Thursday, December 14, 2017

Apatsahayeswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
---------------------------------------------------------------
*தல எண்: 167.*

*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*ஆபத்சகாயேஸ்வரர், திருஅன்னியூர், (பொன்னூர்).*
----------------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் இருபத்து இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:* ஆபத்சகாயேஸ்வரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீஸ்வரர், பாண்டதவேஸ்வரர், ரதீஸ்வரர்.

*இறைவி:*பிருகந்நாயகி, பெரியநாயகி.

*தல விருட்சம்:* எலுமிச்சை.

*தல தீர்த்தம்:* வர்ண தீர்த்தம், அக்னி தீர்த்தம்.

*ஆகமம்:* காமிக ஆகமம்.

*தேவாரம் பாடியவர்கள்:*
சம்பந்தர்-முதலாம் திருமுறையில் ஒரு பதிகம்.
அப்பர்- ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகம்.

*பெயர்க்காரணம்:*
தற்போது பொன்னூர் என்று இத்தலம் அழைக்கப்பெறுகிறது.

அக்னி தேவருக்கு அருள்பாலித்ததால் அக்னீஸ்வரர்.

பாண்டவருக்குக் காட்சி கொடுத்ததால் பாண்டதவேஸ்வரர்.

ரதி தேவிக்கு கருணை புரிந்ததால், ரதீஸ்வரர்.

*இருப்பிடம்:*
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து வடமேற்கே சுமார் எட்டு கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மாயவரத்திலிருந்து நமச்சிவாயபுரம் செல்லும் பேருந்தில் பொன்னூர் நிறுத்தம் இறங்கி இக்கோவிலை அடையலாம்.

மாயவரத்திலிருந்து பொன்னூர் மார்க்கமாகப் பாண்டூர் செல்லும் பேருந்திலும் இவ்வூரை அடையலாம்.

அனைத்து வசதிகளும் மாயவரம் மற்றும் நீடுரில் உள்ளன.

இவ்வூரில் தங்கும் விடுதி உள்ளதால் இங்கு தங்கியும் இறை தரிசனம் செய்யலாம்.

இத்தலத்திற்கு அருகில் ஐந்து கி.மி. தொலைவில் நீடூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் இருக்கிறது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,
பொன்னூர்,
பாண்டூர் அஞ்சல், (வழி) நீடூர்.
மயிலாடுதுறை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
PIN - 609 203

*ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன.

அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தெனகரைத் தலம்.

காவிரி வடகரைத் தலமான இத்தலம் திருஅன்னியூரை இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆரவாரமற்ற அமைதியான சூழலில் இந்த பொன்னூர் கிராமத்தில் வடகோடியில் எழிலுற அமைந்திருக்கிறது இச்சிவாலயம். 

கிழக்கு முகம் கொண்ட இச்சிவாலயம் சிறிய ஆலயமே.

இவ்வாலயத்திற்கு கோபுரம் இல்லை.

*கோவில் அமைப்பு:*
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருந்தது.

ஆலயத்தின் எதிரே இருந்த அக்னி தீர்த்த கரைக்கு வந்தோம்.

இந்த தீர்த்தத்தை காமசரஸ், சூரியபுஷ்கரணி, வருண தீர்த்தம் என்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள்.

கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் பாவங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள் என கேள்விப்பட்டிருந்தோம்.

தவிர, அரிச்சந்திரன், பாண்டவர், ரதிதேவி முதலியோர் இத்திருக்குளத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டு, தங்களின் பாவங்கள் கரைந்தொழியப் பெற்றிருக்கிறார்கள்.

நாமும், குளத்துத் தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு ஆலய வாயிலுக்கு தன் திரும்பினோம்.

கோவிலின்  முகப்பைக் கடந்தவுடன் விசாலமான பிரகாரத்தை முதலில் காணப்பெற்றோம்.

அங்கேயிருக்கும் தனிமண்டபத்தில்  நந்தியம்பெருமானைக் கண்டு வணங்கிக் கொண்டோம். ஆலயத் தொழுகை செய்யும் அனுமதி விண்ணப்பம் செய்து நகர்ந்தோம்.

அடுத்திருந்த பலி பீடத்தருகாக நின்று, நம் ஆணவமலம் ஒழிய வேண்டி பிரார்த்தித்துக் கொண்டோம்.

பலிபீடத்தைக் கடந்ததும் மகா மண்டபத்தில் நாம் நுழைந்தோம்.

இந்த மண்டபத்தின் வலது புறத்தில் இறைவி ப்ருஹந்நாயகியின் சன்னிதி இருந்தது.

இறைவியின் சந்நிதிக்கு முன்பும் நந்தியும் பலிபீடமிருக்க, நெஞ்சுக்க நேராக குவித்து வணங்கிய கரங்களோடு நகர்ந்தோம்.

கருவறையின் நுழைவாசலுக்கருகே வந்தபோது, வலப்புறத்தில் 
இருக்க, வணங்கியபடி மே நகர்ந்தோம்.

அம்பாளை வணங்கிக் கொள்ள ஆர்வமாய் அம்பாள் முன் பணிந்து வணங்கி நின்றோம்.

இறைவி நான்கு கரங் களுடன் நின்ற கோலத்தில் புன்னகைத் தவழ, தென்முகம் நோக்கி அருள்பாலித்து காட்சியாய் அருளினாள்.

மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

மகாமண்டபத்தின் தென்புறத்தில் நால்வர் திருமேனிகளும், கிழக்கே சனீஸ்வரன், நாகர், சூரியன், பைரவர் திருமேனிகளும் இருக்க, ஒவ்வொருவரையும் வணங்கித் தொடர்ந்தோம்.

அடுத்து, இறைவன் சந்நிதிக்கு வந்தோம்.

அர்த்த மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் கொலுவிருக்க, கைகள் உயர்த்தி தொழுது வணங்கிக் தொடர்ந்தோம்.

கருவறை நுழைவு வாயிலின் இடது புறத்தில், விநாயகர் இருக்க குனிந்து பணிந்தேழுந்து வணங்கிக் கொண்டோம்.

அடுத்து கருவறையில் நம் இறைவன் லிங்கத் திருமேனியில், சுயம்பு லிங்கமாய் கீழ் திசை நோக்கி அருளிய வண்ணமிருந்தார்.

கண்குளிர இறைவனை தரிசித்து வணங்கி, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை நெற்றிக்கு திரித்துத் தரித்துக் கொண்டோம்.

*சூரிய பூஜை:*
மயனின் மகளை சூரியன் மணந்து கொண்டிருந்தான்.

தன் மகளை இழிவுபடுத்தியதால், மயன் சூரியனின் கையை வெட்டினான்.

கை வெட்டுண்ட சூரியனைப் பார்த்து அவனது மனைவி கதறினாள். கண்ணீர் விட்டாள்.

தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் சென்று முறையிட்டாள்.

இழந்த தன் கணவனின் கையை மீண்டும் பெறுவதற்கு வழி கூறுமாறு மன்றாடினாள்.

அவரோ, பூலோகத்தில் இருக்கும் திருஅன்னியூர் சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி அத்தலத்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் இழந்த கையை சூரியன் மீண்டும் பெறலாம் எனக் கூறினார்.

அதன்படி, சூரியனும், அவர் மனைவியும் திருஅன்னியூர் வந்தனர்.

ஆலயத்தின் எதிரே உள்ள தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டனர்.

சூரியன் தனது கையை மீண்டும் உருவாகப் பெற்றார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரியன் ஆண்டுதோறும், பங்குனி மாதம் இருபத்து ஆறாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை ஐந்து நாட்களும் தனது பொற்கதிர்களால் இறைவனை ஆராதித்துத் தொழுகிறான்.

காலை ஆறு மணி அளவில் இத்தலத்து இறைவனை சூரியன் வழிபடும் காட்சியைக் காண பக்தர்கள் கூடுவார்கள்.

இதனால் அந்த ஐந்து நாட்களும் காலை 4.30 மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு விடுகிறார்கள்.

இறைவனுக்கும் இறைவிக்கும் காலை நேர ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

பின்பு காலை ஆறு மணிக்கு சூரியன் இறைவனை தன் குளுமையான பொற்கதிர்களால் பூஜை செய்யும் காட்சி தொடங்குகிறது.

இந்த அற்புதமான சூரிய பூஜையை, ஏராளமான பக்தர்கள் தரிசித்து பரவசம் அடைவது இன்றும் கண்கூடாகக் காணும் காட்சியாகும்.

*பரிகார தெய்வங்கள்:*
மேற்குப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

வடக்குப் பிரகாரத்தில்
சண்டிகேசவர் சன்னிதியும் தலவிருட்சமான எலுமிச்சை மரமும் உள்ளது.

வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.

இறைவனின் தேவக் கோட்டத்தின் தென்புறம் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஆதி தட்சிணாமூர்த்தி திரு மேனிகளும், மேற்கு திசையில் லிங்கோத்பவரும், வடக்குத் திசையில் துர்க்கையம்மனும் அருள்பாலிக்கின்றனர்.

தினசரி காலை, சாயரட்சை, அர்த்த சாம பூஜை என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.

பிரதோஷம், ஆண்டு பிறப்பு, திருவாதிரை, பொங்கல், தீபாவளி, கார்த்திகை ஞாயிறு ஆகிய நாட்களில் இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இத்தலத்து இறைவி பெரியநாயகி. பெண்களின் மனம் கவர்ந்த நாயகி. பெண்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் நிகரற்றவள் என பக்தர்கள் கூறுக் கேட்டோம்.

குழந்தை இல்லாத பெண்கள் இத்தலத்து இறைவியிடம் வந்து மனமுருக வேண்டி, ஆராதனை வழிபாடு செய்துவிட்டு செல்கின்றனர்.

அடுத்த ஆண்டே அவர்களுக்கு குழந்தைபேறு கிட்டியது என பிரார்த்தித்த பக்தர் கூறக் கேட்டோம்.

தங்களது குழந்தைகளுடன், மீண்டும் வரும் பெண்கள், இறைவிக்கு கைநிறைய வளையல்களைக் கொண்டு வந்து, அதை இறைவிக்கு அணிவித்து நன்றி தெரிவித்து வழிபட்டு திரும்பிச் செல்கின்றனர்.

அவர்கள் மனமும் மகிழ்வில் நிறைந்திருந்தது என்பதை, அவர்களின் முகத்தில் பார்க்க நேர்ந்தது..

*தல பெருமை:*
கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயிலும் அதன் முகப்பு வாயிலின் மேலே அழகிய சுதைச் சிற்பங்கள் இருக்கின்றன.

ரதிதேவி தனது கணவன் மன்மதனை மீட்க இத்தலத்தில் விளங்கும் ஆபத்சகாயரை பிரார்த்திக்கின்றாள்.

அவளுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்த ஈசன், ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார்.

*சிறப்பு:*
தட்சன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட அக்னிதேவன் தனது சாபம் தீர ஈசனை பல தலங்களில் வழிபட்டான்.

அதில் திரு அன்னியூர் தலமும் ஒன்றாகும்.

இத்தலத்தில் தன் பெயரில் தீர்த்தம் உண்டாக்கி ஈசனை இங்கு வழிபட்டுள்ளான்.

இத்தீர்த்தமே அக்னி தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்திற்கு வெளியே நுழைவாயிலுக்கு எதிரே அமைந்திருக்கிறது.

தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற ஹரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி, இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து, ஆபத்சகாயரை வணங்கி, வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார்.

இத்தலத்தில் வருணன் மற்றும் பாண்டவர்கள் ஐவரும் பூஜித்து, பெரும் பேறு பெற்றுள்ளனர்.

சூரியனும், இத்தல  ஈசனைத் தழுவியொழுகி வணங்குவதால்,  இத்தலம் *பாஸ்கர ஷேத்ரம்* என்றும் அழைக்கப்படுகிறது.

வைகாசி விசாகத்தில் இத்தலத்தில் நீராடி, ஸ்வாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, தயிர் சாதம் நிவேதித்து, வழிபடுவோரது பெரும் ஆபத்துகள் நீங்கும் என்பது இத்தலத்தின் பிரார்த்தனையாக அனுசரிக்கப்படுகிறது.

சிவாலயங்களில் காலைசந்தி எனப்படும் காலை நேர ஆராதனை, காலை ஆறு மணியளவில் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் பொன்னூரில் விடியற்காலை 4.30 மணிக்கே காலை பூஜைகள் நடைபெறுகிறது.

அக்னி தேவருக்கு அருள்பாலித்ததால் 'அக்னீசுவரர்' என்றும், பாண்டவருக்கு காட்சி கொடுத்ததால் 'பாண்டவேசுவரர்' என்றும், ரதிதேவிக்கு கருணை புரிந்ததால் 'ரதீசுவரர்' என்றும் பல்வேறு பெயர்களால் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்.

*தேவாரம்:*
1.🔔பாற லைத்த படுவெண் தலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடையன்னி யூரனே.

🙏🏾பருந்துகள் அலைக்கும் வெள்ளிய மண்டை ஓட்டைக் கையிற் கொண்டவனும் , திருநீறு பூசிய சிவந்த மேனியனும் , உமையம்மை ஒரு கூறுகொண்ட மெய்யனும் , அரவு ஆட்டி ஆறலைக் குஞ்சடையனும் அன்னியூர்த்தலத்து இறைவனே .

2.🔔பண்டொத் தமொழி யாளையொர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தானன்னி யூரனே.

🙏🏾பண் பொருந்திய இனியமொழியுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனும் , இண்டையணிந்த சடையனும் , இருளார்கண்டனும் , யானைத்தோல் உரித்துப் போர்த்தவனும் , அண்டங்களுக்கு அப்புறத்தில் உள்ளவனும் அன்னியூர்த் தலத்து இறைவனே .

3.🔔பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போலன்னி யூரரே.

🙏🏾நாள்தோறும் வாழ்த்தி வணங்குவோரது வல் வினைகளைத் துரக்கும்படி நீக்குபவரும் , தம்மிடப்பாகத்தில் குரவு நறு மணம் வீசும் குழல் உமையைக் கூறாகவுடையவரும் , அரவம் ஆட்டுபவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே .

4.🔔வேத கீதர்விண் ணோர்க்கு முயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்தமக்
காதி யாகிநின் றாரன்னி யூரரே.

🙏🏾வேதங்களை இசையோடு ஓதுவோரும் , விண்ணோர்க்கும் உயர்ந்தவரும் , ஒளிவெண்பிறை பொருந்திய சடையுடைய தலைவரும் , நீதியினால் தம் அடியார்களுக்கெல்லாம் ஆதியாகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே .

5.🔔எம்பி ரானிமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி யிருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றாரன்னி யூரரே.

🙏🏾தேவர்களுக்கெல்லாம் இன்பம் செய்வோராகிய எம் ஈசனாரும் , எம் தலைவரும் , துன்பஞ்செய்யும் வல்வினை போதற்காகத் தொழும் அன்பர்களுக்கு அன்பராகி நின்றவரும் அன்னி யூர்த்தலத்து இறைவரே .

6.🔔வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீரன்னி யூரரே.

🙏🏾வெந்த திருநீறு மெய்யின்கண் பூசிய நலம் வாய்ந்த வரும் , நறுமலர் சூடும் கருத்தினராகிய அன்பர் சிந்தைகளில் நிறைந்த சிவனாரும் , சிவந்த தீயின் வண்ணம் உடையவரும் , அழகிய தண்ணளி உடையவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே , காண்பீராக .

7.🔔ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையொர் பாகமா
ஆனை யீருரி யாரன்னி யூரரே.

🙏🏾தசை பொருந்தியிருந்த வெண்டலையிற் பலி கொண்டு திரியும் பெருமான் வானவர் வணங்குமாறு , உமாதேவி யாரை ஒரு பாகமாகக்கொண்டு ஆனைத்தோல் போர்த்தவர் அன்னி யூர்த்தலத்து இறைவரே .

8.🔔காலை போய்ப்பலி தேர்வர்கண் ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழறத் தாரன்னி யூரரே.

🙏🏾நெற்றிக்கண் உடையவரும் , காலையே போய்ப் பலி ஏற்பவரும் , வானவர்களும் விரும்புகின்ற சோலை சூழ் புறங்காட்டினை அரங்காகக் கொண்டவரும் , ஆலின்கீழ் அறத்தை நான்கு முனிவர்களுக்கு உரைத்தவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே .

9.🔔எரிகொள் மேனிய ரென்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றாரன்னி யூரரே.

🙏🏾தீவண்ண மேனியரும் , எலும்பணிந்து இன்புறு வாரும் , திரிந்துவந்து தொல்லைகள் புரிந்த மூவெயில்களைத் தீயெழச் சினந்தவரும் , மாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவரும் அன்னி யூர்த்தலத்து இறைவரே .

10.🔔வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென் றாரன்னி யூரரே.

🙏🏾வஞ்சனை பொருந்திய இராவணனின் இருபது கைகளும் தலைகளொடு இறும்படியாகப் பஞ்சின் மெல் விரலால் அடர்த்தபோது உமையம்மை அஞ்ச , ` ஆயிழையே ! அஞ்சல் ! அஞ்சல் !` என்று அருளியவர் அன்னியூர்த்தலத்து இறைவரே .

      திருச்சிற்றம்பலம்.

*சம்பந்தர் தேவாரம்:*
1.🔔மன்னி யூரிறை சென்னி யார்பிறை
அன்னி யூரமர் மன்னு சோதியே.

🙏🏾திருஅன்னியூரில் எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன், பிறை சூடிய திருமுடியோடு பல தலங்களிலும் எழுந்தருளியிருந்து, ஆங்காங்குள்ள மக்கட்குத் தலைவனாய் விளங்குபவன்.

2.🔔பழகுந் தொண்டர்வம் அழக னன்னியூர்க்
குழகன் சேவடி தொழுது வாழ்மினே.

🙏🏾இறைவன்பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள். அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின் செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.

3.🔔நீதி பேணுவீர் ஆதி யன்னியூர்ச்
சோதி நாமமே ஓதி யுய்ம்மினே.

🙏🏾நீதியைப் போற்றி அதன்படி வாழ்கின்றவர்களே, அன்னியூரில் விளங்கும் ஒளி வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதிஉய்வீர்களாக.

4.🔔பத்த ராயினீர் அத்த ரன்னியூர்ச்
சித்தர் தாள் தொழ முத்த ராவரே.

🙏🏾இறைவனிடம் பத்திமை பூண்டவர்களே, தலைமை யாளனாய் அன்னியூரில் விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுகளிலிருந்து விடுபட்டவராவீர்.

5.🔔நிறைவு வேண்டுவீர் அறவ னன்னியூர்
மறையு ளான்கழற் குறவு செய்ம்மினே.

🙏🏾மனநிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே, அற வடிவினனாய் நான்கு வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக.

6.🔔இன்பம் வேண்டுவீர் அன்ப னன்னியூர்
நன்பொ னென்னுமின் உம்பராகவே.

🙏🏾உலக வாழ்க்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே, அன்பனாக விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறுமின், தேவர்களாகலாம்.

7.🔔அந்த ணாளர்தம் தந்தை யன்னியூர்
எந்தை யேயெனப் பந்த நீங்குமே.

🙏🏾அந்தணர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க மல மாயைகள் நீங்கும்.

8.🔔தூர்த்த னைச்செற்ற தீர்த்த னன்னியூர்
ஆத்த மாவடைந் தேத்தி வாழ்மினே.

🙏🏾காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனித னாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.

9.🔔இருவர் நாடிய அரவ னன்னியூர்
பரவு வார்விண்ணுக் கொருவ ராவரே.

🙏🏾திருமால் பிரமர்களால் அடிமுடி தேடப்பட்ட அரவை அணிகலனாகப் பூண்ட அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவருலகில் இந்திரராவர்.

10.🔔குண்டர் தேரருக்கு அண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை விண்டு போகுமே.

🙏🏾சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.

11.🔔பூந்த ராய்ப்பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்த னன்னியூர் சேர்ந்து வாழ்மினே.

🙏🏾பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக.

       திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
நடராஜருக்குண்டான அபிஷேகங்கள்,
நவராத்திரி,
ஐப்பசியில் அன்னாபிஷேகம்,
கார்த்திகை தீபம்,
தனுர்மாத வழிபாடுகள், 
சங்கராந்தி.

*தொடர்புக்கு:*
வி..ரவிகுருக்கள்.
04364- 250 755
04364- 250758.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள தலங்களின் நாளைய தலப்பதிவு *மணவாளேஸ்வரர், திருவேள்விகுடி.*

---------------------------------------------------------------
*🔔திருவிசைப்பா🔔*
*ஒன்பதாம் திருமுறை.*
(மூன்றாம் பாடல்.)
----------------------------------------------------------------
*தற்பெரும் பொருளே! சசிகண்ட! சிகண்டா!*

*சாமகண்டா! அண்ட வாணா!*

*நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை*

*என்னுடைய நாவினால் நவில்வான்*

*அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்*

*தந்தபொன் அம்பலத்து ஆடி!*

*கற்பகமாய் உலகாய் அல்லையா கையைத்*

*தொண்டனேன் கருதுமா கருதே!*

🙏🏾ஆன்மாவிற்கும் உயர்வான கடவுளே!

பிறைச் சந்திரனைத் தரித்த திருமுடியை உடையவனே!

நீலகண்டனே!

சிதாகாயத்தில் உறைபவனே!

நன்மையைத் தரதக்க பெரிய பொருளோடு கூடிய சொற்களைக் கலந்து உன்னை என்னுடைய நாவினால் துதிக்கும் பொருட்டு எளியவனாகிய எனது உள்ளத்தில் முடிவு இல்லாத உன்னை இருக்கும்படி கொடுத்தருளிய  பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடுபவனே!

ஊழிக்காலமாயும் எல்லா உலகங்களையும் அவற்றின் வேறாகியும் இருக்கின்ற உன்னைத் தொண்டனாகிய யான் நினைக்கும் வண்ணம் நினைந்தருள் புரிவாயாக.

           திருச்சிற்றம்பலம்.
           திருச்சிற்றம்பலம்..
           திருச்சிற்றம்பலம்...
---------------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment