Wednesday, September 20, 2017

Thiruchengaatankudi temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌼 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.97*🌼
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
☘ *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*☘
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 *திருச்செங்காட்டங்குடி.*🌸
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............)
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*குறிப்பு.*
🍁இத்தலப் பதிவு அதிக நீளமான பதிவாகும். எனவே நீளம் கருதி, இன்றும் நாளையும் இத்தலப் பதிவு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை வரும் பதிவில் சிறுத்தொணாடர் நாயனார் தொண்டும் இணைந்து வரும்.🍁

*இறைவன்:* உத்தராபதீசுவரர், ஆத்திவனநாதர், கணபதீஸ்வரர், மந்திரபுரீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.

*இறைவி:*
*சூளிகாம்பாள், வாய்த்த திருக்குழலம்மை, வாய்த்த திருக்குலழம்மை உமைநாயகி.

*தல விருட்சம்:*
ஆத்தி மரம். (காட்டாத்தி.)

*தீர்த்தம்:* சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், மற்றும் சீராள தீர்த்தம் ஆகிய மொத்தம் ஒன்பது தீர்த்தங்கள்.

*திருமேனி:* சுயம்புத் திருமேனியானவர். உத்திராபசுபதீஸ்வரர் திருமேனியின் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.

*புராணப் பெயர்:* கணபதீச்சரம்.

*ஊர்:* திருச்செங்காட்டங்குடி.

*பதிகம் பாடியவர்கள்:*
அப்பர், சுந்தரர்.

*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*ஆகமம்/பூஜை:* காமிகம்.

*இருப்பிடம்:* திருவாரூரிலிருந்து திருமருகல் சாலையில் சென்றால்,  *செங்காட்டங்குடி* என பெயர் பலகை தென்படும்.

அந்தப் பெயர் காட்டும் சாலையில் சென்றால் சந்தைப்பேட்டை வரும். இதன் வழியாகச் செல்ல திருமருகல் கால்நடை மருந்தகம் வரும். 

இதையும் தாண்டிச் செல்லும் 3AE-பஸ் வழித்தடத்தில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

திருவாரூரிலிருந்தும், திருமருகலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கிறது.

பாடல் பெற்ற காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்து ஒன்பதாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*பெயர்க்காரணம்:* கயமுகாசூரணைக் கொன்ற பலி தீர்வதற்காக சிவனை வழிபட்டு அருள் பெற்றார் கணபதி. எனவே கணபதீஸ்வரம் என்று அழைக்கப்படுவதாயிற்று.

*கோவில் அமைப்பு:*
இத்தலத்திற்கு செல்ல வேண்டுமென்ற நினைவு எங்களுக்கு அடிக்கடி நினைவாய் இருந்தது.

இருப்பினும் அவனருள் எங்களுக்கு வாய்க்காமல் காலம் கடந்தே போயின. இந்த நேரத்தில் நினையாத கோயிலெல்லாம் சென்று வரும்படி நடந்தது.

அப்போதுதான் நினைத்தோம்..."அவனை நாடிச் செல்வதற்கும் அவனருள் இருந்தால்தான் அது நடக்குமென்று நினைத்தோம்.

அப்படியில்லாமலா..... இவ்வழியே சென்ற திருநாவுக்கரசர் அந்த ஊருக்குச் செல்லும்போது என்னை வந்து பார் என்று கூறினார்? இது...அவர்...அருளினால் தானே!

அதுபோலதான் இப்போது அவர் அருள் எங்களை இவ்வாலயத்துக்கு வருமாறு அழைக்கும் சமிக்ஞை கிடைத்ததால் திருச்செங்காட்டங்குடிக்குப் புறப்பட்டுச் சென்றோம்.

பேருந்தை விட்டு இறங்கியதும் ஊருக்கு நடுவே இருக்கும் இவ்வாலயத்திற்கு நடக்கலானோம்.

கோயிலினுள் கும்பிட்டு திசைப்பக்கம் திரும்பவும் முதலில் இராஜகோபுரம் நம் கண்களுக்குக் காட்சி தரவும் *ஈசுவரனே!, பெருமானே!!சிவ சிவ* என சிரம் மேல் கையுர்த்தி கோபுரத் தரிசனம் செய்து வணங்கிக் கொண்டோம்.

இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன்  கிழக்கு பார்த்த வண்ணம் எழிலுடன் அமைந்திருந்தன. மிக அழகான நேர்த்தி அக்கோபுரம்  முழுவதும் பரவிக் கிடந்தது.

கோபுரத்தின் எதிர்திசையை பார்த்தோம். அங்கே திருக்குளத்தைக் காணப்பெற்றோம், எங்கள் கால்கள் திருக்குளத்தை நோக்கி அடியெடுத்து  வைக்கத் தொடங்கியது.

திருக்குளக்கரை வந்து,  அருகிருந்தோரிடம் அத்தீர்த்தப் பெயரைக் கேட்டோம். 

இந்தத் திருக்குளம் சத்திய தீர்த்தமாகும். இதுபோக இன்னும் எட்டுத்தீர்த்தங்கள் இக்கோயிலுக்கு உள்ளதென கூறினார்.

குளக்கரையிலிருந்த முகப்பில், *'மங்கள விநாயகரைக்* கண்டு விட்டோம். விடுவோமா? தோள் சுமைகளை கீழிறக்கி வைத்துவிட்டு விநாயகரைப் பார்த்து நம் காதினை பிடித்துத் தோப்புங்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம்.

பின் திரும்ப நடந்து ராஜகோபுரத்தின் உட்பக்கம் செல்ல அங்கே தலவிருட்சமான ஆத்திமரத்தினடியில்
இறைவன் அமர்ந்திருக்க, சிறுத் தொண்டர் அவரை அமுது செய்ய அழைக்கும் சிற்பத்தை அழகுடன் இழைத்திருந்தார்கள்.

முன்புமிருந்த மண்டபத்திற்கு வந்தோம், அங்கே அம்பாள் சந்நிதியில் நின்ற திருக்கோலம் கொண்டு அருளௌட்சிக் கொண்டிருந்தாள்.

மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு அவளருட் பிரசாதமான குங்குமத்தை பெற்றுக் கொண்டு வெளி வந்தோம்.

கவசமிட்ட கொடிமரம் இருக்க வணங்கினோம். முழு தரிசனம் முடித்து வெளிவருகையில் கொடிமரத்தை வணங்கிக் கொள்ளலாமென நகர்ந்தோம். 

கொடிமரத்தைத்தாண்டி, உட்பிராகாரத்தில் உள் புகுந்தோம். அங்கு கல்லில் வடித்துள்ள பிட்சாடனர் கோலவுருவத்தையும், சந்தனநங்கை, சீராளதேவர், திரவெண்காட்டு நங்கை, சிறுத்தொண்டர் ஆகியோர் மூலத் திருமேனிகளையும் கண்டு, பக்திப் பாங்குடன் மெய்மறந்து, நெஞ்சிநேராக கூப்பியிருத்திய கரங்களுடன் ஒவ்வொருத்தரையும் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

அறுபத்துமூவர் திருமேனிகளையும் தரிசித்தோம் ஆனந்தித்தோம். ஒவ்வொரு நாயனார் முன்பு வரும்போது, அவர் ஆற்றிய தொண்டுகள் நம் மனத்தில் நிழலாட, நம் விழியோரங்கள்  ஈரப்பட்டன.

தலமரம் *'ஆத்தி'* இருந்தது. சுற்றி வணங்கிக் கொண்டோம்.

இதற்கடுத்தாக பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகியோர்களின் சந்நிதிகளுக்குச் சென்று தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.

அடுத்து, *வாதாபிகணபதி* தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். இவர் மிக விசேஷமானவர். இவரின் பங்கு மிக அற்புதம் கொண்டது.

சத்பாஷாட மகரிஷி, என்பவர் பூஜித்த லிங்கம், பிரமன் வழிபட்ட இலிங்கம் வள்ளிதெய்வனானை சுப்பிரமணியர் சந்நிதிகளுக்கும் சென்று வணங்கிக் கொண்டோம். உள்ளன.

இக்கோயிலில் உள்ள அஷ்டமூர்த்தி மண்டபத்திற்கு வந்தோம். இம்மண்டபத்தை அவசியம் கண்டு தொழத்தக்கது என்பதை உணர்ந்தோம்.

துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனர், திரிபுராரி, பைரவர், விநாயகர் முதலிய மூலத் திருமேனிகள் மிக அருமையான வேலைப்பாடுகளுடன் தெரிந்தன.

இந்த அஷ்டமூர்த்தி மண்டபத்தில்  நடராஜ சபை இருந்ததது. இச்சபையிலிருந்த ஆடவல்லானின் தூக்கிய திருவடியின் கீழினிலில் நம் சிரத்தை மோத வேண்டும் போலிருந்தது நமக்கு. 

'என்னா?"..ஆடல் நளினம்! 'என்னா?" விழியோரக் களிப்பு!....அப்பப்பா!...............எத்தனை முறையில்லை, எத்தனை ஆண்டுகள் தரிசித்தாலும், எங்கள் பக்தித்தாகம் தனியாது பெருமானே!..ஈசனே!...
எம்பெருமானே! சிவ..சிவ.

அப்படியே ஒரு ஓராமாக அமர்ந்து *"மன்னாதிபூதமொடு"* பாடல் முழுமையும் பாடியெழுந்தோம். அதன்பின் மனதிற்கு வணங்கிய திருப்தி உண்டானது.

அடுத்து நவக்கிரகங்கள், பைரவர், ஸ்தம்ப முகூர்த்த விநாயகர், சூரியன் சந்நிதிகள் இருக்க வழக்கம்போல வணங்கிக் கொண்டோம்.

அடுத்து மூலவப்பெருமானைத் தரிசிக்க அவன் சந்நிதி முன் உள் புகுந்தோம். 

அங்கே வாயிலில்
திண்டி, முண்டி எனும் இரு துவாரபாலகர்கள் இருந்தார்கள். அவர்களை வணங்கி ஈசனைத் தரிசிக்க உள்புக அனுமதிக்க வேண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.

நேரே மூலவர் தரிசனக் காட்சி அருள்பிரவாகமாக இருந்தன. இவர் கணபதீச்சரமுடையார் என்ற நாமத்துடன் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். இவரின் கருவறையைச் சுற்றி அகழி அமைப்புடன் அமைந்திருந்தது. 

மனமுருக பிரார்த்தனை செய்து ஈசனை வணங்கி, அவனுடைய வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம். இவன் சந்நிதி ஓரமாய் அமர்ந்து சிறிது இளைப்பாறிப் பின்னெழுந்து வணங்குதலை தொடர ஆரம்பித்தோம்.

அடுத்திருக்கும்
*உத்ராபதீஸ்வரர் உற்சவத் திருமேனியைக்* கண்டோம். இவருக்கு பச்சைக் கற்பூரத்தையும் குங்குமப்பூவையும் சேர்த்து அர்ச்சகர் சார்த்திக் கோண்டிருந்தார். 

அர்ச்சகரிடம் இதுபற்றி கேட்டபோது, உத்திராபதீஸ்வரரின் திருமேனிக்கு நாள்தோறும் இவ்விதம் சார்த்தப்படுவது இவ்வாலய வழக்கம் என்றார் அர்ச்சகர்.

அங்கு ஒரு பேழையில் சிறியதான ஒரு மரகதலிங்கம் ஒன்றும் இருந்தது. 

கோஷ்டத்திற்குள் அடியெடுத்து வைத்தோம். மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் (ரிஷபத்தின் மீது கை ஊன்றியநிலை.) துர்க்கை சந்நிதிகளுக்குச் சென்று நேர்த்தியான வணக்கத்தை பிரிதொரு மனம் அகலாது வணங்கிக் கொண்டோம்.

சண்டேசரரை அவர் சந்நிதியில் கண்டோம். இவருக்குண்டான மரபுமுறையான அமைதித் தன்மையுடன் அவரை வணங்கிக் கொண்டோம். 

நல்ல கணக்கே எம்மிடமுளன! கள்ளக்கணக்கேதுமிலை. என்ற மனவோட்டத்தை அவரிடம் ஒப்பித்துப் பின் விடைகேட்டுத் திரும்பினோம்.

பின் வெளிவருகையில் கொடிமரத்துமுன் சாஷ்டாங்கமாக வீழ்ந்து கரம் புஜம் சென்னி தேய்த்து வணங்கியெழுந்து மகிழ்ந்து வெளிவந்தோம். சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.

*இத்தலப் பதிவு நாளையும் வ(ள)ரும்.*

             திருச்சிற்றம்பலம்.

*குறிப்பு:*
திருச்செங்காட்டங்குடி தல அருமைகள், பெருமைகள் தல பதிவு நீளமானதால், இத்தலத்தின் மீதிப் பதிவு நாளையும் தொடர்ந்து வரும். அடியார்கள், நாளைக்கு வரும் பதிவுடன் இப்பதிவையும் சேர்த்து இணைத்து வாசிக்குமாறு தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌼 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.97*🌼
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
☘ *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*☘
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 *திருச்செங்காட்டங்குடி.*
*(2-ஆம்நாள் தொடர்ச்சி.)*
🌸
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............)
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*குறிப்பு.*
🍁 *இத்தலப் பதிவு அதிக நீளம் கருதி நேற்று பாதி பதியப்பட்டது.  மீதி பாதியை இன்று  இத்தலப் பதிவை பதிந்து அனுப்பப்பட்டுள்ளது. ஆயினும் மேலும் சில குறிப்புகள் கிடைக்கப்பெற்றதால், இன்றுடன் இப்பதிவு மகிழ்ந்து நிறையாது. ஆகவே மேலும் ஒரு நாள் கூடுதலாக  திருசெங்காட்டங்குடி பதிவு வ(ள)ரும். அடியார்கள், நேற்றைய முதல் பதிவுடன் இரண்டாம் நாளான இந்த பதிவையும்  சேர்த்து  வாசிக்கவும், நாளை வ(ள)ரும் மூன்றாம் நாளையும் சேர்த்து சேமித்து இணைத்து வைத்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாளைய பதிவில் சிறுத்தொணாடர் நாயனார் தொண்டும் சேர்ந்து இணைந்து இருக்கும். சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.*🍁

*இறைவன்:* உத்தராபதீசுவரர், ஆத்திவனநாதர், கணபதீஸ்வரர், மந்திரபுரீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.

*இறைவி:*
*சூளிகாம்பாள், வாய்த்த திருக்குழலம்மை, வாய்த்த திருக்குலழம்மை உமைநாயகி.

*தல விருட்சம்:*
ஆத்தி மரம். (காட்டாத்தி.)

*தீர்த்தம்:* சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், மற்றும் சீராள தீர்த்தம் ஆகிய மொத்தம் ஒன்பது தீர்த்தங்கள்.

*திருமேனி:* சுயம்புத் திருமேனியானவர். உத்திராபசுபதீஸ்வரர் திருமேனியின் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.

*புராணப் பெயர்:* கணபதீச்சரம்.

*ஊர்:* திருச்செங்காட்டங்குடி.

*பதிகம் பாடியவர்கள்:*
அப்பர், சுந்தரர்.

*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*ஆகமம்/பூஜை:* காமிகம்.

*தல அருமை:*
கோயிலின் பின்புற வீதியில் இருக்கும் மடாலயத்தில்தான் சித்திரைப் பரணி நட்சத்திரத்தில் *உத்தராபதீஸ்வரருக்கு* அமுது செய்த ஐதீகவிழா நடைபெறுகிறது. 

இதன் வடபக்கத்திலுள்ள *சிறுத்தொண்டர்* மாளிகை இன்று கோயிலாக உள்ளது. இங்குச்
சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர், திருவெண்காட்டு நங்கை, அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. 

நான்கு வீதிகளின் கோடியிலும் விநாயகர் ஆலயங்கள் உள்ளன. கோயிலின் கீழவீதியில் உள்ள விநாயகர் *'வேண்டும் விநாயகர்'* என அழைக்கப்படுகிறார்.

உற்சவக்காலங்களில்  உலாவரும் நாதரே உத்திராபதியார் ஆவார்.

*உத்தராபதியார் திருமேனி உருவான விதம்.*வரலாறு.

ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத்தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாள்கள் தங்கி வழிபட்டு வந்தார். 

உத்தராபதியாரின் தோற்றத்தைக் காண வேண்டுமென்று விரும்பினார். 

இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், *யாம் சண்பகப்பூ மணம் வீசக் காட்சி தருவோம்"* என்றருளினார் இறைவன்.

ஐயடிகள் அவ்வாறே பணிகளை போர்க்கால அடிப்படை கொண்டு  செயல்படலானார்.

கொல்லர்கள் உத்தராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர்.

சிலை உருவாகமல் பல இடர்ப்பாடுகள் தொடர்ந்தன. கும்பாபிஷேக நாள் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது.

மன்னனோ சிலையை விரைவில் முடிக்கக் கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர் கொல்லர்கள்.

அப்போது உலைக்கலம் வந்த இறைவன், சிவயோகியார் வடிவெடுத்து வந்து தாகத்துக்கு தண்ணீர் கேட்டார்.

உலைக்கலத்திலிருந்த  கொல்லர்களோ"........ . *"உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது வேண்டுமானால் ஊற்றுகிறோம்" குடிக்கிறீர்களா?* கேலிவிளையாட்டாகச் சொன்னர்.

சிவயோகியார், வேடமெடுத்திருந்த இறைவன் *"நல்லது! அந்த மழுக்குழம்பையே அதையே ஊற்றுங்கள்"* என்றார். 

கொல்லர்களும் அதிர்ச்சியுற்று,....காய்ச்சிய மழுக்குழம்பை ஊற்ற,  சிவயோகியார் அதை வாங்கிக் குடித்து விட்டு மறைந்து போனார்.

உலக்கலத்தில் உத்தராபதீஸ்வரர் முழுமையாகி உருவத்துடன் காணப்பெற்றார்.

செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து  கும்பாபிஷேகம் செய்வித்தான். 

ஐயடிகள் காடவர் கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீசச் செய்து, காட்சி தந்தருளினார்.

இக்கோயிலில் நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனம் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்.

மக்கட்பேறு வாய்க்கப்பெறாதவர்கள் உத்தராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர் என்பது உண்மை.

கல்வெட்டுக்களில் இறைவன் பெயரை *செங்காடுடைய நாயனார், கணபதீச்சரமுடைய மகாதேவர், கணபதீஸ்வரமுடையார் என கூறுகிறது.

தலத்தின் பெயர் *"கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி"* என்றும் கூறுகிறது.

இத்திருக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கோயிலாகும்.

*திருவிழாக்கள்:*
உத்தராபதியாருக்கு ஆனி உத்திரம், மார்கழித் திருவாதிரை, பங்குனி பரணியில் அபிஷேகம் நடைபெறுகிறது. நடராஜர் அபிஷேகங்கள், நவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், கார்த்திகை தீபம், மார்கழியில் பாவை விழா, சிவராத்திரி முதலிய விசேஷ வழிபாடுகளும் உற்சவங்களும் நடைபெறுகின்றன.

*தல பெருமை:*
பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், வேலைக்காரி ஆரியோருக்கும் அருள்புரிந்து தலம்.

இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்காலும் சிறப்புடையது.

சிறுத் தொண்டர் அருள் பெற்றத் தலம்.

மந்திரபுரி, செங்காடு, சத்தியபுரி, பிரமபுரி, தந்திரபுரி, ஆத்திவனம், பாஸ்கரபுரி, சமுத்திரபுரி, கணபதீச்சரம் ஆகிய ஒன்பது திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றது.

தலத்தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.

இறைவனார், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருக்கருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் *உத்திராபதீஸ்வர்-*ஆகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது.

விநாயகர், பிரமன், வாசுதேவன், சூரியன், சந்திரன், சத்யாஷாட முனிவர், சிறுத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபாடு செய்து பேறு பெற்ற தலம்.

நாயன்மார்கள் வரலாற்றில், சரவணத்துத் தனயரான முருகப் பெருமானுடன் கூட இறைவியாரும் இறைவரும் சோமாஸ்கந்தர் திருக்கோலம் காட்டி அருளியது இத்திருத்தலத்தில்தான் என்ற தனிச் சிறப்பு பெற்றத் திருத்தலமாகும்.

சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக *'வாதாபி'* சென்று சாளுக்கியரோடு போர் செய்து வெற்றிவாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளார்.

சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர் (உற்சவ காலங்களில் வீதி உலா வருபவர் இவரே),

 *கஜாமுகசுரனை அழித்தது:*
வழக்கம் போலவே திருக்கயிலை எனும் மாமலையில் பெருங்கூட்டம் சூழ்ந்திருந்தன.

தேவர்களும் முனிவர்களும் அங்குமிங்குமாக  நின்று சொல்லானத் துயரங்களை பகிர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அன்றாடம் செய்யும் நித்ய ஜப, தவங்களைச் செய்ய முடியாதபடிக்கு கஜமுகாசுரன் எனும் அசுரன் பெரும் தீங்கு விளைவித்து வந்தான்.

அசுரனால் பெருந் தொல்லைகளை சந்தித்தவர்கள், இன்று ஈசன் தரிசனத்தின் போது தெளிவாக குழப்பமில்லாமல் நடந்த விபரீதத்தைச் சொல்லிவிட வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் தரப்பு  முடிவெடுத்து கூடியிருந்தார்கள்.

இந்த கஜமுகாசுர அசுரனால் நமது பதவிக்கு எவ்வித ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று ஈசனின் தரிசனத்தின் போது குழப்பத்தைச் சொல்லி தீர்த்து தெளிவாக விட வேண்டும் என்று  இந்திராதி தேவர்களும் காத்திருந்தனர்.

இருக்கின்ற குறுகிய காலத்தில், இது மாதிரியான தொல்லைகள் தொடர்ந்தால், பதவிசுகத்தை நிம்மதியாக எப்படி அனுபவிப்பது?..'' இது  பெருங்கவலையாக இருந்தது இந்திரனுக்கு......

மற்ற தேவர்களின் மனதில் பதவி போனால் போகட்டும்... இந்த மனிதப் பதர்கள் செய்யும்  குடைச்சல்களில் இருந்து தப்பித்த மாதிரி இருக்கும்!..'' என்று உள்ளூர  வேறு ஒரு தனி ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தது!..

நந்தியம்பெருமான் புன்முறுவலுடன் கையசைத்து அனைவரையும்  அனுமதித்தார்..

''காவாய் கனகத் திரளே போற்றி!..
கயிலை மலையானே போற்றி!.. போற்றி!..'' என பெருத்த ஒலிகள் கிளம்பின.

பெருத்த ஆரவாரத்துடனே அனைவரும் எம்பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். 

அனைவரையும் அன்புடன் ஆசீர்வதித்த அம்மையும் அப்பனும் ஆசீர்வதித்தனர்.

ஈசன், ஏதும் அறியாதவர் போல, ''.நலமா!.'' என்றார்.

இதற்காகவே காத்திருந்த இந்திரனின்  கன்னங்களில்,  கண்ணீர்த் துளிகள் ''கர கர'' தூர்த்தொழுகியது.

ஒருவழியாக விஷயத்தை விம்மலுடன் சொல்லி முடித்தான்.  யாராலும் வெல்ல முடியாத வலிமை பெற்ற அசுரன் அகந்தையுடன் செய்யும் அடாத செயல்களைக் குறித்து மற்றவர்களும் பெருமானிடம் முறையிட்டனர். 

எம்முடைய அம்சமாகத் தோன்றும் *புத்திரனால் உம்முடைய குறைகள் யாவும் தீரும்!..''*!என்றனர் பெருமானும் அம்பிகையும்.

திருக்கயிலாய மாமலையின் மந்திர சித்திர மணிமண்டபத்தில் தீட்டப்பட்டிருந்த சமஷ்டி பிரணவமும் வியஷ்டி பிரணவமும், அப்பனும் அம்மையும் திருவிழி கொண்டு நோக்கியதால் பேரொளியுடன் மருவிப் பொருந்தின.

அந்தப் பேரொளியின் உள்ளிருந்து -  பிரணவ வடிவாக, யானை முகத்துடன் விநாயகர் தோன்றியருளினார்.

அண்டபகிரண்டம் எங்கும் சுபசகுனங்கள் தோன்றின. கஜமுகாசுரனின் தொல்லை தாள மாட்டாமல் மலையிடுக்கிலும் மரப்பொந்திலும் ஒளிந்து தவம் மேற்கொண்டிருந்த முனிவர்கள் உரம் பெற்று எழுந்தனர்.

உலகின் முதற்பொருளாக முடி சூட்டப்பட்டார் விநாயகர். 

இந்திரனுக்கு, தன் மணிமுடி காப்பாற்றப்பட நேரம் திரண்டது கண்டு சந்தோஷம் கொண்டான்.

விநாயகர், தாய்க்கும்  தந்தைக்கும் இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கக்கலசத்தில் கங்கை நீரெடுத்து பாதபூஜை செய்தார். 

பாரிஜாத மலர்களைத் தூவியபடி  அம்மையப்பனை வலஞ்செய்து வணங்கினார்.

வழிபடும் அடியவர் தம் இடர்களைக் களைவதற்காகத் தோன்றிய கணபதி எனும் இளங்களிறு பெற்றவர் கண்டு பேருவகை கொண்டனர் எல்லோரும்.

கயிலை மாமலையில் அங்குமிங்கும் ஓடி விளையாடித் திரிந்த விநாயகப் பெருமானின் மலர்ப் பாதங்களைத் தாங்கி தன் தலையில் வைத்துக் கொண்ட இந்திரன், மெதுவாக தன் குறையினை அவருடைய அகன்ற காதுகளில் கூறிவவைத்தான்.

இவ்வளவுதானா?'' என ஆச்சர்யப்பட்ட விநாயகர் அன்னை தந்தையரை நோக்கினார்.  புன்னகைத்தனர் இருவரும். புறப்பட்டார் கணபதி போருக்கு!.... பின்னாலேயே தேவாதி தேவரும் ''வீரத்துடன்'' தைரியமாக படையெடுத்துச் சென்றனர்.

விஷயமறிந்து பெரிதாகப் பிளிறிக் கொண்டு வந்தான் கஜமுகாசுர அசுரன்.

 ''ஏதடா?.. நம்மைப் போலவே,  ஒரு உருக்கொண்டு நம் எதிரில் நிற்கின்றதே! என வியந்தான்.

இது யார் பிள்ளை?...'' என்று யோசித்திருக்க வேண்டாமா! அந்த அளவுக்கு அவனை யோசிக்க விடவில்லை அவன் விதி!..  

அவன் தன் கைகளில் கிடைத்த ஆயுதங்களை எல்லாம் வாரி இறைத்தான் கணபதியின் மீது!

அவை அனைத்தும் பாறையில் விழுந்த பனிக்கட்டிகளாக விழுந்து மறைந்து போயின.. 

கணபதியும், தன்னுடன் வந்த சிவாஸ்திரங்களை அவன் மீது எய்தார். ஆனால் அவை போன வேகத்திலேயே அவரிடம் திரும்பி விநாயகரிடம் வந்து சேர்ந்தன.

காரணம், கஜமுகாசுரன் 
எந்த ஆயுதங்களாலும் வீழக்கூடாது என சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்தான்.  

தேவர்களும் இதை நினைவு கூர்ந்தனர் விநாயகரிடம். அதற்குப்பின் கணபதி தாமதிக்கவே இல்லை. சிவ மந்திரத்தை உச்சரித்தபடி தன் வலப்புற தந்தத்தினை முறித்து கஜமகாசரனை நோக்கி எறிந்தார். 

ஆயுதம் துளைக்காத கல்நெஞ்சினைக் கொண்ட ஆனையின் தந்தம் துளைத்து வீழ்த்தியது. 

செங்குருதி ஆறாகப் பெருகியோட மண்ணில் வீழ்ந்தான் கஜமுகாசுரன். ஆயினும் அவனுடைய ஆன்மா மூஷிகமாக உருக்கொண்டு எதிர்த்து வந்தது.  

விநாயகப் பெருமான் தன் காலால் தீண்டினார். அசுரனின் ஆணவம் அடங்கியது. கொடியவன் அடியவனான். கணபதியின் பாதமலர்களே தஞ்சம் என ஒடுங்கினான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

கஜமுக அசுரனை வீழ்த்திய கணபதி, தன் தளிர்க்கரங்களால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து போர் முடிக்கப் பெருந்துணை புரிந்த பெருமானை வழிபட்டார்.

அப்போது, அசுரனை வீழ்த்துதற்கு முறித்த தந்தத்தினை ஈசன் மீண்டும் வழங்கியருளினார் விநாயகனிடம்.

கணபதி வழிபட்ட திருத்தலம் கணபதீச்சரம் 
எனத் திருப்பெயரும் கொண்டது. 

அசுரனை வீழ்த்திய போது,  ஆறாக ஓடிய செங்குருதியினால்  சிவப்பாக மாறிய இத்தலம் செங்காடு எனப்பெயர் பெற்று, பின் மருகி திருச்செங்காட்டங்குடி என நிலைத்தது.

இந்த ஐதீகம், மார்கழி மாத வளர்பிறை சஷ்டியன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த திருச்செங்காட்டங்குடி தான் நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியான பரஞ்சோதி என்பவரின் சொந்த ஊராகும்.

போர்த்தொழில் புரிந்தது போதும் என மன்னனிடம் விடை பெற்று ஊருக்குத் திரும்பி வந்தார்.

வாதாபியில் தான் கவர்ந்த கணபதி திருமேனியினை கணபதீச்சர திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.

               திருச்சிற்றம்பலம்.

*திருச்செங்காட்டங்குடி தல பதிவு தொடர்ந்து (மூன்றாவதாக) நாளையும் வ(ள)ரும்.*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌼 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.97*🌼
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
☘ *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*☘
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 *திருச்செங்காட்டங்குடி.*
*(3-ஆம்நாள் தொடர்ச்சி.)*
🌸
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............)
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*குறிப்பு.*
🍁 *இத்தலப் பதிவு அதிக நீளம் கருதி இரண்டு நாள்களாக பதியப்பட்டது.  மீதி பாதியை இன்று  முதல் பதிவுடனும் இரண்டாம் நாளான பதிவுடனும் இந்த மூன்றாம் நாளான பதிவையும்  சேர்த்து  வாசிக்கவும், மூன்று நாள் பதிவையும் சேர்த்து சேமித்து இணைத்து வைத்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இன்றைய பதிவில் சிறுத்தொணாடர் நாயனார் தொண்டும் சேர்ந்து இணைந்து இருக்கும். சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.*🍁

*இறைவன்:* உத்தராபதீசுவரர், ஆத்திவனநாதர், கணபதீஸ்வரர், மந்திரபுரீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.

*இறைவி:*
*சூளிகாம்பாள், வாய்த்த திருக்குழலம்மை, வாய்த்த திருக்குலழம்மை உமைநாயகி.

*தல விருட்சம்:*
ஆத்தி மரம். (காட்டாத்தி.)

*தீர்த்தம்:* சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், மற்றும் சீராள தீர்த்தம் ஆகிய மொத்தம் ஒன்பது தீர்த்தங்கள்.

*திருமேனி:* சுயம்புத் திருமேனியானவர். உத்திராபசுபதீஸ்வரர் திருமேனியின் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.

*புராணப் பெயர்:* கணபதீச்சரம்.

*ஊர்:* திருச்செங்காட்டங்குடி.

*பதிகம் பாடியவர்கள்:*
அப்பர், சுந்தரர்.

*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*ஆகமம்/பூஜை:* காமிகம்.

*சிறுத்தொண்டர் வரலாறு:*
நாயனாரின் இயற்பெயர் - பரஞ்சோதியார்; ஆயுர்வேதக்கலைளையும் பல வட நூற்கலைகளையும், தூயத்தன்மையான படைக்கலத் தொழில்களையும், பயின்று வென்றவர்.

மதயானையை ஒழுங்குக்கு கொண்டு வந்தும், குதிரையேற்றம் ஏறி நடத்துவிக்கும் ஆற்றலில் இவருக்கு இணை யாருமிலர்.

தேவர்களிலும், மண்ணுலகத்தோர்களிலும் மேம்பட்ட மிக பெரியவர்.

பலகலைகளையும் பயின்றதன் பயனாக சிவபெருமானின் கழல் அடைவதே ஞானம் என்ற உணர்வு இவருள் ஓங்கி வளர ஆரம்பித்தது இவருக்கு.

இறைவன் கழலுக்கு இவர்பால் பெருகிய அன்பு, மலையில் புறப்பட்ட அருவியாய் பள்ளத்தில் வீழும் நீர் போல அமைந்தது.

ஈசனுக்கு இணையாக அடியார்க்கு இயல்பாகத் தொண்டு பணிசெய்யும் குணத்தைக் கொண்டிருந்தவர்.

பதவி தந்த மன்னவனுக்குப் போர்த் தலைவராக படையெடுத்துச் சென்று பல நாடுகளை வென்று, பின் வாதாபியையும் வென்று, பெரும்பொருளையும் கொணர்ந்து மன்னனிடம் கூட்டுவித்தார். 

சிவனடிமைத் திறன் கொண்டிருந்த இவர் நிலையை அறிந்த மன்னன், தன் தவறை உணர்ந்து பெரும் நிதிக் குவியல்களை இவரிடம் கொடுத்தனுப்பி சிவத் தொண்டான  உம் பணியைச் சிறப்பாக செய்க!".. என பிரியாவிடை கொடுத்து அனுப்பினான். 

முன்போல கணபதீச்சரத்தில் சிவ  தொண்டுகளை செய்து, முன்னைவிட இப்போது தாராளமான நிதி கையிருப்பிலிருக்க, அமுதளிக்கும் தொண்டுகளை விரித்து செய்வித்தார்.

சிவனடியார்களுக்கு சிறந்த பணி செய்ய  திருவெண்காட்டுநங்கை என்ற நற்குண நங்கையை மணந்து கொண்டார்.

சிவனடியார்களை நாள்தோறும் அமுது செய்வித்து அகமகிழ்ந்து அதன்பின் தான் உண்ணும் உயர்ந்த தவத்தை மேற்கொண்டு, அதில் ஒழுகி நியதி வழுவாமல் வாழ்ந்து வந்தார். 

வரும் சிவனடியார்களை இனிய மொழிகள் கூறித் தாழ்ந்து வணங்கிப் போற்றி வழிபடுதலால்  இவரை சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டு வந்தனர்.

இவ்வாறு சிறந்த இவரது மனையறத்தின் வேராக விளங்கிய திருவெண்காட்டுநங்கை வழி சீராளர் எனும் மைந்தர் அவதரித்தார். 

இவரது செயற்கரிய பக்தியின் நிலையை உலகறியச் செய்யும் பொருட்டு, பெருங்கருணையுடன் வயிரவக் கோலத்துடன் திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தார் சிவபெருமான்.

பெரும் பசியுடையவர் போல சிறுத்தொண்டர் இல்லத்திற்குச் சென்று....... *"தொண்டனார்க்கு எந்நாளும் சோறளிக்கும் திருத்தொண்டர் வண்டார் பூந்தாரார் இம்மனைக் குள்ளாரோ?"*என கேட்டார்.

இவரது கோலம் கண்டு, மாதவம் மிக்கவர் சிவனடியாரென உணர்ந்த திருவெண்காட்டு நங்கை அவரிடம்,........ ...

இன்று  "அமுது செய்விக்க யாரும் காணாததால், ஊர் எல்லையில்  சிவனடியாரைத் தேடி என்னவர் சென்றுள்ளார்.

ஆதலால் *எம்மை ஆளுடையவரே நீங்கள் இல்லத்தில் எழுந்தருளி இருங்கள்"* என்றாள்.

பெண்கள் தனித்திருக்கும் இடத்தில் தனியாக நாம் *புகோம்"*எனக்கூறி, அவ்விடத்தை விட்டு அகலும் நிலையில், திருவெண்காட்டு நங்கையாரிடம் கூறினார்.

 *"அம்பலவர் அடியவர் எவரையும் அமுது செய்விக்கக் காணாதவராய் தேடிப் போயுள்ளார்*உடன் வந்துவிடுவார், தாங்கள் பொறுமை புரிந்து இல்லனுள் எழுந்தருள்க!" என மறுமுறையும் கூறினாள்.

இறைவனார் அவளிடம் *"ஒப்பில் மனையறம் புரப்பீர் உத்திராபதியுள்ளோம். செப்பருஞ்சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம் எப்பரிசு அவர் ஒழிய இங்கு இரோம். கணபதீச்சரத்தின் கண் வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம். மற்றவர் தாம் நண்ணினால் நாமிருந்த பரிசுரைப்பீர்"*எனக் கூறி அகன்று சென்றார்.

அடியவர் எவரையும் காணாது வருந்தி திரும்ப வீடு வந்த சிறுத்தொண்டரிடம், அவர் மனைவியார், பயிரவர் கோலத்தில் வந்த அடியவரைப்  விபரம் கூறினாள். 

விரைந்து எழுந்தோடிப் போனார். பயிரவக் கோலம் கொண்டிருந்தவரைக் கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார்.

 சிறுத்தொண்டரை நோக்கிய இறைவனான பைரவ வேடத்தவர்..... *"நீரோ பெரிய சிறுத்தொண்டர்?!"* என இறைவனார் கேட்டார்.

அதற்கு அவர், *"நீறணிந்த அடியவருடன் போற்றப் போதேன்* ஆயிடினும் நாதன் அடியவர் கருணையோடு அப்படி அழைப்பர்" எனச் சொல்லி "அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வர வேண்டும்" என்றார்.

அவரிடம் "பயிரவர் உத்திராபதியாகிய நாம் தவத்தினன். உம் தொண்டு காணும் படியால் இங்கு வந்தோம். எனக்குப் பரிந்தூட்டும் அரிய செய்கை உம்மால் செய்ய இயலாது" எனவே நீர் செல்க என்றார்.

சிவபெருமான் அடியவரான தாங்கள் கேட்கின் முடியாததில்லை என உரைப்பதில்லை எனச் சொன்னார் சிறுத்தொண்டர்.

அதற்கு அவ்விறைவன் சிறுத்தொண்டரிடம்......'யாம் ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் உணவு உட் கொள்வோம். அந்த உணவானது  பசு வீழ்த்திட்ட உணவாகக் கொண்டு உண்போம். அந்த ஆறுமாத காலத்திற்கு பின் உவ்வுணவை உண்ணும் அதற்கான நாள் இன்று. இதைப் செய்ய உனக்கு அரிது" என்றார். 

தாங்கள் உணவின் தரத்தைக் கூறினால் ஈசன் துணைகொண்டு செய்வேன்! எனக்கு  அரியதில்லை" என்றார் சிறுத்தொண்டர்.

சரி!...கூறுகிறேன். நன்கு கவனித்து விளங்கிக் கொள்ளவும்!........
 *"ஐந்து வயதிற்குட்பட்டு, உறுப்பில் குறையில்லாத குழந்தையை,  அதுவும் அக்குழந்தை அத்தாய் தந்தையர்கள் குழந்தை ஒரே மகனாக இருக்க வேண்டும், தந்தை குழந்தையை அரிய,  தாய் தாங்கிப் பிடிக்கனும், அப்போது  பெற்றோர்களின்  மனம் உவந்து குறையின்றி இருக்கனும், அப்படி சமைக்கும் கறியே நாம் உண்பது"* என்றார் இறையனாரான அவர்.

இதற்கு உடனே இசைந்த சிறுத்தொண்டர், அடியேனுக்கு இதுவும் அரிதன்று, எம்பெருமான் அமுது செய்யப் பெறில்" இது எமக்கு இலகுவானது என்ற கூறிய சிறுத்தொண்டர் மனைவியாரிடம் வந்து இவ்விபரத்தைக் கூறினார். 

இவ்வுலகில் பொருள் கொடுத்தால் குழந்தை தருவார் யாரும் உளரோ?! அதுவும் அக்குழந்தையை பெற்றோர்கள் அரிவார்களோ? அப்படியான பெற்றோர் கிடைப்பது அரிது! அதுவும் காலந்தாழ்த்தவும் நேரமிலை. எனவே நாம் பெற்ற மகனை அழைப்போம் நாம்" என்றாள் திருவெண்காட்டுநங்கை.

பாடசாலைக்குச் சென்றிருந்த  சீராளனை அழைத்து வந்து தாய் மடியில் மலர்த்தி பிடித்துக் கொள்ள, தந்தையர் குழந்தையை அரியத் தொடங்கினர்.

குழந்தை பலிபோகிறதே எனவெண்ணம் அவர்களுக்கில்லை. மாறாக அவ்வடியார் கேட்ட அமுதை செய்வித்து விட வேண்டும் என்ற இவ்வெண்ணமே ஓங்கியிருந்தன.

அமுதாக்கி முடித்ததும், பயிரவர் கோலம் பூண்டுள்ள அடியவரை அமுதுக்கு எழுந்தருளச் செய்தனர்.

இலைமுன் வந்த அடியவர் சிறுத்தொண்டரிடம், செயாவன யாவும் நாம் கூறிய முறையில் உள்ளனவா என ராம் பரீட்சீக்க வேண்டும் என கேட்க.......

அதற்கு, சிறுத்தோண்டரும், திருவெண்காட்டு நங்கையாரும் கறியமுது ஆக்கின விபரத்தைக் கூறி ஒவ்வொன்றையும் முன் வைத்தனர்.

'ஒன்று குறைந்துளதே?!--என அடியவரான இறைவர் கேட்க.......

துறையானது யாதுவென கூற இப்பௌதே அது நிவர்த்தியாகுமென கூறிய சிறுத்தொண்டர்................
அடியவரின் முகம் நோக்கினார்.

*"தலைக்கறியே நாம் விரும்பி உண்பது"* அது யாம் விரும்பி உண்பதில் முதன்மையானது என
எனத் தெரிவிக்க,..............

அதற்கு சிறுத்தொண்டரோ...
'தலைகறி முற்றும் எழும்பாலானது என்று அது உதவாது என ஒதுக்கினோம்  என அஞ்சித் தயங்க...........,

அப்போது உடனிருந்த தாதியார்,..பக்குவம் செய்த தலைகறியை தனியே செய்து வைத்திருக்கிறேன்! எனக் கூறியபடி தலைக்கறியை கொண்டு வந்து சிறுத்தொண்டரின் கைகளில் கொடுத்தாள். 

"சரி!"... ஆனால் தனியே உண்ண மாட்டேன் ஈசன் அடியார் எவரேனும் இருப்பின் அவரையும் என்னுடன் இருக்க அமர்த்துக" என்றார் அடியவர்.

சிறுத்தொண்டர் வெளியில் சென்று எவரொருவரையும் காணாது, விரைந்தோடி வந்து பயிரவக் கோலம் கொண்ட அடியவரிடம்......

 *"அகத்தும் புரத்தும் யாரையும் காணேன்! யானுந் திருநீறு சகத்தில் இடுவார் தமைக்கண்டே இடுவேன்"* எனத் தாழ்ந்து இறைஞ்சினார். 

*"எம்மைப் போல் நெற்றி நீறிட்டவர் நீவீர் உளரே?! நீரே...எம்முடன் இருந்தயமர்ந்து உண்பீர்"* என்றார். 

அடியவரை உண்ணத் தொடங்குவிக்கும் நோக்குடன், சிறுத்தொண்டர் உண்ணத் தொடங்க, பயிரவர் வேடத்திலிருக்கும் இறைவர் தடுத்தார்.

 *"ஆறு மாதத்திற்கு ஒருமுறை உண்ணும் நான் உண்ணத் தொடங்கும் முன், நீவீர் வெடுக்கென உண்ண முனைவது நலதில, நாளும் உண்ணும் நீ முண்டி  முன்னமே உண்பதென்ன?! எடுத்த கவழத்தை இலையில் விடு! நீ போய் உன் மகனை அழைத்து வா!"*என்றார்.

*"இப்போது உதவான் அவன்"* என்றனர் இருவரும்.

*"கூவி அழையும்"* என்று பயிரவர் சொல்ல, தொண்டர் தன் மனைவியாருடன் வீட்டிற்கு வெளியே வந்து  *"மைந்தா வருவாய்" "மைந்தா வருவாய்!* என அழைத்தார் சிறுத்தொண்டர்.

அவர் மனைவியாரோ *"செய்ய மணியே சீராளனே! வாராய் வாராய்,* சிவனடியார் யாம், உய்யும் வகையால் உடன் உண்ண உண்ணை அழைக்கின்றார் *வா!* என்றாள்.

பெற்றோர்கள் இருவரும் திடுக்கிட்டனர். ஆம்!....
பாடசாலையினின்றும் வருபவன் போல் சீராளத்தேவன் அழைத்த குரலுக்கு ஓடிவந்து கொண்டிருந்தான்.

பெற்றோர் இருவருக்கும் பிரமை கொண்டது போலிருந்தது. அரிந்த மைந்தன் அரியயுருயாய் வருகிறானே! என்று......

சீராளனைக் கண்டு அதிசயித்துப். கண்கள் குளமானது. வாரியனைத்து உச்சி முகர்ந்தாள். 

திருவெண்காட்டுநங்கை மைந்தனை அள்ளியெடுத்து தழுவிக் கணவன் கையில் கொடுத்தாள்.

இருவரும் பிரமை மீண்டு சீராளனுடன் வீட்டுக்குள் புகுந்தனர். 

அங்கே அடியார் பைரவர் இல்லை. பயிரவர் மறைந்தருளிந்தார். விரித்த இலைகளுமில்லை. உண்ணச் செய்வித்திருந்த கறியமுதையும் காணவில்லை. திடுக்கிட்டனர்..திகைத்தனர்...வியந்தனர்..

அப்போது அவர்களுக்கு முன் ஒளிவெள்ளமாய்...
  *மலையத்துளாளோடு சரவணத்தான தனயோடும் சோமாஸ்கந்தராக விண்ணில் காட்சியளித்தார்.*

இல்லாளோடு அன்பு மகனுடனும், பணிப்பெண்ணுக்கு மற்றும் காண்பதற்கரியதான சிவதரிசனம் பெற்றனர்.

சிவதரிசனத்தைக் கண்டதும் அவர்களுக்குள்ளான உடம்பினிலிருந்து ஒரு வித சிலிர்ப்பும், பேச்செழா நாவுடன் தொண்டையும் கணற, சக்திப் பாங்குடன் வானில் மிதவன போலிருந்தன அவர்களுள்ளம்.

*ஆம்!* சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளத்தேவன், மற்றும் உணவு சமைத்த பணிப்பெண் தாதியர் ஆகியோருக்கு சிவானந்த வீடுபேறு அருளினார் இறைவனார்.

இச்சம்பவம் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று நடக்கப் பெற்றது. 

இச்சம்பவ நிகழ்வை வைதீக விழாவாக இன்றும் *அமுது படையல்* எனும்  விழாவாக ஆண்டு தோறும் இத்தலத் திருச்செங்காட்டங்குடியில் கோலாகலமாக நடத்தப் பெற்று வருகிறது.

இவர்களுக்குக் காட்சி தந்து, முக்தி அளித்த வரலாற்றை நினையும்படி இன்றும் அதனை விழாவாக நடத்திக் காட்டுகிறார்கள்.

காலையில் உத்திராபதீச்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. 
அதனைத் தொடர்ந்து, 
சுவாமிக்கு வெள்ளை சார்த்தி, சுமார் பத்து மணி அளவில் உள்  பிராகாரத்திலும், வெளிப்பிராகாரத்திலும் சுவாமி வலம் வந்துவிட்டு தனது சபையை அடைகிறார்.

வழி நெடுகிலும் இருபுறமும் நின்று சுவாமிக்குப் பன்னீரைக் காணிக்கை ஆக்குகிறார்கள் பக்த கோடிகள்.

நண்பகலில் சுமார் இரண்டு மணிக்கு மீண்டும் உத்திராபதியார் புறப்பாடு நடைபெறுகிறது. அதற்காக அலங்கரிக்கப்பட்ட பவழக் கால் சப்பரத்தில் எழுந்தருளியவாறு, தெற்கு வீதியின் கோடியில் உள்ள சிறுத்தொண்டரது மனைக்குச் செல்கிறார் பெருமான். 

சிவனடியாரைத்தேடிக் கொண்டு சிறுத்தொண்டர் வெளியில் சென்று விட்டபடியால், அவரது மனைவியான திருவெண்காட்டு நங்கையும்,சந்தனத்தாதியாரும் சுவாமியை எதிர் கொண்டு அழைக்கிறார்கள். 

ஆண்கள் இல்லாத வீட்டில் நுழைவது முறை அன்று என்று சுவாமி மீண்டும் கோயிலில் உள்ள ஆத்தி மரத்தடிக்கே வந்து அமர்கிறார்.

சிவனடியார் வந்துவிட்டுப் போன செய்தியை மனைவியின் மூலம் அறிந்த சிறுத்தொண்டர் ஆனந்தம் மேலிடக் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கி, உணவு அருந்தத் தனது  மனைக்கு அழைக்கிறார். 

தான் உண்பது நரப்பசு என்று சொல்லியும், அதற்கு உடன்பட்ட சிறுத்தொண்டர், பெருமானைத் தன்  மனைக்கு வர அழைக்கிறார். 

இரவு சுமார் ஒன்பது மணிக்குச்  சிறுத்தொண்டர் பெருமானை அழைக்க வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதற்கான பெரியபுராணப் பாடல்களை ஓதுவாமூர்த்திகள் கூடிப் பாடுகிறார்கள். 

இரவு இரண்டு மணி அளவில் உத்திராபதீச்வார், சிறுத்தொண்டர்  மனைக்கு எழுந்தருளுகிறார். மக்கள் கூட்டம் வெளியில் அமர்ந்தவாறு அப்போது ஓதப்படும் பெரியபுராணப் பாடல்களை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கும். 

அமுது படைக்கும் போது உள்ளேயிருந்து ஒரு சப்தம் கேட்கிறது. பின் சற்று நேரத்திற்கெல்லாம் சுவாமி விரைவாகக் கோயிலுக்குச் சென்று விடுகிறார்.

உத்திராபதியார் அருளால் மீண்டும் உயிர் பெற்ற தனது குமாரனுடனும் மனைவி, தாதி ஆகியோருடனும்  கோயிலை நோக்கி சிறுத்தொண்டர் வரும்போது, தெற்கு வீதியில் விடியற்காலையில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்த வடிவில்  அவர்களுக்குத் தரிசனம் கிடைக்கிறது. 

பாடல்கள் இசைக்கப்படுகின்றன. 
தீபாராதனை பெருமானுக்கும் சிறுத்தொண்டருக்கும் நடைபெறுகிறது. 

நால்வரும் பெருமானை வலம் வந்து விட்டுக் கோயிலுக்குச் சென்று விடுகின்றனர். சுவாமி நான்கு வீதிகளையும் வலம் வந்தவாறு திருக்கோயிலைச் சென்று அடைகிறார். 

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தோளில் சுவாமியைத் தூக்கி வரும் ஆட்கள் பாராட்டுக்கு உரியவர்கள். வீதியில் உள்ள மக்களும் அந்த ஆட்களின் பாதங்கள் வெய்யிலால் வருந்துமே என்று, வழி நெடுகிலும் தண்ணீர் தெளித்து வைக்கிறார்கள். 

தரிசிக்க வரும் அன்பர்களின் தாகம் தீர்க்கத் தண்ணீர், நீர்மோர் ஆகியவை பலரால் ஆங்காங்கே தரப்படுகிறது. இவை எல்லாமே சிவப்பணிதான், சிவபுண்ணியம் தான்! 

சிறுத்தொண்டன் பணி செய்ய"அதனைப் பெருமான் அன்று ஏற்றருளியவாறு, 
இக்காலத்திலும் அவனுக்குப் பணி செய்தால் அவனருளைப் பெறலாம் என்பது நிச்சயம்.   

கண்கள் தாரையாக உருகும் சிறந்த அடியார்களைக் காண வேண்டும் என்றால் இத்தலத்தில் அமுது படையல் உற்சவம் நடக்கும் நேரத்தில் அதைக் காணலாம்.

எத்தனையோ குடும்பங்களுக்குக் குல தெய்வமான உத்திராபதீச்வரரையும் அவனே கதி என இருக்கும் அடியார்களையும் *"செங்காட்டங்குடியதனுள்  கண்டேன் நானே" * என்று அப்பர் பெருமான் அருளியதுபோல் நாமும் காண்கிறோம்.

 *திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்*
(ஆறாம் திருமுறை)

🍁பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
எழுந்தருளி இருந்தானை எண்டோள் வீசி
அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

🍁துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்
ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

🍁உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்
முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்
முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

🍁கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

🍁நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
வியன்கெடில வீரட்டம் மேவி னானை
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்
செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

🍁கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்
கடவூரில் வீரட்டங் கருதி னானைப்
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

🍁எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை
ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

🍁கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

🍁அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை
அலைகடலில் ஆலால மமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

🍁போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்
பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற
சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

*தேவார பதிகம்:*
சம்பந்தர்.
🌸பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள்
பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்
தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்
பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும்
பெருமானே.

🌼பசுமையான கிளைகளில் மலர்களையுடைய புன்னைமரத்தில் வீற்றிருக்கும் பறவைகளே! தலைவனான சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் உடம்பு பசலைநிறம் பெற, ஆடி ஆடி உல்லாசமாக இயங்கிய என் மகிழ்ச்சியை நீக்கி எனக்குத் தாங்காத துன்பம் தந்தான். அவன் திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் சிறுத்தொண்டர் பணி செய்ய சுடுகாட்டுள், கையில் அனல் ஏந்தி திருநடனம் புரியும் பெருமானாவான். 

🌸பொன்னம்பூங் கழிக்கானற் புணர் துணையோ
டுடன்வாழும்
அன்னங்கா ளன்றில்கா ளகன் றும்போய்
வருவீர்காள்
கன்னவிறோட் சிறுத்தொண்டன்
கணபதீச் சரமேய
இன்னமுத னிணையடிக்கீ ழெனதல்ல
லுரையீரே.

🌼பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும் புன்னைப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தம் துணையோடு சேர்ந்து வாழும் அன்னப் பறவைகளே! அன்றில் பறவைகளே! நீங்கள் இச்சோலையிலிருந்து வெளி இடங்கட்கும் சென்று வரும் இயல்புடையவர்கள். கல் போன்று திண்மையான அழகிய தோள்களையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யக் கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற இனிய அமுது போன்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் இருந்து என்னுடைய துன்பத்தைச் சொல்லமாட்டீர்களா? 

🌸குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத்
தடத்தகத்தும்
இட்டத்தா லிரைதேரு மிருஞ்சிறகின்
மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென்
றுரையாயே.

🌼குட்டை, குழி, குளிர்ந்த பொய்கை ஆகிய இடங்களில் விருப்பத்துடன் இரையைத் தேர்கின்ற பெரிய இரு சிறகுகளை உடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் நியமத்தோடு வழிபடத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந் தருளுகின்ற நீண்ட அடர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைக்க மாட்டாயோ? 

🌸கானருகும் வயலருகுங் கழியருகுங்
கடலருகும்
மீனிரிய வருபுனலி லிரைதேர்வெண்
மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென்
றுரையாயே.

🌼கடற்கரைச் சோலையின் அருகிலும், வயல், கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் ஓடுகின்ற மீன்களை இரையாகத் தேரும் வெண்ணிறமான மட நாரையே! தேன் துளிக்கும் மாலைகளையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, மாலை வானம் போன்ற சிவந்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைப்பாயாக. 

🌸ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச்
சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி
மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென்
றுரையீரே.

🌼ஆரல், சுறவம் ஆகியன பாய்கின்ற அகன்ற கழனிகளில் சிறகுகளை உலர்த்துகின்ற நெடிய மூக்கையுடைய சிறிய உள்ளான் பறவையே!. அடர்ந்த சிறகுடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் பணி செய்ய திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந் தருளுகின்ற கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என்னுடைய நிலையினை உரைப்பீர்களாக. 

🌸குறைக்கொண்டா ரிடர்தீர்த்தல் கடனன்றே
குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா
மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச் 
சரமேய
சிறுத்தொண்டன் பெருமான்சீ ரருளொருநாட்
பெறலாமே.

🌼தங்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுபவர்களின் துன்பத்தைப் போக்குதல் தலைவரானவரின் கடமை அன்றோ? குளிர்ந்த குளத்தின் கரையில் கெண்டை மீனைக் கவர்ந்து இரையாகக் கொள்ளும் பறவையே! துணையைப் பிரியாதிருக்கும் மடநாரையே! நீலகண்டரும், பிறைச்சந்திரனைத் தலையிலே சூடியுள்ளவரும், கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் சிறுத்தொண்டரால் வழி படப்படுபவரும் ஆகிய சிவபெருமானது சீராகிய எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது சென்றுரைப்பீர்களாக! 

🌸கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண்
கழிநாராய்
ஒருவடியா ளிரந்தாளென் றொருநாட்சென்
றுரையீரே
செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ
திறத்தவர்க்கே.

🌼கரிய சேற்றில் அளைந்த பசுங்காலையுடைய வெண்குருகே! அழகிய கழியிலுள்ள நாரையே! போர் செய்வதால் வலிமை பெற்ற அழகிய வடிவுடைய தோள்களையுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியிலுள்ள திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திரு வடிகளை வழிபடும் திறத்தவர்களே அவன் திருவருளைப் பெறலாமோ? ஓர் அடியாள் அவருடைய திருவருளைக் கெஞ்சி வேண்டினாள் என்று ஒரு நாளாவது சென்று அவரிடம் உரைப்பீராக! 

🌸கூரார லிரைதேர்ந்து குளமுலவி
வயல்வாழும்
தாராவே மடநாராய் தமியேற்கொன்
றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
பேராளன் பெருமான்ற னருளொருநாட்
பெறலாமே.

🌼கூர்மையான அலகால் இரையைக் கொத்திக் குளங்களிலும், வயல்களிலும் வாழ்கின்ற தாரா என்ற பறவையே! மட நாரையே! என் பொருட்டுச் சிவபெருமானிடம் சென்று ஒரு செய்தியை சொல்வீரோ? சிறந்த புகழுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கீர்த்தியுடைய சிவபெருமான் திருவருளை ஒருநாள் அடியேன் பெறுதல் இயலுமா? 

🌸நறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே
யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட
லழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம்
பெருநலமே.

🌼தேனுடைய பூக்கள் நிறைந்த கழியின் கரையிலுள்ள சோலையில் வாழ்கின்ற பறவையே! உலக மக்களெல்லாம் அறத்தைக் கருதி இடுகின்ற பிச்சையை ஏற்று உழல்கின்ற சிவபெருமானுக்குப் பிறர் என்னைத் தூற்றுமாறு செய்வது அழகாகுமா? சிறப்புடைய சிறுத்தொண்டன் வழிபடும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற பிறப்பிலியாகிய சிவபெருமானுடைய திருநாமத்தைப் போற்றித் துதிசெய்யும் நான் எல்லாவிதப் பெருமைக்குரிய நலங்களை இழப்பது முறைமையா? 

🌸செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங்
குடிமேய 
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட
னவன்வேண்ட 
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே
யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர்
தக்கோரே.

🌼சிறந்த, குளிர்ந்த, அழகிய ஆறுபாயும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு அணிந்த மார்புடைய சிவனை, சிறுத்தொண்டர் வழிபட்டபடி, அழகிய, குளிர்ந்த ஒலிமிக்க காழியிலுள்ள இறைவனின் திருவடிகளை வணங்கும் ஞானசம்பந்தன் சந்தம் மிகுந்த திருத் தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் மனிதப் பிறவி எடுத்ததன் தகுதியைப் பெற்றவராவர். 

           திருச்சிற்றம்பலம்.

*இத்துடன் திருசெங்காட்டங்குடி தல அருமைகள் பெருமைகள் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.*

 *நாளைய தலம் திருமருகல் *வ(ள)ரும்*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment