உ
சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
_______________________________________
*134"
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*🍁 வெள்ளிமலைநாதர் கோவில், திருதெங்கூர்.*🍁
______________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்று பதினாறாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* வெள்ளிமலைநாதர்,
ரஜதகீரிஸ்வரர்.
*இறைவி:* பெரியநாயகி.
*திருமேனி:* சுயம்புவானத் திருவுரு.
*தல விருட்சம்:* தென்னை.
*தல தீர்த்தம்:* சிவகங்கை.
*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*பதிகம்:*
திருஞானசம்பந்தர்.
*புராணப்பெயர்கள்:* திருத்தேங்கூர், திருத்தெங்கூர்.
*ஊர்:* திருத்தங்கூர்.
*இருப்பிடம்:*
கரூரில் இருந்து பதினைந்து கி.மி. தொலைவிலும், திருவாரூர் திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து, அங்கிருந்து மேற்காக திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி திருநெல்லிக்காவல்சென்று அதே சாலையில் மேலும் இரண்டு கி.மி. சென்றால் *திருதெங்கூர்* தலத்தை அடையலாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு
வெள்ளிமலைநாதர் திருக்கோவில்,
திருத்தங்கூர்,
திருநெல்லிக்காவல் அஞ்சல்,
திருத்துறைப்பூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்,
PIN - 610 205
*ஆலயத் திறப்பு காலம்:* தினந்தோறும் காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
இத்தலத்தின் ஆலயத்தை நோக்கி செல்கையில் இராஜகோபுரமில்லை என்பதை தெரிந்து கொண்டோம்.
"சிவ சிவ" என மொழிந்து கொண்டே தொடர்ந்தோம்.
ஆலயித்தின் முன்பு ஒரு நுழைவு வாயில் மட்டுமே இருக்க உள் புகுந்தோம்.
உள்ளே நுழைந்தவுடன் பலிபீடத்தைக் கண்டு வணங்கி ஆணவமலமொழிய பிரார்த்தித்துக் கொண்டோம்.
அடுத்திருந்த நந்தியின் அருகாக நின்று வணங்கிக் கொண்டு, ஈசனைத் தரிசிக்க அனுமதி வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
கொடிமரம் இல்லை. கொடிமரத்திற்கு பதிலாக கொடிமர விநாயகர் இருந்தார்.
எப்படியோ, விநாயகர் தானே!' விடுவோமா? படீரென காதைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது கொண்டோம்.
இத்தலத்திற்கு இரண்டு பிரகாரங்கள் உள்ளன என்பதை தெரிந்தோம்.
ஆனால், இவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லாது வெறுமனே காட்சியாயிருந்தது.
வெளிப் பிரகாரம் முழுவதும் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து அதனால் பிரகாரம் சுற்றி வர முடியாமல் சூழ்நிலையில் காணப்படுகிறது. (நாங்கள் சென்றிருந்த சமயம், இப்போது எப்படியோ தெரியவில்லை.)
வலதுபுறம் அம்பாள் பெரியநாயகி சந்நிதி தனிக்கோயிலாக இருக்க மனமுருகப் பிரார்த்தனை செய்து அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
அடுத்திருந்த உள்வாயிலைத் தாண்டிச் சென்றோம், நேரே மூலவர் சந்நிதி தரிசனம் தெரிய நேராக அவ்விடம் அகழ்ந்தோடிச் சென்றோம்.
அங்கே, கருவறை வாயிலிலுள்ள துவாரபாலகர்களையும், வணங்கி உள்நுழைய அனுமதிக்க வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
மேலும் இருபுறமும் இருந்த விநாயகரையும் கைதொழுது நகர்ந்து உள் நுழைந்தோம்.
கண்குளிர ஈசனின் தரிசனத்தைக் கண்ட பிறகு, மனம் இலவாக இருந்தது.
கிழக்குப் பார்த்த திசையுடன் உயர்ந்த நாணத்துடன் அழகருளுடன் காட்சியருளினார்.
ஆராத்தியை தரிசித்து வணங்கிக் கொண்டோம். ஈசனின் பிரசாதம் வெள்ளிய விபூதியை பெற்று நெற்றிக்கு திரித்துத் தரித்துக் கொண்டு வெளி வந்தோம்.
உட்பிரகாரத்தில் வலம் செல்கையில் சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் வழிபட்ட லிங்கங்கள், நவக்கிரக சந்நிதி முதலியவற்றைத் தொடர்ச்சியாகக் கண்டு வணங்கி நகர்ந்தோம்.
இப்பிரகாரத்திலே ஆடவல்லானின் திருச்சபை இருந்தது. தூக்கிய திருவடியை அழகுறக் கண்டு மகிழ்ந்தோம். வணங்கினோம்.
எவ்விடம் நகர்ந்து செல்கையிலும், ஆடவல்லானின் அவர் திருவடி நிழலுருவம் நம் கண்களை விட்டு நீங்கவில்லை.
எவையோரை வணங்கினாலும் அதோடு அவனுருவமும் அதில் சேர்ந்தே லயித்திருக்க, மனத்தில் ஒன்றாகவே இருத்தி தொழுது கொண்டோம்.
பைரவர், சூரியன் ஆகியோருக்கும் சந்நிதிகளுக்கும் சென்று வணங்கித் திரும்பினோம்.
கருவறை சுற்றுப் பிரகாரத்தில் இரண்டு சந்நிதிகள் முக்கியமானவை என்று அங்கிருந்தோர் கூறக் கேட்டிருந்தோம்.
அவற்றில் முதலாவதான மகாலட்சுமியின் சந்நிதிக்கு வந்து வணங்கிப் பணிந்து பிரார்த்தித்தோம்.
இத்தலம் வந்து மகாலட்சுமி சிவபூஜை செய்த தலமாதலால் இச்சந்நிதி முக்கியமானதாம்.
அடுத்தது வடக்குப் பிரகாரத்தில் அமைந்திருந்த நவக்கிரகங்கள் அனைவரும் ஸ்தாபித்த சிவலிங்கங்களைக் கண்டோம்.
அனைத்து லிங்கங்களையும் ஒவ்வொன்றாகத் தொழுது வணங்கி கொண்டோம்.
ஒவ்வொரு லிங்கமும் ஒவ்வொரு வித அளவுகளில் காட்சியாக அருளின. அந்தந்த நவக்கிரகங்கள் ஸ்தாபித்த பெயர்களாலேயே வழங்கப்படும் ஒன்பது சிவலிங்கங்களையும் தரிசித்தோம். இதனால், நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் என்று அருகிருந்தோர் கூறினர்.
*தல பெருமை:*
இந்த திருத்தங்கூர் திருத்தலத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சூரிய உதயத்தில் சூரியனின் கிரணங்கள் இறைவனின் திருமேனியில் படர்ந்து ஒளியபிஷேகம் செய்கிறான்.
இந்த சூரிய பூஜையை சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடி சிறப்பிக்கிறார்களாம்.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் தெங்கூரில் வெள்ளியங்குன்றில் அமர்ந்த இறைவர் என்று இத்தலத்து இறைவனை குறிப்பிடுகிறார்.
*தல அருமை:*
ஒரு சமயம் உலகம் முழுக்க பிரளயம் எழும்பி கடல்நீர் பூவுலகம் முழுவதையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.
இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி, சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள்.
சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார்.
அதன்படி உலகம் முழுக்க கடல் நீரால் சூழப்பட்டிருந்த போதும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் இத்தலம் *திருத்தேங்கூர்* என்று பெயர் பெற்றது.
உமாதேவியின் விருப்பப்படி பிரளயத்தில் மூழ்காமல் இருந்த இத்தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மகாலட்சுமி, இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினாள்.
திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தலத்திற்கு *திருத்தங்கூர்*என்ற பெயரும் உண்டானது.
உமையம்மைக்கு விருப்பமான தலம் என்பதையும், திருமகள் வந்து சிவபூஜை செய்த தலம் என்பதையும் தெரிந்து கொண்ட நவக்கிரகங்களும், இத்தலத்திற்கு வந்து தத்தம் பெயரால் ஆளுக்கொன்று சிவலிங்கத்தை நிறுவி பூஜித்து பலனைப் பெற்றார்கள்.
தென்னை மரங்கள் வளம் அதிகம் பெற்ற ஊராதலின் *"தெங்கூர்"* என்றும் இத்தலத்திற்கு பெயர் வந்தது என்றும் கூறுகிறார்கள்.
அதற்கேற்ப தென்னை மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.
*சிவகங்கை தீர்த்தம்:*
மானிடர்கள், கங்கை நதியில் நீராடுபவர்களின் பாவங்களைச் சுமந்து வாடிய கங்கை, அந்த பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்ள பூலோகத்தில் உள்ள பல தீர்த்தங்களில் மூழ்கி சிவபூஜை செய்து வந்தாள்.
அப்படியும் கங்கையின் பாவம் முழுவதும் போய் விடவில்லை. இந்த நிலையில் இத்தலமான திருத்தேங்கூரின் சிறப்பைப் பற்றி அறிந்தாள்.
சிவபெருமானின் சடையை அலங்கரிக்கும் கங்காதேவி, திருத்தங்கூர் வந்து கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி நாற்பத்தெட்டு நாட்கள் செந்தாமரை மலர்களால் சிவனுக்கு பூஜை செய்தாள்.
கங்கைக்கு காட்சி தந்த ஈசன் அவள் பாவங்களை எல்லாம் போக்கினார். மேலும் அவள் உருவாக்கிய தீர்த்தத்திற்கு *சிவகங்கை தீர்த்தம்* எனப் பெயரிட்டு அதில் நீக்கமற எப்போதும் நிறைந்திருக்க அருளாசி புரிந்தார்.
*தேவாரம்:*
திருஞானசம்பந்தர்.
🔔புரைசெய் வல்வினை தீர்க்கும்
புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை
உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய் தாரழ லூட்டி
யுழல்பவ ரிடுபலிக் கெழில்சேர்
விரைசெய் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
🙏🏾மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்று எனப்பெறும் கோயிலில் அமர்ந்த இறைவர் துன்பம் தரும் வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர். விண்ணவர் போற்றக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர். முப்புரம் எரித்தவர். இடுபலிக்கு உழல்பவர்.
🔔சித்தந் தன்னடி நினைவார்
செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் றாழ்சடை முடிமேற்
கோளெயிற் றரவொடு பிறையன்
பத்தர் தாம்பணிந் தேத்தும்
பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
🙏🏾தாழ்ந்த பொழில் சூழ்ந்து விளங்கும் தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், மனம் ஒன்றி நினைக்கும் அடியவர்களின் கொடுவினைகளைத் தீர்ப்பவர். கொத்தாக விளங்கும் சடைமுடிமேல் அரவோடு பிறையைச் சூடியவர். பக்தர்கள் பணிந்தேத்தும் பரம்பரர். நீரில் பதித்த விதை போன்றவர்.
🔔அடையும் வல்வினை யகல
அருள்பவ ரனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர்
பைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித்
தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
🙏🏾அழகுமிக்க தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் பெருமானார், நம்மை அடையும் வலிய வினைகளைத் தீர்ப்பவர். அனல்போன்ற மழுப்படையை உடையவர். புலித்தோல் உடுத்தவர். கொன்றையணிந்த சடைமேல் பிறைசூடி மணி கட்டிய விடைமீது வருபவர்.
🔔பண்டு நான்செய்த வினைகள்
பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக்
குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமல ரூதி
மதுவுண விதழ்மறி வெய்தி
விண்ட வார்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
🙏🏾மது உண்ண வந்த வண்டுகளால் விரிந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் இறைவர், முற்பிறவிகளில் நான்செய்த பழவினைகளைத் தீர்த்து நல்நெறியையும் அருளையும் தருபவர். வானத்து இளம்பிறையைச் சூடியவர். கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலமணி போன்ற கண்டம் உடையவர்.
🔔சுழித்த வார்புனற் கங்கை
சூடியொர் காலனைக் காலால்
தெழித்து வானவர் நடுங்கச்
செற்றவர் சிறையணி பறவை
கழித்த வெண்டலை யேந்திக்
காமன துடல்பொடி யாக
விழித்த வர்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
🙏🏾திருத்தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்த இறைவர் கங்கையை முடிமிசைச் சூடி வானவர் நடுங்கக் காலனைக் காலால் செற்றவர். அன்னப் பறவையாய் வடிவெடுத்த பிரமனது தலை யோட்டைக் கையில் தரித்தவர். காமனின் உடல் பொடியாகுமாறு விழித்தவர்.
🔔தொல்லை வல்வினை தீர்ப்பார்
சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி சூடிநின் றாடும்
இறையவ ரிமையவ ரேத்தச்
சில்லை மால்விடை யேறித்
திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
🙏🏾திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், பழவினை தீர்ப்பவர். சுடலைப் பொடி பூசியவர். திங்களை முடியில்சூடி நின்று ஆடுபவர். இமையவர் ஏத்த விடை மீது ஏறிச் சென்று திரிபுரம் எரித்த வில்லினர்.
🔔நெறிகொள் சிந்தைய ராகி
நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொண் மேனிமுக் கண்ணர்
முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளர வணிந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
🙏🏾வெண்ணீறணிந்தவராய் மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றில் எழுந்தருளிய இறைவர், நெறியான மனம் உடையவராய் நினைபவர் வினைகளைத் தீர்ப்பவர். தளிர்போலும் திருமேனியையும் மூன்று கண்களையும் உடையவர். பிறைகண்டு அஞ்சுமாறு சடைமிசைப் பாம்பைச் சூடிய புண்ணியர்.
🔔எண்ணி லாவிறல் அரக்கன்
எழில்திகழ் மால்வரை யெடுக்கக்
கண்ணெ லாம்பொடிந் தலறக்
கால்விர லூன்றிய கருத்தர்
தண்ணு லாம்புனற் கண்ணி
தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணு லாம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
🙏🏾விண்ணளாவிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் விளங்கும் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், அளவற்ற ஆற்றல் படைத்த இராவணன் கயிலை மலையை எடுக்க முற்பட்டபோது அவன் கண்களெல்லாம் பொடியாய், அவன் அலறி விழுமாறு கால் விரலால் ஊன்றிய தலைவர். தண்ணிய கங்கையாகிய கண்ணியைச் சூடியவர்.
🔔தேடித் தானயன் மாலுந்
திருமுடி யடியிணை காணார்
பாடத் தான்பல பூதப்
படையினர் சுடலையிற் பலகால்
ஆடத் தான்மிக வல்லர்
அருச்சுனற் கருள்செயக் கருதும்
வேடத் தார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
🙏🏾திருத்தெங்கூரில், அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியையும் தேடிக் காணப்பெறாதவர். பூதப் படைகள் பாடச் சுடலையில் பலகாலும் ஆடும் இயல்பினர். அருச்சுனனுக்கு அருள் செய்யும் வேடத்தினர்.
🔔சடங்கொள் சீவரப் போர்வைச்
சாக்கியர் சமணர்சொற் றவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும்
ஏத்துமி னிருமருப் பொருகைக்
கடங்கொண் மால்களிற் றுரியர்
கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
🙏🏾திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த பெருமான் உடலிற்போர்த்திய சீவரப் போர்வையை உடைய சாக்கியர் சமணர் சொற்களை வெறுத்துச் சைவ நெறிசார்வோரின் வல்வினைகளைத் தீர்த்தருள் புரிபவர். இருமருப்புக்களையும் ஒருகையையும் உடைய யானையின் தோலைப் போர்த்தியவர். கடல் கடைந்த போதெழுந்த விடம் பொருந்திய கண்டத்தினர்.
🔔வெந்த நீற்றினர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
கந்த மார்பொழில் சூழ்ந்த
காழியுண் ஞானசம் பந்தன்
சந்த மாயின பாடல்
தண்டமிழ் பத்தும்வல் லார்மேல்
பந்த மாயின பாவம்
பாறுதல் தேறுதல் பயனே.
🙏🏾வெந்த வெண்ணீறணிந்த தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்த இறைவரை மணம் பொருந்திய பொழில் சூழ்ந்த காழி ஞானசம்பந்தன் பாடிய சந்தப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மேல் பந்தமாக அமைந்த பாவங்கள் நீங்கும். அவர்கள் தெளிவு பெறுதல் வந்துறும் பயனாகும்.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
வைகாசி விசாகத்தன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
*தொடர்புக்கு:*
91 4369 237 454
94443 54461
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *நெல்லிவனநாதேசுவரர் திருக்கோயில், திருநெல்லிக்கா.*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment