உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
_______________________________________
*133*
🔔 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.*🔔
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*அக்னீசுவரர் கோவில், திருகொள்ளிக்காடு.*
________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் நூற்று பதினைந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* அக்னீசுவரர், தீவண்ணநாதர்.
*இறைவி:*
பஞ்சினும் மெல்லடியம்மை.
*திருமேனி:* சுயம்புவுருவானவர்.
*தல விருட்சம்:* வில்வம், வன்னி.
*தல தீர்த்தம்:* அக்னி தீர்த்தம், தீர்த்தக் குளம்.
*புராணப் பெயர்:*
சீராளத்தூர்.
*ஊர்:* திருக்கொள்ளிக்காடு.
*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*பதிகம்:*
அப்பர்,
திருஞானசம்பந்தர்.
*இருப்பிடம்:*
திருத்துறைப்பூண்டியிலிருந்து பதினைந்து கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டி திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள ஆலட்டம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஏழு கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்து உள்ளது.
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து, அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி நான்கு கி.மி. சென்றால், முதலில் *திருநெல்லிக்காவல்* தலமும் அடுத்து இரண்டு கி.மி. தொலைவில் *திருதெங்கூர்* தலமும் அதையடுத்து மேலும் நான்கு கி.மி. சென்றால் *திருகொள்ளிக்காடு* தலத்தை அடையலாம்.
இத்தலத்திற்கு கச்சனத்திலிருந்து மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்,
திருக்கொள்ளிக்காடு,
கீராலத்தூர் அஞ்சல்,
(வழி) திருநெல்லிக்காவல்,
திருத்துறைப்பூண்டி வட்டம்.
திருவாரூர் மாவட்டம்.
PIN - 610 205
*பூஜை காலம்:*
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்தது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு என்னும் தலமாகும்.
திருநெல்லிக்காவல், திருத்தங்கூர், கோட்டூர், திருவண்டுதுறை ஆகிய தலங்களின் நடுவே இத்தலம் அமைந்துள்ளது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களையும் கொண்டது.
இத்தலத்தின் இறைவனான அக்னீஸ்வரர், சனி தோஷத்தை போக்குவதில், திருநள்ளாறையும் விட இங்கு இத்தலம் சிறப்பு வாய்ந்தது.
சனி பகவானால் உண்டாகும் அனைத்து தோஷங்களும் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
*கோவில் அமைப்பு:*
இக்கோவிலுக்கு நாம் முதன் முதலாக சென்று கொண்டிருந்தோம்.
தூரத்தே வரும்போது இராஜகோபுரத்தை எதிர்நோக்கி கண்கள் அலைவிரிந்துத் தேடியது.
தலத்திற்கு வந்தபிறகுதான் தெரிந்தது, இராஜகோபுரம் இல்லை என்பது. *சிவ சிவ.*
மேறகு நோக்கிய ஒரு நுழைவு வாயிலைக் காணப்பெற்றோம்.
உள் புகுந்து நுழைந்தவுடன் மேறகு வெளிப் பிரகாரத்தில் கொடிமரமத்தைக் கண்டு, அதன் முன் நின்று வணங்கிக் கொண்டோம்.
அடுத்திருந்த பலிபீடத்தருகே நின்று நம் ஆணவமலம் முழுவதும் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டோம்.
அடுத்தாற்போலிருக்கும் நந்தியாரிடம் வணங்கிப் பணிந்து ஈசனைக் காண உள்புக அனுமதிக்க வேண்டிக் கொண்டு, வணங்கி நகர்ந்தோம்.
உள்ளே இறைவன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. பக்தர்கள் வருகை எங்களுக்கு முன்பும் வந்திருக்கவில்லை.
எங்களுக்குப் பின்னால் அடியார்கள் பலர் வந்து கொண்டிருந்தனர்.
ஈசன் அக்னீசுவரரை மனமுருகப் பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.
இவ்விறைவனை அக்னிதேவன் வழிபட்ட தலமாதலால் திருகொள்ளிக்காடு என்றும் அக்னிதேவன் வழிபட்ட இறைவன் அக்னீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இறைவனுக்கு மற்றொரு பெயரான *தீவண்ணநாதர்* எனக் கூறியும் அழைக்கின்றனர்.
பெயருக்கு ஏற்றாற்போல், தரிசனத்தின்போது, இங்குள்ள இறைவன் மேனி சற்று செவ்வொளி படர்ந்த நிலையில் காணப்படுவதைக் காணப்பெற்றோம்..
இறைவன் சந்நிதிக்கு முன்னால், இடப்பக்கத்தில் இறைவி பஞ்சினும் மெல்லடியம்மை சந்நிதி அமைந்திருக்க முன் வந்து நின்றோம்.
அம்மையை மனங்குளிர ஆராதித்து வணங்கி குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.
மூலவர் கருவறையின் கோஷ்டங்களில் வலம் செய்கையில், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகியோர்கள் இருக்க தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் வணங்கி நகர்ந்தோம்.
லிங்கோத்பவருக்கு இருபுறமும், அடியும் முடியும் தேடித் திரிந்து தோல்வியுற்ற பிரம்மாவும் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் இருந்தனர்.
இங்குள்ள முருகன் மற்ற கோயிலைகளில் போலில்லாது கையில் வில்லேந்திக் கொண்டு தனுசு சுப்பிரமணியராக அருள்பாலித்தார். வணங்கி முருகனின் அருளைப் பெற்றுக் கொண்டோம்.
இவ்வாலயத்தின் தல மரமாக கோவிலுக்கு எதிரில் உள்ள வன்னியும், தீர்த்தமாக கோயிலுக்கு எதிரில் உள்ள குளமும் உள்ளது.
மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கியபடி சனி பகவான் சந்நிதி தனி விமானம், தனி மண்டபத்துடன் அமைந்துள்ளது.
மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவானின் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் மிகச்சிறந்த அம்சமாகும் என அர்ச்சகர் கூறினார்.
திருநள்ளாற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் விசேஷமாம்.
நளனும் இத்தலத்திற்கு வந்து சனீஸ்வரரை வழிபட்டுள்ளான் என்ற சிறப்பு உடைய சேவைகள் இது.
புரூரவஸ் என்ற சக்கரவர்த்திக்கு ஏற்பட்டிருந்த சனி தோஷத்தை, இத்தலத்திற்கு வந்து வழிபட்டுச் பயணாய் தோஷம் நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி பகவான் என்பது பிரசித்தம்.
சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக பொங்கு சனியாக காட்சி அளிப்பதால் அவர் அருள் வேண்டி பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் ஒன்றை ஒன்று பாராமல் காட்சி தருவார்கள்.
ஆனால இவ்வாலயத்தில் *"ப"* வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி தருகின்றனர்.
நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால், இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு பணியில்லை.
*திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரரின் பெருமைகள்:*
நவக்கிரக நாயகர்களில் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் அருளால் செயல்பட்டு வருபவர் சூரியன் என்ற ரவி ஆவார்.
இவரது வெப்பத்தைத் தாங்க முடியாமல் இவரின் மனைவி உஷத்தேவி தவித்து வந்தாள்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் சாயாதேவியையும் திருமணம் செய்யும் சூழ்நிலை உருவானது.
சாயாதேவியாலும், ரவியின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் துயரங்கொண்டாள்.
எனவே, சூரியனாகிய ரவி தனது மனைவியர் உஷத், சாயாதேவியுடன் சேர்ந்து அக்னி பகவானிடம் சென்று ஆலோசனைக் கேட்டார்கள்.
அதற்கு அவர், *"பூலோகத்தில் திருக்கொள்ளிக்காடு என்ற அக்னிபுரிக்குச் சென்று, அருள்மிகு மிருதுபாத நாயகி சமேத ஸ்ரீகொள்ளிக்காடர் என்ற அக்னீஸ்வரரை வழிபட்டால் இல்வாழ்க்கை சுகமளிக்கும்"*என்று உபதேசித்தார்.
உடனே, மூவரும் திருக்கொள்ளிக்காடு வருகை தந்து, தொடர்ந்து சிவவழிபாடுகளை ஒழுகி வந்தனர்.
இறைவன் அருகில் அமைந்திருக்கும் சனி தீர்த்தத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, சூரியனை நீராட வைத்தனர். இதனால் ரவியின் வெப்பம் தணிந்தது. ரவியின் இல்லறம் சிறப்பாக இருக்கத் துவங்கியது
உஷத் மூலமாக எமதர்மராஜா பிறந்தார். சாயாதேவியின் மூலமாக சனீஸ்வரர் பிறந்தார்;
எமதர்மராஜாவும், சனீஸ்வரனும் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்து சிவனருள் பெற்றனர்.
இதன்படி, எமதர்ம ராஜாவுக்கு மனிதர்களுக்கு மரணம் தரும் பொறுப்பு கொடுக்கப் பட்டது.
சனீஸ்வரருக்கு அந்த மரண கர்த்தாவாகும் பொறுப்பும், கர்மக்காரகனாக வான மண்டலத்தில் நவக்கிரகங்களில் ஒருவராகவும் செயல்படும் வரமும் கொடுக்கப் பட்டது.
நம் ஒவ்வொருவரின் ஆயுளையும், தொழிலையும் நிர்ணயிப்பவர் சனீஸ்வரர் ஆவார்.
யார் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களை ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன் என்று பைரவப்பெருமானிடன் சனீஸ்வரர் சத்தியம் செய்தப்பின்னரே, நவக்கிரகமாக செயல்பட அனுமதித்தார் ஸ்ரீகாலபைரவப்பெருமான்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும்,(முப்பத்துமுக்கோடி தேவர்கள், மனிதர்கள், ரிஷிகள், துறவிகள்) உரிய தண்டனையை அவமானமாக, நோயாக, கடன்களாக, எதிரிகளாக, வழக்குகளாக வழங்குவதில் சனீஸ்வரர் பாரபட்சம் பார்ப்பதேயில்லை.
நாம் இப்பிறவியில் செய்யும் தப்புக்களின் விளைவுகளை ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனியில் அனுபவிக்கிறோம். இதனால், ஈரேழு பதினான்கு உலகங்களிலும் சனீஸ்வரரின் பெயர் புகழ் பெற்றதோடு, அவரை நினைத்து அனைவருமே நடுங்கத் துவங்கினர்.
சனீஸ்வரரை பாவக் கிரகம் என்றும்,தோஷக் கிரகம் என்றும் அனைவரும் தூற்றத் துவங்கினர் மக்கள்.
இதனால், பைரவப் பெருமானிடம் சனீஸ்வரர் தனது நிலையை நேரில் சென்று முறையிட்டார்.
தன்னை அனைத்து உலகத்தாரும் தூற்றுகிறார்கள். தன்னை நினைத்து அனைவருமே பயப்படுகிறார்கள் எனவே எனக்கு நவக்கிரகப் பதவியும் வேண்டாம், நீதிமான் பதவியும் வேண்டாம் என்று புலம்பி வேண்டினார்;
அவரிடம் பைரவப் பெருமான், சனீஸ்வரரின் அவதார நோக்கத்தை எடுத்துரைத்து, அந்தப்பதவிக்கு பொருத்தமான ஆள் நீ மட்டுமே ஆவாய் என்று ஆறுதல் கூறினார்.
அவரது பொறுப்புணர்ச்சியைப் பாராட்டினார். தொடர்ந்து அவரை நவக்கிரகமாகச் செயல்படுத்திட ஊக்கப்படுத்தினார் காலபைரவர்.
உயிர்களைத் தண்டிக்க வேண்டியிருப்பதை பொறுக்காத சனீஸ்வரர், வசிஷ்ட மகரிஷியை சந்தித்தார்.
அவரின் ஆலோசனைப்படி, திருக்கொள்ளிக்காடு வந்தடைந்தார். அங்கே இருக்கும் அக்னீஸ்வரரை நினைத்து கடும் தவம் புரிந்தார்.
மனிதர்கள் தொடர்ந்து சிவவழிபாடு சிவமந்திர ஜபம் செய்து வந்தால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்குரிய வரத்தை சிவகணங்கள் சூட்சுமமாக வந்து தரும்.
நவக்கிரகத்தில் முக்கியமானவரான சனிபகவான், சிவ வழிபாடு செய்தமையால் பைரவப் பெருமானே நேரடியாக வந்து அவரை பொங்குசனியாக மாற்றி அருள் புரிந்தார்.
இங்கே ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு நேராக பொங்கு சனீஸ்வரர் அருள்புரிந்து வருகிறார்.
ஸ்ரீகாலபைரவ பெருமானின் அருளாசியால் சனியானவர் நன்மைகளை மட்டுமே தரும் பொங்கு சனீஸ்வரராக அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு நொடியும் இங்கே இருக்கும் ஸ்ரீகாலபைரவ பெருமானின் அருளாற்றல் பொங்கு சனீஸ்வரருக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
சனிக்கிழமை சனி ஓரையில் அல்லது ராகு காலத்தில் வழிபடுபவர்களுக்கு பொங்கு சனீஸ்வரரின் அருள் முழுமையாகக் கிடைத்தும் வருகிறது.
சனீஸ்வரரின் கையில் இருக்கும் ஆயுதங்களை நீக்கிவிட்டு ஏர்க்கலப்பையையும், காகக்கொடியையும், அருகில் காகத்தை வாகனமாகவும் ஆக்கி அருள்புரிந்து வருகிறார்.
இவரை குடும்பத்துடன் தரிசித்தால், *'கூடினார்க்கு அருள் செய்வார் கொள்ளிக்காடரே'* என்ற பதிக பாடலுக்கு சனி பகவானின் திருவருள் கிடைக்கும்.
*தலவிருட்சம்:*
இக்கோவிலுக்கு வன்னிமரம், ஊமத்தை, கொன்றை என மூன்று தல விருட்சங்கள் இருந்தன.
அதில் ஊமத்தை மனக்கவலையை போக்க கூடியது.
கொன்றை, எப்படி கொத்தாக பூ, பிஞ்சு இலைகளோடு இருக்கிறதோ, அதுபோல் குடும்ப ஒற்றுமையை அளிக்கிறது.
வன்னிமரம் லட்சுமி கடாட்சம் அளிக்கக்கூடியது.
நவக்கிரகங்கள் பொதுவாக ஒன்றை ஒன்று பாராமல் தரிசனம் தருவார்கள். ஆனால் இக்கோவிலில் *'ப'* வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி தருகின்றனர்.
நாம் செய்த பாவங்கள் அனைத்தையும், இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் பாவங்களுக்கு தண்டனை அளிக்கும் வேலை நவக்கிரகங்களுக்கு இல்லை.
ஆதலால் நவக்கிரகங்கள் ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் ஓய்விலிருந்தவாறு இங்கு காட்சி அளிக்கின்றனர்.
*தேவாரம்:*
🔔நிணம்படு சுடலையி னீறு பூசிநின்
றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினும்
குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.
🙏🏾பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப் பேய்களோடு பெரிய கூத்து ஆடுகின்ற இறைவர், உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலியேற்று உண்பர். ஆயினும் அப்பெருமான் உயர்ந்த குணம் உடையவராய்த் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
🔔ஆற்றநல் லடியிணை அலர்கொண் டேத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன் னடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.
🙏🏾நலம் தரும் இறைவனின் திருவடிகளை மலர்கொண்டு போற்றி வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாள் இறுதியை அறிந்து யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி மார்க்கண்டேயனை நெருங்கி வந்தடைந்த கூற்றுவனைக் காலால் உதைத்த இறைவர் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
🔔அத்தகு வானவர்க் காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.
🙏🏾தாம் வாழ்வான் வேண்டி வணங்கும் வானவர்களைக் காப்பதற்காகக் கொடிய விடத்தை உண்டு தம் கண்டத்தில் அடக்கிய சிவபெருமான், ஊமத்தம் பூவும், வன்னியும் அணிந்த சடைமுடியில் கொத்தாகக் கொன்றைமலர் சூடியவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
🔔பாவண மேவுசொன் மாலை யிற்பல
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினும்
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.
🙏🏾யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத் தொடுக்கும் மாலை போன்ற பாடல்கள் பலவற்றை நாநயத்துடன் நவிலுமாறு செய்தவர் இறைவர். அவர் உயிர்களாகிய எங்களை அடிமை கொண்டு ஆள்பவராயினும் கோவண ஆடை உடையவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
🔔வாரணி வனமுலை மங்கை யாளொடும்
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லாரெயில்
கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.
🙏🏾கச்சணிந்த அழகிய முலையுடைய உமாதேவியோடு, சிறந்த அழகிய திருவுருவத்துடன் விளங்கும் சிவபெருமான், நாண் பூட்டிய மேருமலையை வில்லாகக் கொண்டு பகைவர்களாகிய முப்புர அசுரர்களின் மதில்களை அக்கினியை அம்பின் நுனியாகக் கொண்டு கொளுத்தியவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
🔔பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும்
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.
🙏🏾செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள கயிலைமலையில் மகிழ்ந்திருந்து நாள் தோறும் தம்மை வழிபடுபவர்கட்கு அருள் பாலிக்கும் இறைவர், கொடிய சினத்தோடும், கொம்போடும் வேகமாக வந்தடைந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
🔔இறையுறு வரிவளை யிசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.
🙏🏾திருக்கையில் விளங்கும் அழகிய வளையல்களையுடைய உமாதேவி இசைபாட, திருவடிகளில் விளங்கும் வீரக்கழல்கள் ஒலிக்க, இறைவர் திருநடனம் புரிகின்றார். அப்பெருமான் பாய்கின்ற கங்கையைத் தடுத்துச் சடையில் தாங்கி, கலைகுறைந்த சந்திரனையும் தலையில் சூடி, திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
🔔எடுத்தனன் கயிலையை யியல்வ லியினால்
அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்
படுத்தன ரென்றவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.
🙏🏾தன்னுடைய வலிமையினால் கயிலைமலையை அப்புறப்படுத்த எடுத்த இராவணனை, தம் காற்பெரு விரலையூன்றி அம்மலையின்கீழ் அடர்த்து அவறும்படி செய்ய, இராவணன் தவறு ணர்ந்து, தன்னை வருத்திய சிவனைப் போற்றிச் சாமகானம் பாட, இறைவர் இரங்கி வீரவாளை அருளினார். அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
🔔தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க் கருள் செய்வர் கொள்ளிக் காடரே.
🙏🏾பிரமன் திருமுடியினையும், திருமால் திருவடியையும் தேட, அவர்களால் எப்பொழுதும் அணுகமுடியாதவராய் விளங்கும் சிவபெருமான், பக்தர்கள் மனம் ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட அருள்செய்வார். அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
🔔நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
ஓடிமுன் னோதிய வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.
🙏🏾இறையுண்மையை உணரும் அறிவில்லாத நாணமற்ற சமணரும், புத்தர்களும் முனைந்து சொல்லும் உரைகள் மெய்யானவை அல்ல. அவர்களைச் சாராதுவிட்டு, நான்கு வேதங்களை அருளிய சிவபெருமான், நன்கு பழகிய உமாதேவியோடு திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் கண்டு தரிசித்து உய்தி அடையுங்கள்.
🔔நற்றவர் காழியுண் ஞானசம் பந்தன்
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமி ழின்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே.
🙏🏾நல்தவத்தோர் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், குற்றமற்ற பெரும்புகழுடைய திருக்கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை, அழகு தமிழில், இன்னிசையோடு பாடிய இப்பாமாலையைத் தளராது கற்று ஓத வல்லவர்கள் அப்பெருமானின் திருவடிகளைக் காணும் பேறு பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
மகாசிவராத்திரி,
மார்கழி திருவாதிரை.
*தொடர்புக்கு:*
91 4369 237 454
91 4369 325 801
பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தென்கூர்.*
______________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment