாதையில் மட்டுமே சென்று அடைய முடியும்.

*தீர்த்தச் சிறப்பு:*
அழகர் மலை மீதுள்ள நூபுர கங்கைக்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு.

திருமுருகன் திருக்கோயிலிலிருந்து மேலும் அரை கி.மீ. பாறைப்பாங்கான வழியே சென்றால் இத்தீர்த்தத்தை அடைய முடியும்.

சோலைமலையில் உள்ள சிலம்பாறு (நூபரகங்கை) திருமுருகன் பாதத்திலிருந்து தோன்றியதாக கர்ணபரம்பரை உண்டு.

இடப கிரியில் முருகக் கடவுளின் பாதத்திலிருந்து ஒரு நதியுண்டாகி இருக்கிறது.

அதற்கு நூபுர (சிலம்பு) கங்கை என்னும் பெயர் வழங்கப்படுகிறது.

இந்த தீர்த்தத்தில் இரும்புச் சத்தும், தாமிரச் சத்தும் மிகுந்திருப்பதால் இது பல நோய்களையும் குணப்படுத்த வல்லதாய் இருக்கிறது.

இத்தீர்த்தத்தின் உற்பத்தியிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

*விழாக்கள்:*
கந்த சஷ்டி விழா இங்கு முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

             சரவணா சரணம்!.

இத்துடன் அறுபடை வீடு தொடர் மகிழ்ந்து நிறைந்தது.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*🔔திருவிசைப்பா.🔔*
ஒன்பதின்பர்கள் அருளிய ஒன்பதாம் திருமுறை.
*(நான்காம் பாடல்.)*
-------------------------------------------------------------------
*பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ண்ய்என்*

*பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே!*

*கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்*

*மகள்உமை யவள்களை கண்ணே!*

*அருமையின் மறைநான் கோலமிட் டாற்றும்*

*அப்பனே அம்பலத்து அமுதே!*

*ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத்*

*தொண்டனேன் உரைக்குமாறு உரையே!*

🙏🏾பெருமையுடன் சிறுமையும் பெண்ணுடன் ஆணும் ஆகி நின்று,

எனது பிறப்பு இறப்பு என்னும் துன்பங்களை நீக்கி அருளிய பெருஞ்சோதியே!

கருநிறத்துடன் வெண்ணிற ஒளி பொருந்தியவனே,

கயல் மீன்போன்ற கண்களை உடையவளும், மலையரசன் மகளும், ஆகிய உமாதேவிக்குப் பற்றுக் கோடாக நிற்பவனே!

உன்னைக் காண்டற்கு அருமையினையுடைய நான்கு வேதங்களும் ஓலமிட்டுக் கூவுகின்ற தலைவனே!

பொன்னம்பலத்தே எழுந்தருளிய அமுதம் போன்றவனே!

நீ ஒருவனாகத் திகழ்ந்து பலபொருள்களிலும் ஊடுருவிக் கலந்து நின்ற உன்னைத்,

தொண்டனாகிய யான் புகழ்ந்து சொல்லும் வண்ணம் உரைத்தருள் புரிவாயாக!

திருச்சிற்றம்பலம்!.
திருச்சிற்றம்பலம்!!.
திருச்சிற்றம்பலம்!!!.
---------------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment