Thursday, November 9, 2017

Jagadeeswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"'"""""
                          *132*
🔔 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.*🔔

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*ஜகதீசுவரர் திருக்கோயில், பேரெயில்*
""""""""""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் நூற்று பதினான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:*ஜகதீசுவரர்.

*இறைவி:* ஜகந்நாயகி.

*தல விருட்சம்:* நாரத்தை.

*தல தீர்த்தம்:* அக்னி தீர்த்தம்.

*திருமேனி:* சுயம்புவானவர்.

*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*புராணப்பெயர்கள்:* திருப்பேரெயில், ஓகைப்பேரெயில்.

*தேவாரம் பாடியவர்கள்:* திருநாவுக்கரசர்.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு ஜகதீசுவரர் திருக்கோயில்,
ஓகைப்பேரையூர்,
வடபாதி மங்கலம் அஞ்சல்,
திருவாரூர் மாவட்டம்,
610 206

*ஆலயத் திறப்பு காலம்:*
தினந்தோறும் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும்​,
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத்தின் அர்ச்சகராக பாஸ்கர சிவாச்சியார் சற்றுத் தொலைவிலிருந்து வருவதால், இவரை முன்கூட்டியே தொடர்பு கொண்டு செல்வது நல்லது. 
இவரது கைபேசி:
93607 40260

*இருப்பிடம்:*
திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கமலாபுரத்திற்கு அடுத்துள்ள மூலங்குடி சென்று இத்தலத்தை அடையலாம்.

திருவாரூரில் இருந்து மாவூர் கூட்டுரோடு வடபாதிமங்கலம் சாலை வழியாகவும் இவ்வாலயத்துக்குச் செல்லலாம்.

*கோவில் அமைப்பு:*
இக்கோவில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காட்சி தர, சிவ சிவ என வணங்கிக் கொண்டோம்.

மூலவர் ஜகதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியருளிக் கொட்டிருக்கிறாள்.. 

மூலவர் கருவறை கோஷ்டத்தில் எல்லா சிவாலயங்களிலும் இருப்பது போல தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருளிக்கொண்டு உள்ளனர். 

உள்பிரகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும் இருக்கின்றன.

இத்தலத்திலுள்ள நடராஜர் மிகவும் அழகான உருவத்துடன் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் தல மரமாக நாரத்தை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளன.

வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

*தல அருமை:*
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது அதைச்சார்ந்த கோட்டை இருந்தது என்றும், அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் பேரெயிலூர், என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி பேரையூர் என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து.

இவ்வூரில் தோன்றிய முறுவலார் என்னும் பெண்மணி பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானுற்றிலும் இடம் பெற்றுள்ளன. 

இத்தல முருகப்பெருமானுக்கு சித்திரை சஷ்டியில் திருவிழா நடக்கிறது.

திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகை திருப்பதிகம் ஒன்றைப்பெற்ற தலம். 

*இடுக சுடுக எதுவும் செய்க!*
பாடியவர்: பேரெயில் முறுவலார். 

எப்பொழுதும் முறுவலோடு இருந்தமையால் இவர் முறுவலார் என்று அழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. 

அது, அவருடைய இயற்பெயராகவும் இருந்திருக்கலாம். இவர் பாண்டிய நாட்டில் இருந்த பேரெயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகையால் இவர் பேரெயில் முறுவலார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவர் புறநானூற்றில் இயற்றிய ஒருபாடல் மட்டுமல்லாமல் குறுந்தொகையிலும் ஒருபாடலும்  இயற்றியுள்ளார்.

நம்பி நெடுஞ்செழியன் இவன் பாண்டிய நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னன்.

மூவேந்தர்களுக்கு வேண்டிய பொழுது அறிவுரைகளும், படையுதவியும் அளித்த குறுநிலமன்னர்களுக்கு மூவேந்தர்கள் தம் பெயர்களைப் பட்டமாகச் சூட்டுவது சங்க காலத்தில் வழக்கிலிருந்ததாக அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

அவ்வழக்குக்கேற்ப, பாண்டியன் நெடுஞ்செழியன், நம்பி என்னும் குறுநில மன்னனுக்குத் தன் பெயரைச் சூட்டியிருக்கலாம் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை கூறுகிறார்.

*பாடலின் பின்னணி:*
சங்க காலத்தில், வாழ்க்கையின் உறுதிப் பொருட்களாகக் கருதப்பட்ட அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் நம்பி நெடுஞ்செழியன் சிறப்புற்று விளங்கிப் புகழுடன் வாழ்ந்து இறந்தான். 

அவன் இறந்த செய்தி கேட்டு பலரும் அவன் அரண்மனையில் கூடினர். அவன் போரில் இறக்காததால், அவன் உடலை வாளால் பிளந்து, புதைக்க வேண்டும் என்று சிலர் கருதினர். 

வேறு சிலர், அவன் உடலை எரிப்பதுதான் முறையான செயல் என்று கருதினர்.

அப்பொழுது, பேரெயில் முறுவலார், "நம்பி நெடுஞ்செழியன் பலதுறைகளிலும் சிறப்புற்று வாழ்ந்தவன். அவன் செய்யத் தக்கவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்தவன். ஆகவே, அவனைப் புதைத்தாலும் சரி, அல்லது எரித்தாலும் சரி; இரண்டுமே தவறில்லை." என்று இப்பாடலில் கூறுகிறார்.

*தேவாரம்:*
இத்தல தேவாரம் அப்பர் பாடியது.
1.🍁மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.

🔔பேரெயில் தலத்து இறைவர் , மறையை ஓதுவர் ; மான்குட்டியை யேந்திய கையினர் ; திருநீலகண்டர் ; கபாலத்தைக் கொண்ட கையினர் ; எத்துறையும் போகுவர் ; தூய வெண்ணீற்றினர் ; பிறையும் சூடும் இயல்பினராவர் .

2. 🍁கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையும்
தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே.

🔔பேரெயில் தலத்து இறைவர் . கல்லாதவரையும் , கற்று வல்லவரையும் , வணங்காத நெறியைக் கட்டிப் பேசும் வீணரையும் , தணக்கும் இயல்புடையவர் ; எப்பொருளையும் தணிப்பவர் ( ஒடுக்குவர் ); பிணக்கும் இயல்பினரும் ஆவர் .

3.🍁சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை
விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும்
பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே.

🔔பேரெயில் தலத்து இறைவர் , மழை சொரிவிப்பார் ; திங்களைச் சூழ்கதிர் விரிவிப்பார் ; ஞாயிற்றின் கண் பொருந்திய விளங்கொளியை எரிவிப்பார் ; எப் பொருளையும் தணிவிப்பார் , அவற்றைப் பிரிவிக்கும் இயல்பினரும் ஆவர் .

4.🍁செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே.

🔔பேரெயில் தலத்து இறைவர் மேருமலை வில்லால் முப்புரங்களை அழியச் செய்வார் ; தீர்த்தங்களை மிகுவிப்பார் ; பல பத்தர்களின் ஊழ்வினை அறுவிப்பார் ; அதுவன்றியும் நல்வினை பெறும்படியும் செய்வார் .

5.🍁மற்றை யாரறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோ ரைந்தலை பாம்பரைச்
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
பெற்றி யாரவர் பேரெயி லாளரே.

🔔பேரெயில் தலத்து இறைவர் அன்பர்களால் அன்றி மற்றையவரால் அறியப்படாத இயல்புடையவர் ; மழுவாளை உடையார் ; ஓர் ஐந்தலைப்பாம்பைப் பற்றி ஆட்டி அரையிற் சுற்றியவர் ; தூநெறியால் மிகுகின்ற பெற்றியும் உடையவர் .

6.🍁திருக்கு வார்குழற் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யால்தனை யேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப்
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே.

🔔பேரெயில் தலத்து இறைவர் , வளைந்த நீண்ட குழலாளை உடைய செல்வராகிய தம்மடியை இருக்குவேதம் முதலிய மெய்ம்மொழிகளால் ஏத்துவார்களின் துயரைச் சுருக்குவார் ; அவை தோன்றுகின்ற நெறி அறுமாறு அருளைப் பெருக்குவார் .

7.🍁முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
தன்னை யாரெனின் தானோர் தலைமகன்
என்னை யாளுமி றையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே.

🔔பேரெயில் தலத்து இறைவர் எனின் அவர் , முன்னே தோன்றியவர் ; மயிலை ஊர்தியாக உடைய முருகவேளின் தாதையார் ; ஒப்பற்ற முதல்வர் ; என்னையாளும் இறைவரும் எம்பிரானுமாவர் ; புதியரிற் புதியரும் அவரே .

8.🍁உழைத்துந் துள்ளியு முள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கு மன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே.

🔔பேரெயில் தலத்து இறைவர் , உழைத்தும் , துள்ளியும் , தம் உள்ளத்துள்ளே உருவத்தை இழைத்தும் எந்தையே ! பிரானே ! என்று இரவும் பகலும் இடைவிடாது அழைக்கும் அன்பர்கள் இயற்றிய பிழைகளை நீக்கும் தன்மை உடையவராவர் .

9.🍁நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
ஏரு லாவநங் கன்திறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளாரவர் பேரெயி லாளரே.

🔔கங்கை உலாவிய நிமிர்ந்த புன்சடையா என்று போற்றாத அழகு பொருந்திய மன்மதன் திறலைவாட்டிய பெரும்புகழ் உடையவர் ; கச்சுப் பொருந்திய அழகிய மென்முலையாளொடும் பேரெயிலில் வீற்றிருந்தவர் .

10.🍁பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யாரவர் பேரெயி லாளரே.

🔔பேரெயில் தலத்து இறைவர் , படுதம் என்று கூறப்பெறும் கூத்தைத் தாளம் பொருந்த ஆடுபவர் ; அம்பறாத்தூணி உடையவராய் ( வேடராய் ) வந்து அருச்சுனர்க்கு அருள் செய்தவர் ; பிரமசாரியாய் வந்து ( வாமனாவதார காலத்து ) மண்ணளந்தவனாகிய திருமால் பிரமன் என்போரால் பேணப் பட்ட பெருமை உடையவர் .

11.🍁மதத்த வாளரக் கன்மணிப் புட்பகம்
சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்
பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே.

🔔பேரெயில் தலத்து இறைவர் செருக்குடைய வாள் அரக்கன் இவர்ந்து வந்த புட்பக விமானத்தைத் திருமலை தடுக்க உடனே பதைத்து அத்திருமலையின் கீழ்ப்புகுந்து அங்கு ஆர்த்து எடுத்தபோது , அவன் முடிபத்தும் சிதையும் படியாக ஊன்றியவர் .

          திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
மகா சிவராத்திரி. மார்கழி திருவாதிரை.

*தொடர்புக்கு:*
91 4367 237692

பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நாளைய அடுத்த தலபதிவு *அக்னீசுவரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு.*

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment