உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
---------------------------------------------------------------
*138*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*நடுத்தறியப்பர் கோவில், கோவில் திருகன்றாப்பூர்.*
-----------------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்று இருபதாவது தலமாகப் போற்றப் படுகிறது.
திருகன்றாப்பூர் என்றும் ஊரை (கோயில் கண்ணாப்பூர் என்று வழங்கப்பட்டு வருகிறது).
*இறைவன்:*
நடுத்தறியப்பர், நடுத்தறிநாதர்,
*இறைவி:*
மாதுமை நாயகி.
*தல விருட்சம்:* கல்பனை மரம்.
*தல தீர்த்தம்:* சிவகங்கை தீர்த்தம், கங்காமிர்தம், ஞானாமிர்தம், ஞானகூப தீர்த்தம்.
*புராணப்பெயர்கள்:*
திருகன்றாப்பூர்.
*ஊர்:* கோயில் கண்ணாப்பூர்.
*பதிகம்:* திருநாவுக்கரசர்.
*இருப்பிடம்:*
திருவாரூரில் இருந்து பதினெட்டு கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்து உள்ளது.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு இடப்புறமாகப் பிரிந்து செல்லும் உள்சாலையில் ஒரு கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம்.
(கீழ கண்ணாப்பூர் என்ற ஒரு ஊரும் ஒன்றுள்ளது. இது பாடல் பெற்ற தலமன்று. எனவே *கோயில் கண்ணாப்பூர்* என்று கேட்க வேண்டும்).
திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் வழியில் கோயில் கண்ணாப்பூர் நிறுத்தத்தில் இறங்கியும் கோவிலுக்குச் செல்லலாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு நடுத்தறியப்பர் திருக்கோவில்,
கோயில் கண்ணாப்பூர்,
கோயில் கண்ணாப்பூர் அஞ்சல்,
வழி வலிவலம் S.O.
திருவாரூர் வட்டம்.
திருவாரூர் மாவட்டம்.
PIN - 610 202
*ஆலயத் திறப்பு காலம்:*
நாள்தோறும் காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
கிழக்கு நோக்கிய இக்கோவில் மூன்று நிலைகளையுடைய சிறிய இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறதைக் காணப்பெற்றதும், *சிவ சிவ* மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
இவ்வாலயத்தில் கொடிமரமில்லை.
பலிபீடத்தருகே வந்து, நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கி நகர்ந்தோம்.
நந்தி உயரமான பீடத்தில் இருக்க ஏறிட்டுப் பார்த்து வணங்கிக் கொண்டோம்..
உள் பிரகாரம் சுற்றி வரும்போது அங்கு தீர்த்த கிணறு ஒன்று இருக்கிறதை பார்த்து வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
விநாயகரை, அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கமும், விநாயக மூர்த்தங்கள் நான்கும், பிடாரியம்மன், சுப்பிரமணியர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், சனீஸ்வரன் சந்நிதிகள் இருக்க வணங்கிக் கொண்டோம்.
சனிபகவானை அடுத்து சம்பந்தர், அப்பர் இருவரும் காட்சி தர வணங்கிக் கொண்டோம்..
பிரகாரம் வலம் முடித்து முன் மண்டபத்தை அடைந்து திரும்பிப் பார்க்க, வலதுபுறம் அம்பாள் சந்நிதியைக் கண்டு அவ்விடம் முன் சென்றோம்.
நின்ற திருமேனியுடன் காட்சி தரும் அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்து தொழுது குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.
அடுத்து, நேரே மூலவர் நடுத்தறியப்பரைத் தரிசனம் செய்து அவரருளை அள்ளியெடுத்து வெளிவந்தோம்..
இம்மூலவர் சதுரபீடம் ஆவுடையார் மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ள நிலை மிக அழகாக நேர்த்தியாக இருந்தது.
கோஷ்டத்தில் வலம் செய்யும்போது, கோஷ்ட மூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் சந்நிதிகளுக்குச் சென்று தரிசித்து வணங்கி நகர்ந்தோம்.
*தல அருமை:*
சைவ சமயத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியானாள்.
புகுந்த வீட்டில் மாமியார் வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தாள்.
இவள் கணவன் இதுகண்டு மனைவி வழிபாடு செய்து வந்த அந்த இலிங்கத்தை எடுத்துக் கொண்டு போய் கிணற்றில் எறிந்து விட்டான்.
அப்பெண் வேறுவழியின்றி வீட்டின் பின்புறத்தில், கன்றுக்குட்டியை கட்டியிருந்த தறியையே (ஆப்பு) சிவபெருமானாகப் பாவித்து வழிபட்டு வந்தாள்.
ஒரு நாள் கணவன் இதையும் கண்டு பிடித்து விட்டான். கோபத்தால் அத்தறியைக் கோடரியைக் கொண்டு வெட்டினான்.
தறி இரண்டாக பிளந்து அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டு ஒழுகியது.
இவன் மனைவியின் பக்தியை உலகத்தவரும், இவள் கணவரும் அறிய இறைவன், அக்கட்டுத்தறியில் லிங்க வடிவம் கொண்டு காட்சியளித்தார்.
இறைவன் அந்த ஆப்பில் இருந்து வெளிப்பட்டு சைவப் பெண்ணிற்கு அருள்புரிந்த தலமாதலால் திருகன்றாப்பூர்.
(கன்று + ஆப்பு + ஊர்).
சைவப்பெண்ணும், அவள் கணவனும் சிவலோகப் பேறு பெற்றடைந்தனர்.
கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதால் இத்தலம் கன்றாப்பூர் என வழங்கப்பெற்றது.
இந்த லிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினாலும் தறியிலிருந்து தோன்றியதால் இறைவன் நடுத்தறிநாதர் எனப்பட்டார்.
அந்த கன்றுக்குட்டியின் நடுதறி இருந்த இடமே இன்று நடுத்தறிநாதர் கோயிலாக விளங்குகின்றது.
மூல லிங்கத்தின் பாணப் பகுதியில் கோடாரியால் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளதைக் காணலாம்.
*தல பெருமை:*
இத்தலத்திற்கு இரண்டு வந்து வழிபடுவோருக்கு, உலகில் உள்ள எல்லா சிவத்தலங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலின் தீர்த்தம் கண் நோயை நீக்க வல்லது என்கின்றனர்.
இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தொழுதால், கிட்டாத மகப்பேறு கிட்டுவது உறுதி என்பது நம்பிக்கை.
இத்தலத்தை இடும்பன் வழிபட்டுள்ளான்.
இத்தலத்தில், சம்பந்தரும் அப்பரடிகள் ஆகிய இருவரின் திருமேனி வடிவங்கள் இருக்கின்றன.
ஆனால், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனி வடிவங்கள் இல்லை.
இவ்வூரில் உள்ள அனைத்து நிலங்களும் ஈசன் பெயரிலேயே பட்டாவாகவே பதியும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.
கண்நோய் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், இத்தலம் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
இத்தலத்தின் வழியாக நடந்து சென்றால், இத்தலத்தில் தங்கி வாழ்ந்த பலன் கிடைக்கிறது என்கின்றனர்.
இத்தலத்தின் பெயரைக் கூறக் கூற, நல்வாழ்வு நல்கிறதென இத்தல மக்கள் கூறுகின்றனர்.
*தேவாரம்:*
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் ஆறாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
1🍁மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம் நாதனே யென்றென்று பரவி நாளும் நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக் காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
2.🍁விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச் செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ் செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந் துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ் சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங் கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
3.🍁எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி உவராதே அவரவரைக் கண்ட போது உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
4.🍁இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத் திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித் துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம் உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக் கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
5.🍁விருத்தனே வேலைவிட முண்ட கண்டா விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும் ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள் பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும் புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக் கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.🍁பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப் பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார் வசியினா லகப்பட்டு வீழா முன்னம் வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக் கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
7.🍁ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும் ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங் கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
8.🍁திருதிமையால் ஐவரையுங் காவ லேவித் திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச் சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக் கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப் பருதிதனைப் பற்பறித்த பாவ நாசா பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங் கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் திருவருளுக்காக சிதைந்து போயிற்று.
10.🍁குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங் கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந் தனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந் தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி முனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும் முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங் கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
வைகாசி விசாக விழா மூன்று நாட்களாக விசேஷம்.
*தொடர்புக்கு:*
91 4365 204144
94424 59978
பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *மணத்துணைநாதர், திருவலிவலம்.*
-----------------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment